BREAKING NEWS
Search

அவர் எப்பவும் என் ரஜினிதான்! – இயக்குநர் மகேந்திரன்

அவர் எப்பவும் என் ரஜினிதான்! – இயக்குநர் மகேந்திரன்

டிகர்கள் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால், இயக்குநர்களில் ‘எப்போதும் எவர்கிரீன்’ இயக்குநர் மகேந்திரன்தான். எடுத்த படங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவுக்கு வேறு பரிமாணங்களைத் தந்தவை.

எப்போதும் தன்னை அவர் முன்னிலைப்படுத்தியதில்லை. அவர் படைப்புகள்தான் அவரைப் பற்றி பேசவைக்கின்றன.

தலைமுறை கடந்தாலும், தமிழ் ரசிகனால் கொண்டாடப்படும் இயக்குநர் அவர். இந்த வார விகடனுக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி:

” ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு முன்புவரை ரஜினிக்கு வில்லன் முத்திரைதான் அழுத்தமா இருந்துச்சு. அவரை எப்படி ஹீரோவா தேர்ந்தெடுத்தீங்க?”

”நடிகர், ஸ்க்ரிப்ட், இயக்கம்னு எதையும், நான் யார்க்கிட்டேயும் கத்துக்கலை. எது எப்படி இருக்கணும்னு எனக்கு நானே தீர்மானிச்சேன்.

போகிப் பண்டிகையில வேண்டாத விஷயங்களைக் கொளுத்துற மாதிரி, சினிமாவில் யதார்த்தத்துக்குப் புறம்பான, பிடிக்காத விஷயங்களைத் தூக்கிப்போட்டேன்.

‘ஆடுபுலி ஆட்டம்’ படத்துக்கு வசனம் எழுதினப்ப, ரஜினி எனக்கு நல்ல நண்பர் ஆனார். விடிய விடிய சினிமாபத்திப் பேசுவோம். சினிமா மேல அவருக்கு  வேட்கையும் தீராக் காதலும் இருந்துச்சு.

‘முள்ளும் மலரும்’ எழுதினப்ப ரஜினிதான் சரியா இருப்பார்னு தோணுச்சு. தயாரிப்பாளர் வேணுகிட்ட சொன்னப்ப, ‘ரஜினி கறுப்பா இருக்காரு. வில்லன் கேரக்டர்ல நடிக்கிறார். ஹீரோவா போட்டா எடுபடுமா?’ன்னு தயங்கினார்.

ஆனா, ‘ரஜினிதான் ஹீரோ’ன்னு நான் தீர்மானமா இருந்தேன். படம் வெளியான மூணு வாரம் மக்களிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. பிறந்தவுடனே குழந்தை சத்தம் போடாம இருந்தா, எப்படிப் பதைபதைப்பா இருக்குமோ, அப்படித்தான் நானும் ரஜினியும் இருந்தோம். நாலாவது வாரத்துல படம்  பிக்-அப் ஆச்சு. இப்போ யோசிச்சாலும் காளி கேரக்டருக்கு ரஜினியைத் தவிர வேற யாரையும் யோசிக்க முடியலை!”

” ‘உங்களுக்குப் பிடிச்ச டைரக்டர் யார்?’னு பாலச்சந்தர் கேட்டப்பவே, ரஜினி உங்க பேரைத்தான் சொன்னார். அதை எப்படி எடுத்துக்கிட்டீங்க?”

”நிறையப் பேர் ‘ரஜினி உங்களைப் பத்திப் பேசியிருக்கார். அவருக்கு போன் பண்ணி நன்றி சொல்லுங்க’ன்னு சொன்னாங்க. ‘நீங்க ரஜினியை, ரஜினியாப் பார்க்கிறீங்க. நான் என் நண்பனா பார்க்கிறேன்’னு சொல்லிட்டேன்.

என் மனைவி தொடர்ந்து சொன்னதால ரஜினிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதினேன். ‘உலக சினிமாக்களைப்பார்த்த பிறகு நான் தமிழ் சினிமாவில் நுனிப்புல் மேய்ந்தவனாக உணர்கிறேன். என்னைப் போய் சொல்லியிருக்கீங்களே!’னு எழுதி இருந்தேன்.

கடிதம் போனதும் ரஜினி உடனே போன் பண்ணினார். ‘சார் உங்க லெட்டர் படிச்சேன். எனக்கு போன் பண்ண பலரும் மகேந்திரனைச் சொன்னது தான் நல்ல பதில்னு சொன்னாங்க’ன்னு ஆரம்பிச்சு பழையவிஷ யங்களைப் பத்திப் பேசிட்டே இருந்தார். அவர் எப்பவும் என் ரஜினிதான்!” என்றார்.

திரும்பவும் மோகமுள்…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன் முத்திரை பதிக்க வருகிறார் மகேந்திரன். இந்த முறை தி ஜானகிராமனின் மோகமுள் நாவலுக்கு தன் பாணியில் திரைக்கதை எழுதியுள்ளார். மோகமுள்ளை ஏற்கெனவே ஞானராஜசேகரன் படமாக்கினார். படம் பெரிதாகப் போகவில்லை. இளையராஜா இசை மட்டும்தான் அதில் ஹைலைட். இப்போது மகேந்திரன் கைவண்ணத்தில் திரையில் புதிதாக மலரவிருக்கிறது!

ராணா படத் தொடக்க விழா...

-என்வழி ஸ்பெஷல்
3 thoughts on “அவர் எப்பவும் என் ரஜினிதான்! – இயக்குநர் மகேந்திரன்

 1. குமரன்

  முள்ளும் மலரும் என்பது மிக அருமையான தலைப்பு. சிலேடை. இரு பொருள் தருவது.

  முள், மலர் என்று இரண்டும் என்பது ஒரு பொருள்.
  முள்ளும் மலரும் அதாவது முள் செடி கூடப் பூக்கும் என்பது இன்னொரு பொருள்.

  இப்படித்தான் வில்லன் பாத்திரங்களில் “முள்”ளாக இருந்த சூப்பர் ஸ்டார் ஒரு கதாநாயகனாக “மலர” முடியும் என்று நிரூபித்த படம் “முள்ளும் மலரும்” பொருத்தமான தலைப்புதானே !

  மகேந்திரன் ஒரு கவிஞர். அவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழகான இனிமையான கவிதை.

  பின் குறிப்பு:
  பூக்கும் முள் எது? மூங்கில் புல் வகைத் தாவரங்களில் உயரமானது என்பர். நாணல் கூட புல் வகைத் தாவரமே. புல்வகைத் தாவரங்களின் சிறப்பே காற்றின் போக்குக்கு வளைந்து கொடுத்தாலும் தனது தனித்தன்மையைக் காப்பாற்றி நல்ல பலனைக் கொடுப்பதுதான். மூங்கில் இப்படித்தான் நெடிது வளர்ந்து நல்ல பலன் தருகிறது. முள்களை உடையது மூங்கில். மூங்கில் பூக்கும்.

 2. Manoharan

  எனக்கு பிடித்த இயக்குனர்களிலும் மகேந்திரனுக்குத்தான் முதல் இடம்.
  உதிரிப்பூக்கள்
  நெஞ்சத்தை கிள்ளாதே
  முள்ளும் மலரும்
  போன்ற படங்கள் இதுவரை வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *