BREAKING NEWS
Search

‘நாடு பார்த்ததுண்டா… இப்படி ஒரு தலைவனை இந்த நாடு பார்த்ததுண்டா!’

‘நாடு பார்த்ததுண்டா… இப்படி ஒரு தலைவனை இந்த நாடு பார்த்ததுண்டா!’

காமராஜரைப் படிப்பது, அவர் புகழ் பாடுவது என்பது ஆயிரம் கோயிலுக்குப் போய் வந்ததற்குச் சமம் என்றால்… இம்மியளவுக்குக் கூட மிகையானதல்ல. அத்தனை மேன்மையான மனிதர், தலைவர், நேர்மையாளர் அவர்.

தமிழக அரசியலில் இப்படி ஒரு தலைவர்… மக்கள் நலனைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க விரும்பாத உத்தமன் ஒருவர் இருந்தார் என்பதை யோசிக்கும் போதெல்லாம் மயிர்க் கால்கள் சிலிர்க்கின்றன.

காமராஜரைப் போன்றவர்களைக் கொண்டாடத் தவறுவதால்தான், இந்த தேசத்தில் ஒழுக்கமும், நேர்மையும் அழிந்து போய் மனிதாபிமானம் தெருவில் கிழிபட்டுக் கிடக்கிறது.

பெருந்தலைவர் முதல்வராக இருந்த சமயம்…. அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார்.

அந்தப் பேட்டியை இப்போது படிக்கும் போது, நெஞ்சம் விம்முகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள்  கிடைக்காமல் போனதுதான், ‘அரசியல்வாதிகள் என்போர் சமூக விரோதிகள்’ என்ற புதிய அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறது.

அந்தப் பேட்டி (2.7.1961):

விருது நகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது.

அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் சுலோசன நாடார் வீதி எனும் அந்த சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ்நாட்டின் தவப் புதல்வர் காமராஜர் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான ஓர் எளிய இல்லம். நாங்கள் போன சமயம் வாயில் கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம்தான். ஆனால் துப்புரவாக இருந்தது. நாலு பக்க சுவர்களிலும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல்முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்யமூர்த்தியின் உருவம்.

கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது.

“வாங்கய்யா…” என்று அன்புடன் இன்முகம் காட்டி அழைத்தபடியே எழுந்துபோய் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டார். விளக்கின் ஒளி அந்த எளிய வாழ்க்கையின் தூய்மையை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

பண்புமிக்க அந்த மூதாட்டியார், ‘நீங்கள் யார்?’ என்று கூட கேட்கவில்லை. நாங்களாகவேதான் சொன்னோம் (இன்றைக்கு முதல்வரின் தாயார் அல்லது உறவினரை பேட்டியெடுக்க நேரம் கேட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்!).

“ஓர் ஒப்பற்ற தேசத் தொண்டனை, தியாகியை, தலைவனை, தவப் புதல்வனைப் பெற்றெடுத்த, தங்கள் திருமுகத்தைக் கண்டுபோகவே வந்துள்ளோம். அந்த உத்தமனைப் பெற்றெடுத்த பாக்கியசாலி அல்லவா நீங்கள்?”

“ஆமாம் அய்யா… அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்!” தொட்டிலில் இட்டு, தாலாட்டி வளர்த்த தாயின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மணிவாக்கு இது.

“தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…”

“நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்..”

“சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…”

“நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…”

“போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?”

“நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!”

“இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?”

“உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?”

“மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?”

“அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…”

“எவ்வளவு பணம் அனுப்பறாரு..?”

“120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா… ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். ‘என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?’-ன்னு கேட்டேன்… ‘நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…”ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா….”

(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)

“இந்த வீடு எப்போது கட்டினது?”

“அவன் பிறக்கிறதுக்கு முந்தியே கட்டினது. எனக்கு 17 வயசிலயே அவன் பிறந்தான். எனக்கு இருவத்தியஞ்சில அவன் தகப்பனார் இறந்து போனாரு. நிலம் நீச்செல்லாம் இருந்தது. இவன் செயில்ல இருக்கிறப்போ அதையெல்லாம் வித்து வித்து செலவழிச்சிட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். சின்ன வயசுல, இவனைப் படிக்க வைக்கணும்னு நான் கொஞ்சமான பாடா பட்டேன். ஒரு வாத்தியார இட்டு வந்து படிக்கச் சொன்னேன்…”

“ஏன் படிப்பை விட்டுட்டாரு…”

“எட்டு வரைக்கும் படிச்சான். அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டுல தங்க மாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடா படுத்துவான். கொட்ற மழையில எங்க போவானோ… எங்க திரிவானோ… வலைப் போட்டு தேடுனாலும் அம்பட மாட்டான். சரி, வெயிலடிச்சா வருவானா… அப்பவும் வரமாட்டான்.

ஆனா ஒண்ணு.. அப்பவும் தலைவலின்னு படுத்ததில்ல.. இப்பவும் படுத்ததில்லை. சின்னப் பிள்ளையில ரொம்ப அடம்பிடிப்பான். இப்ப எங்க போச்சோ தெரியல அந்தக் கோவமெல்லாம். அப்படி இருந்தவனா இப்படி அறிவாளியாகிட்டான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கய்யா… அதோ இருக்காரே முருகன்… அவன்தான் இவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்..!”

இதைக் கூறும்போது, அந்த அன்னையின் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடின. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’, என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய்யான வாக்கு!

“உங்கள் மகன் படிக்கவில்லைதான். ஆனாலும், அவர் அறிவாளுக்கிடையே ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குகிறார். இந்த நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறார்…”

“ஆமாம் அய்யா… அவன் என் வயிற்றில் பிறந்த மாணிக்கம். இந்தக் கைகளால் அவனைத் தாலாட்டினேன், சீராட்டினேன்…”, தன் மணிக் கரங்களை பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தவண்ணம் கூறினார் அந்த அன்னை.

“நீங்கள் உங்கள் கைகளால் அவரைத் தாலாட்டினீர்கள். இன்று அவர் கைகள் இந்த நாட்டு மக்களையே தாலாட்டுகின்றன…”

“உண்மைதானய்யா…”

“நேரு இங்கு வந்திருந்தபோது, தங்களைப் பார்த்துவிட்டுப் போனாராமே… அவர் என்ன சொன்னார்?”

“சிரித்தபடியே மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு ஏதோ சொன்னார். என் மகனும் அப்போது பக்கத்திலேதான் இருந்தான்.”

“நேருஜி என்ன சொன்னார்?”

“அவங்க பாஷை எனக்குப் புரிதாய்யா… என்னமோ சொன்னாரு… வேறென்ன சொல்லியிருப்பாரு… எல்லாரையும்போல் ‘இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்கள் பாக்கியசாலின்னு’ சொல்லியிருப்பாரு…!”

“இத்தகைய மகனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான். தமிழ்நாட்டுக்கு இப்படியொரு உத்தமனைப் பெற்றுக் கொடுத்த தங்களை வணங்குகிறோம் அம்மா… நாங்கள் விடைப் பெற்றுக் கொள்ளலாமா?”

“மகனைப் பெற்று வளர்த்து இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் நீண்ட காலம் இருந்து இந்த நாட்டுக்கு மேலும் மேலும் சேவை செய்துகிட்டிருக்கணும் என்பதுதான் என் ஆசை…”

அந்த அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

“ஏன் கண்கலங்குகிறீர்கள்… இந்த மகனைப் பெற்றதற்கு மகிழ்ச்சியடையுங்கள்.”

“துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்”, என்று கூறினார்.

தம்முடைய ஒரே தவப்புதல்வனை நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு தனிமையில் வாழ்வதைக் காட்டிலும் பெரிய சோகம் ஒரு தாய்க்கு வேறென்ன இருக்க முடியும்!

(15 ஜூலை பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்)

-என்வழி ஸ்பெஷல்
25 thoughts on “‘நாடு பார்த்ததுண்டா… இப்படி ஒரு தலைவனை இந்த நாடு பார்த்ததுண்டா!’

 1. s venkatesan, nigeria

  உண்மையான மக்கள் தலைவர். எனக்கு என்ன ஆர்ச்சர்யம் என்றால் இன்று இருக்கும் தலைவர்கள் இவரை பற்றி சிறிதளவு ஆயினும் தெரிந்தால் தன்னை பற்றி கூனி குறுகி போக வேண்டுமே?

 2. MANNAI SENTHIL

  மிக சிறந்த கட்டுரை . மனிதருள் மாணிக்கம் காமராஜர் !

 3. குமரன்

  பெருந்தலைவரின் பிறந்த நாளில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ஆனந்த விகடனின் பழைய பெட்டியை மறுபதிப்பு செய்தமை சிறப்பு.

  அவரது வியக்க வைக்கும் நேர்மையும், அவரைப் போலவே (தாயைப் போல அவரோ) அவரது அன்னையின் எளிமையும் நேர்மையும் நினைத்தாலே நெஞ்சம் விம்முகிறது.

  அவரது இல்லத்தைத் தரிசனம் செய்யவே ஒருமுறை விருதுநகர் சென்றிருந்தேன். கடும் வெய்யில், ஒதுங்கக் கூட மரம் இல்லை. விருதுநகர் தெருக்கள் சாதாரணமாகவே குறுகியவை. அதிலும் அவரது இல்லம் இருக்கும் இடம் நிச்சயம் சந்து என்றுதான் சொல்ல வேண்டும். எப்பேர்ப்பட்டவரும் காரில் சென்று இறங்கி அவர் வீட்டுக்குப் போய்விட முடியாது. எங்கோ நிறுத்திவிட்டு நடந்துதான் போக முடியும். அப்படி கார் புகமுடியாத அளவுக்கு சிறிய சந்து. எத்தனை எளிய வாழ்வு!

  நான் சிறுவனாக இருக்கும்போது அவர் என்னை தன்னருகில் இழுத்து, எனது தலையைத் தொட்டு ஆசி வழங்கியதை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன.

 4. umarfarook

  அந்த காமராஜரை தோற்கடித்த பெருமை நம்ம தமிழ் மக்களுக்கே உரிய வரலாறு… அந்த பாவத்தை மக்கள் இன்றும் அனுபவிக்கின்றார்கள்

 5. தினகர்

  நான் கல்லூரி முடித்த பிறகு, ஒரு நாள் என் தந்தை விவசாய சங்க பிரதிநிதிகளில் ஒருவராக அரசு அலுவலர்களை பார்த்து, தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்து விட்டு வந்தார். ”தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழன்” என்று சொல்லி, எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார் பழைய கதைகள் பக்கம் பேச்சு திரும்பியது.

  நம்ம கிட்டே எல்லாம் வரி வசூலிச்சு தான், காமராஜர் மணிமுத்தாறு அணை கட்டினார். பாபநாசம், மணிமுத்தாறு அணை நீர் எப்போதெல்லாம் விவசாயத்திற்கு திறந்து விடப்பட வேண்டும் என்று அரசு கெஜட்டில் தெளிவாகவும் இருக்கிறது. இந்த பி.டபுள்.யூ காரன் கிட்டே பிச்சைக்காரர்கள் போல் போய் நின்று கெஞ்சினாலும் பயித்துக்கூட திறக்கமாட்டேங்கிறான்.

  காமராஜர் இருந்திருந்திருந்தா, நமக்கு போக மீதி இருந்தாத்தான் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொடுத்திருப்பார். விவசாயத்திற்காக கட்டிய அணை விவசாயிகளுக்கு தான் என்று அப்போவே’ அப்பச்சி’ சொல்லியிருக்கிறார் என்றார்.

  அப்படியா என்று பழங்கதைகளை கிளறிவிட்டு கேட்கும் போது ஒரு ஆச்சரியமான விஷயம் தெரியவந்தது. காமராஜர் எங்க கிராமத்திற்கு இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறாராம். அவரை ஒரு தேரில் வைத்து, அம்மன் சப்பரம் வருவது போல் ஊர் முழுவதும் அழைத்து வந்தார்களாம். அவர் மறைந்த நேரத்தில் ஊரில் நூற்றுக்கணக்கானோர், தந்தைக்கு மகன் செய்யும் முறை போல் மொட்டை அடித்து இறுதி மரியாதை செலுத்தினார்களாம். அதில் முக்கியமான செய்தி என்னவென்றால் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் திமுக இளைஞர்களாம். எங்கள் ஊர் மட்டுமல்ல, சுற்று வட்டாரத்தில் பெரும்பானமையான கிராமங்கள், சிறிய நகரங்களிலும் இதே போல் ஆயிரக்கணக்கானோர் மொட்டை போட்டு மகனாக கடமையாற்றி இருக்கிறார்களாம்.

  ”அவரு கல்யாணமே பண்ணிக்கல்ல. ஆனா இறந்த போது அவருக்கு ஆயிரக்கணக்கான மகன்கள்” என்றார்.

  கட்சி வேறுபாடு கடந்து மக்களில் ஒருவராக வாழ்ந்த அந்த மகானின் வாழ்க்கையை, பத்து சதவீதம் கடைப்பிடித்தால் கூட நாடு போற்றும் மிகப்பெரும் தலைவர் ஆக முடியும்.

 6. enkaruthu

  எனக்கு அரசியலில் மிகவும் பிடித்தவர் திரு காமராஜர் அவர்கள்.தன் தாயையும் தாய் நாட்டின் மக்களையும் ஒரே விதமாக பாவித்த இந்த உலகமே பாத்திராத உன்னத தலைவர் இவர் . உண்மையாலுமே அன்று திரு காமராஜர் அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள். இன்று இந்த உலகமே தமிழ்நாட்டு மக்களா மிகவும் அறிவாழிகள் ஆயிற்றே என்று சொல்வதற்கு அன்றே சாப்பாட்டுடன் கல்வி என்னும் விதையை விதைதைதவர். தன் கடைசி நாளில் 18 ரூபாயுடன்(நீங்கள்தானையா உண்மையான மக்கள் தலைவர்) நம் மக்களை நீங்கா துயரத்தில் தள்ளிவிட்டு மறைந்த ஆனால் இன்றும் மக்கள் மனதில் வாழும் பெருந்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 7. venkatesan

  பாஸ் ரியலி சூப்பர்…எனக்கு ரோல் மாடல் அவர் தான்…நானும் அவர் மாதிரி நேர்மையா வாழ்வேன்…

 8. Sureshkumar

  Could you publish how he was worsly and wrongly miscriticised byபி the கலைஞர்….

 9. Nirmal

  எப்போ இந்த மக்கள் வாக்களிக்க பணம் வாங்காமல் வாக்களிக்கட்டும், அப்போ கண்டிப்பாக உண்மையான அரசியல்வாதி உருவாகும். தப்பை நம்மிடமே வைத்து கொண்டு மற்றவர்களை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை என்பது தெரியவேண்டும். (குறிப்பாக குடிமகன்கள் குடிக்காமல் இருந்தால், மதுக்கடை திறந்து என்ன பயன் ).

 10. மு. செந்தில் குமார்

  அந்தப் பேட்டி (2.7.1961)

  இந்த பழைய அருமையான பேட்டியை படிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

  காமராஜர் என்ற அற்புத மனிதரை நான் என்றும் அரசியல் வாதியாக பார்த்ததில்லை. மாறாக நல்ல மனிதராக, மக்கள் மீது அக்கறை கொண்டவராகத்தான் பார்த்திருக்கிறேன்.

  முக்கியமாக அவருடைய கல்விப்பணி என்றுமே எவராலுமே மறக்க முடியாத ஒன்று.

 11. kabilan

  ரஜினி ரசிகன்,தினகர் சார் கருத்துகள் மிக அருமை

 12. balaiah

  பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் முதல்வராக இருந்த போது விருதுநகரில் அவரது குடும்பத்தினர் தெருக்குழாயில் தான் தெரு மக்களோடு தண்ணீர் பிடிப்பார்கள். நம்ப முடிகிறதா! திராவிட கட்சிகள்
  வந்த பின் மந்திரிகள் எப்படி இருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அக்காலத்தில் மஜீத் என்ற ஒரு மந்திரி இருந்தார். அவர் விருதுநகர் சென்று தலைவரின் தாயாரை சந்தித்தபோது
  அந்த அம்மா நல்ல தண்ணீர் எடுக்கும் கஷ்டத்தை அவரிடம் சொல்ல உடனே மந்திரி மஜீத் காமராஜர் வீடுக்கு தனியாக தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார். சென்னை திரும்பிய மஜீத் பெருந்தலைவரை சந்தித்து விருதுநகர் சென்று இருந்தபோது அவர் தாயாரை சந்தித்தாகவும் அவர் நலமாக இருக்கிறார் என்பதை சொல்லி தான் தண்ணீர் இணைப்பு கொடுத்த விவரத்தையும் சொல்லிருக்கிறார். தலைவர் அவர் தாயாருக்கு உதவி செய்தால் சந்தோஷ படுவார் என்று மந்திரி மஜீத் நினைத்து இருக்கிறார். இதை கேட்டவுடன் வெகுண்டு எழுந்த காமராஜ் அந்த தண்ணீர் இணைப்பை உடனே அகத்ற்றவிட்டால் உன்னை மந்திரி பதவியிலிருந்து தூக்கி விடுவேன் என்று சப்தம் போட வேறு வழி இல்லாமல் தண்ணீர் கனைக்சன் அவர் வீட்டில் இருந்து அகற்றப்பட்டது. பொது மக்களுக்கு இல்லாத தனிப்பட்ட சலுகை ஆளுவோருக்கு கூடாது என்று நினைத்தவர் பெருந்தலைவர். ம்……. இப்பொது உள்ள அரசியல் வாதிகளை நினைத்தால் ……………… நெஞ்சு பொறுக்குதில்லையே ! நெஞ்சு பொறுக்குதில்லையே !!
  மனித வடிவில் வந்த அந்த மகான் உயிரோடு இருந்தபோது அவர் அருமை தெரியவில்லை. இதுபோல மகான்கள் இனி எப்போது தோன்றுவார்கள் !?

 13. r.v.saravanan

  காமராஜர் அவர்கள் பற்றிய ஒரு அருமையான பேட்டியை தந்தமைக்கு நன்றி வினோ

  பெருந்தலைவரை போற்றுவோம்

 14. micson

  தமிழக அரசியல்வாதிகளே!! இந்த பெருந்தலைவரின் வாழ்க்கையிலிருந்து ஒரு 20 சதவிகிதமாவது கடைபிடித்தால் நம் தமிழ்நாடு விரைவில் நல்ல சுபிட்சம் பெரும் .

 15. Karthik

  அவர் பிறந்த புண்ணிய பூமியான விருதுநகரில், நான் பிறந்தேன் என்பதே பெரும் பாக்கியமாக கருதுகிறேன்!! எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று, காமராஜர் பிறந்தநாளை வெகு விமரிசையாக, விருதுநகரில் கொண்டாடினார்கள் !! நேற்று பெருந்தலைவர் இல்லம் சென்று அவரின் பாதம் தொட்டு வணங்கி வந்தேன்!!

 16. s venkatesan, nigeria

  //நான் சிறுவனாக இருக்கும்போது அவர் என்னை தன்னருகில் இழுத்து, எனது தலையைத் தொட்டு ஆசி வழங்கியதை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன// திரு குமரன் அவர்களே, நீங்கள் அதிர்ஷ்டக்காரர்தான் போங்கள்.

  நேர்மையானவர்கள் அரசியலில் இருக்க விரும்பாததே நமக்கு இப்படி ஒரு தலைவர் கிடைக்காமல் இருக்க காரணம். அங்கொன்றும் இங்கொன்றும் ஆக சிலர் இருந்தாலும், அவர்கள் மக்கள் செல்வாக்கு இல்லாதவராக உள்ளனர். (உதாரணம் – நல்லகண்ணு நல்லவர் ஆனால் பெரும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்). மிசோரம் மாநிலத்தில் நீண்ட காலம் முதல் அமைச்சராக இருந்து விடை பெரும் போது வெறும் சைக்கிளில் வீடு திரும்பிய ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் இருந்தார் (பெயர் நினைவில்லை) .

  பெருந்தலைவர் காமராஜ் போன்ற தலைவர் இப்பொழுது தமிழ்நாட்டில் அல்ல, இந்தியா முழுவதும் ஆள்வதற்கு தேவை. இப்பொழுது இருக்கும் கொள்ளியில் நல்ல கொள்ளியை தேர்வு செய்து கொண்டு இருக்கிறோம்.

 17. D.Karuppasamy

  அந்த மகான் பிறந்த மண்ணில் வாழ எங்கலுக்கு இடம் தந்த இறைவனை வணகிங்கி கண்ணீரை காணிக்கை ஆக சர்பிக்குரும் .இன்று தமிழ்நாடு இந்த அளவிற்கு யோர அவர்தம் காரணம்.

 18. arulnithya

  வினோ
  பதிவுக்கு கோடி நன்றி. பெருந்தலைவர் என்று அழைக்கப்பட்ட உண்மையான மக்கள் தொண்டர் அவர். கண்கள் கலங்கி விட்டன வினோ.
  மனிதருக்குள் இருக்கும் நல்ல சிந்தனைகள் அவர் பேர் கேட்கும் போதோ, அவர் பற்றி படிக்கும் போதோ விழிப்படைகின்றன. உண்மை வினோ.
  வார்த்தைகள் வரவில்லை.
  உண்மை தலைவர். அவரை எப்போதும் வணங்குகிறேன்.

 19. Ravi

  அருமையாக உள்ளது நேர்காணல் , இதை காமராஜர் குடும்பத்தினர் நடத்தி வரும் ப்லொகில் மறு பிரசுரம் செய்ய அனுமதி கிடைக்குமா ?

 20. Farose Ali

  நான் பெருந்தலைவர் காமராசரின் நேர்மையில் துளி அளவாவது தொண்டாற்ற விரும்பிகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *