BREAKING NEWS
Search

மல்லையாக்களுக்கு உச்சத்திலிருக்கிறது மச்சம்!

‘மோசடி நிறுவனம் கிங்பிஷருக்கு அரசு கை கொடுப்பது சரிதானா?’

மும்பை: விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் இன்றும் 20 விமான சேவைகளை முன்னறிவிப்பின்றி ரத்து செய்தது.

ஏற்கெனவே சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) விடுத்த எச்சரிக்கையையும் மீறி இந்த விமான ரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கிங்பிஷர்.

சமீப காலமாக மிகுந்த சர்ச்சைக்குரிய விமான போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது கிங்பிஷர்.

நஷ்டத்தில் இயங்குவதாக அதன் உரிமையாளர் விஜய் மல்லையா கூறினாலும், அவரது நோக்கம் வேறு  என்றே கூறப்பட்டு வருகிறது. மல்லையாவின் நோக்கம் தனது நிறுவனத்துக்குள் வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுவருவது மற்றும் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வது போன்றவைதான்.

மேலும் பயணக் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்துவது அவரது இன்னொரு நோக்கம். அதை தனியாக உயர்த்த முடியாது. எனவே மற்ற நிறுவனங்களின் கட்டணங்களையும் உயர வைத்து, கிங் பிஷர் கட்டணங்களை உயர்த்துவது இன்னொரு முக்கிய நோக்கம். ஏற்கெனவே நாட்டிலேயே அதிகக் கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மல்லையா நிறுவனம்.

உதாரணத்துக்கு சென்னையிலிருந்து ஹைதராபாத் செல்ல ஸ்பைஸ் ஜெட்டில் ரூ 3200-க்குள்தான். ஆனால் கிங்ஃபிஷரில் ரூ 9800 வரை… இது ஒரு சாம்பிள்தான்!

திட்டமிட்டு நஷ்டக் கணக்கு காட்டி வருகிறது கிங்ஃபிஷர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. குறிப்பாக கடந்த ஆறுமாதங்களாகத்தான் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. சாராய சாம்ராஜ்ய அதிபதியான விஜய் மல்லையா, இந்த நிறுவனத்தின் நஷ்டத்தையும் கடனையும் முழுவதுமாக மக்கள் தலையில் கட்ட திட்டமிட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தைச் சம்பாதித்து வரும் மல்லையா, வருமான வரித்துறைக்கு வைத்துள்ள கடன் மட்டுமே ரூ 300 கோடிக்கு மேல்! கிங்ஃபிஷருக்காக இவர் எடுக்கும் நிர்வாண காலண்டர் ஷூட்டிங்கை நிறுத்தினாலே இந்தத் தொகை கிடைத்துவிடுமே…

இந்த வரிபாக்கியால் கடுப்பான வருமான வரித்துறை, கிங்ஃபிஷரின் வங்கிக் கணக்கை முற்றாக முடக்கிவிட்டது. உடனே 40 விமானங்களின் சேவைகளை கடந்த மூன்று தினங்களாக நிறுத்திவிட்டது அந்த நிறுவனம். ஏற்கெனவே சம்பளப் பிரச்சினையால் அந்நிறுவன பைலட்டுகள் ராஜினாமா செய்துவிட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். இது பயணிகளை பெரும் பாதிப்பில் தள்ளியுள்ளது.

கிங்ஃபிஷரின் பெரும்பான்மை பங்குதாரரான மல்லையா, அந்த நிறுவன நட்டத்தையும் கடனையும் அடைக்க வழி எதுவும் சொல்லாமல், அரசையும் வருமான வரித்துறையையும் குற்றம் சாட்டி மீடியா கவனத்தைத் திருப்பி வருகிறார் அவர். அவரது முயற்சிக்கு ஒருவழியாக பலியாடுகள் தயாராகிவிட்டன.

இவ்வளவு பெரிய நிறுவனத்தை மூடுவது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்ற பல்லவியோடு, கிங்ஃபிஷருக்கு உயிர் கொடுக்கும் முயற்சியை அமைதியாக செய்து வருகிறது மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை.

கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு ரூ 1650 கோடி கடன் தர அரசுக்கு சொந்தமான பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் தன் பங்குக்கு சில நூறு கோடிகள் தர முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.

முதல் கட்டமாக குறுகிய கால இயக்க முதலீட்டுத் தொகையாக ரூ 700 கோடியையும், வங்கி உத்தரவாதத் தொகையாக ரூ 500 கோடியையும் கிங்பிஷருக்குத் தருவதன் மூலம், அந்நிறுவனத்தின் அன்றாடப் பணிகள் பாதிப்பின்றி நடக்க உதவ முன்வந்துள்ளது எஸ்பிஐ.

மேலும் அடுத்த ஆண்டு இந்த வங்கிக்கு கிங்பிஷர் செலுத்த வேண்டிய ரூ 550 கோடியைத் திருப்பித் தரும் கெடுவை நீட்டிக்கவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எந்த தடையுமில்லை என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு வங்கிகளின் முடிவு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வகையிலும் தகுதியற்ற, நம்பகத் தன்மையிழந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு மக்களின் பணத்தை வாரித் தர அரசு வங்கிகள் எப்படி முன்வரலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் பொருளாதார வல்லுநர்கள்.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் நிலையில் அரசும் இல்லை… அரசைப் பிடித்து உலுக்கும் திராணி மக்களுக்கும் இல்லை. மல்லையாக்களுக்கு நேரம்!

-என்வழி செய்திகள்
2 thoughts on “மல்லையாக்களுக்கு உச்சத்திலிருக்கிறது மச்சம்!

  1. ஜெயன்

    கடை தேங்காய்(மக்கள் வரி பணம்) வழி பிள்ளையாருக்கு( மல்லையாவுக்கு) உடைக்க படுகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *