BREAKING NEWS
Search

இயக்குநர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!

இயக்குநர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!

_MG_6328

சென்னை: இயக்குநர் – நடிகர் – எழுத்தாளர் – தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.

இன்னும் ஏராளமான படங்களை இயக்கும் திட்டங்களை வைத்திருந்த மணிவண்ணனின் மரணம் தமிழ் சினிமாவையே உலுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.  

கோவை மாவட்டம் சூலூர்தான் மணிவண்ணனின் சொந்த ஊர். தந்தை பெயர் ஆர் எஸ் மணியம் என்கிற சுப்பிரமணியம். தாயார் மரகதம்மாள். பெற்றோர் இருவருமே அரசியலில் பிரபலமாக இருந்தனர்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக 1979-ல் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் உயர்ந்தார். நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா.

பின்னர் இளையராஜா உதவியுடன் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல்படமே சில்வர் ஜூப்ளி. தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம்.

தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் படங்கள் இயக்கியுள்ளார் மணிவண்ணன்.

ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 400 படங்களுக்குமேல் அவர் நடித்துள்ளார். ரஜினியின் மிக நெருக்கமான நண்பர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் மணிவண்ணன்.

நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ படத்துக்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு, நூறாவது நாள் 2, பணம் படுத்தும் பாடு ஆகிய 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.

இன்று பிற்பகல் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்திருந்த மணிவண்ணன், லேசாக முதுகு வலிப்பதாகக் கூறியுள்ளார். பின்னர் வலி அதிகரிக்கவே இருக்கையிலிருந்து அப்படியே சாய்ந்தவர் உயிர் சில நொடிகளில் பிரிந்துவிட்டது.

மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர். மனைவியை மிகவும் நேசித்த மணிவண்ணன், அவர் பெயரிலேயே சில படங்களைத் தயாரித்துமிருக்கிறார்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *