ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் பிறப்பிக்கப்பட்டது!
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வை சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நேரில் பார்வையிட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை முற்றிலும் நீங்கியது. இந்த அவசரச் சட்டம் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன் வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், இயக்குநர் கௌதமன், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜேசேகரன், ஆதி, அம்பலத்தரசு உள்ளிட்டோர் சட்டப்பேரவைக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.
இந்த அவசரச் சட்டத்தில் மூன்று முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டுக்கான நிரந்தரத் தீர்வாக இந்தச் சட்டம் அமையும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-என்வழி