BREAKING NEWS
Search

பேரன்பும் மனிதாபிமானமும் உறவின் மகத்துவமும்… மகேந்திரன் சினிமாவும்!

பேரன்பும் மனிதாபிமானமும் உறவின் மகத்துவமும்… மகேந்திரன் சினிமாவும்!


இன்று காலையிலேயே எனக்குப் பிடித்த, என் ஆதர்ச இயக்குநர் மகேந்திரனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அவருக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துகளைச் சொல்லி பதிலுக்கு அவரது ஆசியைப் பெற்றேன்.

பத்து நிமிடங்கள் பேசியிருப்போம். அடடா.. எத்தனை அருமையான மனிதர்! அன்பான தந்தையைப் போல, பரிவு மிக்க அண்ணனைப் போல், ரசனையான நண்பனைப் போல… மகேந்திரனுடன் பேசி முடித்தபோது, அவரது படங்களை அனுபவித்து ரசித்த உணர்வும் நிறைவும்…

“உங்கள் படங்கள், அதில் இடம்பெற்ற பாடல்களுடன்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு பாடலை கேட்கும்போதும், வயதில் ஒன்றிரண்டு தொலைந்து போவதாய் உணர்கிறோம். எங்களை இளமைப்படுத்திய நீங்களும் இளமையுடன் வாழ வேண்டும் சார்…” என்றதும், மகேந்திரன் ரொம்ப கூச்சத்துடன் சிரித்ததை உணர்ந்தேன்.

அடுத்து அவர் சொன்னார், “ரொம்ப மகிழ்ச்சி. என்மீது வைத்திருக்கும் அன்பு நெகிழ வைக்கிறது. என் படங்கள், பாடல்கள் உங்களை இந்த அளவு பாதிக்கக் காரணம் இளையராஜா. முழு பெருமையும் அவருக்குத்தான். அவரது இசையை கழித்துவிட்டு என் படங்களைப் பார்க்க முடியாது…,” என்றார்.


பெருந்தன்மை மட்டுமல்ல.. எளிமையின் சிகரம் அவர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பூட்டாத பூட்டுக்களில் வரும் ஆனந்தம் ஆனந்தம் பாடல் பற்றிப் பேசியபோது, ‘இப்போ கேட்டாலும் புதுசா இருக்குல்ல..’ என்றார் வெள்ளந்தியான குதூகலத்துடன். என் மகனும் மகளும் விரும்பிப் பார்க்கும் பாடல் அது என்றபோது மகிழ்ந்தார்!

மனைவி, பிள்ளைகளுடன் அவரது ரசிகன் நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்து மகிழ்ந்ததையும், உதிரிப் பூக்களில் வரும் அழகிய கண்ணே பாடலை தினமொருமுறை கேட்பதையும் சொன்னபோது, ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என்றார்.

மகேந்திரன் படைப்புகள்…

பேரன்பையும் உறவின் மகத்துவத்தையும் இயல்பான இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் தன் படங்களின் அடிநாதமாய் வைத்திருப்பார் மகேந்திரன்.

தான் வேறு, தன் படைப்பு வேறு என்ற பேதமில்லாத பெருங்கலைஞன் அவர் என்பது, அவருடன் பேசியபோது புரிந்தது!

அவரது திரையுலக வாழ்க்கை, புதுமைப் பித்தனின் சிறுகதைகளைப் போல அத்தனை எளிமையாகவும், ரசனை மிக்கதாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

12 படங்கள்தான் இயக்கினார். அவை ஒவ்வொன்றும் காலத்தை தாண்டிய கல்வெட்டுகளாக நிற்கின்றன அவரது படைப்புகள்.

முதல் படம் முள்ளும் மலரும். தமிழ் சினிமாவுக்கே புதிய அங்கீகாரத்தையும் அர்த்தத்தையும் தந்தது அந்தப் படம் என்றால் மிகையில்லை.

ரஜினி என்ற மகா கலைஞனின், யாரும் பார்த்திராத நடிப்புப் பக்கத்தைக் காண வைத்தது முள்ளும் மலரும்தான்.

காதலை பின்னணியாக வைத்து இப்படியொரு ஆக்ஷன் மியூசிகல் க்ளாசிக் தர முடியுமா என விழிவிரித்தது கோடம்பாக்கம், ஜானி பார்த்துவிட்டு!

புதுமைப்பித்தனின் சிறுகதையை, உதிரிப் பூக்கள் என்ற காவியமாக மகேந்திரன் படைத்த விதம், ரசிக மனங்களை தளும்ப வைத்தது!

பூட்டாத பூட்டுகள்,  நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என அனைத்துமே புதிய அனுபவத்தைத் தந்தன ரசிகர்களுக்கு.

ராஜாங்கம்…

மகேந்திரன் படங்கள் அனைத்துக்குமே இசை இளையராஜாதான். கடைசியாக வந்த சாசனம் தவிர. பாடல்கள் ஒவ்வொன்றும் மகா ரசனையானவை.

இளையராஜா அழகழகாய் மெட்டுக்கள் போட்டுத் தர, கவியரசர் காவியமாய் பாடல்கள் இயற்ற, அவற்றை காலம் சிறு கீறல் கூட போட்டுவிட முடியாத கல்வெட்டுக்களாய் செதுக்கி வைத்தார் மகேந்திரன்!

செந்தாழம் பூவில், அழகிய கண்ணே, ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது, ஏ தென்றலே…, மெட்டி ஒலி, பருவமே, உறவெனும்…, அள்ளித்தந்த பூமி…, இப்படி எத்தனையோ பாடல்கள், மூன்று தசாப்தங்களையும் தாண்டி ரசிக மனங்களை ஆளுகின்றன.

குறிப்பாக அள்ளித்தந்த பூமி.. பாடல் (நண்டு). இந்தப் பாடலின் வரிகளைக் கேட்கும் யாருக்கும் பச்சைப் பசேலென்ற தமிழகத்தின் ஏதோ ஒரு கிராமம் நினைவுக்கு வரும். ஆனால் திரையில் அவர் காட்டியது உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவை! ராஜாவின் இசை, மலேஷியா வாசுதேவன் குரல், மகேந்திரன் காட்சிப்படுத்திய விதம்… அந்தப் பாடலை ஒரு காவியமாக்கியது.

அவரது படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலுக்கும் இப்படிப்பட்ட விளக்கங்களை அலுக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

ரஜினியின் இயக்குநர்…

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாய், சூப்பர் ஸ்டார் ரஜினி தனக்குப் பிடித்த இயக்குநர் என்று எந்த மேடையிலும் தயக்கமின்றி குறிப்பிடும் ஒரே படைப்பாளி மகேந்திரன்தான். ரஜினியின் ஆல்டைம் பேவரிட் படம் முள்ளும் மலரும்!

மகேந்திரன் கடைசியாக இயக்கிய படம் சாசனம். அதன் பிறகு அவர் சினிமா எதையும் இயக்கவில்லை.

ஏழாண்டுகள் இடைவெளி… ஆனாலும் தனக்குப் பிடித்த சினிமா, தனக்குப் பிடித்த இசை என வாழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திரன் விரைவில் ஒரு புதிய சினிமாவுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய சினி்மாவில் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கிறது.. வன்முறையோ அளவின்றிக் கிடக்கிறது… இதுவரை பார்த்திராத வக்கிரம் வழிகிறது…

மகேந்திரன் படங்களில் காட்டிய தாய்மையும், மனிதாபிமானமும், இயற்கையைக் கொஞ்சி மகிழும் குழந்தைத்தனமும், இதயத்தை இதயம் சிறைப்பிடிக்கும் ஆளுமை மிக்க காதலும் மட்டும் தேடினாலும் கிடைப்பதாக இல்லை.

இன்று மகேந்திரனின் பிறந்த நாள். மீண்டும் மனிதம் வழியும் தன் படைப்புகள் மூலம் மனங்களை நிறைக்க வேண்டும் என அவரை வாழ்த்துவோம்!

வினோ

-என்வழி ஸ்பெஷல்
6 thoughts on “பேரன்பும் மனிதாபிமானமும் உறவின் மகத்துவமும்… மகேந்திரன் சினிமாவும்!

 1. கணேசன் நா

  பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

 2. sabitha.

  இந்த மண்ணின் மகத்தான கலைஞன் வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு. உங்கள் பதிவுக்கு என் நன்றி.உதிரிபூக்கள் படம் பார்க்கும் போது, இந்த மாதிரி ஒரு படம் இனிமே தமிழில் வருமா என்று தோணுது. தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த ,எளிமையும் அன்பும் நிறைந்த அந்த நல்ல மனிதருக்கு என் வந்தனம்.

 3. manithan

  தயவுசெய்து இதை படித்து விட்டு இவனுக்கு செருப்பால் அடிக்கவும்…

  ______________

  இவனைப் பற்றியெல்லாம் பேசவே கூடாது. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள தலைவர் பெயரை இழுக்கிறான்.

 4. மிஸ்டர் பாவலன்

  எந்திரன் படத்தின் விஞ்ஞானி பாத்திரம் கூட சில காட்சிகளில்
  ரஜினியின் ஜானி படத்தை ஞாபகப் படுத்தியது.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 5. மு. செந்தில் குமார்

  மகேந்திரன் படங்களில் காட்டிய தாய்மையும், மனிதாபிமானமும், இயற்கையைக் கொஞ்சி மகிழும் குழந்தைத்தனமும், இதயத்தை இதயம் சிறைப்பிடிக்கும் ஆளுமை மிக்க காதலும் மட்டும் தேடினாலும் கிடைப்பதாக இல்லை.

 6. arulnithya

  தலைவரின் ‘காளி’ முன் அனைவரும் காலியான, இதயத்துக்கு மிக நெருக்கமான காவியங்களை தந்தவர் நமது மகேந்திரன் சார் அவர்கள்.
  மேதகு பிரபாகரன் அவர்களே நேரில் அழைத்து யாழில் கலை பண்பாடு வளர்க்க வருமாறு கேட்டுகொள்ளப்பட்டவர் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *