BREAKING NEWS
Search

ஒரு கிராமம் கெடக்கு…!

ஒரு கிராமம் கெடக்கு…!

gouravam_1

ப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊருக்கு பக்கத்து கிராமம். அப்போது ரொம்ப வசதியானவர்கள் வசித்த ஊர். எல்லாருக்குள்ளும் சாதிதான் பிரதான உணர்வாய் இருந்தது என்றாலும், அது கோரமாக வெளிப்பட்டதை அப்போதுதான் முதல் முறை பார்த்தேன்.

அது கோடைகாலம். பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து சைக்கிளில் அந்த கோடீஸ்வரர் வீட்டைக் கடந்தபோது, வீட்டுக்குள் பெரும் சத்தம். மரணக் கூக்குரல். கூட்டம் மெல்லக் கூட ஆரம்பித்தபோது, எனக்கு நன்கு தெரிந்த அந்த நபர் ஒரு கையில் அரிவாளுடனும் மறுகையில் ஒரு பெண்ணின் தலையுடனும் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியில் வந்தான். அந்தப் பெண்… அவன் தங்கை. மகா அழகி.

நான் சைக்கிளிலிருந்து தடுமாறி விழுந்தேன். பயம், அருவருப்பு என அந்த உணர்வை விவரிக்க முடியாது.

ஆனால் ஊர் மொத்தமும் பார்க்க, அப்படியே அவன் காவல் நிலையத்துக்குப் போய் சரணடைந்தான். இங்கே வீட்டுக்குள் போய் பார்த்தபோது, அந்தப் பெண்ணின் சடலத்துடன் இன்னொரு இளைஞனும் வெட்டுப் பட்டுக் கிடந்தான்.

இருவரும் வேறு வேறு சாதியினர். வசதியிலும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால் பக்கத்து பக்கத்து வீடு. இருவருக்கும் காதல். அன்று வீட்டில் யாருமற்ற தனிமையான நேரத்தில் இருவரும் சந்தித்து சற்றே அந்தரங்கமாக இருந்தபோது, அண்ணன் வந்துவிட்டான். பார்த்த அந்த கணத்திலேயே அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டான். தங்கையின் கழுத்து சரியாக வெட்டுப்படவில்லை என அறுத்து எடுத்ததாக போலீசில் வாக்குமூலம் தந்திருந்தான்.

காரணம், சாதி – அந்தஸ்து.

அதன் பிறகு ஒரு மாதத்திலேயே தங்கையைக் கொன்றவனை ஜாமீனில் எடுத்துவிட்டார் அவனது கோடீஸ்வர தந்தை. தனியாக ஒரு இடத்தில் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டி, அவனுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராகக் கூட இருந்தான் அந்த கொலையாளி. ஊரே பார்த்த அந்த கொலையில் அவன் தண்டனை அனுபவித்ததாக இதுவரை நினைவில்லை!

-ராதாமோகனின் கவுரவம் படம் பார்த்த பிறகு எனக்கு இந்த சம்பவமும், கையில் அவன் பிடித்திருந்த வெட்டுப் பட்ட பெண்தலையும்தான் வெகுநேரம் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது!

-வினோ
5 thoughts on “ஒரு கிராமம் கெடக்கு…!

 1. srikanth1974

  வினோ.சார் சம்பவம் நடந்த கிராமத்தின் பெயர்,சம்பவம் நடந்த வருடத்தை தெரிந்து கொள்ளலாமா? இதனால் தாங்களுக்கு தர்ம சங்கடம் என்றால்? எழுத வேண்டாம்.

 2. குமரன்

  வருந்தத் தக்க நிகழ்வு.

  விவரங்களை வெளியிடுதல் வினோவின் தலைக்கு ஆபத்தாகலாம்.

  எனவே வேண்டாம்

 3. வழிப்போக்கன்

  //சம்பவம் நடந்த கிராமத்தின் பெயர்,சம்பவம் நடந்த வருடத்தை தெரிந்து கொள்ளலாமா//

  ஏம்பா அந்த விவரத்தை தெரிஞ்சு என்னத்தை பண்ணப்போறே?. இது தான் தமிழனின் பலவீனம. அக்கம் பக்கம், பக்கத்துவீடு எல்லாத்த்தையும் தெரிஞ்சுகிடனும்ன்னு நினைக்கிறே ஆர்வம் . இந்த ஆர்வத்தை உப்யோகமான விஷயத்தில் செலுத்தினால் தமிழன் தரணியை ஆள முடியும்.

  ஒரு அநியாயமான அசிங்கத்தை பத்தி படிக்கும் போது, அட நமக்கு தெரிஞ்ச ரெண்டு பேரையாவது திருத்தப் பார்ப்போம்னு யோசிக்கலாம்லே.

 4. srikanth1974

  திரு.குமரன்.அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.அந்த தகவலை வெளியிடுவதின்மூலம் ஆசிரியருக்கு தர்ம சங்கடம் ஏற்படுமாயின் அதை அவர் எழுதவேண்டாம் என்றும் நான் தெரிவித்திருப்பதை வழிப்போக்கனுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

 5. மு. செந்தில் குமார்

  திரு.குமரன்.அவர்களின் கருத்தே என்னுடையதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *