BREAKING NEWS
Search

‘எங்கள் அய்யா’!

‘மனதாலும் பெரியவர் எங்கள் அய்யா’!

1148738_381297028669905_82477513_n
ய்யா என பெற்ற தந்தையை பாசத்துடன் அழைப்பார்கள். அதேபோன்ற பாசம் மற்றும் மரியாதையுடன் அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் எங்கள் அய்யா ‘பிஆர்’ எனப்படும் பா ராமச்சந்திர ஆதித்தன்.

ஆதித்தனார் குடும்பத்தைப் பொறுத்தவரை, குடும்பத்தில் பெரியவராகப் பிறந்துவிட்டதால் பா ராமச்சந்திர ஆதித்தனை உறவினர்களும் ஊழியர்களும் பெரிய அய்யா என்று அழைத்தனர். ஆனால் தன் குணத்தாலும் பண்பாலும் அவர் பெரிய அய்யாவாகவே திகழ்ந்தார் என்றால் மிகையல்ல.

தன் ஊழியர்களைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு நிகரானவர் இல்லை.

அவரது மாலை முரசு, கதிரவன், தேவி, கண்மணி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருமே நினைவு கூரும் விஷயம், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் பெரியவர் காட்டிய நேரம் தவறாமை (டெக்ஸ்காட் கூரியர் என்ற பெயரில் ஜவுளித்துறைக்காகவே பத்திரிகை நடத்திய பெருமை அய்யாவுக்கு உண்டு).

எத்தனை பெரிய நெருக்கடியிலும் சம்பளத்தை மட்டும் 7-ம் தேதியோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னதாகவோ தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினம் என்றால் ஒரு நாள் முன்பாகவே சம்பளம் வாங்க வருமாறு கண்டிப்புடன் கூடிய ஒரு அழைப்பு வரும், மேலாளரிடமிருந்து!

ஒரு முறை, நிதிப் பற்றாக்குறை காரணமாக 7-ம் தேதி சம்பளம் தருவது தாமதமாகும் எனத் தெரிந்து, அலுவலகத்தின் பத்திரங்களை பிணையமாக வைத்து கடன் வாங்கி சம்பளம் தந்தததை  மூத்த ஊழியர்கள் – நிருபர்கள் இன்றும் நினைவு கூர்வதுண்டு. சம்பளம் குறைவோ அதிகமோ.. அதைச் சொன்ன தேதியில் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் பெரிய அய்யாவின் கொள்கை.

ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களுக்கு அவர் அதிக மதிப்பு தருவார். திருமண நாள், பிறந்த நாள் என அவரிடம் செல்லும் அனைவருக்கும் பரிசும் விருந்தும் உண்டு.

அதேபோல ஊழியர்களின் குடும்பத்தில் ஏதாவது சோகமோ அல்லது எதிர்பாராத மருத்துவச் செலவோ ஏற்பட்டால் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு அதற்கு முழுவதுமான உதவிகளைச் செய்வார்.

வீடு மாற்ற வேண்டும், அட்வான்ஸ் தரவேண்டும் என அவரிடம் போய் நின்ற பலருக்கு முழு அட்வான்ஸ் பணத்தையும் அலுவலகமே செலுத்த ஏற்பாடு செய்தவர் பெரியவர். இதைல்லாம் தனிப்பட்ட உதவிகள் என்றால், தமிழர் நலனுக்காக அவர் செய்த உதவிகள் மகத்தானவை.

ஊழியர்களின் திருமணத்துக்கு தவறாமல் நேரில் போய், பெரும் தொகையை அன்பளிப்பாகத் தருவது அவர் வழக்கம். அவருடன் அவரது துணைவியார் செல்ல நேர்ந்தால், தன் பங்குக்கு அவரும் பெரும் தொகையைத் தந்துவிடுவார்.

அய்யாவைப் பாருங்க…

என் முதல் திருமண நாள். எப்போதும் போல அலுவலகம் போய்விட்டு, அரை நாள் விடுப்பு கேட்டேன் செய்தி ஆசிரியர் குமார் ராமசாமியிடம். விவரம் கேட்டவர், ‘அய்யாவைப் பாருங்க’ என்றார். என்னடா இந்த சின்ன விஷயத்துக்கும் முதலாளியிடம் லீவு கேட்கணுமா என்ற கடுப்புடன் பொது மேலாளர் ராகவனிடம் கடிதம் கொடுத்தேன். ‘அய்யா அடுத்த நாள் காலை உங்களை மனைவியோடு வீட்டுக்கு வரச் சொன்னார்’ என்று சில நிமிடங்களில் தகவல் கிடைத்தது.

ரொம்ப சீரியஸாக அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு அய்யாவின் அடையாறு இல்லத்துக்குப் போனேன். பெரியவரும் அம்மாவும் வரவேற்றார்கள். காலில் விழுந்தோம். எழுப்பி நிற்க வைத்து ஆசீர்வதித்தனர். குளிர்பானம் கொடுத்து இயல்பு நிலைக்கு நாங்கள் திரும்பும் வரை காத்திருந்த அய்யா, என் குடும்பம், என் மனைவி குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தார். என் மனைவி வழியில் நானும் அவருக்கு உறவுக்காரன். அப்போதுதான் அவருக்கும் அது தெரியும்.

என் படிப்பு அவருக்கு தெரியும். அன்றே எனக்கு புதிய பொறுப்பு ஒன்றையும் தந்தார். ‘உங்களை மாதிரி படிச்சவங்க நம்ம கதிரவன் – மாலை முரசில் செய்ய வேண்டியது நிறைய இருக்கு’ என்றவர், நான் செய்ய வேண்டிய புதிய பணியைச் சொன்னார். மனசுக்கு நிறைவாக இருந்தது.

சாப்பாட்டு அறைக்கு அழைத்துப் போய் விதவிதமாக பரிமாறினார் அம்மா. அய்யா பார்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் அந்த வீட்டில் இருந்தேன். பெற்றோர் ஆதரவற்ற அந்த சூழலில் என் தாயும் தந்தையுமாகத் திகழ்ந்தனர் அய்யாவும் அம்மாவும். நாங்கள் கிளம்பியபோது எங்கள் கைகளில் இரு கனமான கவர்களைத் தந்தனர் இருவரும். வீட்டுக்குப் போய் பாருங்கள் என்றார் அம்மா. வீட்டுக்கு வந்து பார்த்த போது, என்னால் நம்ப முடியாமல் அழுதுவிட்டேன். என் ஐந்து மாதச் சம்பளத்தை எங்கள் திருமண நாள் பரிசாகத் தந்து ஆசீர்வதித்திருந்தார் அந்த பெரிய மனிதர்!

மனதாலும் பெரியவர் எங்கள் அய்யா..

தன்னிடமிருந்து விலகிய பணியாளர், மீண்டும் ஏதாவது ஒரு தருணத்தில் தன்னைச் சந்திக்க நேர்ந்தால், அவரிடம் முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல், ஏதும் நடக்காதது போல இயல்பாகப் பேசி, நலம் விசாரித்து, கையில் பணமும் தருவது அவர் இயல்பு.

சிறந்த எடிட்டர்

தனிப்பட்ட முறையில் இப்படி என்றால், தொழில் முறையில் அவருக்கு இணையான பத்திரிகை  ஆசிரியரைப் பார்க்க முடியாது. செய்திக்கு அவர் தலைப்பு வைக்கும் விதம் அத்தனை கச்சிதமாக இருக்கும். இரவு ஷிப்ட்களின் போது, போனில் செய்திகளைக் கேட்டுக் கொண்டு அவர் தலைப்பை டிக்டேட் செய்வதே ஆச்சர்யப்படுத்தும். அந்தத் தலைப்பிலேயே செய்தியின் தன்மை, படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அத்தனையும் இருக்கும்.

பொதுவாக மாலை முரசில் தலையங்கப் பக்கம் இருக்காது. ஆனால் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் அவரே தலையங்கம் எழுதுவார். ஈழப் போர், யாழ்ப்பாண வீழ்ச்சி, கருணாநிதி கைது போன்ற நிகழ்வுகளின் போது அவர் எழுதிய தலையங்கங்கள் உணர்ச்சிப்பூர்வமானவை.

ஈழத் தமிழருக்கு…

ஈழத் தமிழர்களின்பால் அவர் கொண்ட அக்கறை அளப்பரியது.. யாரோடும் ஒப்பிட முடியாதது. மாலை முரசு – கதிரவனில் ஈழத்துச் செய்திகளுக்குத்தான் முதலிடம். மற்றவை அப்புறம்தான். அதுவும் போர்க்காலங்களில் மாலை முரசு படிப்பவர்களின் உணர்ச்சி நரம்புகள் தெறிக்கும் அளவுக்கு செய்திகளும் படங்களும் அமையும்.

முல்லைத்தீவு தாக்குதலை தலைவர் பிரபாகரன் முன்னின்று நடத்து சிங்கள ராணுவத்தை தலைதெறிக்க ஓட விட்டதை மாலை முரசு செய்தியாக்கியிருந்த விதம் அத்தனை அருமையாக இருந்தது. தமிழகத்தில் வேறு எந்தப் பத்திரிகையும் அந்த அளவுக்கு உணர்வோடு அந்த செய்திகளை வெளியிட்டதில்லை எனும் அளவுக்கு அவர் உண்மையாக இருந்தார்.

யாழ்ப்பாண நகரம் சிங்கள ராணுவத்தின் பிடிக்குள் வந்தபோது, வேதனை தாங்காமல் அழுதே விட்டார் ராமச்சந்திர ஆதித்தன். அவரைத் தேற்றுவது எப்படி எனத் தெரியாமல் பயந்துபோய், அலுவலக ஊழியர்கள் வாசலில் நின்று பேசிக் கொண்டது இன்னும் கண்முன் நிற்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது அபார நம்பிக்கையும் ஆழ்ந்த பற்றும் கொண்ட பெரியவர், தமிழினத்துக்கே விடியல் தரப் போகும் தலைவர் அவர் என்று செல்லுமிடமெல்லாம் சொன்னார், தன் பத்திரிகையிலும் அதை எழுதி வந்தார்.

நிதி உதவி..

தமிழகத்தில் எந்த பத்திரிகை அதிபரும் செய்யாத ஒரு விஷயத்தை ஈழத் தமிழருக்காக ராமச்சந்திரன் செய்தார். போரில் துயரங்களை அனுபவித்த ஈழ மக்களுக்காக தானே களமிறங்கி நிதி திரட்டி அனுப்பி வைத்தார்.

அரசியல், கட்சி சார்புகளைத் தாண்டி, தமிழருக்கான பத்திரிகையாகத்தான் நடத்த வேண்டும் என்பது அவர் நோக்கமாக இருந்தது.

எல்லோரும் உணர்வுகளை அரசியல் ரீதியாகக் காட்டியபோது, இவர் மட்டும் களத்தில் இறங்கி செயலில் காட்டினார்.

மெர்க்கண்டைல் வங்கி மீட்பு

எஸ்ஸார் குழுமத்தின் சிவசங்கரனிடம் இருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை மீட்கும் குழுவுக்குத் தலைவராக இருந்த, ராமச்சந்திர ஆதித்தன், வைகோ துணையுடன் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து வங்கியை மீட்டுத் தரக் கோரினார். வங்கியும் மீட்கப்பட்டது. அதன் இயக்குநராகவும் இருந்து வழிநடத்தி, அதே வங்கியில் தனக்கு எதிர்ப்பு கிளம்பியதும் விலகிக் கொண்டார்.

நாடார் இன மக்களுக்காக… ayya-1

தான் சார்ந்த நாடார் இன மக்களுக்காக முதல் முறையாக சென்னையில் பிரமாண்டமாக ஒரு மாநாடு நடத்தினார் ராமச்சந்திர ஆதித்தன். அதன் விளைவு நாடார் இன மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

தமிழர் பத்திரிகை

ஆதித்தனார் குடும்ப வாரிசுகளிடையே உறவு ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் தங்களின் மாலை முரசு, தினத்தந்தி, தினகரன் (அன்றைய), மாலை மலர் போன்றவற்றை தமிழருக்கான பத்திரிகைகளாக நிலை நிறுத்தினர். தமிழருக்கு எதிரான நிலை எங்கு தோன்றினாலும் கிளம்பிய முதல் குரல் இந்த பத்திரிகைகளிடமிருந்துதான் என்பதை தமிழ்ச் சமூகம் மறுக்க முடியாது.

-எஸ் எஸ்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *