BREAKING NEWS
Search

உண்மையாகவே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

உண்மையாகவே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

cj-sadasivam

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடித் தொடர்பில்லாதவர்கள் என்று தெரிந்தும் 23 ஆண்டுகளாக சிறையில் இன்று நாளை என நாட்களை எண்ணிக் கொண்டிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளதோடு, தமிழக அரசு விரும்பினால் இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.

இதை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நிற்க.. இந்தத் தீர்ப்பு.. நீதித் துறை மீது அது தந்திருக்கும் புதிய நம்பிக்கை வரலாற்றில் பொறிக்க வேண்டியது. தண்டனை ரத்து பெற்றவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல… அவர்கள் தமிழர்களாக இருந்ததாலேயே மறுக்கப்பட்டு வந்த நியாயம் நிலை நிறுத்தப்பட்டதற்காக!

தலைமை நீதிபதி சதாசிவம் ஒரு தமிழர். அதனால்தான் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் தயவு செய்து யாரும் இதனைப் பார்க்க வேண்டாம்.

நீதிபதிகளை கடவுளின் பிரதிநிதிகளாகப் பார்க்கிறது நமது நீதி மரபு. அதனால்தான் மைலார்ட் என விளிக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.

perarivalan-murugan-santhan

அந்தக் கடவுளின் உண்மையான பிரதிநிதிகளாக, மனிதாபிமானமும் கருணையும் மாச்சர்யமற்ற மனசும் கொண்டு ஒரு வழக்கை அணுகும் நீதியரசர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள். நீதிபதி சதாசிவம் அப்படி ஒரு அரிய நீதியரசர்.

இம்மியளவும் பிசகாத துலாக்கோல் அவர் கையிலிருப்பது. நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை நிரூபித்திருக்கிறது, அவரது சமீபத்திய தூக்கு தண்டனை ரத்து தீர்ப்புகளும், அதற்கு அவர் முன் வைத்திருக்கிற காரணங்களும்.

இந்தத் தீர்ப்பை தலைமை நீதிபதி மட்டும் தனித்து வழங்கவில்லை. அவருடன் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோரும் ஒருமித்து இந்தத் தீர்ப்பை வழங்கியதிலிருந்தே, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் பக்கம் நியாயம் இருப்பது புரிந்திருக்கும்.

ராஜீவ் கொலை என்பது நியாயப்படுத்தக் கூடிய விஷயமில்லை. அந்தக் கொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே. ஆனால் உண்மையான குற்றவாளிகள் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு அழுத்தமான குற்றச்சாட்டு இன்னும் உயிரோடு இருக்க, அப்பாவிகளை 23 ஆண்டுகளாக தண்டித்துக் கொண்டிருப்பது எத்தனை பெரிய கொடுமை!

இப்படி ஒரு தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்கள்தான் எத்தனையெத்தனை பேர்…

23 ஆண்டுகளாக தன் மகன் பேரறிவாளனுக்காகவும், அவனோடு சிறையில் வாடும் மேலும் இருவருக்காகவும் நினைத்துப் பார்க்க இயலாத நெஞ்சுரத்தோடு அற்புதம் அம்மாள் போராடினார் என்றால், அவரைவிட ஒருபடி மேலே நின்று தன் உயிரை மாய்த்துக் கொண்டு மூவர் விடுதலைக்காக போராட்ட நெருப்பு மூட்டிய செங்கொடியை என்னவென்பது!

அற்புதம் அம்மாளாவது பெற்ற தாய்… ஆனால் செங்கொடி? எந்தச் சொந்தமும் இல்லை… தமிழினத்தில் பிறந்த பாசக்கொடி என்கிற பந்தத்தைத் தவிர!

vaiko

இந்த தீர்ப்புக்காகப் பாடுபட்டவர்களில் நாம் மறக்கக்கூடாத இருவர் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர். இந்த இருவரும் எத்தனையோ நெருக்கடிக்கிடையிலும் மூவர் தூக்கை ரத்து செய்யப் தொடர்ந்து போராடியவர்கள்.

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை அமர்த்தி இந்த வழக்கை உடைத்த பெருமை வைகோவுக்கு உண்டு. தேவைப்பட்டபோது தானும் வழக்கறிஞர் உடையுடன் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறவில்லை வைகோ. ஓட்டரசியல், தனிப்பட்ட பலன் என எதையும் அவர் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு வந்ததும், அத்தனை தொகுதிகளிலும் வென்ற மகிழ்ச்சிக்கு இணையான சந்தோஷத்தை வைகோ முகத்தில் பார்க்க முடிந்தது. பாராட்டுகள்!

திமுக தலைவர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் உள்பட பல கட்சித் தலைவர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் தங்களால் ஆன முயற்சியைச் செய்திருக்கிறார்கள் இந்த மூவரின் தண்டனையையும் குறைக்க.

jayalalitha

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருபடி மேலே போய், கடந்த 2011, ஆகஸ்ட் 30-ம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த மூவரின் தூக்கையும் ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரியது மறக்க முடியாதது.

இனி இவர்களை விடுதலை செய்யும் மனிதாபிமானமிக்க முடிவை எடுக்க வேண்டியவர் முதல்வர் ஜெயலலிதாதான். இதை அவர் உளப்பூர்வமாக மேற்கொள்வாரா தெரியவில்லை. ஆனால் இத்தனை கோடி மக்களின் இதயவிருப்பம் அதுவே என்பதைப் புரிந்து, விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொண்டால், ‘அம்மா’ என்பதற்கான அங்கீகாரத்தை தமிழக மக்கள் தயக்கமின்றி அவருக்குத் தருவார்கள்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “உண்மையாகவே இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!

 1. endhiraa

  “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடித் தொடர்பில்லாதவர்கள் என்று தெரிந்தும்” –

  நேரடி இல்லை என்றாலும் குற்றம் குற்றமே ! இது ஒரு அரசியல் லாபத்துக்காக எடுக்கப்பட்ட முடிவே தவிர, வேறு ஒன்றும் இல்லை. அம்மா புகழ் பாடுவதில் எந்த லாபமும் இல்லை.

  பாபு

 2. kumaran

  தூக்கு தண்டனை ரத்து மகிழ்ச்சி , ஆனால் விடுதலை ஏற்க முடியாதது.

 3. குமரன்

  inthath தீர்ப்பு வரவேற்கப் பட வேடியது என்பதில் எனக்கு உடன்பாடே. ஆனால் சதாசிவம் தமது கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிக்காக என்னவெல்லாம் செய்வார் என்பதை விவரமாக சவுக்கு தளம் எழுதி இருப்பதை படியுங்கள். இந்தத் தீர்ப்பைக் கொடுத்ததால் மட்டுமே அவர் பாரபட்சம் அற்றவர் என்று சொல்லி விட முடியாது.

 4. குமரன்

  kumaran அவர்களே, சிறையில் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கும் பின்னால், அதுவும் விடுதலைப் புலிகளை முழுவதுமாகக் கொன்று குவித்த பின்னால் என்பதைப் பார்க்கும்போது விடுதலை என்பது தவறே அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *