BREAKING NEWS
Search

‘ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேட்டின் உச்சம் – இந்தியாவில் அனுமதிக்க முடியாது!’

ஓரினச் சேர்க்கை ஒழுக்கக் கேட்டின் உச்சம் – இந்தியாவில் அனுமதிக்க முடியாது! – உள்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கை தவறல்ல என்று கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அன்றைய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணியும் ஆதரித்தார்.

ஆனால் இது கலாச்சார ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சாமானிய மக்களைப் பொருத்தவரை இந்தத் தீர்ப்புக்கு பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இன்னொரு பக்கம் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந் நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “ஓரினச்சேர்க்கை முற்றிலும் தவறு. ஒழுக்கக்கேட்டின் உச்சம். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை விட மாறுபட்டது. எனவே, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்போது, ஓரினச் சேர்க்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் விவரங்களையும் கேட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

மேலும் வெறும் பாலுறவு என்ற ரீதியில் மட்டும் பார்க்காமல், காலமாற்றத்தில் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாறுதல்களைக் கொண்டு பார்க்க வேண்டும் என்றும் ஓரினச் சேர்க்கை எதிர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தமிழ்நாடு முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகம், பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்துள்ளது.

இப்போதைய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மிகக் கடுமையாக ஓரினச் சேர்க்கையை எதிர்த்துள்ளார். இதனை ஒரு நோய் அவர் வர்ணித்துள்ளார்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *