BREAKING NEWS
Search

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நடந்த முதல் உரிமைப் போராட்டம்.. தமிழர் மீது ராணுவம் தாக்குதல்!

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நடந்த முதல் உரிமைப் போராட்டம்.. தமிழர் மீது ராணுவம் தாக்குதல்!

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர் நிலங்கள், வீடுகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து வருவதைக் கண்டித்து, தமிழர்கள் போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது சிங்கள ராணுவத்தினர் தாக்குதல் நடத்திவிட்டு, ஓடினர்.

யாழ். தெல்லிப்பளையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவை சேனாதிராஜா எம்பி தலைமை வகித்தார்.

வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு, வலிகாமம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை போன்றவற்றுக்கு எதிராக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக செவ்வாய்க்கிழமை காலை இந்த அமைதிப் போராட்டம் நடந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்குப் போலிசார் கடும் எதிர்ப்பும், தடையும் விதித்திருந்த நிலையிலும் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி ஆகியவை கலந்துகொண்டன.

காலை 10 மணியளவில் துர்க்கையம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான போராட்டம், பிரதான வீதியை அடைந்தபோது ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். கலவரத்தை அடக்கும் போலிசார் பெருமளவுக்கு ஆயுதபாணிகளாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். தடிகளும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தின் இறுதியில் அருகேயுள்ள உதவி அரசு பிரதிநிதி அலுவலகத்துக்கு மனு சமர்ப்பிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.

இதனைடுத்து பாராளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான, செ.கஜேந்திரன், எம்,கே.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் போலிசாருடன் கடுமையாக வாதாடினர்.

மக்கள் அப்படியே வீதியில் அமர்ந்திருக்க, மாவை சேனாதிராசா, கஜேந்திரன், சிவாஜிலிங்கம், மற்றும் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 5பேர் சென்று பிரதேச செயலகத்தில் மக்களின் மனுவை அளித்தனர்.

பின்னர் சிறு சிறு குழுவாகச் சென்று மனுக்களைக் கொடுத்தனர்.

கல்வீசி, அழுக்கு ஆயிலை ஊற்றி தாக்குதல்…

அதன் பின்னர் பொதுமக்கள் பஸ்களில் திரும்பிச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் ஆயுதம் தாங்கி வந்த சிங்கள படையினர் பஸ்களை மறித்து தாக்குதலை நடத்தியதுடன், அவர்கள் மீது பழைய அழுக்கு ஆயிலை ஊற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வழிமறித்த படைப் புலனாய்வாளர்கள், பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர்.

எனினும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டியதால், பேருந்தின் மீது கழிவு ஆயிலை ஊற்றி, இனிமேல் போராட்டம் என்று வந்தால் இதைவிடவும் மோசமாக நடக்கும் என எச்சரித்துவிட்டு ஓடியுள்ளனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் துயரங்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இலங்கை தமிழர் பகுதியில் நடந்துள்ள முதல் அறப்போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்
4 thoughts on “முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் நடந்த முதல் உரிமைப் போராட்டம்.. தமிழர் மீது ராணுவம் தாக்குதல்!

 1. karthik

  வெகு நாள் பிறகு சற்றே ஆறுதலான செய்தி.. அங்கே தமிழ் மக்கள் இன்னும் உயருப்புடன் உள்ளனர் என்பதற்கு ஒரு சாட்சி..

 2. குமரன்

  மீண்டும் போராட்டங்கள் ஆரம்பம் என்பது மனதுக்கு ஆறுதல் தருகிறது.
  முழுமையான உரிமைகள் கிடைக்க வழி ஏற்படும் என நம்புவோம்.

 3. Natesan

  தருமத்தின் வாழ்வு தனை
  சூது கவ்வும்
  தருமம் மறுபடியும் வெல்லும்!!!

 4. JB

  “தொல்லிப்பழையில்”

  அது தொல்லிப்பழை இல்லை. தெல்லிப்பளை. நான் பிறந்த ஊர் அது.
  _________
  நன்றி. முதலில் தெல்லிப்பளை என்றே எழுதியிருந்தோம். இன்னொரு நண்பர் போன் செய்து, ஒரு பிரபல இணையதளத்தில் வெளியான இதுகுறித்து செய்தியைக் காட்டி, அது தெல்லிப்பழை என்றார். அதன் விளைவு இது.

  -வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *