BREAKING NEWS
Search

ரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன்! – தீபிகா

ரஜினியின் எளிமையை, பெருந்தன்மையை என்னுடன் எடுத்துச் சென்றேன்! – தீபிகா

1579709_10151940972477611_1464709710_n

மும்பை: ரஜினியின் எளிமையையும் பெருந்தன்மையையும் என்னுடன் எடுத்துச் சென்றேன் என்றார் நடிகை தீபிகா படுகோன்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்துள்ள கோச்சடையானில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் இந்தி நடிகை தீபிகா படுகோன்.

இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான, அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வர இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்தப் படம், ஜப்பானிய மொழியிலும் வெளியிடப்படுகிறது.

கோச்சடையான் இந்தி ட்ரைலர் – இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்காத தீபிகா படுகோன் நேற்று மும்பையில் படம் குறித்து நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கோச்சடையான் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றிய தனது அனுபவம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

கோச்சடையான் படப்பிடிப்பில் சக நடிகர்கள் இல்லாமல் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். இதன் காரணமாக என்னால் ரஜினிகாந்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. இருப்பினும், எனக்கு அவருடன் பேச ஒன்றரை நாள் கிடைத்தது. அவருடன் இருந்த அந்த நேரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். ரஜினிகாந்தின் எளிமையையும், பெருந்தன்மையையும் என்னுடன் எடுத்து சென்றேன். அதை தொடர்ந்து பின்பற்றியும் வருகிறேன்.

ரஜினியின் ஈடுபாடு

படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார். முழுசக்தியையும் ஒருங்கிணைத்து பணியாற்றுவார். எல்லாரையும் இன்முகத்தோடு வரவேற்பார். சவுந்தர்யாவை தனது மகள் என்று கருதாமல், இயக்குனராகவே பாவித்து அவர் சொன்னதை எல்லாம் கேட்டார். தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது.

rajinideepika

நிறைய ஆண்டுகள் சினிமாவில் நடித்தபோதும் கூட சினிமா மீதான ரஜினிகாந்தின் ஈடுபாடும், ஆர்வமும் இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை. அவரது எளிமையும், ஆர்வமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அவரை ரசிக்கிறேன். ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் ஈடுபாட்டுடன் முடிப்பார்கள். அவர்களது கண்களில் ஆர்வத்தைக் காணலாம்.

அதிநவீன தொழில்நுட்பம் மிக்க இந்த படத்தில் பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. படப்பிடிப்பின்போது, எனது முகத்தின் வலது பக்கத்தில் கேமரா இருக்கும். நான் மாடிப்படிகளில் ஏற வேண்டும் எனில், மாடிப்படிகள் அங்கு இல்லை என்பதை முதலில் நான் உணர வேண்டும். மேலும், ஏதேனும் ஒன்றை தொட வேண்டும் என்றால், அது எந்த மாதிரியானது என்பதை உணர வேண்டும். இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் இளவரசியாக நடித்துள்ளேன். இந்த படம் எனது கற்பனைத் திறனை முழுவதுமாக பயன்படுத்தத் தூண்டியது.

மும்பையில் கோச்சடையான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. அப்போது நான் ‘ஹேப்பி நியூ இயர்’ படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ள இயலவில்லை. கோச்சடையானின் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறேன்.

இவ்வாறு நடிகை தீபிகா படுகோனே தெரிவித்தார்.

என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *