BREAKING NEWS
Search

சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்… ரசிகர்கள் உற்சாகம்… அடுத்த சுற்றில் பெங்களூர்?

சிக்ஸர் மழை பொழிந்த கெய்ல்… ரசிகர்கள் உற்சாகம்… அடுத்த சுற்றில் பெங்களூர்?

பொழுதுபோக்குக் கிரிக்கெட்டுக்கு ஏற்ற நம்பர் ஒன் வீரர் என்றால் அவர் கிறிஸ் கெய்ல்தான்.

இன்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கெய்ல் காட்டிய வாணவேடிக்கையில் தலைநகரமே அதிர்ந்தது என்றால் மிகையல்ல. 13 சிக்சர்கள்… விர்விர்றென்று பறக்க, எதிரணியே கொஞ்சம் அசந்துபோய் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.

பெங்களூர் அணி குவித்த 215 ரன்களில் கெய்லின் பங்கு அவுட்டின்றி 128 ரன்கள்!

தன் அபார பேட்டிங் திறமை மூலம் வியாழக்கிழமை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைத் தேடித் தந்தார் கெய்ல். அதுமட்டுமல்ல, இந்தத் தொடரின் அடுத்த கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு இன்னும் பட்டுப் போகாமல் வைக்க இந்த வெற்றி உதவியிருக்கிறது பெங்களூர் அணிக்கு.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ், பீல்டிங்கை தேர்வு செய்ய, பேட் செய்ய வந்தனர் பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கெய்ல் மற்றும் தில்ஷன்.

தில்ஷன் 10 ரன்களில் அவுட்டாகிவிட, கெய்லுடன் ஜோடி சேர்ந்தார் கோஹ்லி. இருவரும் டெல்லி வீரர்களின் பந்துகளை வெளுத்துக் கட்டினர். குறிப்பாக கெய்ல், பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசினார்.

டெல்லி வீரர்களால் கெய்லின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை.  37 பந்துகளில் அரை சதம், 52 பந்துகளில் சதம், 68 பந்துகளில் 128 ரன்கள் என ரன் மெஷினாக மாறிவிட்டார் கெய்ல்.

அவருக்குத் துணையாக நின்ற கோஹ்லி 53 பந்துகளில்  73 ரன்கள் அடித்தார்.

20 ஓவர்களில் 215 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை குவித்தது பெங்களூர்.

அடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள், நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் வகையில் அடித்து ஆட ஆரம்பித்தது. ஆனாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழந்ததால் 194 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. ரோஸ் டைலர் மட்டும் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். வேணுகோபால் ராவ் 36-ம், ரஸ்ஸல் 31-ம் அடித்தனர்.

கடைசியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றது. கிறிஸ் கெய்ல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 215 / 1

கிறிஸ் கெய்ல் 128 (நாட் அவுட்), கோஹ்லி 73 (நாட் அவுட்)

டெல்லி டேர்டெவில்ஸ் 194 / 9

ரோஸ் டைலர் 55

ஜாகீர் கான், பிரசாந்த் பரமேஷ்வரன் தலா 3 விக்கெட்டுகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 21 ரன்களில் வெற்றி

வெள்ளிக்கிழமை போட்டி

மே 18, இரவு 8 மணி, டெக்கான் சார்ஜர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்

-என்வழி கிரிக்கெட்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *