BREAKING NEWS
Search

பாஜக கவிழ ‘ஒளிருது இந்தியா’… காங்கிரஸைக் கவிழ்க்க ‘சிதம்பர கொள்கை’?

பாஜக கவிழ ‘ஒளிருது இந்தியா’… காங்கிரஸைக் கவிழ்க்க ‘சிதம்பர கொள்கை’?

ப.சிதம்பரம் மீண்டும் மத்திய நிதியமைச்சராகப் போவது நிச்சயம்தான் போலிருக்கிறது. அவரது பேச்சுக்களும் அப்படித்தான் உள்ளன. ஆனால் இதே மாதிரி அவர் பேச ஆரம்பித்தால்,  மக்கள் பஞ்சத்தில் கிடந்தபோது ‘ஒளிருது இந்தியா’ என்று வெறுப்பேற்றியவர்களுக்கு நேர்ந்த கதிதான் காங்கிரஸுக்கும்!

வழக்கமாகவே ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு வருமான வரி கட்டுவோரை, குறிப்பாக சம்பளதாரர்களைப் பிழிந்து எடுப்பது ப.சிதம்பரத்தின் வழக்கம். அதாவது வரி கட்டுவோரை இன்னும் அதிகமாகக் கட்ட வைத்து அதை எடுத்து ஏழைகள் நலனுக்காக செலவிடுவது அவரது ஸ்டைல்.

இதனால் தான் இதுவரை இல்லாத FBT (fringe benefit tax) போன்றவற்றையெல்லாம் கண்டுபிடித்து (ஒரு அலுவலகத்தில் கேண்டீன் இருந்து, அதில் கம்மி விலைக்கு காபி விற்பதால் ஏற்படும் நஷ்டத்துக்குக் கூட அந்த நிறுவனம் வரி கட்ட வேண்டும்) அமலாக்கினார்.

இந் நிலையில் அவரே மீண்டும் நிதியமைச்சராகப் போகிறார் என்கிறார்கள்.

இதற்கிடையே நேற்று பெங்களூர் வந்த அவர் மத்திய அரசு விவகாரங்கள், பொருளாதாரம் தொடர்பான நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சிதம்பரம் கூறியதாவது:

“விலைவாசி ஏறிவிட்டது, விலைவாசி ஏறிவிட்டது என்று நடுத்தர வர்க்கத்தினர் புலம்புவது சரியல்ல. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் ஒரு பாட்டில் மினரல் வாட்டரை ரூ. 15 கொடுத்து வாங்குகின்றனர். அவர்களால் ஐஸ்க்ரீமை ரூ. 15 கொடுத்து வாங்க முடிகிறது. இந் நிலையில் விலைவாசி ஏறிவிட்டதாக கூப்பாடு போடுவது ஏன்?

ஏழை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் அரிசி, கோதுமை, கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தியுள்ளோம். இதனால் தான் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஆகையால், விலைவாசி உயர்வு என்பது மறைமுகமாக விவசாயிகளுக்கு பலனளித்துள்ளது என்பதே உண்மை.

பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டோம் என்கிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் விலையை ஏற்றாமல் இருக்க முடியுமா?. அதே நேரத்தில் சமீபத்தில் கூட 2 முறை பெட்ரோல் விலையைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைத்துள்ளோம்.

ஏழை விவசாயிகளுக்கு உதவுவதால், விலைவாசி உயர்ந்துவிட்டது என்று இனியும் புகார் சொல்லக் கூடாது.

பொருளாதாரத்தை பலப்படுத்த சில கடும் நடவடிக்கைகள் தேவை. முதலில் வெட்டிச் செலவுகளை குறைக்க வேண்டும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும் (அதுக்கும் வரி போடுவீங்களே…).

அதே போல சேமிப்புகளும் முதலீடுகளும் தொழில்களுக்கும் நிறுவனங்களுக்கும் போக வேண்டும். பணம் தங்கம் போன்றவற்றில் முடங்குவதை தடுக்க வேண்டும். எரிபொருள், நிலக்கரி, இரும்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

சேமிப்பு, முதலீடுதள், நிதிப் பற்றாக்குறையை குறைப்பது, நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பது. இவை தான் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் 4 முக்கிய விஷயங்கள். இதை செய்ய ஆரம்பித்துவிட்டோம். மீண்டும் விரைவிலேயே வளர்ச்சிப் பாதையை எட்டுவோம்” என்றார்.

ஐஸ்க்ரீம், மினரல் வாட்டர் சகிதமாகத்தான் பெரும்பான்மையான மக்கள் நடமாடுவதாக சிதம்பரத்துக்கு நினைப்பு. ஐஸ்க்ரீம் என்பது அன்றாட உணவுப் பொருள் அல்ல. என்றோ ஒருநாள்.. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி சாப்பிடுவது.

பாட்டில் தண்ணீர் வாங்கவேண்டிய கேவலத்துக்காக அரசுகள்தான் வெட்கப் பட வேண்டும். நாட்டின் நீர்நிலைகளை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு தாரை வார்த்த குற்றவாளிகள் இந்த மத்திய மாநில அரசுகளே. காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல் இந்த குற்றத்தைச் செய்தார்கள்.

அரிசி விலையும் ஐஸ்க்ரீம் விலையும் ஒன்றாகிவிடுமா…

நானா… அப்படிப் பேசவே இல்லையே – சிதம்பரம்

இந் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரை காயப்படுத்தும் வகையில் தான் பேசவில்லை என்றும், தனது கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று சிதம்பரம் சார்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனது பேட்டி என்ற பெயரில் வெளியான செய்தி குறித்து சிதம்பரம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிதம்பரம் பேசியதன் வீடியோவை வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா.

-என்வழி செய்திகள்
7 thoughts on “பாஜக கவிழ ‘ஒளிருது இந்தியா’… காங்கிரஸைக் கவிழ்க்க ‘சிதம்பர கொள்கை’?

 1. குமரன்

  ///பாட்டில் தண்ணீர் வாங்கவேண்டிய கேவலத்துக்காக அரசுகள்தான் வெட்கப் பட வேண்டும்.///

  ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இன்னும் பல ஆசிய நாடுகளிலும், பொது விநியோகக் குழியைத் திறந்து அதை அப்படியே குடிக்கலாம். டைபாயிடு, பாரா-டைபாயிடு, காலரா, வாந்தி, வயிற்றுப் போக்கு வராது. இங்கோ குழாயில் சாக்கடை நீரே வருகிறது.

  சென்னையில் சிதம்பரம் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே கூவத்தில் சாக்கடை நீர் அவர் மகன் கார்த்தி.ப.சிதம்பரம் பிறப்பதற்கு முன்னாலிருந்தே ஓடுகிறது.

  அவர் வீட்டில் இருந்து நூறடி தூரத்தில் இருந்த மலை நீர் ஓடையை மண்ணை நிரப்பி அதில் பூங்கா அமைத்திருக்கிறார்கள். இதை முன்னின்று இவரும் இவரது குடும்பமுமே ஏற்பாடு செய்தார்கள், ஏனெனில் அதுவும் சாக்கடை ஆகக் கூடாது என்று.

  இவரெல்லாம் மினரல் வாட்டர் கம்பெனியை ஆதரித்ததால்தானே அதிலும் வெளிநாட்டுக் கம்பெனிகள் கொடி கட்டிப் பறக்கிறார்கள். உள்நாட்டவர்களோ பாக்கெட் வியாபாரமே செய்கிறார்கள்.

 2. குமரன்

  வினோ, நான் நகலெடுத்து ஒட்டுவதற்கு பொறுக்கவும். நெல்லும் அரிசியும் நமது உயிர்நாடி என்பதால் எத்தனை பக்கம் என்றாலும் பரவாயில்லை.

  நிலைமை இப்படி இருக்க மத்திய அமைச்சர் சிதம்பரம் அமைச்சரவையில் நான்காம் இடத்தில் இருப்பவர் மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல் “செட்டிநாட்டுச் சீமானாகவே” பேசுகிறார்.

  அரசு செய்யவேண்டியதைச் செய்யாமல் யார் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார், யார் மினரல் வாட்டர் குடிக்கிறார் என்று பார்ப்பதா வேலை? (நான் ஐஸ் கிரீம் சாப்பிடுவதில்லை, மினரல் வாட்டரும் குடிப்பதில்லை. குழாய் நீர் காய்ச்சித்தான் குடிக்கிறேன்.)

  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=505688

  ///தமிழகத்தில், நெல் அதிக அளவில் விளையும் தஞ்சாவூர், ஆவுடையார் கோவில், செஞ்சி, சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, செங்குன்றம். காஞ்சிபுரம், மன்னார்குடி ஆகிய இடங்களில், எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இந்த பகுதிகளில் இருந்து, அரிசி ஆலைகளுக்கு விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த நெல்லின் வரத்து, 10 சதவீதமாக குறைந்து விட்டது.///

  ///அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து, பிற மாநிலங்களுக்கு நெல், அரிசி எடுத்துச் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டு விட்டது. இதனால், கர்நாடகா மாநில நெல்லை மட்டுமே, தமிழக அரிசி ஆலைகள் நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ////

  ///தமிழகத்தில், கடந்த மாதம் வரை இயங்கி வந்த, 7,400 அரிசி ஆலைகளில், 3,000 அரிசி ஆலைகள் இயங்க முடியாமல் தங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தி உள்ளன. மீதமுள்ள ஆலைகளும், 50 சதவீத அளவுக்கே உற்பத்தி செய்து வருகின்றன. இதனால், “மார்க்கெட்டில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்’ எனும் அச்சம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நெல் விலை, கிலோவுக்கு, ஆறு ரூபாய் முதல், எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அரிசி விலை, கிலோவுக்கு குறைந்த பட்சம், 10 ரூபாய் உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால், வியாபாரிகள் அரிசி விலையை, கடந்த வாரம் கிலோவுக்கு, மூன்று ரூபாய் வரை மட்டுமே உயர்த்தினர். ///

  ///இந்த விலையானது, இன்னும் சில தினங்களில் கிலோவுக்கு, மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழக அரிசி ஆலைகளில், 15 நாள் உற்பத்திக்கு தேவையான நெல்லும், அரிசி கடைகளில், 45 நாள் விற்பனைக்கு தேவையான அரிசியும் மட்டுமே இருப்பு உள்ளது. தமிழகத்தில், நெல்லுக்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது.///

 3. qad

  Thennagathu pandian nukku eppadi ippadi ellam pesa manasu varuthu.. Makkal evalo kasta paduranganu theriyatha sir.

 4. enkaruthu

  //ஐஸ்க்ரீம், மினரல் வாட்டர் சகிதமாகத்தான் பெரும்பான்மையான மக்கள் நடமாடுவதாக சிதம்பரத்துக்கு நினைப்பு. ஐஸ்க்ரீம் என்பது அன்றாட உணவுப் பொருள் அல்ல. என்றோ ஒருநாள்.. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி சாப்பிடுவது.//

  சரியான பதிலடி.சிதம்பரம் சார் நாங்கள் என்ன தினமும் ஐஸ் க்ரீமும் ,மினரல் வாட்டருமா குடிக்கிறோம் .இல்லை அந்த பொருள் எங்களை போல நடுதரவர்க்கதிர்க்கு இலவசமாக கிடைகிறதா .உங்களை போல அரசியல்வாதிகள் வேண்டுமானாலும் மினரல் வாட்டரை குளிக்க பயன்படுத்துவீர்கள் அந்த மினரல் வாட்டர் கம்பெனிக்கு பணம் கொடுக்காமல்.இந்த மினரல் வாட்டரும் ஐஸ் கிரீமுமா ஒரு நாட்டின் பொருளாதரத்தை தீர்மானிக்கும்.வெட்க கேடு.

 5. தினகர்

  /// தமிழகத்தில், நெல்லுக்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது.///

  மழை இல்லே.. அணைத்தண்ணீரை எல்லாம் கரண்டுக்காக திறந்து விட்டாச்சு.. அப்புறம் நெல் எங்கே வானத்திலே இருந்து கொட்டுமா?

  இந்த நிலையிலும் தொடர்ந்து நெல் விவசாயம் செய்து கணக்கு பார்த்தால் கையை கடிக்கிறது. விவசாயி நஷ்டமடைந்து ஊருக்க்கா விளைவிக்க வேண்டும் என்று தலையெழுத்து இருக்கிறதா என்ன? பக்கத்து வீட்டில் மில்லுக்கு கூலி வேலை செய்ய போகுபவர் விவசாயியை விட நிம்மதியாக இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் ?

  விவசாயிகள் நலம் தொடர்ந்து புறக்கணிக்ப்பட்டு வந்தால் நிலை இன்னும் விபரீதம் ஆகும்..

 6. தினகர்

  நடுத்தரவர்க்கம் தனக்கு மேலே உள்ள மேல்த்தட்டு மக்களை மட்டுமே பார்க்காமல், கீழே உள்ள் ஏழை விவசாயிகளையும் பார்க்கவேண்டும். சோறு கொடுப்பவன் விவசாயிதான். அவன் வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டும் . அது நடுத்தர வர்க்கத்தின் கையில் தான் இருக்கிறது.

  நடுத்தரவர்க்கம் எந்த வகையில் செலவு செய்கிறது என்பதில் தான் நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது.. விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு ஆதரவு கொடுங்கள்.. விவசாயி பிழைப்பான். விவசாயம் பிழைக்கும்.. உணவும் கிடைக்கும்..

 7. mariappan S

  முதலில் வெட்டிச் செலவுகளை குறைக்க வேண்டும். – உலகமாக தத்துவம் டா சாமி. சோனியாவின் கைபொம்மை ஓவரா பேசி வாங்கி கட்டுது. மக்களுக்கு குடிநீரை கூட இலவசமாய் கொடுக்க வக்கில்லாத மத்திய மாநில அரசுகள் mnc கம்பனிகளுக்கு வரிசலுகை , நிதியுதவி உள்ளிட்ட எல்லா வசதியும் செய்து தருது. செட்டிநாடு ஏரியாவில் ATM
  திறக்க மத்திய மந்திரி வருவதை குறைத்தாலே எவ்வளவோ செலவு குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *