BREAKING NEWS
Search

ஒரு பந்து…5 ரன்கள்… பிராவோ சிக்ஸ் – சென்னை அதிரடி வெற்றி!

பிராவோ சூப்பர் சிக்ஸர் மூலம் வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

கொல்கத்தா: சென்னையின் வெற்றியாட்டம் தொடர்கிறது. திங்கள் கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் பிராவோ அடித்த சிக்ஸர் மூலம் பரபரப்பான வெற்றியைப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோற்று வந்த சென்னை அணி பெறும் மூன்றாவது தொடர் வெற்றி இது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்த ஆட்டம் நடந்தது. கொல்கத்தா அணிக்கு லோக்கல் ரசிகர்கள் ஆதரவு அமோகமாக உள்ள நிலையில் சென்னை அணியின் வெற்றி குறித்து பலத்த சந்தேகம் இருந்தது பலருக்கும்.

டாஸ் வென்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பீல்டிங் செய்ய களமிறங்க, கொல்கத்தா அணி பேட் செய்தது.

துவக்க வீரர்களான கேப்டன் கம்பிர், மெக்கல்லம் ஜோடி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். மெக்கல்லம் 29 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 37 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பிறகு அதிரடியாக ஆடிய கேப்டன் கம்பிர் அரைசதம் கடந்தார். 43 பந்துகளில் 3 சிக்ஸ் 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் அடித்த கம்பிர், ஜாக்டி பந்தில் போல்டானார்.

அதன்பிறகு வந்த காலிஸ் 4 ரன்களில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். யூசுப் பதான் 1 சிக்ஸ் அடித்து பிராவேவிடம் கேட்ச் கொடுத்தார் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மனோஜ் திவாரி 11 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். லட்சுமி சுக்லாவும் 9 ரன்களில் ஏமாற்றினார். கடைசி ஓவர்களில் தாஸ் அதிரடியாக 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளை அடித்தார்.

20 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 158 ரன்களை குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் ஜாக்டி சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

159 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு சுமாரான இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் முரளி விஜய், மைக்கேல் ஹஸ்ஸி ஜோடி நல்ல துவக்கத்தைத் தந்தனர். ஹஸ்ஸி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார்.  56 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரேன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து 36 ரன்களில் போல்டானார்.

சுரேஷ் ரெய்னா 8 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பிறகு டுபிளசிஸுடன், கேப்டன் டோனி இணைந்தார்.  முதல் நான்கு பந்தை தடுமாற்றத்தடன் எதிர்கொண்டார் டோனி.

டு பிளசிஸ் 13 ரன்களில் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உடனே அதிரடிக்கு மாறிய டோனி 1 சிக்ஸ், 3 பவுணடரிகள் அடித்து 26 ரன்களை சேர்த்தார். கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 9 ரன்களை தேவைப்பட்டது. டோனி இருக்கிறார் கவலையில்லை என்று சொல்லி வாய்மூடும் முன் 28 ரன்கள் எடுத்த நிலையில் டோனி போல்டானார்!

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் பிராவோ… கொஞ்சமும் அலட்டாமல், பந்தை ஓங்கி விளாச, அது வானத்தை நோக்கிப் பறந்தது. கேட்ச்சாகி விடாமல் இருக்க வேண்டுமே என பார்த்துக் கொண்டிருந்தபோதே… அது எல்லைக் கோட்டை தாண்டி விழுந்து சிக்ஸ் ஆனது!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது!

சுருக்கமான ஸ்கோர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 158 / 6

கவுதம் கம்பிர் 63, மெக்கல்லம் 37

சென்னை சூப்பர் கிங்ஸ் 160 / 5

ஹஸ்ஸி 56, முரளி விஜய் 36

5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு அதிர்ச்சி தோல்வி!

பெங்களூர்: திங்கள்கிழமை நடந்த முதல் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் முதல் ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தனது ரன் கணக்கை துவக்கினார். ஆனால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முனாப் பட்டேலின் பந்தில் போல்டானார். அடுத்து வந்த விராத் கோஹ்லி 3 ரன்களில் ரன் அவுட்டானார்.

2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததைத் தொடர்ந்து, அடுத்து வந்த சுபராப் திவாரி 2 சிக்ஸ்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அவரது ஆட்டம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 16 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி அடித்த திவாரி 21 ரன்களில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார். மிடில் ஆடரில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டிவில்லியர்ஸ் 14 ரன்களில் மலிங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விக்கெட்கள் ஒருபுறம் சரிந்து கொண்டே இருக்க துவக்க வீரர் தில்ஷன் மட்டும் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 47 ரன்களை எட்டிய தில்ஷன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டு போல்டானார்.

தில்ஷனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த அகர்வால், கடைசிக் கட்டத்தில் அதிரடிக்கு மாறினார். முனாப் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 24 ரன்களை சேர்த்த அகர்வால் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த அகர்வால் 30 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரிகள் அடித்து 64 ரன்களை குவித்தார்.

நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்களை இழந்து 171 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் முனாப் பட்டேல் 4 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 54 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

172 ரன்களை எடுத்தால் வெற்றிப் பெறலாம் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்கத்திலேயே சச்சின் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்த ஓவரிலேயே மற்றொரு துவக்க வீரரான கிப்ஸ் 2 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பிறகு வந்த ரோஹித் சர்மா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரியை அடித்து 5 ரன்களை எடுத்து வினய் குமாரின் பந்தில் அவரிடமே கேட்ச கொடுத்து வெளியேறினார்.

அதன்பிறகு சற்றுநேரம் நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் 16 ரன்கள் எடுத்து ஹர்ஷல் பட்டேல் பந்தில் போல்டானார்.

ஸ்மித் 6 ரன்களில் ஏமாற்றினார். 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி, வெற்றி இலக்கை எட்ட தடுமாறியது. 11.1 ஓவர்களின் போது மைதானத்தின் விளக்குகளில் தானாக அணைந்துவிட்டன. இதனால் 15 நிமிடங்கள் போட்டி தடைப்பட்டது. அணியின் பரிதாப நிலையை மாற்ற ராயுடு, போல்லார்டு ஜோடி போராடியது.

துவக்கத்தில் பொறுமையாக ஆடி வந்த ராயுடு 40 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பிறகு போல்லார்டுடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார்.

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ராயுடு ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் போல்லார்டு சிக்ஸ் அடித்தார். அதன்பிறகு 2 பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து ராயுடு 54 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 81 ரன்களை குவித்தார். போல்லார்டு 31 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் அடித்து 52 ரன்களை குவித்தார். கடைசியில் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்களை இழந்து 173 ரன்களை எடுத்தது.  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

சுருக்கமான ஸ்கோர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 171 / 6
அகர்வால் 64, தில்ஷன் 47

மும்பை இந்தியன்ஸ் 173 / 5
ராயுடு 81, போல்லார்டு 52

5 விக்கெட்டுகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

செவ்வாய்க்கிழமை போட்டி

மே 15, இரவு 8 மணி, டெல்லி டேர்டெவில்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், வான்கடே ஸ்டேடியம், மும்பை

-என்வழி கிரிக்கெட்




2 thoughts on “ஒரு பந்து…5 ரன்கள்… பிராவோ சிக்ஸ் – சென்னை அதிரடி வெற்றி!

  1. குமரன்

    எனக்கு ஒரு சந்தேகம்…

    கிரிக்கெட்டுல ரஞ்சி ட்ராபி என்று தேசிய அளவில் போட்டி நடக்குமே ….

    அந்த ரஞ்சி ற்றாபியை ஆரம்பித்தது யார்?

    நித்தியானந்தாவா இருக்குமோ?

  2. ஜனா

    சென்னையின் வெற்றியாட்டமா? வெறியாட்டமா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *