BREAKING NEWS
Search

அன்புக்கு நான் அடிமை!

தலைவரின் அன்புக்கு நான் அடிமை!

– சின்னமணி

thalaivar-festure-envazhi-1
பென் இருக்கா ? – ஸ்டைலாக அவர் கை அசைவுகளிலும் அந்த கேள்வி வந்தது. அவர் கைப்பட்ட அந்த பேனா அலுவலகத்தின் காட்சிப் பொருளானது”

அது ஒரு குளிர்காலம் இரவு மணி பன்னிரண்டு. இடம்: பெங்களூர். எம்.ஜி ரோட்டில் ஒரு திரையரங்கில் ஆங்கிலப் படம் ஒன்றை பார்த்துவிட்டு கவாஸகி பஜாஜில் விஜயநகருக்கு விரைந்து கொண்டிருந்தேன். பின் சீட்டில் நண்பர் அமர்ந்திருந்தார். வண்டி சாளுக்கியா ஹோட்டலை தாண்டி ரேஸ் கோர்ஸில் போய்க்கொண்டிருக்கிறது. குமாரபார்க்கிற்கு வலதுபுறம் திரும்ப வேண்டும். அந்த சந்திப்பின் இடது புறத்தில் சாலையில் கூட்டமாக இருந்ததால் வேகத்தை குறைத்தேன். சிலர் இந்த பக்கம் வண்டிகளை பார்க் செய்து விட்டு சாலையை கடந்து கொண்டிருந்தார்கள்.

நடு இரவில் நடு ரோட்டில் ஷூட்டிங்…

‘ஏனாயித்து?’

‘சினிமா ஷூட்டிங் நடித்தாயிதே’

‘ஹீரோ எவரு’

‘ரவிச்சந்திரன்’

இந்தப் பெயரைக் கேட்டவுடன் உள்ளுக்குள் ஒரு உற்சாகமான சந்தேகம். நண்பரைப் பார்த்தேன். ‘என்னன்னு பாத்துட்டு போலாங்க’ என்றார். பைக்கை நிறுத்தி விட்டு இருவரும் கூட்டத்திற்குள் கலந்தோம்.

மத்தியில் நாகார்ஜூனா, ரவிச்சந்திரன் மற்றும் ஜூஹி சாவ்லா நின்று கொண்டிருக்க லைட்மேன், காமிராமேன் உள்ளிட்ட குழுவினர் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள்.

‘தலைவர் இல்லையா?’

‘அவரு இல்லாமேலே எடுக்காங்களாம். ரவிச்சந்திரன் தான் டூப்பாம்’

‘அவரு லேட்டா வருவாரு’ – இன்னொரு குரல்

‘அவரு வந்துட்டாரு, அங்கே இன்னொரு ஸ்பாட்டில் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்காரு’ – இது இன்னொரு குரல்.

எல்லோரும் ஷூட்டிங் பார்க்கும் ஆவலில் இருக்க நாங்கள் இருவரும் கூட்டத்திலிருந்து நழுவினோம். ஸ்பாட்டிலிருந்து வரிசையாக கார்கள் நெடு தூரத்திற்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த இன்னொரு ஸ்பாட் எதுவென்று தேடி நடந்தோம். அரை கிலோமீட்டருக்கு அப்பாலும் கார்களின் வரிசை தொடர்ந்து கொண்டே இருக்கிறது

கடவுளே இறங்கி வந்து கை குலுக்கினால்?

‘இவ்வளவு தூரம் வந்தாச்சே. ஷூட்டிங் ஸ்பாட் எதும் தெரியல்லியே… ஆளுங்க யாருமே இல்லையே. இங்கே எப்படி தலைவர் இருப்பாரு,’ என்று நண்பர் சொல்ல,.
‘தலைவர் வந்திருக்காருன்னு சொல்றாங்களே. பொய்யாக இருக்குமோ’ நானும் அவர்கூட சேர்ந்து சொல்ல, கார்களைத் தாண்டி முன்னால் போகிறோம்.

சட்டென்று ஒரு காரின் பின் சீட்டில் விளக்கு எரிந்தது. அப்படியே கண்ணாடியும் இறங்கியது. கூடவே ‘ஹாய், நான் இங்கே இருக்கேன்’ என்ற இன்பக் குரல் ஒலித்தது. என்னவென்று யோசிப்பதற்குள் இது மூன்றும் நடந்து முடிந்துவிட்டது.

‘அன்புத் தலைவரை அவ்வளவு அருகில், அவராக அழைத்து தரிசனம் தந்தது’ கடவுளே இறங்கி வந்து கைகுலுக்கியது போலிருந்தது. இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் நாக்கு ஒத்துழைக்குமா என்ன?  நாக்கு குளறினாலும், கூட்டம் சேர்ந்து தலைவருக்கு தொந்தரவு கொடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுமட்டும் மூளைக்கு உடனே வந்து விட்டது.

‘மன்னிச்சிடுங்க தலைவா. நீங்க ரெஸ்ட் எடுங்க.. நன்றி,’ ன்னு ஏதேதோ சொல்லிவிட்டு கிடுகிடுவென்று திரும்பி நடந்தோம்.

தனிக் கோட்டு கேட்காத தனிக்காட்டு ராஜா

மீண்டும் கூட்டத்திற்குள் வந்து ஐக்கியமாகிவிட்டு கப்சிப்பென்று இருந்தோம். இதயமோ ஒரே நொடியில் பல லட்சம் தடவைகள் துடித்துக் கொண்டிருந்தது. கண்முன்னே   நாகார்ஜூன் மற்றும் ரவிச்சந்திரன் பின்னே மாறி மாறி ஜூஹி சாவ்லா ஆடிக் கொண்டிருந்தார். ஹூரோக்களோ கையில் லத்தி சுழட்டிக்கொண்டு, காவாலிப் பசங்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.

எப்படி வந்தார், யாருடன் வந்தார் என்றெல்லாம் யோசிப்பதற்கு முன்னால் சட்டென்று மத்தியில் தோன்றினார் நம் அன்பு சூப்பர் ஸ்டார்.

நாகார்ஜூன் ஷாட் முடிந்து ரவிச்சந்திரன் ஷாட் நடந்து கொண்டிருக்கிறது. நாகார்ஜூன் அணிந்திருந்த கோட்டை தலைவரே கழற்றுகிறார். அதை அப்படியே லாவகமாக வாங்கி தன் மீது அணிந்து கொண்டார் அன்புத் தலைவர்.

எனக்கும் நண்பருக்கும் அது சுத்தமாக பிடிக்கவில்லை. ‘அந்தாளு வேர்வையை எல்லாம் தலைவரு மேலே படுமே. இது என்ன கூட ஒரு கோட்டு கூட இல்லாம ஷூட்டிங் நடத்துறாங்க’ன்னு ரவிச்சந்திரன் மேலே கோபம் வந்தது. ஆனால் நம்மைப் போல் நினைத்தால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லையே. அவரோ ஜாலியாக நாகார்ஜூனுடன் கேலி செய்து கொண்டிருந்தார். ரவிச்சந்திரனும் ஷாட் முடிந்து தலைவர் பக்கம் வந்தார். தலைவருக்கான ஷாட்டை சொன்னார். கூடவே ஜூஹி சாவ்லாவும் வந்தார். அவரிடமும் சிரித்து பேசிவிட்டு ஷாட்டுக்கு தயாரானார்.

non

சின்னக் கண்ணம்மா சின்னக் கண்ணம்மா

சின்னக் கண்ணம்மா பாடலின் சிலவரிகள் ஒலித்தது (அப்போது அந்த பாடல் என்று தெரியாது). தலைவர் கோட்டுடன் ஸ்டைலாக நடந்து வந்தார், கையில் லத்தி ஸ்டைலாக சுழன்று கொண்டிருந்தது. டக்கென்று ஒருத்தரை தலையில் பிடித்து இழுத்தார். ஷாட் முடிந்து விட்டது.

ஒன்மோர் ஷாட் ஃபார் இந்தி என்ற குரல் வந்தது. இந்திப் பாடல் வரிகளுடன் மீண்டும் ஒரு முறை முடிந்தது. குழுவினர் அடுத்த ஷாட்டுகளுக்காக தயாரானார்கள். அங்கே ஒரு தெருவிளக்கு கம்பம் மத்தியில் இருந்தது. தலைவர் அதற்கு கீழே வந்து விட்டார். நாகார்ஜூன் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தார்.

எங்கிருந்து தான் அந்த துணிச்சல் வந்ததோ தெரியாது. சைடில் போய், செக்யூரிட்டி / போலீஸுடன் என்னவோ சொல்லி தலைவர் பக்கத்தில் போய்விட்டேன். (தூரத்தில் நின்ற நண்பருக்கு கடும் அதிர்ச்சி என்று பின்னால் சொன்னார்) பக்கத்தில் போய்விட்டேன். என்ன கேட்பதென்று தெரியவில்லை. ஏதேதோ சொல்லிட்டு

‘ஆட்டோக்ராஃப் என்கிறேன்’

பென் இருக்கா ?

கொஞ்சம் கூட தாமதிக்காமல், ‘பென் இருக்கா’ என்று கேட்டார். கூடவே அவர் ஸ்டைலாக இருக்கா என்ற தோணியில் கையினாலும் அந்த கேள்வி வந்தது.

பாக்கெட்டில் இருந்த பேனாவை சட்டென்று எடுத்து கொடுத்தேன். ‘எங்கே’ என்று கேட்டார். உள்ளங் கையை நீட்டினேன்.

’நோ நோ பேப்பர் இருக்கா ?’ இது தலைவர்

அவசரத்தில் பாக்கெட்டில் கையை விட்டு துளாவினேன். ட்ரைவிங் லைசென்ஸ் ஜெராக்ஸ் காப்பி இருந்தது. எடுத்து நீட்டினேன்.

அய்யோ அவர் ஸ்டைலாக ரஜினிகாந்த் என்று கையெழுத்திட்டதை எப்படி விவரிப்பேன். வார்த்தைகளால் சொல்ல முடியாதது. போட்டதும், இனி போகலாம் தானே என்பது போல் ஒரு புன்னகை. அதற்கும் மேல் அங்கிருந்தால் நான் தலைவருக்கு எப்படி உண்மையான தொண்டனாவேன்.!

அப்புறம் என்ன நடந்தது?

திரும்ப வந்து கூட்டத்துக்குள் வந்தால், நான் என்னமோ தலைவருக்கு சொந்தக்காரன் என்ற ரேஞ்சில் பார்க்கிறார்கள். நண்பர் ‘ என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க. என்னையை விட்டுட்டு தனியா எப்படிங்க தலைவர்கிட்டே போனீங்க’ என்று புலம்புகிறார். ஆனாலும் கூடவே ரொம்ப சந்தோஷம். ‘நீங்க தான் உண்மையான தலைவர் ரசிகர். அதான் இந்த கூட்டத்திலே உங்களால் அவரிடம் நேரிடையாக செல்ல முடிந்தது,’ என்றார்.

அதற்கு பிறகு நடந்த ஷூட்டிங் காட்சிகளில் மனம் செல்லவில்லை. மேலும் சில ஷாட்டுகள் முடிந்த பிறகு, எல்லோரும் வேறு எங்கோ கிளம்பிச் சென்றார்கள். நாங்கள் வீடு திரும்பினோம். எப்படி வண்டி ஓட்டினேன். எப்படி வீடு வந்து சேர்ந்தேன்
என்றெல்லாம் தெரியாது. எப்போ தூங்கினேன் என்றும் தெரியாது. அடுத்த நாள் காலையிலே சீக்கிரமாக எழுந்து சீக்கிரமாக அலுவலகம் சென்று விட்டேன்.

மேஜையில் தலைவர் கையெழுத்திட்ட பேப்பரும், பேனாவும் தனியாக வைத்து விட்டேன். முதலில் வந்த நண்பனிடம் ‘இது என்ன தெரியுமாடா’ என்றேன். கையெழுத்தைக் காட்டி ‘தலைவர் போட்டது’ என்றேன்.

அவன் நம்பவில்லை. முழு விவரமும் சொன்னதும் நம்பி விட்டான். அதோடு அலுவலகம் முழுவதும் உள்ள நண்பர்களிடம் பரப்பி விட்டான். அன்று முழுவதும் அந்த பேனாவும் பேப்பரும் பெரிய காட்சிப் பொருளானது. அத்தனை பேரும் அவருடைய கையெழுத்தை திருப்பி திருப்பி பார்த்தனர். அதன் பிறகு அந்த பேனாவை நான் உபயோகிக்கவே இல்லை. வேறு யாரும் அவசரத்திற்கு கேட்டால் கூட கொடுக்கவில்லை.

non2
சமீபத்தில் யூடியூபில் ’சாந்தி கிராந்தி’ முழுப்படமும் பார்த்தேன். சின்னக் கண்ணம்மா இந்திப் பாடலில் தலைவர் லத்தியை சுழட்டி, ரவுடியை இழுத்த காட்சியை பார்த்ததும் அத்தனையும் மீண்டும் மனக்கண்ணில் வந்து போனது. இதோ உங்கள்முன் வார்த்தைகளாகவும் வந்து விட்டது.

தலைவரின் அன்புக்கு எப்போதும் நான் அடிமை!

குறிப்பு: கட்டுரையாளர் நாட்டுக்கு ஒரு நல்லவன் படப்பிடிப்பின்போது தலைவருடனான தனது பரவச சந்திப்பை கட்டுரையாக்கியிருக்கிறார்.

நாட்டுக்கு ஒரு நல்லவன் படத்தை  இந்தியில் சாந்தி கிராந்தி என்ற பெயரில் தலைவரே  நடித்தார். அதே பெயரில் தெலுங்கில் நாகார்ஜூனாவும், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடித்தார்கள். கன்னடம் தவிர ஏனைய மொழிகளில் ரவிச்சந்திரன் நண்பனாக நடித்து இயக்கினார். கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த நண்பன் கேரக்டரில் நடித்திருந்தார்.  ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் தயாரான இந்த படம், ஒவ்வொரு காட்சியும் நான்கு முறை படமாக்கப் பட்டது.

என்வழி ஸ்பெஷல்
3 thoughts on “அன்புக்கு நான் அடிமை!

  1. Jey

    படிக்கும் போது நானே தலைவரை சந்தித்தது போன்ற உணர்வு! wonderfull article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *