BREAKING NEWS
Search

ஏழை மாணவர்களுக்கு இயக்குநர் சசிகுமார் தரும் ‘புதிய நம்பிக்கை’!

ஏழை மாணவர்களின் கல்விக்கு வெளிச்சம் தரும் இயக்குநர் சசிகுமார்!

சினிமா கலைஞர்கள் திரையில் மட்டும்தான் புரட்சி, சமூக மாற்றம் பேசுவார்கள்… நிஜத்தில் வாய்ச் சொல் வீரர்கள் என்பது சில அறிவு ஜீவிகளின் கருத்து. அதனை அவ்வப்போது பொய்யாக்கும் வகையில் சில திரைக் கலைஞர்களின் செயல் அமைந்துவிடும்.

சமீபத்தில் இயக்குநர் சசிகுமார் செய்ததைப் போல!

“பத்து இளைஞர்களைக் கொடுங்கள்… உலகை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். நான் ஒத்தை ரூபாயை மட்டுமே கேட்கிறேன்… இந்த சமூகத்தில் கல்வி இல்லை என்ற சொல்லையே இல்லாமல் செய்து காட்டுகிறேன்”- என்ற முழக்கத்தோடு புறப்பட்டிருக்கிறார் சசிகுமார்.

வெறும் பேச்சோடு அவர் நின்றுவிடவில்லை. உண்டியலோடு களத்தில் குதித்துவிட்டார். ‘மாணவர்கள் மறுமலர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் ஒரு இயக்கத்தையே தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களே, தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்து, வசதியற்ற மாணவர்களைப் படிக்க வைப்பார்கள்.

கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி அன்னைக் கல்விக் குழுமம் நடத்திய ஆண்டு விழாவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த சசிகுமார், தனது சொந்த பணத்திலிருந்து ஒரு தொகையை முதல் தவணையாக உண்டியலில் செலுத்தினார்.

மேலும் அந்த உண்டியலைத் தூக்கியபடி மாணவர்கள் மத்தியில் அவரே வலம்வர, இரண்டு நாட்களிலேயே 1 லட்ச ரூபாய் திரண்டுவிட்டது. இதன் மூலமாக 40 மாணவர்கள் இந்த வருடம் இலவசப் படிப்பை மேற்கொள்ள முடியும் என அன்னை கல்லூரி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

மனசு வலிக்கிறது…

கல்லூரி மாணவர்களின் மத்தியில் பேசிய சசிகுமார், “வசதி வாய்ப்புகளுக்காகவோ, ஆடம்பரத் தேவைக்காகவோ யாரும் நம்மிடம் உதவி கேட்கவில்லை. படிப்பதற்கு உதவி என்கிற வார்த்தைகளைக் கேட்கிறபோதே மனது வலிக்கிறது. பிச்சைப் புகினும் கற்கை நன்றே என அப்போதே சொன்ன வில்லுபுத்துராரின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன. படிக்க வசதி இல்லை என்கிற நிலை இனி எந்தவொரு மாணவருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே மாணவர் மறுமலர்ச்சித் திட்டத்தை வலியுறுத்தி உங்களின் முன்னால் பேசுகிறேன்.

பணம் கட்ட வழியில்லாமல் கல்லூரி அட்மிஷன் போட முடியாமல் எத்தனையோ மாணவர்கள் திரும்பிச் செல்கின்ற நிகழ்வுகளை இன்றைக்கும் பல கல்லூரிகளில் பார்க்க முடிகிறது. அத்தகைய மாணவர்களைக் கைதூக்கிவிடும் விதமாக ஒவ்வொரு கல்லூரிகளிலும் இந்த மாணவர் மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்பட வேண்டும். இதற்காக எந்தக் கல்லூரி என்னை அழைத்தாலும் மாணவர்கள் மத்தியில் இதுகுறித்துப் பேசவும், கையில் உண்டியல் ஏந்தி பணம் சேகரிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உதவி என்று இல்லை. நம் கையில் கிடைக்கும் ஒரு ரூபாய் காசுகூட உதவிதான். ஒருநபர் ஒரு ரூபாய் கொடுத்தாலும், லட்சம் பேர் கொடுத்தால் அதுவே பல மாணவர்களின் கல்விக்கு உதவும் பெரும்தொகையாக இருக்கும்.

ஒவ்வொரி கல்லூரியும் தங்கள் வளாகத்தில் இதற்கென ஒரு உண்டியவை வைத்தால் மாணவர்கள் முடிகிறபோதெல்லாம் அதில் பணம் போட்டு உதவுவார்கள். கல்விக்காக உதவ நினைக்கும் மற்றவர்களும் ஏதாவது செய்வார்கள்.  இந்தத் திட்டத்துக்காக எந்தக் கல்லூரி அழைத்தாலும் நான் வருவேன்.

தனிமனித ஒழுக்கம் தொடங்கி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரை கல்விதான் ஒருவனை தன்மைப்படுத்துகிறது. கல்விக்கு வழியில்லை எனும் போதுதான் நியாயப் பிறழ்வும், நேர்மையற்ற போக்கும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. எனவே ஒருவனுக்கு கல்வி தருவது அவனை சாதனையாளனாக மாற்ற மட்டுமல்ல, தவறான வழியில் செல்லாமல் தடுக்கவும்தான்!” என்றார்.

இலவச சீட் தர முன்வந்த கோவை கல்லூரி

சசிகுமாரின் பேச்சை கேட்டறிந்த கேயம்புத்தூர் ஜி.ஆர்.டி கல்லூரி நிர்வாகம் அடுத்த நாளே சசிகுமாரை அழைத்து, இனி வருடா வருடம் நீங்கள் சிபாரிசு செய்யும் தகுதியான நான்கு மாணவர்களுக்கு இலவசமாகவே சீட் வழங்குகிறோம். உங்களுடைய மாணவர் மறுமலர்ச்சித் திட்டம் குறித்தும் உடனடியாக எங்கள் மாணவர்களிடம் கலந்து பேசுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இயக்குநர் மணிவண்ணன்

சசிகுமாரின் இந்த கல்வி உதவி திட்டம், பல திரையுலக விஐபிக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஒரு விழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் மணிவண்ணன் கூறுகையில், “தம்பி சசிகுமாரின் இந்த திட்டம் அற்புதமானது. இது தொடர்பாக எந்தக் கல்லூரி என்னை அழைத்தாலும் வருவேன்,” என்றார்.

ஐஏஎஸ் அதிகாரியான தனவேல் கூறுகையில், “கல்விக்காக உதவுகிற ஒருவரது சேவை அந்த கடவுளுக்கே சமமானது. சசிகுமாரின் இந்த திட்டம் அனைத்து கல்லூரிகளுக்கும் போய் சேரவேண்டும். இது ஒரு வரலாற்று நிகழ்வுக்கான அருமையான தொடக்கம்,” என்றார்.

சசிகுமாரின் முயற்சியைக் கேள்விப்பட்ட நடிகர் விதார்த், இனி தானும் ஆண்டுதோறும் தன்னால் முடிந்த அளவு பணத்தை இந்தத் திட்டத்துக்கு தருவதாகக் கூறியுள்ளார். இந்த ஆண்டும் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார்.

போராளி என்பதற்கான அர்த்தத்தை சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் காட்டிவிட்டார் சசிகுமார்… வாழ்த்துகள்!

-என்வழி ஸ்பெஷல்
7 thoughts on “ஏழை மாணவர்களுக்கு இயக்குநர் சசிகுமார் தரும் ‘புதிய நம்பிக்கை’!

 1. தினகர்

  என்ன சொல்வதென்று வார்த்தைகள் வரவில்லை.. கண்களில் நீர் பனித்தது…

  சினிமாவில் இது வரை சாதித்ததை விட இந்த ஒரு பணியில் பன்மடங்கு சாதித்து விட்டீர்கள் சசிகுமார். இணைந்து பணியாற்ற எத்தனையோ என்.ஆர்.ஐகள் தயாராக இருக்கிறார்கள்.. அமைப்பை பலமாக உருவாக்குங்கள்.. நன்கொடை விவரங்கள், பயனாளிகளை வெளிப்படையாக வைத்திருங்கள்.. போதும்.. தாய் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் லட்சக்கணக்கானோர் இந்த அரும் பணியில் இணைவார்கள்

  இந்த பணியில் என்வழி நண்பர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன் ஷங்கர்..

 2. M Senthil

  பிச்சைப் புகினும் கற்கை நன்றே என அப்போதே சொன்ன வில்லுபுத்துராரின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன

  தனிமனித ஒழுக்கம் தொடங்கி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரை கல்விதான் ஒருவனை தன்மைப்படுத்துகிறது. கல்விக்கு வழியில்லை எனும் போதுதான் நியாயப் பிறழ்வும், நேர்மையற்ற போக்கும் ஒருவனுக்கு ஏற்படுகிறது. எனவே ஒருவனுக்கு கல்வி தருவது அவனை சாதனையாளனாக மாற்ற மட்டுமல்ல, தவறான வழியில் செல்லாமல் தடுக்கவும்தான்!”

  what a great truth.

  I also ready to donate as much i can for the same only because of belivable person such as sasikumar avl.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *