BREAKING NEWS
Search

இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்!

இது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்!

rain-1

இந்த சிலையும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது!

டந்த ஒரு வாரமாக வட இந்தியாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. வெள்ளமென்றால் சாதாரண வெள்ளமல்ல.. இந்தத் தலைமுறை தன் வாழ்நாளில் கண்டிராத வெள்ளம். இமயமலைச் சுனாமி என்று வர்ணிக்கின்றன மீடியாக்கள்.

குறிப்பாக உத்தர்கண்டின் பனிபடர்ந்த இமயமலைச் சிகரங்களையொட்டிய சிறு நகரங்களும் கிராமங்களும் முற்றாக உருக்குலைந்து போயிருக்கின்றன. சுமார் 5500 பேர்களுக்கு மேல் மூழ்கிப் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கேதார் நாத் என்ற புனிதத் தலமே முற்றாக மண்ணில் புதைந்திருக்கிறது, அங்கிருந்த சிவன் கோயிலையும் சில கட்டிடங்களையும் தவிர. உத்தர்காசி, ருத்ரப்ரையாக், ரிஷிகேஸ், பத்ரிநாத் போன்ற இடங்களில் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டிருந்த அத்தனை கட்டடங்களையும் இழுத்துக் கொண்டு போய்விட்டது கட்டுக்கடங்காத வெள்ளம்.

ஆனால் இந்தப் பேரழிவுக்கான பழியை இயற்கை மீது யாரும் போட முடியாது. இது Man Made Disaster என்றே அனைவரும் சொல்கிறார்கள். இத்தனை ஆயிரம் பேர் இறந்து போய்விட்டார்களே… இவ்வளவு நாசமாகிவிட்டதே… என்றெல்லாம் வருத்தப்படுபவர்கள் மிகக் குறைவுதான்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்த இமயமலை புண்ணியத் தலங்களில் ஒற்றைக் கோயிலும் சுற்றி நான்கைந்து சிறு கூரை வீடுகளும்தான் இருந்திருக்கின்றன. அவ்வளவு ஏன்… எண்பதுகளில் கூட கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்துள்ளன.

rain-5

மிச்சமிருக்கும் கேதார்நாத்!

இதற்கு முன்பும்கூட பலமுறை இமயமலையில் பெரும் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. மேகம் வெடித்து வானமே பொத்துக் கொண்டது போல வெள்ளம் ஓடியிருக்கிறது. ஆனால் அப்போது ஆறுகளின் வழித் தடங்கள் சிதைக்கப்படவில்லை.

ஆறுகளின் பாதைகள் மறிக்கப்படவோ மாற்றப்படவோ இல்லை. மலைப் பள்ளத்தாக்குகளில் புதிய சாலைகள் ஏதும் போடப்படவில்லை. ராட்சத எந்திரங்கள் கொண்டு மலைகள் சிதைக்கப்படவில்லை. குறிப்பாக மின்சாரத்துக்காக நூற்றுக்கணக்கில் சிறு – பெரு அணைகள் கட்டப்படவில்லை.

ஆனால் இந்த 30 ஆண்டுகளில் இமயமலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள் என்பதை இஸ்ரோ சமீபத்தில் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன. 70க்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்காக கேதர்நாத் கோயிலை ஒட்டி ஓடுகிற மந்தாகினி ஆற்றின் போக்கை கடந்த பல ஆண்டுகளாக திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள். இப்போது பெருமழை பெய்து, கேதர் டோம் என்ற பனிச் சிகரமும் உடைந்து சர்பால் ஏரியில் விழுந்து பனிச் சுனாமியை உருவாக்கியதால், மந்தாகினி ஆறு தனது பழைய பாதையைதே தேடி பெரும் வேகத்தில் வழியிலிருந்து மனிதர்கள், கட்டடங்கள், வாகனங்கள் அத்தனையையும் வாரிசு சுருட்டி வீசிவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

rain-6

கங்கையின் மற்ற முக்கிய துணையாறுகளான பாகீரதி 80 சதவீதமும், அலக்நந்தா 65 சதவீதமும் பாதை மாற்றப்பட்டுள்ளன, மின் திட்டங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்காக. மற்ற சிறிய ஆறுகள் 90 சதவீதம் அதன் போக்கிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளனவாம். இப்படி இயற்கையின் போக்கை மாற்றியிருப்பது, எதிர்வரும் நாட்களில் பேரழிவைத் தோற்றுவிப்பது நிச்சயம் என்று கூறியுள்ளார் உத்தர்கண்ட் பகுதி சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர் மகராஜ் பண்டிட்.

மெகா சாலைகள்…

கடந்த 30 ஆண்டுகளில் சுற்றுலா மற்றும் புனித யாத்திரைகளை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு, இந்த மலைப் பகுதிகளை தாறு மாறாக சிதைத்ததும் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம்.

“பிரயாகை பாலத்தின் ஓரத்தில் நின்றபடி, அந்த வழியாகப் போகும் வாகனங்களை ஒரு நாள் கவனித்தேன். ஏழு அல்லது எட்டு நிமிடங்களில் 117 பஸ்- லாரி – கார்கள் கடந்து சென்றன. இது எத்தனை கொடுமை… முன்பெல்லாம் ஒரு நாளைக்கு நூறு வாகனங்கள் கூட செல்லாமலிருந்த பகுதிகள் இவை. இவ்வளவு வாகனங்கள் வருவதற்காக உருவாக்கப்பட்ட சாலைகளுக்காக, எத்தனை மலைகளை சிதைத்திருப்பார்கள்… அதனால் இந்தப் பிரதேசத்தின் மண் பலமிழந்து, சரிந்து விழும் தருணத்துக்காக காத்திருந்தது என்பதுதான் நிஜம்,” என்கிறார் பண்டிட்.

rains-7

இன்னொரு பக்கம் எந்த சட்டங்களையும் மதிக்காமல் மனிதர்கள் இயற்கையைச் சிதைத்ததும் அதற்கு அரசுகளே துணை போனதையும் யாராலும் மன்னிக்க முடியாது. இவர்களுக்கு இந்த தண்டனை தகும் என்பதுதான் பலரது கருத்தும். ஆற்றங்கரைகள் எனத் தெரிந்தும் மந்தாகினி, அலக்நந்தா, பாகீரதி போன்ற நதிக்கரைகளின் ஓரங்களில் பல நூறு பிரமாண்ட கட்டடங்களை கட்டி ஓட்டல், கடைகள் நடத்திய மனிதனின் பேராசையை அப்படியே மண்ணோடு மண்ணாக்கியுள்ளது இந்த இமயமலைச் சுனாமி.

இந்த இயற்கைச் சீற்றத்தில் 5000 உயிர்களுக்கு மேல் பலியாகியிருப்பது மனதை துணுக்குற வைக்கிறது. ஆனால், பெருமழைக் காலம் என்று தெரிந்தும், புனித யாத்திரை என்ற பெயரில் ஆபத்தான இந்த இடங்களுக்கு ஆயிரக்கணக்கில் பயணித்திருக்கிறார்கள். இதில் நமக்குத் தெரிந்தவர்கள்.. ஏன் நாமே கூட பாதிக்கப்பட்டிருந்தாலும், பழியை இயற்கை மீது போட்டுவிடுவதற்கில்லை.

ருத்ரப் ப்ரயாக் - அலக்நந்தா நதி

ருத்ரப் ப்ரயாக் – அலக்நந்தா நதி

காரணம், நம்மை இயற்கை சிதைக்கவில்லை… நாம்தான் இயற்கையை அதன் போக்கில் விடாமல் நம் சுயநலத்துக்காக சிதைத்து சின்னா பின்னமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உலகின் வெப்பநிலை சமனற்றுப் போயுள்ள தருணம் இது. இதில் முதல் இலக்காக நிற்பதே இந்தியாவின் இமயமலைப் பகுதிகள்தான் என சர்வதேச சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதையெல்லாம் மீறி, நாம் தவறுகளைத் தொடர்ந்தால், இதைவிட பலமான தண்டனைகளுக்குள்ளாக வேண்டியிருக்கும்…

உத்தரகாசி

உத்தரகாசி

புனிதத் தலங்கள் எனப் போற்றப்படும் இந்த இடங்களுக்குப் போய் பேராபத்தில் சிக்கிக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவக்கூட அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முன்வரவில்லை. இத்தனை கோரமான சூழலிலும் கிடைத்த வரை சுருட்டிக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர். ஒரு சாதாரண ரொட்டியைக் கூட நூற்றுக் கணக்கில் விலை வைத்து விற்று பணம் பார்த்திருக்கின்றனர். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ… ஆனால் அன்பற்ற இந்த மனிதர்கள் வசிக்கும் இதுபோன்ற பிரதேசங்களுக்கு புனித யாத்திரையெல்லாம் தேவையா… இருக்குமிடத்திலிருந்தே இறைவனைத் தேடுங்கள் என இயற்கையே பாடம் நடத்தியிருக்கிறது.

கற்பனைக்கெட்டாத பரப்பளவில் பரந்து விரிந்த இமயமலைக்கே இந்த கதி என்றால், சுற்றுலா என்ற பெயரில் கொடுமையாக சிதைக்கப்பட்டுள்ள சிறு வனப் பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது!

வினோ
-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *