BREAKING NEWS
Search

எம்எஸ் விஸ்வநாதன்… காலம் தந்த மாபெரும் கலைஞன்!

எம்எஸ் விஸ்வநாதன்… காலம் தந்த மாபெரும் கலைஞன்!

11703214_10153478380893750_3744446626716636993_n

எம் எஸ் விஸ்வநாதன்… திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட மகத்தான இசைக் கலைஞன்… தான் அப்படியொரு மாமேதை என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே!

பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவரில்லை எம்எஸ்வி. நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. சினிமா, அதுவும் பாட்டு என்றால் உயிர்.

ஆனால் சினிமா பார்க்க காசு வேண்டுமே… அருகிலுள்ள தியேட்டருக்கு முறுக்கு விற்கும் பையனாகப் போய், முறுக்கு விற்கிற இடைவெளியில் பாட்டுக் கேட்டு ரசிப்பாராம்.

இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தியவர் இவர்.

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக் குழுவில் எம். எஸ். விஸ்வநாதன் ஆர்மோனியக் கலைஞராகவும், டி. கே. ராமமூர்த்திவயலின் கலைஞராகவும் பணிபுரிந்தனர். உடல் நலகுறைவு காரணமாக, தன்னுடைய முப்பது வயதில் சுப்புராமன் மறைந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து அவரது இசையமைப்பில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களின் இசைப்பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த இவரும் ராமமூர்த்தியும் முடித்துக் கொடுத்தார்கள்.

இதனால் தமிழ், தெலுங்கு தேவதாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான்  எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது. எம்ஜிஆர் இயேசுவாக தோன்றிய படம்.

“வடநாட்டில் சங்கர் – ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது” என்று சொல்லி தன்னுடைய “பணம்’ என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் “ராமமூர்த்தி -விஸ்வநாதன்’ என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.

அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.

இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக ஆயிரம் படங்கள் வரை இசையமைத்துள்ளார்.

இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஸ்வ துளசி என நான்கு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தில்லு முல்லு படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைத்தார்.

11755257_982817581762789_1185465989475175747_n

1951-ல்ஆரம்பித்து 1990 வரை 40 ஆண்டுகள் தமிழ்த் திரை இசை உலகின் முடிசூடா மன்னராக இருந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.

`பாசமலர்’ படத்தில் பாட ஆரம்பித்த இவர், வி.குமார், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களின் இசையில் நூற்றுக்கும் அதிகமான பாடல்கள் பாடி இருக்கிறார்.

`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த இவர் `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக் கோர்ப்பு செய்தவர்

`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடலை 20 நிமிடங்களில் உருவாக்கிய இவருக்கு `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலை உருவாக்க இரண்டு மாதம் ஆனதாம்!

தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு.

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப் படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது எகிப்திய இசையைப் `பட்டத்துராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்.

எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரது இசையில் பாடி இருக்கிறார்கள்!

இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்தியவரும் இவர்தான்.

நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும் `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர்  `காதல் மமன்னன்,’ `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர்.

1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசன் சந்திரபாபு  “சித்ராலயா” கோபு முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில் சிவாஜி கணேசனால் இவருக்கும் இராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.

M+S+Viswanathan+msviswanathan2

எம்எஸ்வியுடன் அதிகப் படங்களில் பணியாற்றியவர்கள் கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி ஆகியோர்தான். அமரர் எம்ஜிஆருக்கும் எம்எஸ்விக்கும் சினிமாவைத் தாண்டிய நல்ல நட்பு இருந்தது.

கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல  விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும் தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை அது இன்றுவரை பெரிய ஏமாற்றம்தான். எத்தனையோ நல் உள்ளங்கள் முயற்சித்தும் மத்திய அரசு பாராமுகமாகவே இருந்துவிட்டது.

இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது  எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம்.

என்வழி
3 thoughts on “எம்எஸ் விஸ்வநாதன்… காலம் தந்த மாபெரும் கலைஞன்!

 1. மிஸ்டர் பாவலன்

  //கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும்///

  பெரும் இழப்பு.. அமரர் எம்.எஸ். வி. மறைவு.

  பல தமிழ்க் கலைஞர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை.

  பாரதிராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திர எத்தனையோ சிறந்த படங்களை
  இயக்கி இருந்தாலும் தேசிய விருது பெற்றார்களா எனத் தெரியவில்லை.
  மகேந்திரன் என ஒரு இயக்குனர் இருக்கிறாரா என்றே பலருக்கும் தெரியலை.
  அதனால் மகேந்திரனுக்கு விருது கிடைத்ததா என்ற கேள்விக்கு இடமில்லை.
  தேசிய விருதுக்கு மாநிலங்கள் தான் பெயர் சிபாரிசு செய்யனுமா எனத்
  தெரியலை. அப்படி இருந்தால் இனி வரும் நாட்களில் ஆவது தமிழகம்
  சிறந்த கலைஞர்களுக்கு உரிய தேசிய அங்கீகாரம் கிடைக்க முயற்சி
  எடுக்கணும்.

  நன்றி!

 2. குமரன்

  எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் உருவான பாடல்கள் காலத்தைக் கடந்து ஆயிரமாண்டுக் காலம் தாண்டியும் கூட அவரது மூச்சுக் காற்றாய் வாழும்.

  அவருக்கு ஜெயலலிதா திரை இசைச் சக்ரவர்த்தி என்ற பட்டத்தை ஆகஸ்ட் 2012 இல் வழங்கினாலும் காலம் கடந்து வழங்கியதால், அது மக்கள் மத்தியில் எடுபடவே இல்லை.

  மற்றபடி, கருணா நிதியும் ஜெயலலிதாவும் விரும்பியவர்களுக்கு மட்டும் பத்ம விருதுகள் வழங்கப் படும் வழக்கம் இருப்பதால் நாகேஷ் எம்.எஸ்.வி போன்றவர்களுக்கு அது கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்குப் பிடித்துவிட்டால் சச்சின் போல 40 வயதிலேயே பாரத ரத்னாவாகி விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கலாம். பாரதரத்னா விருதின் மகிமையைக் குழி தோண்டிப் புதைத்த பெருமை சோனியாவைச் சேரும்.

 3. srikanth1974

  //இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம்.///

  மறுக்க முடியாத உண்மை!
  இறைவனும்,மனிதனும்,
  பயணம் செய்தாலே
  எவரை எவர் வெல்லுவாரோ!
  இவரை எவர் வெல்லுவாரோ?.

  இவர் பாடிய பாடலே பதில் சொல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *