BREAKING NEWS
Search

என்எல்சியில் பங்கு… பெருந்தலைவர் காமராஜர் கனவை நனவாக்கிய முதல்வர் ஜெயலலிதா!

என்எல்சியில் பங்கு… காமராஜர் கனவை நனவாக்கிய முதல்வர் ஜெயலலிதா!

kamaraj-the great

என்எல்சி துவக்க விழாவில் பெருந்தலைவர், ஜவஹர்லால் நேரு.. நாள் மே 20, 1957. பெருந்தலைவர் முகத்தில் ஒளிரும் நேர்மையும் பெருமிதமும் மிக்க புன்னகையைப் பாருங்கள்…

ன்எல்சி பங்கு விற்பனை விஷயத்தில் ஜெயலலிதா அணுகுமுறை அரசியல் மாச்சர்யங்கள் தாண்டி மெச்சப்படுகிறது!

ஒப்புக்கு கடிதங்கள் எழுதி, சில சாடல் அறிக்கைகளுக்குப் பின் அமைதியாக நடுவண் அரசு ஆணையை ஏற்கும் வெண்டைக்காய் அரசியலைச் செய்யாமல், யாரோ சில பணக்காரர்களின் கைகளுக்குப் போகவிருந்த லாபம் கொழிக்கும் என்எல்சி பங்குகளை, மக்களுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களே வாங்கிக் கொள்ள வழிவகை செய்த முழுப் பெருமையும் முதல்வர் ஜெயலலிதாவுக்கே உண்டு. அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவரே!

தனியாருக்கு ஏன் விற்க வேண்டும்… தமிழக அரசே அந்தப் பங்குகளை வாங்கிக் கொள்ளும் என ஜெயலலிதா அறிவித்தபோது அதை வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் அவர் விடுத்த அறிக்கை என்றே பலரும் நினைத்திருக்க, அதை இறுதிவரை உறுதியாக நின்று நடைமுறைப்படுத்தியும் காட்டிவிட்டார் முதல்வர்.

பெருந்தலைவர் கனவு

என்எல்சி நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலான நவரத்னாவில் இடம்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தை 1957-ம் ஆண்டு மே 20-ல் தொடங்கிய போது, தமிழகத்தின் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். அவரது தலைமையில் அப்போதைய பிரதமர் நேருதான் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய காமராஜர், ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தமிழகத்தில் அமைந்துள்ளது. நிலம், உழைப்பு அனைத்தும் தமிழகம் சார்ந்தே உள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் லாபத்தை தமிழகத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும்,” என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். அதுதான் பெருந்தலைவரின் தொலை நோக்குப் பார்வையும் யதார்த்தமான துணிவும்.

உடனே, “உரிய நேரம் வரும்போது அது பற்றி பரிசீலிக்கப்படும்,” என பிரதமர் நேருவும் உறுதியளித்திருந்தார்.

ஆனால் அவர் தந்த உறுதிமொழியை மத்திய திட்டக்குழு காற்றில் பறக்க விட்டது. அதேநேரம் காமராஜரும் சி சுப்ரமணியமும் இதை வாய்ப்பு நேரும்போதெல்லாம் வலியுறுத்தத் தவறவில்லை. இன்னொரு பக்கம், முழுக்க முழுக்க 100 சதவீத அரசு நிறுவனமாகவே இருந்ததால், அதுபற்றி பெரிதாக யாரும் கவலைப்படவில்லை. இன்றும் வட இந்தியாவுக்கு மிக முக்கிய மின் ஆதாரமாகத் திகழும் என்எல்சியில் தமிழகத்துக்கு சொற்ப அளவே மின்சாரம் கிடைக்கிறது. அதன் லாபத்தில் காமராஜர் கேட்ட பங்கும் கிடைக்கவில்லை. முன்பு விபி சிங் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தின் நிலம், வளங்களைப் பயன்படுத்துவதற்காக என்எல்சி தமிழகத்துக்கு ராயல்டியாக ஒரு தொகை தந்தது. அது திமுக முயற்சியில் நடந்தது. ஆனால் பின்னர் தொடரவில்லை.

jaya-2years
இப்போது காமராஜர் கனவை வேறு வழியில் நிறைவேற்றியிருக்கிறார் இன்றைய முதல்வர் ஜெயலலிதா. ரூ 500 கோடியை முதலீடு செய்து, 3.56 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு சொந்தமாக்கியதன் மூலம்,  நேரடியாகவே அந்த நிறுவனத்தின் லாபத்தில் தமிழகத்துக்கும் ஒரு பங்கு கிடைக்கச் செய்திருக்கிறார். தமிழகத்துக்கு பொற்கால ஆட்சியைத் தந்த அந்த பெருந்தலைவரின் பிறந்த நாளான ஜூலை 15 அன்று இந்த நல்ல விஷயம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நல்லவர்களின் விருப்பம், நாள் கடந்தாலும் நடந்தே தீரும் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணமிருக்கிறதா!

இந்தப் பங்குகளை பொதுமக்கள் வாங்கினால் என்ன கெட்டுப் போய்விடும்? அரசு வாங்கியதால் தேவையற்ற குறுக்கீடுகள் வரும் என்றெல்லாம் சிலர் விதண்டாவாதம் செய்து தங்கள் அறியாமையைக் காட்டி வருகின்றனர்.

பொதுவாக இதுபோன்ற பொதுத்துறை நிறுவனப் பங்குகளை நானோ நீங்களோ குப்பனோ சுப்பனோ வாங்கப் போவதில்லை. ஆனால் பணம் பெருத்த முதலாளிகள் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கி நிறுவனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் அல்லது குறைந்தபட்சம் தங்களது செல்வாக்கு எடுபடுமளவுக்காவது வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் தமிழக அரசின் கையில் பங்குகள் சென்றிருப்பது, தமிழக மக்களிடமே இருப்பதற்கு சமம். அரசு வாங்கியுள்ள பங்குகளுக்கு டிவிடென்டும் கணிசமாகக் கிடைக்கும். இதெல்லாம் வெளிப்படையான ஆதாயங்கள். நம் மண்ணில் இயங்கும் மத்திய அரசின் நிறுவனம் ஒன்றில் எந்த வித பிடிமானமும் இல்லாமலிருந்த மாநில அரசுக்கு இப்போது பிடி கிடைத்துள்ளது. வெறும் லாப நோக்கில் செயல்படும் தனியார் புகுந்து நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இப்போதும் முற்றாக ஒரு பொதுத்துறை நிறுவனமாகவே என்எல்சி இயங்கும் என்பது வேறு சில ஆதாயங்கள்.

இந்தியாவின் எந்த மாநில முதல்வருக்கும் வராத ஆக்கப்பூர்வமான யோசனை மற்றும் துணிச்சல் இது. என்எல்சியிடமிருந்து தமிழகத்துக்கான ராயல்டியையும் தொடர்ந்து பெற முதல்வர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து, இதே அணுகுமுறையை விவசாயிகள் சார்ந்த விஷயங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடுகளிலும் கல்விக் கொள்கைகளிலும் முதல்வர் கடைப்பிடிக்க வேண்டும். மின்சாரம், தண்ணீர் வள மேம்பாடு, இயற்கை வேளாண்மை போன்றவற்றில் இந்த உறுதியையும் புதிய அணுகுமுறையையும் ஜெயலலிதா கடைப்பிடித்தால், அரசியல் மாச்சரியங்களுக்கப்பால் போற்றுதலுக்குரிய முதல்வராக நிலைப்பார்!

வினோ
-என்வழி
10 thoughts on “என்எல்சியில் பங்கு… பெருந்தலைவர் காமராஜர் கனவை நனவாக்கிய முதல்வர் ஜெயலலிதா!

 1. தினகர்

  முதல்வர் ஜெயலலிதா, எல்லா விஷயங்களிலும் இதே போல் விவேகமாக நடந்து தமிழகத்தை முதல் மாநிலமாக்க வாழ்த்துக்கள்.

  ’என் வழி’ திமுக வழி என்று கூக்குரலிட்டவர்கள் எல்லாம் எங்கே? நல்லது யார் செய்தாலும் தட்டிக்கொடுக்கவும், தவறுகளை தட்டிக்கேட்கவும் ’தனி வழி’யாக செயல்படும் ’என் வழி’ க்கும் ஆசிரியருக்கும் பாராட்டுகள்.

 2. மு. செந்தில் குமார்

  முதல்வர் ஜெயலலிதா, எல்லா விஷயங்களிலும் இதே போல் விவேகமாக நடந்து தமிழகத்தை முதல் மாநிலமாக்க வாழ்த்துக்கள். – நன்றி திரு.தினகர்

 3. Rajkumar

  DMK thalavar Kalaigar than intha pirachanai sumugamaga thera uthavi seithar. Envazhi athai pathivu seiyathathu tharcheyala? ilai veru ethavatha?
  Dinakar Nanga engaum oddala Manachachiodu think panunga Intha position la Kalaigar Cm a irunthiruntha Jaya ipidi othulaipu kuduthirupargala???

 4. நாஞ்சில் மகன்

  அம்மா எதை செய்தாலும் இங்கே ஒரு கிழம் ஒப்பாரி வைக்கும். அதனால்தான் தமிழ்நாடு முன்னேறாமல் இருக்கு.இதோ கிழத்தின் புலம்பல்

  என்.எல்.சி., பங்கு விற்பனையை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உறுதியாக இருந்திருக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, முதலில் பங்குகளை விற்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். பின்னரே அந்த பங்குளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என கூறினார். பங்கு விற்பனையை அனுமதிக்க முடியாது என்ற கொள்கையில் ஜெயலலிதா உறுதியாக இருந்திருந்தால், போராட்டத்தின் அழுத்தம் காரணமாக பங்கு விற்பனையை மத்திய அரசு தவிர்த்திருக்கும். தற்போது ஜெ.,வின் முடிவால், மத்திய அரசின் எண்ணம் நிறைவேறியுள்ளது. இதே போன்ற சூழ்நிலை கடந்த 2006ம் ஆண்டு இருந்த போது, தான் பங்கு விற்பனையைத் தடுக்க மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி, அதை தடுத்ததாகவும் தனது அறிக்கையில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 5. குமரன்

  ///நல்லவர்களின் விருப்பம், நாள் கடந்தாலும் நடந்தே தீரும்///

  சத்தியமான உண்மை.

  பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சீரிய முறையில் மாற்றியமைத்து நடைமுறைப் படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

  பெருந்தலைவர் காமராஜரின் என்.எல்.சி லாபப் பங்கைத் தமிழ்நாட்டுக்கு சிறிதாவது வரவைத்தவர் இப்போது ஜெயலலிதா.

  இதே ஜூலை பதினாறு அன்று கருணாநிதி ஓரளவு மனம் திரும்பித் தான் பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராகப் பேசியமைக்கும் நடந்தமைக்கும் வருத்தம் தெரிவித்தது மன நிறைவு.

  ஆனால், எம்.ஜி.ஆரின்/ ஜெயாவின்/ கருணாநிதியின் அடிப் பொடிகள் (கருணாநிதியின் பேரன் உள்பட) அனைவரும் பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர், அவர்கள் தாங்கள் ஊழல் செய்து அரசியலில் சம்பாதித்த பணத்தை இக்கல்லூரிகளை நிறுவப் பயன்படுத்தினர் என்பது ஊரறிந்த உண்மை. சில காங்கிரஸ்காரர்களும் இந்தக் கொள்ளையைச் செய்துகொண்டே தங்களை காமராஜர் வழித் தோன்றல்களாகக் கூறிக் கொள்வது கடைந்தெடுத்த கயமை.

  ஆக, காமராஜரின் தலையாய கனவான இலவசக் கல்விக் கனவைச் சிதறடித்த சிறுமை ஜெயாவையும் கருணாநிதியையும் சேர்ந்துவிட்டது. இதில் இந்தக் கல்விக் கொள்ளை துவங்கி நடந்து வருவது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் என்பதால் அவருக்கு இந்தப் பாவத்தில் பங்கில்லை.

  யார் வருவார்?

  காமராஜரின் இலவசக் கல்விக் கொள்கைக்கு மறுவாழ்வு தர யார் வருவார்?

  அவரது மதுவிலக்குக் கொள்கைக்கு மறுவாழ்வு தர யார் வருவார்?

  காத்திருக்கிறோம்.

 6. Raja.D

  Tamil nadu CM is very very Great. We are all very proud of my முதல்வர் ஜெயலலிதா!

 7. Ganesh Shankar

  //’என் வழி’ திமுக வழி என்று கூக்குரலிட்டவர்கள் எல்லாம் எங்கே? நல்லது யார் செய்தாலும் தட்டிக்கொடுக்கவும், தவறுகளை தட்டிக்கேட்கவும் ’தனி வழி’யாக செயல்படும் ’என் வழி’ க்கும் ஆசிரியருக்கும் பாராட்டுகள்.//

  ஒரு முறை கருத்துக்கள் ஆளும் கட்சியுடன் ஒத்துபோவதால்,உடனே கூக்குரல் இட்டவர்கள் எங்கே என்றால்,அவர் அவர் அவர்களிடத்தில் இருகிறார்கள்,இருப்பார்கள்.

  மேலும் இந்த விவகாரத்தில் கருணாநிதி விட்ட அர்த்தமற்ற,பொருளற்ற அறிக்கை மாநிலத்தின் முதல்வர் மற்றும்,இங்கே முதல்வரின் செயல் என்று சொல்லி இருப்பதை கொச்சை படுத்தி அவர் பேசியதையும் கூட செய்தியை போடலாமே.

 8. Krishna

  2010-ல் மத்திய அரசு பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதற்கு சட்டம் இயற்றிய காலங்களில் திமுக மெளனமாக இருந்ததால் தான் நெய்வேலி பங்குகளை விற்பதற்கு மத்திய அரசுக்கு எளிதாக இருந்தது. மத்திய அரசின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் திமுக தலையிடுவதில்லை என்று கருணாநிதி சில நாட்கள் முன் சொன்னதன் அர்த்தம் மக்களுக்கு இப்போது விளங்கியிருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *