BREAKING NEWS
Search

கொள்ளையர் தலைவன் உருவானது எஸ்ஆர்எம் கல்லூரியில்…!

கொள்ளையர் தலைவன் உருவானது எஸ்ஆர்எம் கல்லூரியில்…!


சென்னை: சென்னை வங்கிக் கொள்ளைகளுக்கு மூல காரணமாக, தலைவனாக செயல்பட்டு தற்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவன்,  சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்தவன் என்பது தெரிய வந்துள்ளது.

இதே கல்லூரியில் அவனுடன் படித்த சில மாணவர்களுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இந்த ஹைடெக் கொள்ளையனைப் பற்றிய தகவல் போலீஸாருக்கு தற்செயலாகத்தான் கிடைத்தது. கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் துப்பு துலங்குவது பெரும் சிக்கலாக இருந்தது. இந்த நேரத்தில்தான் போலீஸாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. இரு வங்கிகளிலும் ஒரே மாதிரியாக கொள்ளை நடந்திருப்பதால் நிச்சயம் நோட்டம் பார்த்துதான் இந்தக் கொள்ளையில் திருடர்கள் இறங்கியிருப்பார்கள் என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்.

இதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட புறநகர்ப் பகுதி வங்கிகளை அணுகி அங்குள்ள கேமராக்களில் பதிவான நபர்களைப் பார்த்தனர்.  வாடிக்கையாளர் யார்… நோட்டமிட்டு திரும்புபவர் யார் என்று அதில்தான் போலீசாருக்கு தெளிவு பிறந்தது.

பின்னர் அந்தக் காட்சிளை சம்பந்தப்பட்ட இரு வங்கிகளின் ஊழியர்களிடமும் காட்டினர். அதில் யாரையாவது அடையாளம் தெரிகிறதா என்று கேட்டபோது ஒரு நபரை வங்கி ஊழியர்கள் சுட்டிக் காட்டினர். இவன்தான் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்குத் தலைவன் போல வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்று அத்தனை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக கூறினர்.

இதையடுத்து கொள்ளைக் கும்பலின் தலைவனாக அவனை அடையாளப்படுத்திய  போலீஸார் அவன் குறித்த தகவலை சேகரித்தபோது அவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்தது தெரிய வந்தது.

இதையடுத்து கல்லூரிக்கு ஒரு தனிப்படை விரைந்து வந்தது. அந்த நபர் குறித்த தகவலை திரட்டினர். அதில் 9 ஆண்டுகளுக்கு முன்பு அவன் கொடுத்த புகைப்படத்தைப் பெற்று, அதை வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்துடன் ஒப்பிட்டபோது இரண்டு படங்களிலும் இருப்பவன் ஒருவனே என்பது தெரிய வந்தது.

இந்த முன்னாள் மாணவன் படிப்பை முடித்ததும் தனது சொந்த ஊருக்குப் போகவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கியிருந்து, தனக்கென ஒரு நெட்வொர்க் அமைத்திருக்கிறான்.

அதுமட்டுமல்ல, தான் படித்த கல்லூரிக்கே மாணவர்களைப் பிடித்துத் தரும்  புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளான். அதாவது தங்களது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை இந்தக் கல்லூரியில் சேர்த்து விட்டால் அதற்கு புரோக்கர் கமிஷனாக கல்லூரி நிர்வாகம் இவனுக்கு கணிசமாக பணம் கொடுக்குமாம். இந்த வேலையை இவன் செய்து வந்துள்ளான். அனைத்து தனியார் கல்லூரிகளிலும் நடக்கும் தரகு வியாபாரம் இது (பார்க்க: தனி கட்டுரை)

இந்த நிலையில்தான் அவன் தனது மாநிலத்தைச் சேர்ந்த சிலரையும் இங்கு வரவழைத்து வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட கொள்ளையர்களின் டைரியில் ஏகப்பட்ட முகவரிகள். இவர்களில் சிலர் கல்லூரிக்கு தொடர்புடையவர்களாம்.

கல்லூரிக்கு புரோக்கர் வேலை பார்த்ததன் மூலம் மிகப் பெரிய அளவில் பணம் கிடைத்ததால் இங்கேயே தங்கி வேறு வேலை பார்க்காமல் புரோக்கராகவே மாறிப் போயிருந்தான். தற்போது வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸாரின் புல்லட்டுகளுக்கு இரையாகி விட்டான்.

இவனது வீடியோவை வெளியிட்டு, துப்பு கொடுத்தால் ரூ 1 லட்சம் பரிசு என்று போலீசார் நேற்று அறிவித்த 10 மணி நேரத்துக்குள் கொள்ளையர்களை போட்டுத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

-என்வழி செய்திகள்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *