எம்ஜிஆர், கண்ணதாசன் பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…!
ஒரு பெரும் ஆளுமையைப் பற்றி கற்றுக்குட்டிகள் சொல்வதைக் கேட்பது அத்தனை எரிச்சலாக இருக்கும். அதுவே சொல்வது கவிஞர் வாலியாக இருந்தால் பரவசமாக இருக்கும்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் பணியாற்றிய, பழகிய நாட்களை அவர் நினைவு கூறும் விதம், அத்தனை ஈர்ப்புடன், உயிர்ப்புடன் இருக்கும். 24 மணி நேரமும் ஊண் உறக்கமின்றி கேட்டுக் கொண்டே இருக்கலாம். நான் மிகையாகச் சொல்லவில்லை… சொல்வதெல்லாம் உண்மை!
“எம்ஜிஆருக்காக நான் எழுதினேன், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்று. அப்படியே நடந்தது.
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று எழுதியது என் பேனா… அவர்தான் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார்…
‘இறைவா நீ ஆணையிடு… இந்த ஓருயிரை வாழ வை’, என்று எழுதினேன். மறுஜென்மம் எடுத்து வந்தார் மக்கள் திலகம்.
ஆனால், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான், என்றெழுதியதை மட்டும் அந்த கருணாமூர்த்தி கண்டுக்காம விட்டுட்டானே.. அதுதான் என் வாழ்க்கையில் பெரிய வருத்தம்,” என்றார்.
வாலி கோபக்காரர். தனக்கு சீதக்காதியாய் திகழ்ந்த எம்ஜிஆரிடமே கோபத்தைக் காட்டியவர். ஆனால் கவிஞர்களின் கோபம் குழந்தைகளின் கோபத்துக்கு சமம் என்பதை உணராதவரா அந்த ராமச்சந்திர மூர்த்தி? அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட கருதாமல், வாலியை உடன் வைத்து வேண்டியன செய்து ராஜகவியாக வைத்திருந்தார். எம்ஜிஆரின் அரசவைக் கவியரசு கண்ணதாசன் மட்டுமல்ல, வாலியும்தான்!
கவியரசரைப் பற்றி வாலி அளவுக்கு உயர்வாக யாரும் எழுதி – பேசிக் கேட்டிருக்க முடியாது. “கண்ணதாசனுக்கு நான் தாசன்.. அவருக்கு நான் கூடப் பிறக்காத தம்பியாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தன் இளவல் என்று சொன்ன மாபெரும் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் சொன்ன அறிவுரைகளை இன்னைக்கும் நான் கடைப்பிடிக்கிறேன். சொந்தப் படம் எடுக்காதேன்னார்.. நான் அதைச் செய்யவே இல்ல,” என்றார்.
ஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாட்டுத்தான்.
கண்ணதாசனின் நடையை நீங்கள் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, “அதுல என்னய்யா தப்பு… என்னை தங்கத்தோடுதானே ஒப்பிடுகிறார்கள்… தகரத்தோடு இல்லையே.. நான் கேட்டது, படிச்சதெல்லாம் கண்ணதாசனைத்தானே. அந்த பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கண்ணதாசனைப் போலவே நான் எழுதுகிறேன் என்ற ஒப்பீடு எனக்கு சிறுமை அல்ல… பெருமை,” என்றார்.
சூப்பர் ஸ்டாருக்காக…
கவிஞர் வாலிக்கு ரஜினி எப்போதுமே ஸ்பெஷல். அன்றைக்கு அவர் எம்ஜிஆருக்கு எழுதியதையெல்லாம் நவீன தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு எழுதினார். ‘எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவர் அவர்தான். நண்பர் ரஜினியும் அப்படித்தான். அவருடனும் யாரையும் ஒப்பிட முடியாது. அந்த மனுஷன் மனசு வச்சா… இந்த தமிழ்நாடே வேற மாதிரி இருக்கும்,’ என்பார். கருணாநிதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படிச் சொன்னவர் வாலி!
ரஜினிக்காக வாலி எழுதிய ஒவ்வொரு பாட்டும் முத்துப் பாட்டு. பாபாவில் ராஜ்யமா இல்லை இமயமா என்று ஒரு பாடல்… கேட்டுப் பாருங்கள்… அங்கே ரஜினியை அப்படி ரசித்து, உணர்ந்து வார்த்தைகளை வடித்திருப்பார் கவிஞர்.
-என்வழி ஸ்பெஷல்
//ஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாட்டுத்தான்.///
இது சரியல்ல! அந்தப் பாடல் கவியரசின்
“வாழ நினைத்தால் வாழலாம்”
என்பதாகும். வாலியின் மனதை மாற்றும் அளவிற்கு அப்படி
என்ன தான் எழுதி இருந்தார் கவியரசர்??
பாடலைப் பாருங்கள்!
வாழ நினைத்தால் வாழலாம்
(பாடல் வரிகள் – கண்ணதாசன், இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி)
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
(வாழ நினைத்தால்)
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்
(வாழ நினைத்தால்)
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்
(வாழ நினைத்தால்)
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆன போதும்
ஒருவராக வாழலாம்
(வாழ நினைத்தால்)
சிவாஜி நடித்த இந்த பாடலை நீங்கள் திரையில் கண்டால்
பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் படம் எடுத்திருப்பதை
காணலாம். காமெரா ஆங்கில்கள், சிவாஜியின் நடிப்பு,
பாடலின் சிறப்பு, சந்த அமைப்பு, சொல்லின் சிறப்பு,
பொருள் நயம் – எழுத நேரம் இல்லை! படித்து காணுங்கள்!
இந்த வலையில் இருந்து நான் retire ஆனாலும், இந்தப்
பாடல் மூலம் உங்களை சந்தித்ததில் உவகை கொள்கிறேன்.
–மிஸ்டர் பாவலன்
வாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடலைக் கேட்ட
வாலி நினைத்தார் வாழ்ந்தார்!
இந்தப் பாடலை இளவரசன் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் … ஹூம்.
மிஸ்டர் பாவலன் அவர்களே
உங்களுக்கு retire ஆகும் வயதில்லை!
பாட்டெழுதும் பாவலனுக்கு எண்பத்திரெண்டு வயதும்
வாலிப வயதுதான் என்று வாழ்ந்து காட்டிய
வாலிக்கு அஞ்சலி செலுத்தும்போது இப்படியா சொல்வது?
நாங்கள் உங்கள் எழுத்துக்களால் tired ஆகவில்லை … எனவே
நீங்கள் retire ஆக வேண்டாம் !!!
ஜேவுக்கும் வாலிக்கும் என்ன பகை ? இறந்த மனுஷனுக்கு மரியாதை கூட பண்ணலியே . இல்லை செய்து விட்டாரா?
உங்களுக்கு retire ஆகும் வயதில்லை!
பாட்டெழுதும் பாவலனுக்கு எண்பத்திரெண்டு வயதும்
வாலிப வயதுதான் என்று வாழ்ந்து காட்டிய
வாலிக்கு அஞ்சலி செலுத்தும்போது இப்படியா சொல்வது?
நாங்கள் உங்கள் எழுத்துக்களால் tired ஆகவில்லை … எனவே
நீங்கள் retire ஆக வேண்டாம் !!!
// எனவே நீங்கள் retire ஆக வேண்டாம் !!! // (குமரன்)
OK!!
-Mr. Pavalan
தனது பாடல்களால் என்றும் வாழும் வாலி அவர்களுக்கு எமது அஞ்சலி!
“பாட்டுக்கு பாட்டெடுத்து” என்ற பாடல் வாலி எழுதியது.
பாடல் வரிகள் மிக அற்புதமானவை! புரட்சி தலைவரின் படகோட்டி
இந்தப் பாடல் இடம் பெற்ற படம். (நாஞ்சில் மகன் பல தடவை
இந்த எம்.ஜி.ஆர் படம் பார்த்திருப்பார்!)
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே
ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே
ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க …நான் மட்டும் இங்கிருக்க
தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
மேலே உள்ள இந்தப் பாடலில் வாலி காட்டி இருக்கும் உவமைகளை
வைத்தே ஒரு ஆய்வு செய்யலாம்! “மின்னலாய் வகிடெடுத்து, மேகமாய்த் தலைமுடித்து” இது போன்ற வரிகள் தமிழ் இலக்கியத்திற்கு புதுமை!
சென்ற குறிப்பை நான் முடித்த போது –
//இந்த வலையில் இருந்து நான் retire ஆனாலும், இந்தப்
பாடல் மூலம் உங்களை சந்தித்ததில் உவகை கொள்கிறேன்.//
என எழுதி இருந்தேன். இதில் முதல் வரியைப் படித்த நண்பர்கள்
இரண்டாவது வரியை படிக்க விட்டு விட்டார்கள்! எனது கந்தசாமி-
ரகுநாத் அய்யர்-பாவலன் சந்திப்புகளில் பாவலன் தமிழ் தெரியாதவர்
ஆகவும், மலையாளத்தில் பேசுபவராகவும் எழுதி வருகிறேன். சிலர்
உண்மையாகவே இந்த சந்திப்புகள் நடந்தது என நினைக்கலாம்.
ஆனால் “உவகை கொள்கிறேன்” போன்ற சொற்கள் தமிழ் தெரியாதவர்
எழுதுவாரா என நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்! நன்றி, வணக்கம்!
-== மிஸ்டர் பாவலன் ==-
மிஸ்டர் பாவலன் அவர்களே
உவகை என்ற சொல்லை முதல் பதிவில் படித்தவுடன் உவகையாக இருந்தாலும், காவியக் கவிஞர்/ வாலிபக் கவிஞர் வாலியின் மறைவு காரணமான சோகம்தான் ஓங்கி நின்றது (சொல் பயன்பாட்டில் நீத்தோர் அஞ்சலி என்பதால் இடமும், ஏவலும் இடித்தது நோக்குக).
இந்த ‘உவகை’ என்ற சொல்லை (ஒரு காலத்தில் நான் மிகவும் போற்றிவந்த) கருணாநிதி அவர்களும் இடம் பொருள் ஏவல் அறிந்து வெகு நேர்த்தியாகக் கையாள்வது உண்டு.
குமரனது கருத்தை நான் ஏற்கிறேன். கவிஞர் வாலி
அமரர் ஆனார் – மறையவில்லை. அவர் பாடல்கள்
உள்ளவரை அவர் வாழ்வார். அவர் பாடல்களை கேட்டு
ரசிப்பது தான் நான் அவருக்கு தரும் அஞ்சலி ஆகும்!
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”
இது தொல்காப்பியம் காட்டும் எட்டு மெய்ப்பாடுகள் நிகழ்ச்சி.
வாலியின் மறைவால் நான் அடைந்தது பெரும்அதிர்ச்சி.
தமிழில் இடம்-பொருள் அறிந்து எழுத இன்னும் வேண்டும் பயிற்சி.
நல்ல பாடல்களை கண்டு வாழ்க்கை சிறக்க எடுப்போம் நல்ல முயற்சி.
வேண்டாம் தளர்ச்சி, தமிழ் நெறியில் பெறுவீர் உயர்ச்சி!
-== மிஸ்டர் பாவலன் ==-
அன்புள்ள “என் வழி” ரசிகர்களுக்கு ,
நான் ஒன்றும் கவிஞன் இல்லை. அனால் வாலியின் கவிதை உண்டாக்கிய தாக்கத்தின்
மூலம் அவர் பாணியிலயே அவருக்கு ஒரு இரங்கலை எழுதி இருக்கிறேன். இதனை
கவிதை என்று நீங்கள் நினைத்தால் அந்த பலன் வாலியைத்தான் சாரும்.
———————————————————————————-
“வாலிபக் கவிஞராம் வாலி!
வானம் உள்ளவரை இறவாப் புகழால் வாழி!
உயிரின் இறுதி மூச்சு வரை படைத்துக் கொண்டு இருந்தாய் கவிதை!
இன்று என் போன்றோரிடம் விட்டு விட்டுச் சென்று இருக்கிறாய் பா (பாட்டு) விதை!
மெட்டுக்குப் பாட்டா! பாட்டுக்கு மெட்டா! எனக்குத் தெரியாது. ஆனால், உன்
பாட்டுக்கு மட்டும் என்றும் குவியும் துட்டு!
உன் விரல் வழி வந்த பாடலைத் தங்கள் குரல் வழி தந்த குயில்கள் இங்கு ஏராளம் !
அனைவரும் ரசித்தனர் ரொம்பவே தாராளம்!
விழுந்து, விழுந்து எழுதினாய் சந்தம்!
அதனால் பெற்று இருக்கிறாய் ஏராளமான சொந்தம்! அத்தனையும் பந்தம்!
தத்துவப் பாட்டு, காதல் பாட்டு, சோகப் பாட்டு, அறிமுகப் பாட்டு, நக்கல் பாட்டு!
நீ எழுதினால் அத்தனையும் அதிர் வேட்டு,
உன் முகத்தை அலங்கரிப்பது வெண் தாடி அன்று!
இப்போதுதான் தெரிகிறது அது பண் (இசை) தாடி என்று!
தலைமுறையைப் பொருத்து அமைவதே TREND!
தாத்தா முதல் கொள்ளுப் பேரன் வரை அனைவருமே உன் FRIEND!!
நீ பிறந்ததால் பெருமை கொள்வது திருவரங்கம் (ஸ்ரீ ரங்கம்)
உன் பாட்டால் மகிழ்ந்தது திரை அரங்கம்!
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஆர்யா!
அனைவருக்கும் உன்னைப் போல் பாட்டு எழுவது இனிமேல் யார்யா?
நீ போட்டு போட்டுத் துப்புவாய் வெற்றிலை!
இனி யாரும் கூற முடியாது, நீ இருந்த இடம் வெற்று இல்லை!
இலையும் சொந்தம் உனக்கு!
சூரியனிடமும் பந்தம் இருக்கு!
எப்படியையா உந்தன் கணக்கு?
சொல்லாமல் சென்று விட்டாயே எமக்கு!
காவியக் கவிஞராம் வாலி நீ!
உன் பாடல்களே எங்கள் மன ரணத்திற்கு Valini !
தமிழே உன்னிடம் சரணம்!
உனது தமிழுக்கு இல்லை என்றும் மரணம்!
நீ மீண்டும் பிறந்து வரணும்!
வருவாய்!
கண்ணீருடன்,
அஜ்மல் கான்,
சென்னை.
//நீ பிறந்ததால் பெருமை கொள்வது திருவரங்கம் (ஸ்ரீ ரங்கம்)
உன் பாட்டால் மகிழ்ந்தது திரை அரங்கம்!// (அஜ்மல் கான், சென்னை)
மிக அருமையான வரிகள்! ஆனால் இரண்டாவது வரியை
“உன் பாட்டால் மகிழ்வது திரை அரங்கம்”
என நிகழ் காலத்திலேயே எழுதி இருக்கலாம்.
மேலும்…
வாலியின் ரஜினி, எம்.ஜி.ஆர். பாடல்கள் போது தியேட்டர் அதிரும்!
மாடியில் இருந்து பேப்பர் பூக்கள் வீசி எறிவார்கள். தியேட்டரே கலக்கும்.
அதனால் பாடல் வரிகளை சிறிது மாற்றி அமைக்கிறேன்!
“உன் பிறப்பால் மகிழ்வது திருவரங்கம்
உன் பாட்டால் அதிர்வது திரையரங்கம்”
நல்ல பாடல் என சேர நாட்டு பாவலன் பாராட்டுகிறேன்! நன்றி, வணக்கம்!
-== மிஸ்டர் பாவலன் ==-
அன்புடையீர்! தாம்தமாக இப் பதிவைப் படித்தேன். திரைஉலகம் வாலிக்கான அஞ்சலியைத் தெரிவிக்காதது ஏன்? வாலி அஞ்சலி கவிதை நன்று. நான் என் கவிதையை அனுப்பியுள்ளேன். இத் பாவையர் மலர் ஆகஸ்ட் இத்ழில் வெளி வந்தது. கவிஞர் வாலிக்கு அஞ்சலி
அவதாரப் புருஷனையும் பாடுவாய்
அரிதாரப் பூச்சுக்கும் பாடுவாய்
மடாதிபதியையும் பாடுவாய்
மரியானுக்கும் பாடுவாய்
அரியாசனத்துக்கும் பாடுவாய்
அறியாசனத்துக்கும் பாடுவாய்
கவி வாலியைத் துளைத்தது இராமனின் வாளி
கவி வாலியை வதைத்த து வியாதியின் வலி
வாழ்க்கை முற்றுப்பெற வைத்தது
நுரையீரல் தொற்று நோய்
எதுகை மோனையுடன்
விளையாடி திரைவானை வென்றாய்
எமனுடன் போராடி தோற்றாய்
பிரிய திலகத்தைப் பிரிந்த காலம் தொட்டே உன்னை
பிரிக்கும் பொருட்டு காலன் உன் அருகில் வந்தான்
முதலில் தனிமை பட்டாய்
பின் நோய்வாய்ப் பட்டாய்
ஓய்வெடுக்கும் வேளையிலும்
ஓயாது உழைத்தாய்
எழுது கோலை விடாது பிடித்துக் கொண்டாய்
அழுது புலம்பும் வண்ணம் மடிந்தும் விட்டாய்
தலைமுறை பல கடந்தவனே
தலை நரை வந்த பின்னும்
கலையுலகு வியக்கும் வண்ணம்
கலக்கல் பாடல் தந்தாய்
தளராது நிமிர்ந்து நின்ற வாலியே
இனி என்றும் உன் இடம் காலியே
இளைஞர்களின் மனதைப் படித்தாய்
கலையுலகில் காவியமாய் நின்றாய்
ஆதியில் கந்தனைப் பாடி திரையுலகில் நுழைந்தாய்
அந்தியில் அரங்கன் புகழ் பாடி விண்ணுலகை அடைந்தாய்
பதினெட்டு வயது இளமொட்டுக்களைத் துடிக்க வைத்தாய்
பதினெட்டு தேதியில் இதயத் துடிப்பினை நிறுத்தி துடிக்க வைத்தாய்
அத்தைமடி மெத்தையடி என்றுரைத்தவனே இனி
அரங்கன் திருவடியில் அமைதி அடைவாய்
திரையுலகு கேட்டு மகிழ்ந்த உன் பாடலை இனி
இறையுலகு கேட்டு மகிழட்டும்
அமுத பானம் பருகிய தேவர் குலம்
அமுத கானம் கேட்கட்டும்
கலங்கும் கண்களுடன்
ஜெயந்தி நாகராஜன்