BREAKING NEWS
Search

பாஜகவில் ரஜினி? கயிறு திரிக்கும் நாளிதழ்கள்!

thalaivar-pol

சென்னை: சமீபத்தில் இரு முன்னணி தினசரி பத்திரிக்கைளில் ஒரே மாதிரியான ‘ரஜினி கற்பனை’ செய்தியை வெளியிட்டுள்ளார்கள். ரஜினி தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தை கைவிட்டார் என்றும் பாஜகவில் சேரப்போகிறார் என்றும் அண்டப் புளுகை அரங்கேற்றியுள்ளார்கள்.

தனிக்கட்சி தொடங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் ரஜினி எடுத்து வருவதாக, தனது முதல் சந்திப்பிலிருந்து தமிழருவி மணியன் தெரிவித்து வந்தார். ரஜினியின் அனுமதியுடன், திருச்சியில் தனியாக ஒரு மாநாடு நடத்தி அதை வெளிப்படையாகவும் அறிவித்தார் மணியன்.

தினசரி பல்வேறு அறிஞர்களை சந்தித்து, தமிழகப் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்து வருவதாகவும் மணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கமல் ஹாசனின் ட்விட்டர் அரசியல் மட்டுமே புதிதாக முளைத்துள்ளது. அதற்கும் ரஜினி வெளிப்படையாகவே, கமலுக்கு மூக்குடைப்பு செய்யும் வகையில் சிவாஜி மணிமண்டபத் திறப்பு மேடையிலேயே பதிலளித்து விட்டார்.

ரஜினி கட்சி தொடங்கும் வேலையை முடுக்கி விட்ட பிறகு பெரிய முதலாளியாக அவதாரம் பூசிக் கொண்டு, ரஜினியின் அரசியலுக்கு இடைஞ்சல் தரும் வகையிலேயே கமல் ஹாசன் பேசிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் தன்னை முந்தி விட்ட ரஜினியை பழிவாங்கும் போக்குதான் கமல் ஹாசனிடம் தெரிகிறது.

அதனால், கமல் ஹாசனுக்கு பயந்து கொண்டு, ரஜினி தனிக்கட்சி முடிவை கைவிட்டார் என்ற ரீதியில் அந்த செய்திகள் உள்ளன. ரஜினி ரசிகர்களின் எண்ணிக்கையும் கமல் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணக்கிட்டால் பத்தில் ஒரு பங்கு கூட கமலுக்கு சேராது என்பது இந்த பத்திரிகைகளுக்குத் தெரியாதா?

அரசியலுக்கு வருவதே சிஸ்டத்தை மாற்றுவதற்கும் தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்மை செய்யவும் என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் ரஜினி. பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ள ரசிகர்களை ஓடிப் போய்விடுங்கள் என்பதுதான் அவருடைய முதல் அறிவிப்பாக இருந்தது.

பாஜக ஆட்சியில் அதானியும் அம்பானியும் கோடிகோடியாக சம்பாதிப்பது ரஜினிக்கு தெரியாதா? பாஜகவின் மாபெரும் ‘வியாபம் ஊழல்’ பற்றி இந்தியாவே பேசுகிறதே? வாக்கு எந்திரத்தில் மோசடி, ஜிஎஸ்டி குளறுபடி, டிமானிடைசேஷன் தோல்வி, பொருளாதார பின்னடைவு என பாஜகவின் தோல்வியை உலகமே கைகொட்டி சிரிக்கிறது- இதெல்லாம் தெரியாமல் இருப்பதற்கு ரஜினி என்ன கமல் ஹாசனா? இப்படிப்பட்ட கட்சியில் போய் சேர்வதற்கு ரஜினி என்ன ஒன்றும் தெரியாதவரா அல்லது பதவி வெறி பிடித்தவரா?

தன்னுடைய வாக்காளர்கள் யார் என்பதை முற்றிலும் உணர்ந்து கொண்ட பிறகே தனிக்கட்சி நடவடிக்கையில் இறங்கினார் ரஜினி. அதில் எந்த மாற்றமும் இல்லாத போது, அவர் பாஜகவில் போய் சேரவேண்டிய அவசியம் என்ன?.

தன்னுடைய படமும் தமிழக முதல்வர்களின் வரிசையில் இடம்பெற ஆசையில்லை என்று சொன்னவர் ரஜினி. அப்படிப்பட்டவர், பாஜகவில் சேர்ந்து எப்படியாவது முதல்வர் ஆகவேண்டும் என்று நினைப்பாரா என்ன?

யாரையோ திருப்திப் படுத்தவும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் இப்படிப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளார்கள் என்றே தெரிகிறது. இது போன்ற செய்திகளும், அவதூறுகளும் தொடர்ந்து பரப்பப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

ரஜினி சொன்னது போல் ‘செவிட்டுத் தவளை’ யாக இருந்து அவரை முதல்வராக்கும் பணிக்காக தங்களை தயார்ப்படுத்திக் கொள்வது தான் ரஜினி ரசிகர்கள் இனி செய்ய வேண்டியது.

– ‘ரைட்’ பாண்டியன்

Credit: வணக்கம்இந்தியா
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *