BREAKING NEWS
Search

திமுக தலைமை மாற்றம்… முக அழகிரி, ஸ்டாலின் செயல்பாடுகள்… – கருணாநிதி பேட்டி

திமுக தலைமை மாற்றம்… முக அழகிரி, ஸ்டாலின் செயல்பாடுகள்… – கருணாநிதி பேட்டி

சென்னை: திமுகவின் தலைமைப் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு விட்டுக் கொடுப்பதில் தயக்கம் ஏதுமில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் முக அழகிரி, முக ஸ்டாலின் இருவருமே அவரவர் பணிகளை மிகச் சிறப்பாக செய்திருப்பதாக அவர் திருப்தி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலை தி.மு.க. சில காரணங்களுக்காக புறக்கணிப்பதாக அறிவித்திருக்றீர்கள். எஞ்சியிருக்கும் ஜெயலலிதாவின் 4 ஆண்டு கால ஆட்சியில் இந்தக் காரணங்கள் மாறுவதற்கு வாய்ப்புகள் அரிது. இந்தப் பின்னணியில் இதே அணுகுமுறையைப் பின்பற்றி இனி நடைபெறக் கூடிய இடைத் தேர்தல்களையும் தி.மு.க. புறக்கணிக்குமா?

பதில்: நீங்கள் உங்கள் கேள்வியில் ஜெயலலிதாவின் 4 ஆண்டுகால ஆட்சியில் நிலைமைகள் மாறுவதற்கு வாய்ப்புகள் அரிது என்று தெரிவித்திருக்கிறீர்கள் என்ற போதிலும், தி.மு.க.வை பொறுத்தவரை வருங்காலத்தில் ஏற்படுகின்ற நிலைமைகளை அவ்வப்போது சீர்தூக்கிப்பார்த்துத்தான் முடிவெடுக்கும். ஆனால் வரும் 4 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் இடைத்தேர்தல் வரக்கூடாது என்றே எண்ணுவோம்.

கேள்வி: சட்டமன்றத் தேர்தல் முடிந்து 1 ஆண்டு ஆன நிலையிலும் தி.மு.க. இன்னமும் தோல்வியின் விளிம்பிலிருந்து வெளியேறியது போல தெரியவில்லையே?

பதில்: அதற்குக் காரணம் அ.தி.மு.க. ஆட்சியினர் திட்டமிட்டு, கழகத்தினர் மீது இட்டுக்கட்டு பொய் வழக்குகளைத் தொடுத்து, கைது செய்து, ஒரு வழக்கிலிருந்து விடுபட்டால், உடனே அடுத்தடுத்த வழக்குகளில் கைதை நீட்டிக்கச் செய்து போலீஸ் ராஜ்யத்தை, பழிவாங்கிவிடும் பாசிச நிர்வாகத்தை தமிழகத்திலேயே நடத்துவதுதான்.

ஆனால் நீங்கள் கேட்டிருப்பதை போல தி.மு.க. இன்னமும் தோல்வியின் விளிம்பிலிருந்து வெளியேறவில்லை என்று கருத முடியாது. தி.மு.க. கழகத்தைப் பொறுத்த வரையில் என்றைக்கும் வெற்றிக் களிப்பில் வெறியாட்டம் போடுவதுமில்லை. தோல்வியை கண்டு துவண்டு விடுவதும் இல்லை.

கேள்வி: தற்போதைய சூழலில் எதிர்க்கட்சி தே.மு.தி.க. ஆக்கப்பூர்வமாக செயல்படாத நிலையில் தி.மு.க. மட்டுமே சரியான எதிர்க்கட்சியாக செயல் படுவதாக நினைக்கிறீர்களா?

பதில்: தேமுதிகதான் தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சி. ‘அந்தக் கட்சி ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை,’ என்றெல்லாம் நீங்கள் கூறுவதைப் போல நான் கூற விரும்பவில்லை. கழகத்தைப் பொறுத்தவரையில் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதி தனது பொறுப்புகளையும் கடமைகளையும் முறையாக நிறைவேற்றி வருகிறது.

கேள்வி: சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேச தேர்தலுக்குப் பிறகு தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்யாதவ். தி.மு.க.விலும் இளைய தலை முறையினருக்கு வழிவிடும் காலம் வந்து விட்டது என்று கருதுகிறீர்களா?

பதில்: தி.மு.க. கழகத்திற்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் வேறுபாடு உண்டு. சமாஜ்வாதி கட்சி அகில இந்தியக் கட்சி. தி.மு.க. கழகம், நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தபோதிலும், மாநிலக்கட்சி. முலாயம்சிங் மாநிலத்திலேயே மகனை முதல்வராக்கி விட்டு, அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்திலே தனது கடமையை ஆற்றி வருகிறாரே தவிர, இளைய தலைமுறையினருக்கு வழி விட்டு விட்டு, அரசியலை விட்டே ஒதுங்கி விட வில்லை.

உத்தரப்பிரதேச அரசியலோடு, தமிழக அரசியலை ஒப்பிடவும் முடியாது. தமிழகத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, மூத்தவர்களின் அறிவுரையோடு, அவர்களின் அனுபவத்தின் வழி நின்று, இளை தலைமுறையினர் வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டும் என்ற நிலையிலயே உள்ளது.

கேள்வி: உங்களுடைய இளமைக் காலத்தில் இருந்தது போல ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் தி.மு.க. செயல்பட இளைய தலை முறையினருக்கு வழிவிடுவதில் ஏதேனும் தடைகள் உள்ளதா?

பதில்: தடைகள் எதுவுமில்லை. என்னுடைய இளமைக் காலத்தில் கழகத்தில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். தற்போது எங்கள் இயக்கத்தில் மூத்தவர்களும் இளைய தலைமுறையினரும் அவரவர் நிலை உணர்ந்து, இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

இளைய தலைமுறையினருக்கு வழி விட எந்த தடையும் இல்லை என்ற போதிலும், இயக்கத்திலேயே உள்ள இளைய தலைமுறையினர் மூத்தவர்களின் துணையோடும், அறிவுரையோடும் செயல்படவே விரும்புகிறார்கள்.

கேள்வி: உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன், சராசரி தொண்டனாக செயலாற்ற விரும்புகிறேன் என்று பல முறை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கான தருணம் வந்து விட்டதா?

பதில்: உங்களில் ஒருவராக சாதாரணத் தொண்டனாகத்தான் இப்போதும் இருக்கிறேன். எப்போதும் இருந்திருக்கிறேன்.

கேள்வி: மு.க.ஸ்டாலின் நிர்வாகத் திறமை, ஆளுமை குறித்து உங்கள் கருத்து?

பதில்: கழகத்தில் இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக கழகப் பொருளாளராக அரசுப் பொறுப்பில் சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக பணியாற்றிய போது தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என்று பல முறை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார். ஓய்வறியாமல் உழைக்கக் கூடியவர். மக்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்.

கேள்வி: ஒரு மத்திய அமைச்சராக மு.க. அழகிரி செயல்பாடுகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

பதில்: மத்திய அமைச்சராக எந்த அளவுக்கு தன் துறையின் வாயிலாக மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று சிந்தித்து, அதிலே திறமையாகச் செயல்பட்டு வருபவர். மத்திய அரசில் அமைச்சராக இருந்து பணியாற்றுவதில் அடையும் மகிழ்ச்சியை விட தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்து கழகத் தோழர்களிடம் அன்போடு பழகி கழகத்தை வலுவாக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

கேள்வி: கடந்த முறை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதில் தி.மு.க. முக்கியப் பங்காற்றியது. இந்த முறையும் அந்த நிலை தொடருகிறதா?

பதில்: இந்த முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் போது தி.மு.க. தனது பணியினை நிறைவேற்றித்தான் வருகிறது.

கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் தனித் தமிழீழம் என்ற உங்கள் கோரிக்கைக்கு கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. ஆட்சியில் இருக்கும்போது தி.மு.க. ஒருநிலைபாடு எடுப்பதாகவும், இல்லாத போது ஒரு நிலைபாடு எடுப்பதாகவும் வரும் விமர்சனங்களுக்கு உங்கள் பதில்?

பதில்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கழகம் ஆட்சியில் இருக்கும்போதும் சரி இல்லாத போதும் சரி ஒரே நிலைப்பாடுதான். ஆனால் அணுகுமுறையில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்றெல்லாம் என்றும் பார்த்ததில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட வேண்டுமென்றுதான் பாடுபட்டு வந்திருக்கின்றது. என்றைக்கும் ஒரே நிலையிலேதான் இருக்கிறது.

கேள்வி: டெசோ அமைப்பை மீண்டும் புதுப்பிக்க என்ன காரணங்கள்?

பதில்: இலங்கைத் தமிழர்களின் துயரங்கள் முடியாமல் தொடர் கதையாக நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதிகளை பல முறை மீறி விட்டார். உலகம் முழுவதிலும் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களுக்கு விடிவுக்காலமே இல்லையா என்றென்றும் வேதனையில் ஆழ்ந்துள்ளார்கள்.

எனவே இலங்கையிலேயே தனித் தமிழ் ஈழம் அமைய மீண்டும் டெசோ அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என்று எண்ணி செயல்படத் தொடங்கியுள்ளேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

-என்வழி செய்திகள்




7 thoughts on “திமுக தலைமை மாற்றம்… முக அழகிரி, ஸ்டாலின் செயல்பாடுகள்… – கருணாநிதி பேட்டி

  1. குமரன்

    /// தி.மு.க. கழகத்திற்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் வேறுபாடு உண்டு. ///

    பொழிப்புரை:

    கருணாநிதிக்கும் முலாயம் சிங் யாதவுக்கும் வேறுபாடு உண்டு. கருணாநிதிக்கு மூன்று மனைவியர்/ துணைவியர். முலாயமுக்கு ஒரே ஒரு மனைவிதான். கருணாநிதிக்கு அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, செல்வி, தமிழரசு, செல்வம், தயாநிதி, கலாநிதி, கயல்விழி, உதயநிதி, துறை தயாநிதி என்று பல நிலைகளில் பல வாரிசுகள் “பொது வாழ்வில்” ஈடுபட்டு “மக்கள் பணியும்” “கட்சிப் பணியும்” ஆற்றி வருகிறார்கள். முலாயமுக்கோ “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என்று அகிலேஷ் மட்டும்தான்.

  2. குமரன்

    ///இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கழகம் ஆட்சியில் இருக்கும்போதும் சரி இல்லாத போதும் சரி ஒரே நிலைப்பாடுதான். ஆனால் அணுகுமுறையில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்றெல்லாம் என்றும் பார்த்ததில்லை.///

    உண்மை. எப்போதும் ஈழம்தான் பகடைக்காய்/ பணயத்துக்கு சிறந்த கருவி.

  3. HOTLINKSIN.COM

    ஆட்சியில் இருந்த போது இலங்கைத் தமிழர்கள் கண்ணுக்கு தெரியவில்லை… இப்பதான் ஐயாவுக்கு தெரியுறாங்க…
    ,,,,,,,,,,,,,,,,,,,
    எங்கேயும் எப்போதும் நான்தான் பாஸ்!!வழக்கு என் 18 /9 நடிகை
    http://www.hotlinksin.com/story.php?id=10726
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    அஜித்துடன் நடிக்க முயற்சி செய்யும் இலியானா புதிய தகவல்..!
    http://www.hotlinksin.com/story.php?id=10760

  4. மிஸ்டர் பாவலன்

    ///இந்த முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை குடியரசுத் தலைவராகத்
    தேர்ந்தெடுக்கும் போது தி.மு.க. தனது பணியினை நிறைவேற்றித்தான்
    வருகிறது./// (கலைஞர்)

    மதிப்பிற்குரிய விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பதவிக் காலம்
    முடிந்து extension கொடுக்கலாம் என பல கட்சிகளும் முனைந்தபோது
    கலைஞர் ஆதரவு கொடுக்காதது வருத்தத்திற்குரிய விஷயம். நண்பர்கள்
    இதை அரசியல் கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நம் நாட்டு மக்கள்
    அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட உன்னத மனிதர் டாக்டர் கலாம்.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  5. Krishna

    //இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கழகம் ஆட்சியில் இருக்கும்போதும் சரி இல்லாத போதும் சரி ஒரே நிலைப்பாடுதான். ஆனால் அணுகுமுறையில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். //

    உண்மை தான். ஒரே நிலைப்பாடு தான். வாய்க்கு வந்தபடி அறிக்கை விடுவது என்பது தான் அந்த நிலைப்பாடு.
    அணுகுமுறைகள் தான் மாறும். ஆட்சியில் இருக்கும் போது “பிரச்சினை நம் கையை விட்டு போய்விட்டது – மௌன அழுகை அழுகிறேன் – அங்குள்ள தமிழர்கள் சிங்களவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் – எல்லா தரப்பும் ஏற்றுக் கொள்ளும்படியான தீர்வு ஏற்பட வேண்டும்”.

    ஆட்சியில் இல்லாத போது “ஈழம் ஒன்று தான் தீர்வு – டெசொவை துவக்குகிறேன் – தனி ஈழத்திற்காக உடல், பொருள், ஆவி தருகிறேன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *