BREAKING NEWS
Search

கறவை மாடுகளாக ஆதிக்க சமுதாயத்தினர், அடிமாடுகளாக தமிழர்கள் – க அன்பழகன்

கறவை மாடுகளாக ஆதிக்க சமுதாயத்தினர், அடிமாடுகளாக தமிழர்கள் –  க அன்பழகன்

சென்னை: கறவை மாடுகளாக ஆதிக்க சமுதாயத்தினரும், அடிமாடுகளாக தமிழர்களும் இருக்கக்கூடிய நிலைதான் இருக்கிறது என்று திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவில் பேராசிரியர் க அன்பழகன் பேசியது:

சுயமரியாதை உள்ளவரை மட்டுமே நிமிர்ந்து நிற்க முடியும். அதை இழந்தவன் தன்னையும் காத்துக் கொள்ள முடியாது. தன்னை சார்ந்தவர்களையும் காக்க முடியாது.

நமது எதிரிகளிடம் அதிகாரத்தைத் தந்துவிட்டு, நமது உரிமைகளை நாம் எதிர்பார்க்க முடியாது என்றார் அறிஞர் அண்ணா. அதை இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படும்போது திராவிட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது.

கோவில் மாடு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மாடு எங்கு வேண்டுமானால் மேயலாம். யாரும் கேட்க முடியாது. அடிமாடு என்று ஒன்று இருக்கிறது. அந்த மாட்டை எல்லா இடத்திலும் மேய விட்டுவிடுவார்களா? கறியாக்கி விடுவார்கள் கடைசியில்.

கரூரில் மாட்டுச் சந்தை சமீபமாக கூடியது. இங்கிருந்து கறவை மாடுகள் கேரளத்துக்கும், அடிமாடுகள் ஆந்திரத்துக்கும் வாங்கிச் செல்லப்பட்டதாகச் செய்திகளில் பார்த்தேன். கறவை மாடுகளாக ஆதிக்க சமுதாயத்தினரும், அடிமாடுகளாக தமிழர்களும் இருக்கக்கூடிய நிலைதான் இருக்கிறது,” என்றார்.

90 வயதாகும் க. அன்பழகன் இப்போது ஊன்றுகோலைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். விழாவிற்கு ஊன்றுகோலுடனே வந்த அவர், நின்றபடியே பேசினார்.

ஆலய நுழைவு உரிமை

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் பேசுகையில், “பெண்களுக்கு ஓட்டு உரிமை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான். தேவதாசி முறை ஒழிப்பு, ஆலயத்தில் அனைத்து சாதியினரும் நுழையலாம் என்பதையெல்லாம் திராவிட இயக்கம்தான் பெற்றுத் தந்தது.

ஐரோப்பிய நாடுகளில் 200 ஆண்டுகளாக செய்ய முடியாத சமூக புரட்சியை, தமிழகத்தில் 20 ஆண்டுகளிலேயே செய்து காட்டியவர் பெரியார் என்றார்.

திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், “எல்லார்க்கும் எல்லாமும் என்பதுதான் பெரியார் கொள்கை. சமதர்மத்தையே நாங்கள் கேட்கிறோம். இப்போது மனித தர்மத்துக்கும் மனு தர்மத்துக்கும் இடையேதான் போர் நடக்கிறது. தேர்தலில் தோல்வியைச் சந்திக்கலாம். லட்சியத்தில்தான் தோற்கக்கூடாது,” என்றார்.

பேராசிரியர் மா. நன்னன் பேசுகையில், “திராவிட இயக்கத்தின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும். அரிமா நோக்கு ஆயம் என்று ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் திராவிட இயக்கம் சாராதோரும் இடம்பெற வேண்டும்.

100 ஆண்டுகால திராவிட இயக்கத்தில் செய்தவை, செய்ய தவறியவைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். செய்ய தவறியவற்றைச் செயல்படுத்த முன்வர வேண்டும். அப்படிச் செய்வதே திராவிட இயக்கத்தின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான கால்கோளாக அமையும்,” என்றார்.

முக ஸ்டாலின்

விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “உலகில் எத்தனையோ இயக்கம் தோன்றினாலும் அவற்றுக்கு கிடைக்காத பெருமை திராவிட இயக்கத்துக்கு கிடைத்திருக்கிறது. நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்பு வாரிய இடஒதுக்கீடு லட்சியம் எட்டப்பட்டது. தமிழ் மொழி காக்கும் போராட்டத்தில் வெற்றி பெற்றோம்.

சமூக நீதி, பெண் உரிமை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை கலைஞர் ஆட்சியில்தான் சட்டமானது. திராவிட இயக்க லட்சியத்தை திராவிட இயக்கமே நிறைவேற்றிய வரலாறு மிகுந்த பெருமைக்குரியது,” என்றார்.

என்வழி செய்திகள்
2 thoughts on “கறவை மாடுகளாக ஆதிக்க சமுதாயத்தினர், அடிமாடுகளாக தமிழர்கள் – க அன்பழகன்

 1. ss

  வினோ

  நீங்க ஏன் ஓவரா திமுக சப்போர்ட் பன்ன்றேங்க சார்

 2. குமரன்

  ///கோவில் மாடு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மாடு எங்கு வேண்டுமானால் மேயலாம். யாரும் கேட்க முடியாது. ////

  திமுகவைப் பொறுத்த மட்டில் —- கருணாநிதி குடும்பத்தவர்கள் தான் கோவில் மாடு…

  ///அடிமாடு என்று ஒன்று இருக்கிறது. அந்த மாட்டை எல்லா இடத்திலும் மேய விட்டுவிடுவார்களா? கறியாக்கி விடுவார்கள் கடைசியில்.///

  இது திமுக தொண்டர்கள். வீரபாண்டியாரே ஆனாலும், கோ.சி.மணி ஆனாலும், பேராசிரியர் ஆனாலும், துறை முருகன் ஆனாலும் இதே கதிதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *