BREAKING NEWS
Search

சும்மா இருந்த ஜெகனை ‘சூப்பர் லீடராக்கிய’ காங்கிரஸ்!

சும்மா இருந்த ஜெகனை ‘சூப்பர் லீடராக்கிய’ காங்கிரஸ்!

விஎம்மின் தயாரிப்பில் ‘லீடர்’ என்றொரு அரசியல் திரைப்படம் ஆந்திராவில் பெரிய வெற்றியை பெற்றது. மாநில முதல்வர் நோய்வாய்பட்டு இறக்கும் தருணத்தில், பல அரசியல் ரகசியங்களை மகனுக்கு சொல்லிவிட்டு, நீ கண்டிப்பாக முதல்வர் ஆக வேண்டும் என்று மூச்சை விடுகிறார். மகன் பல போராட்டங்களுக்கு பிறகு தந்தையின் ஆசையை நிறைவேற்றுகிறார். அந்த கதை தற்செயலோ அல்லது திட்டமிடப்பட்டதோ, ஆனால் அந்த திரைப்படத்தின் சாயலில்தான் இன்றைய ஆந்திர அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கே உரித்தான செட்டிநாடு, முனியாண்டி விலாஸ்கள் இருந்தாலும், நம்ம ஊரில் காரசாரமா சாப்பிட விரும்புகிறவர்களின் இன்னொரு முக்கிய சாய்ஸ் ஆந்திரா மீல்ஸ். சாப்பாட்டில் மட்டுமல்ல சினிமா மற்றும் அரசியலிலும் ரொம்பவே காரம் விரும்புகிறவர்கள்தான் ஆந்திரவாசிகள்.

மாமனாரை கவிழ்த்த மருமகன்

சினிமாவில் மட்டும்தான் ஒரே பாட்டில் பணக்காரனாகவோ, அரசியல் தலைவராகவோ ஆக முடியுமா? தன்னால் நிஜத்திலும் அப்படி ஆக முடியும் என, தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னால் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்த கின்னஸ் சாதனையாளர் என்.டி.ஆரின் வரவிற்கு பிறகு அங்கே அரசியல் படு சுவாரஸ்யமாகிவிட்டது.

மூன்றாம் தடவையாக ஆட்சியை பிடித்த என்.டி.ஆர், லட்சுமி பார்வதியை திருமணம் செய்ததால், மாமனாரின் ஆட்சியை கவிழ்த்து புதிய ஆட்சி அமைத்தார் சந்திரபாபு நாயுடு. ஆச்சரியப்படும் வகையில் அதிரடியாக வந்த என்.டி.ஆரின் அரசியலும் அதே வேகத்தில் போய்விட்டது.

ஒட்டு மொத்த என்.டி.ஆர் குடும்பத்தின் ஆதரவும் சந்திரபாபுவுக்கு என்பது ஆச்சரியமான விஷயம் என்றால், அடுத்து வந்த தேர்தலில் சந்திரபாபுவை அமோக வெற்றி பெற வைத்து, அவரது முந்தைய ஆட்சி கவிழ்ப்பை மக்களும் ஆதரித்தார்கள். உலக அளவில் ஆந்திராவுக்கு புதிய அடையாளத்தை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலக நிறுவனங்களை ஐதராபாத்திற்கு திருப்பியவரும் சந்திரபாபு தான். முதல்வர் என்பவர்  சீஃப் எக்ஸிகியூட்டிவ்  ஆஃபீசர் என்று புதிய முத்திரை உருவாக்கி இந்தியாவின் முதன்மையான முதல்வராகவும் வலம் வந்தார்.

ஒய் எஸ் ஆரால் உயிர்ந்தெழுந்த காங்கிரஸ்

1983ல் என்.டி.ஆரால் சாய்க்கப்பட்ட காங்கிரஸ் மீண்டு எழவே இல்லை. இடையில் ஒரு தடவை ஆட்சியில் அமர்ந்தாலும்,  நல்ல தலைமை இல்லாமல கரைந்து கொண்டிருந்தது காங்கிரஸ்.

ஹைடக் முதல்வர் என்ற பட்டம் போய், கம்ப்யூட்டர் கம்பெனிகளுக்கு மட்டுமே முதல்வர் என்று சந்திரபாபு நாயுடு மாறிவிட்ட நிலையில், நூற்றுக்கணக்கில் விவசாயிகள் தூக்கில் தொங்க ஆரம்பித்த வேளையில், எளிய மக்களின் நண்பனாக வந்தார் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. தெலுங்கு தேசத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ வீழ்த்தி 2004ல் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.

தொழில் துறை, விவசாயம் என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து சந்திரபாபு நாயுடுவை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார். அதற்கு பரிசாக இரண்டாவது முறையும் ஒய்எஸ்ஆரையே, ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியில் அமர்த்தினர். அவர் ஹெலிகாப்டர் விபத்தில் 2009ல் அகால மரணம் அடைந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலைமையாயிற்று.

தனக்கு ஒரே மகன் என்றாலும் அரசியலில் பெரிய வாய்ப்பை கொடுக்கவில்லை ஒய்.எஸ்.ஆர்.  காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்க வில்லை என்பதுவும் அதற்கு ஒரு காரணம். கடைசியில் 2009 தேர்தலில் கடப்பாவில் போட்டியிட்டு எம்.பி ஆனார் மகன் ஜெகன் மோகன் ரெட்டி. செப்டம்பரில் தந்தையின் திடீர் மரணம் ஜெகனை ரொம்பவே தடுமாற வைத்துவிட்டது. அது வரை, பிஸினஸில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி அபார வளர்ச்சியை பெற்று வந்தவருக்கு, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லைதான்.

உசுப்பேத்திவிட்ட  விசுவாசிகள்…

ஒய்.எஸ்.ஆர் தனக்கு அடுத்த மட்டத்தில் நிறைய இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்கி வைத்திருந்தார். அவர்கள் அனைவருக்கும் ஒய்.எஸ்.ஆரின் மறைவு மிகப்பெரிய துயரத்தை கொடுத்தது மட்டுமில்லாமல், ஒய்.எஸ்.ஆரின் உழைப்பால் பெற்ற ஆட்சியை மற்றவர்கள் அனுபவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஜெகனை தலைவராக முன்னிலைப்படுத்தினர். இந்திராகாந்தி மறைவுக்கு பின் ராஜிவ் பிரதமராகும் போது ஜெகன் முதல்வராகக் கூடாதா என்பது இவர்களின் வாதம்.

ஆனாலும் ஜெகன் அவசரம் காட்டாமல், கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு இருப்பேன் என்றுதான் சொல்லி வந்தார். இடைக்கால முதல்வராக வந்த ரோசய்யா தொடரவும் ஒத்துழைத்தார். ஆனாலும் ஒய்.எஸ்.ஆர் ஆதரவாளர்கள் ஜெகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோஷம் எழுப்பியவண்ணம் இருந்தனர்.

ஜெகனை மத்திய அமைச்சராக்கும் திட்டத்திற்கு அவரும் கிட்டத்தட்ட தயாரான நிலையில், தலைமை அவரை உதாசீனப்படுத்த ஆரம்பித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘ஒடர்ப்பு யாத்திரை’ என்று மாவட்டம் தோறும் பயணம் ஆரம்பித்தார். ஒய்.எஸ்.ஆர் மறைவையொட்டி மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லத்தான் இந்த யாத்திரை.

ஜெகனுக்கு போகுமிடமெல்லாம் ஆதரவு பெருகுவதை கண்ட காங்கிரஸ் யாத்திரையை தடை செய்தது. ஜெகன் ஆதரவாளர்கள் கொதித்தெழுந்தனர். மோதல் முற்றிற்று. அப்போவும் அவசர முடிவெடுக்காமல் அமைதி காத்தார். தன்னுடைய ஆதரவாளர்கள் வெளியேறினால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும். ஆனால் தந்தையார் அமைத்த ஆட்சியை கவிழ்க்க தனக்கு விருப்பம் இல்லை என்றே அவர் சொன்னார்.

காங்கிரஸ் தலைமையின் காட்டம்

ரோசையா முதல்வராக தொடர்வதற்கு ஆட்சேபம் இல்லாத ஜெகனை வெறுப்பேற்ற, கிரண்குமார் ரெட்டியை முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை. ரெட்டி சமூகத்தில் ஜெகனை தனிமைப்படுத்தி வலுவிழக்க செய்யலாம் என்ற திட்டம் அது.

இதற்கு மேலும் பொறுத்திருந்தால் முதலுக்கே மோசம் என்ற ஆதரவாளர்கள் மேலும் உசுப்பேற்ற காங்கிரஸை விட்டு ஜெகன் வெளியேறினார். மக்கள் பிரச்சனைகளுக்கு உண்ணாவிரதம், நடைபயணம் என்று ஆந்திர அரசியலில் புதிய பாதை போட்டார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உதயாமயிற்று. கடப்பா தொகுதியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார். தாயாரை தந்தையின் தொகுதியில் எம்.எல்.ஏ ஆக்கினார். இது அனுதாப வெற்றி, நிலைத்திருக்காது என்று காங்கிரஸ் கணக்கு போட்டது.

குறுக்கு சால் ஓட்டிய சந்திரபாபு

காங்கிரஸை கவிழ்க்க இதுதான் சரியான தருணம் என்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த்து தெலுங்கு தேசம். கிரண்குமார் ரெட்டியை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெகன் ஆதரவாளார்கள் 18 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆதரித்ததால் ஆட்சி தப்பியது. ஆனால் ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், கட்சி கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால் பதவி இழந்தனர்.

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தது. சுறுசுறுப்பாக தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்த ஜெகனை முடக்கிப்போட ‘சொத்து குவிப்பு’ வழக்கு வந்தது. அது வரை ஒய்.எஸ்.ஆரின் புகழ் பாடிய காங்கிரஸ் தந்தையும் மகனும் பதவியை தவறாக பயன்படுத்தி சொத்து குவித்து விட்டனர் என்ற வழக்கு தொடர்ந்தது.

மீண்டும் தப்பு கணக்கு

வழக்கு போட்டால் ஜெகன் மீது மக்களுக்கு வெறுப்பு வந்து விடும், அவரை தேர்தல் சமயத்தில் முடக்கி போட்டு விட்டால் பதினெட்டு தொகுதியிலும் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போட்டது காங்கிரஸ்.

மகனை ஜெயிலில் தள்ளியதால், பிரசாரத்திற்காக வீதிக்கு வந்தார் அம்மா. கூடவே ஜெகனின் சகோதரியும் இணைந்து கொண்டார். அவர்கள் ஜெகன் கைது செய்யப்பட்டதை முன்னிறுத்தி செய்த பிரச்சாரம் எதிர்பார்த்ததை விட அதிக ஆதரவை பெற்றுத்தந்தது.

18-ல் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார் ஜெகன். கூடவே இன்னொரு எம்.பி தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி. இது மட்டுமல்லாமல் தெலுங்கானா பகுதியின் ஒரு தொகுதியிலும் மிககுறைந்த வாக்கு வித்தியாசத்தில் தெலுங்கானா சமிதியிடம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தோற்றுள்ளது. தனித் தெலிங்கானாவை விரும்பாதவர்கள் ஜெகன் பின்னால் திரளுவதும் தெரிகிறது.

இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்திற்குத்தான் இழப்பு அதிகம். அந்தக் கட்சி முற்றிலுமாக ஒரங்கட்டப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டப் பேரவையில் இப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு பதினாறு எம்.எல்.ஏக்கள், இரண்டு எம்.பிக்கள். அடுத்த முதல்வர் ஜெகன்தான் என்ற முழக்கம் பெரும் ஆர்ப்பரிப்புடன் கேட்க ஆரம்பித்துவிட்டது.

ஆந்திராவில் ஆட்சி மட்டுமல்ல, பாராளுமன்றத்தில் 25 எம்.பிகள் என்ற கணக்கில் இருக்கிறார் ஜெகன்.

காங்கிரஸுக்கு மாநில ஆட்சியை இழக்கும் நிலை மட்டுமல்லாமல் 29 எம்.பிக்களை பெற்று தந்த மாநிலத்திலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு எம்பிகள் எண்ணிக்கை குறைந்து போவதற்கான அறிகுறி அதிகமாகவே தெரிகிறது.

மாநில தலைவர்களை வளர விடாத மேலிடம்

மாநில தலைவர்களை வளர விடுவதில் உடன்பாடு இல்லாத காங்கிரஸ் தலைவர்களால்தான் இந்த நிலை. இந்த விஷயத்தில் இந்திரா காந்தி ஆரம்பித்து வைத்த பாதையிலேயே நரசிம்மராவ், சீதாரம் கேசரி போன்ற நேரு குடும்பம் அல்லாத தலைவர்களும் நடைப் போட்டார்கள். இதில் தப்பித்தவறி ஒய்.எஸ்.ஆர் போன்ற மக்கள் தலைவர்கள் வந்து விடுவது ஆச்சரியம்தான்.

ஜெகன் எக்காரணம் கொண்டும் முக்கியத்துவம் பெற்று விடக்கூடாது என்ற ஒரே காரணத்தினால் செய்த குளறுபடியில், எல்லாம் இழந்து நிற்பது காங்கிரஸ்தான். மத்திய அமைச்சராக ஒரத்தில் ஜெகனுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டு ரோசையாவை முதல்வராக தொடர அனுமதித்திருந்தால் கூட, அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு ஒரளவாவது வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்.

இதில் காங்கிரஸுக்கு என்ன கவுரவப் பிரச்சினை என்பதுதான் புரியவே இல்லை. மாநிலத்தில் மக்கள் செல்வாக்குள்ளவர்களை அரவணைத்துப் போவதை ஆரம்பத்தில் ஒரு உத்தியாகக் கையாண்ட சோனியாவுக்கு இப்போது என்னவாயிற்று?

சும்மா இருந்த ஜெகனை, ஊதி ஊதி பெரிதாக்கி, இப்போது ஆந்திராவின் புதிய ஹீரோவாக்கிவிட்டது காங்கிரஸ் மேலிடம். இதில் இன்னொரு முக்கிய விஷயம்… காங்கிரஸ் மலையாய் நம்பிய சிரஞ்சீவியால் இம்மி அளவு பலன் கூட கிட்டாததுதான்!

சஞ்சலகுடா சிறையில் புன்னகையோடு காங்கிரஸுக்கு ஜெகன் நன்றி சொல்லிக் கொண்டிருக்க,  2014 ல் இன்னுமொரு காரசார அரசியலுக்காக காத்திருக்கிறது ஆந்திரா…

– ஸ்கார்ப்பியன்
3 thoughts on “சும்மா இருந்த ஜெகனை ‘சூப்பர் லீடராக்கிய’ காங்கிரஸ்!

 1. குமரன்

  நூற்றுக்கு நூறு சரி

  சும்மாக் கிடந்த சங்கை ஊதின கதைதான்.

 2. Manoharan

  காங்கிரசுக்கு செல்லுமிடமெல்லாம் ஆப்பு. 2014 ல் காங்கிரஸ் ஒரு பிணம்.

 3. Krishna

  ஒரு தேசிய கட்சிக்கு மாநில தலைவர்கள் வலுவாக இருந்தால் தான் அந்த கட்சியே வலுவாக இருக்கும். நேரு மாநில தலைவர்களை தனக்கு போட்டியாக என்றும் நினைத்ததில்லை. அதனால் தான் காங்கிரஸ் அப்பொழுது வலுவாக இருந்தது. ஆனால் இந்திரா காந்தி வந்தவுடன் என்ன செய்தார்? காமராஜர், நிஜலிங்கப்பா, YB சவான், வசந்த் பாட்டில், சித்தார்த் ஷங்கர் ராய், மொரார்ஜி தேசாய், பிரும்மானந்த ரெட்டி போன்ற வலுவான மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்களை ஓரம் கட்டுவதிலேயே தனது காலத்தை செலவழித்தார். அதனால் காங்கிரஸ் என்பது நேரு குடும்பத்தின் charismaa வை நம்பியே தேர்தல்களை சந்தித்தன. இந்திரா வுக்கு பிறகு ராஜீவுக்கும் ஓரளவு காரிச்மா இருந்ததால் கட்சி ஓரளவு பிழைத்திருந்தது. ஆனால் சோனியாவுக்கோ ராஹுலுக்கோ அது சுத்தமாக இல்லை. அதனால் ஜகன், மம்தா , பிஜு பட்நாயக் போன்றவர்கள் தனி கட்சி தொடங்கி காங்கிரசை அழித்து வருவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *