BREAKING NEWS
Search

ஒரு குழந்தையைப் போல உற்சாகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி – தீபிகா படுகோன்

ஒரு குழந்தையைப் போல உற்சாகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி – தீபிகா படுகோன்


சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் எந்த நடிகையும் அவரது எளிமை, மனிதாபிமானம், பெருந்தன்மை, உற்சாகம், கள்ளமற்ற ரசிகத் தன்மையை சிலாகிப்பது வழக்கம்.

முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கும் பாலிவுட்டின் பிரபல நாயகி தீபிகா படுகோன் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா என்ன?

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து தீபிகா அளித்துள்ள பேட்டி:

ரஜினி சாருடன் நடிக்கிறோமே என்ற பயம் காரணமாக ஆரம்பத்தில் மன அழுத்தம் இருந்தது போல உணர்ந்தேன். ஆனால் செட்டுக்குள் போனதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, என் பாத்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஓம் சாந்தி ஓம் படத்தின் போதும் இப்படித்தான் நடித்தேன்.

கோச்சடையானைப் பொறுத்தவரை என்னை வியக்கவைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எளிமையும், மாறாத உற்சாகமும்தான்.

ஒரு குழந்தையைப் போல கள்ளங்கபடமற்ற, துள்ளலை அவரிடம் பார்க்கலாம். திரையுலகில் இப்படி ஒரு உற்சாக மனிதரை நான் பார்த்ததில்லை.

செட்டுக்குள் ஃபுல் எனர்ஜியோடு அவர் வருவார். அனைவருக்கும் வாழ்த்து சொல்வார். தன் மகள்தான் என்றாலும், ஒரு இயக்குநருக்கு தரும் முழு மரியாதையை சௌந்தர்யாவுக்கு தருகிறார்.

எல்லா காட்சிகளும் மிக்ச சரியாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நடித்துத் தர தயாராக இருப்பார்.

ரஜினி, அமிதாப் ஆகிய இரு மேதைகளிடம்தான் இந்த அர்ப்பணிப்பை, தொழில் ஒழுங்கை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் கண்களைப் பாருங்கள்.. இந்த சினிமாவை அவர்கள் எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்…,” என்ற தீபிகாவிடம், கோச்சடையான் பட தொழில்நுட்பம் குறித்து கேட்டபோது,

“கோச்சடையான் ஒரு 3 டி படம்  மட்டுமல்ல… மோஷன் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் உருவாகும் படம்.  இந்தத் தொழில் நுட்பத்தில் ஒரு வசதி, நடிகர்கள் முழுமையாக ஒரு காட்சியை நடிக்க வேண்டியதில்லை. அந்தக் காட்சிகளுக்கான எக்ஸ்பிரஷன்களை முதலில் படமாக்கிக் கொள்கிறார்கள். பின்னர் அதை டிஜிட்டலுக்கு மாற்றுகிறார்கள். அனிமேஷனும் நிஜமும் சந்தித்துக் கொள்ளும் ஒரு டெக்னிக் இது.

இரண்டு பாத்திரங்கள் ஒருவரையொருவர் தொட்டுக் கொள்வது போன்ற காட்சிகளுக்கு மட்டும் நாங்கள் முழுமையாக நடிக்க வேண்டியிருந்தது. இந்த வகை தொழில்நுட்பம் எனக்கு ரொம்ப புதிது. ஆனால் உற்சாகமாக இருந்தது.

சௌந்தர்யாவுக்கு இது சவாலான வேலைதான். முதலில் உணர்வுகளைப் படம் பிடித்து, அதை டிஜிட்டல் உருவத்துக்கு மாற்றுவது சாதாரணமானதல்ல… அப்படி மாற்றிய பிறகு, நிஜம் எது, அனிமேஷன் எது என தெரியாத அளவுக்கு செய்திருக்கிறார். படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்
2 thoughts on “ஒரு குழந்தையைப் போல உற்சாகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி – தீபிகா படுகோன்

 1. மு. செந்தில் குமார்

  திரையில் தலைவரை காணும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

 2. winston

  ஜூலை 13

  மூன்று மாத அச்சம், பரபரப்பு, வதந்தி முடிவுக்கு வந்த நாள்..!

  ரஜினி என்ற மனிதரின் பலத்தை கண்டு உலகம் வியந்த நாள்..!

  சிங்கப்பூரை அதிர வைத்து..!

  எமனை வென்று உலகை வியக்க வாய்த்த நாள்..!

  பல இலச்ச வேண்டுதல்கள் உண்மையான நாள்..!

  தமிழ் திரை உலகம் மீண்டும் பிறந்த நாள்..!!

  நீ இல்லாத சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்தேன்..!!

  உன் ரானாவுக்காக காத்து இருந்தேன்..!!

  உன் குரலை கேட்டு கேட்டு கண்ணீர் வடித்தேன்..!

  உன்னை பார்க்கும் நாள் எபொழுது என்று தவம் இருந்தேன்

  வந்தாய் நீ ஜூலை 13 அன்று

  உன் புனைகை மாறவில்லை

  உன் வேகம் மாறவில்லை

  உன் ஸ்டைல் மாறவில்லை

  எங்கள் மேல் நீ கொண்ட அன்பும் மாறவில்லை..

  நாங்களும் மாறவில்லை தலைவா..!!

  உன் ரசிகனாய்
  உன் பக்தனாய்
  உன் வெறியனாய்

  காத்து இருக்கிறோம் கோச்சடையன் தரிசனம் காண..!!
  12 12 12 அன்று..!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *