BREAKING NEWS
Search

பிக்பாக்கெட்காரர்களை மிஞ்சும் மின்வாரியம்!

பிக்பாக்கெட்காரர்களை மிஞ்சும் மின்வாரியம்!

று ஆண்டுகளுக்கம் மேலாக மடிப்பாக்கத்தில் சலூன் கடை வைத்திருக்கிறார் உதயா. துடிப்பான இளைஞர். தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சொகுசுக்காக ஏசி, மியூசிக் சிஸ்டம் என வைத்திருக்கிறார். கடை பளிச்சென்று இருக்கும்.

போன மாதம் வரை அவர் கட்டி வந்த மின் கட்டணம் சராசரியாக ரூ 3100. இந்த மாதம் 11400!!

இத்தனைக்கும் மடிப்பாக்கத்தில் நாளொன்றுக்கு அதிகாரப்பூர்வமாக 2 மணிநேரமும், திருட்டுத்தனமாக 3 மணிநேரமும் மின்சாரம் கிடையாது. இரவுகளில் அவர் சலூன் கிடையாது. நாளொன்றுக்கு சராசரியாக 6 மணி நேரம் கூட மின்சாரம் பயன்படுத்தாத அந்த இளைஞருக்கு ரூ 11400 மின்கட்டணம் என்றால்… அடுத்து அவர் என்ன செய்வார்? தன்னுடைய கட்டணத்தை உயர்த்திவிட்டார்… கிட்டத்தட்ட 30 சதவீதம்!

சரி… வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் அப்படி… வீட்டு லட்சணம் என்னவென்று பார்ப்போம்.

கடந்த மாதம் வரை வீட்டு மின்கட்டணமாக பக்கத்துவீட்டு உமா சராசரியாக ரூ 400 முதல் 500 வரை செலுத்தி வந்தார். சில நேரங்களில் அதிகபட்சமாக ரூ 900 கூட வருமாம். ஆனால் இந்த மாதம்… ரூ 3200!

ஏதோ ஓரிருவருக்குதான் இப்படி என நினைக்க வேண்டாம்… கடந்த சில தினங்களாக மின்வாரிய அலுவலகத்துக்கு முன் குவியும் மக்கள் மின் கட்டண அட்டையைக் கையில் ஏந்தியபடி, குய்யோ முறையோ என அதிகாரிகளிடம் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லோருக்குமே கிட்டத்தட்ட 5 அல்லது 8 மடங்கு அதிக கட்டணம்.

மின்சாரத்தைப் பயன்படுத்தாமலேயே பெரும் அளவு கட்டணத்தைக் கட்ட வேண்டிய நிலை!

சென்னை நகரில் இப்படி என்றால், கிராமப்புறங்களில் எப்படி என்பதை அவரவர் புரிதலுக்கே விட்டுவிடலாம்!

மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த ஏப்ரல்-1 முதல் மின் கட்டண உயர்வை அமலுக்கு கொண்டுவந்தது தமிழக அரசு. 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெரும் எதிர்ப்பு என்றவுடன் அதைச் சமாளிக்க ஒப்புக்கு கொஞ்சம் குறைப்பதாக அறிவித்தனர். வேறு வழியின்றி பொதுமக்கள் சகித்துக் கொண்டனர் (இல்லன்னா மட்டும் என்ன பண்ணிட முடியும்!!).

ஆனால் இப்போதுதான் தெரிகிறது, ஏற்றிய மின் கட்டணத்தில் கொஞ்சம் குறைப்பதாக அறிவித்தது கண்துடைப்பு என்பதும், இன்னும் அதிகமான கட்டண உயர்வை மறைமுகமாக மின்வாரியம் மக்கள் தலையில் கட்டியிருப்பதும்.

இதுகுறித்து மின்சாரத்துறை பொறியாளர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன தகவல் தலை சுற்ற வைத்தது.

“மின் விநியோகம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்போது ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும்.

இதனால் பயனீட்டு அளவு (யூனிட்) வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடந்த 2 மாதங்களாக மின் விநியோகம் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன்தான் உள்ளது (இது யார் தவறு? இதற்கான தண்டத்தை யார் ஏற்பது?).

பெரும்பாலான துணை மின் நிலையங்களில் கெப்பாசிட்டர்கள் மற்றும் சின்ட்ரோன்ஸ் கண்டென்சர்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன.

இவற்றை பராமரித்தால்தான் இந்த மின் ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்க முடியும். ஆண்டுதோறும் செய்ய வேண்டிய மின்பராமரிப்புப் பணிகளில் முக்கியமானது இது. இந்த ஆண்டு கண்டுகொள்ளவே இல்லை. நிச்சயம் இது மின்வாரியத்தின் தவறுதான்,” என்றார்.

ஆனால் மின்வாரியமோ, இந்த தாறுமாறான கட்டணத்துக்கு மக்களையே குறை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. நுகர்வோர்கள் அதிகமாக ஏ.சி., கூலர்கள் மற்றும் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதாலேயே இந்த நிலை என்பது அவர்கள் சொல்லும் விளக்கம்.

இந்த விளக்கெண்ணெய் விளக்கங்களையும் தாண்டிய ஒரு உண்மை, இந்த மாதம் மட்டும் மின்வாரியம் பல ஆயிரம் கோடி அளவுக்கு மக்கள் பணத்தை உறிஞ்சி, கொழுத்து நிற்கிறது.

மின் உற்பத்தியை முறைப்படுத்து மக்களுக்குத் தரும் யோக்கிய சிந்தனை கிடையாது… புதிய திட்டங்கள் வகுக்கும் அளவுக்கு சுயபுத்தியுமில்லை… பிற மாநிலங்களிடமிருந்து வாங்கித் தரவும் வக்கில்லை.

ஆனால் பிக்பாக்கெட்காரரர்களைப் போல மக்களின் பாக்கெட்டையும் பர்ஸையும் அறுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்…

நல்லாருக்குய்யா மக்களாட்சி!

-என்வழி ஸ்பெஷல்
11 thoughts on “பிக்பாக்கெட்காரர்களை மிஞ்சும் மின்வாரியம்!

 1. boopathiraj ex.army

  தயவு செய்து யாரும் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க நாம் சுயமாக,
  இயற்கை கொடுத்த வளங்களை பயன் படுத்தி மின் திட்டங்களை நாமே
  தயாரித்து பயன் படுததலாமே சூரிய ஒளி மற்றும் காற்று பயன் படுததலாமே
  விபரங்களுக்கு அசிரியர்

 2. Swaminathan

  மின் வாரியம் மின் கட்டணம எப்படி மதிப்பிடுகிறது என்பதை ஏன்
  பட்டியலாக வெளியிடக்கூடாது. மக்கள் தங்களுக்கு எப்படி மின் கட்டணம்
  விதிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாமே ?
  தி.க.சுவாமி நாதன் .திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *