தலைப்புக்காக குடுமிபிடி சண்டை – லேட்டஸ்ட் வரவு சுந்தரபாண்டியன்!
தமிழ் சினிமாவில் தலைப்பு சண்டை, எப்போதும் இல்லாத அளவுக்கு குடுமிபிடி சண்டையாக மாறிவிட்டது.
இந்த சண்டையில் லேட்டஸ்ட் வரவு சசிகுமார் நடித்து, இந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகவிருக்கும் சுந்தரபாண்டியன்!
சசிகுமார் ஹீரோவாக நடித்து, தனது கம்பெனி புரொடக்ஷன் சார்பில் தயாரிக்க, அவரது சிஷ்யர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கியுள்ள படம் சுந்தரபாண்டியன்.
ஆனால் இதற்கு முன்பே இதே தலைப்பில் ஒரு படம் உருவானது. அந்தப் படத்தின் ஹீரோ கார்த்திக். அவர் மார்க்கெட்டில் பிஸியாக இருந்த போது, ஆர் ரகு இயக்க, தேவா இசையில் உருவான படம் அது. வடிவேலு, மணிவண்ணன் நடித்துள்ளனர். ஹீரோயின் ஹீரா.. இதிலிருந்தே அது எத்தனை பழைய படம் என்பது புரியும்.
சசிகுமாரின் சுந்தரபாண்டியன் ரிலீசுக்குத் தயாராக, அந்த நேரம் பார்த்து இத்தனை நாள் பெட்டிக்குள் கிடந்த பழைய சுந்தரபாண்டினை தூசு தட்டி வெளியிட ஆயத்தமானார்கள். விளம்பரத்தையும் வெளியிட குழப்பம் ஆரம்பித்தது.
இதுகுறித்து சசிகுமாரிடம் சுந்தரபாண்டியன் பிரஸ்மீட்டில் கேட்டபோது, “இந்தத் தலைப்பை வைக்க எங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது. நாங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முன்பு இந்தப் பெயரில் படம் உருவானதும் எங்களுக்குத் தெரியாது,” என்றார்.
இப்போது, கார்த்திக் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் தயாரிப்பாளர்களான் ஜூபிடர் பிலிம் மேக்கர்ஸ், சசிகுமார் படத்துக்கு எதிராக வழக்குப் போட, நீதி மன்றம் புதிய சுந்தரபாண்டியனுக்கு தடைவிதித்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை சசிகுமாரின் படம் வெளியாகவிருப்பதாக விளம்பரங்கள் வந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு வந்துள்ளது.
-என்வழி சினிமா செய்திகள்