BREAKING NEWS
Search

நித்யானந்தன் குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு! – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு

நித்யானந்தன் குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு! – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு


வாஷிங்டன்: வேத பல்கலைக்கழகம் தொடங்க பக்தர் கொடுத்த ரூ 10 கோடி நன்கொடையை மோசடியாக பயன்படுத்திய வழக்கில், நித்யானந்தன் குற்றவாளி என்றும் அவர் மீதான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெங்களூரில் தலைமை ஆசிரமம் மற்றும் உலகம் முழுவதும் கிளை ஆசிரமங்கள் என அமைத்து ஆன்மீக பிஸினஸ் செய்து வந்தவர் நித்யானந்தன்.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆன்மீகத்தில் பெயரில் குடி, போதை, செக்ஸ் என அவர் செய்த லீலைகள் ஆதாரங்களுடன் வெளியாகி, அவரை கம்பி எண்ண வைத்தன.

இன்னொருபக்கம் தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷன், நித்யானந்தா இன்வெஸ்ட்மென்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல்யூஷன் போன்ற பல நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார்.

வெளிநாடுகளில் பக்தர்கள் என்ற பெயரில் பல ‘பேக்குகள்’ இவருக்கு கோடிகோடியாக காணிக்கையை கொட்டிக் கொடுத்து வந்தனர்.

அப்படியொரு கண்மூடித்தனமான பக்தர்தான் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழில் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர்.

அமெரிக்காவில் இருந்தாலும், தாய் நாட்டு கலாச்சாரத்தில் இவர்களுக்கு அபார பற்று.

கடந்த 2005-ல் அமெரிக்காவில் நித்யானந்தா சுற்றுப்பயணம் செய்த போது அவரது ஆன்மீக உரையையும், வேத பாராயண திறமையையும் பார்த்து பாபட்லால் தம்பதியினர், நித்யானந்தனின் வலையில் விழுந்தனர்.

பாபட்லாலின் வசதி வாய்ப்புகளை புரிந்து கொண்ட நித்யானந்தன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதா பல்கலைகழகம் நிறுவ ஆசைப்படுவதாக கூறினார். அதை வரவேற்ற பாபட்லால் 1.7 மில்லியன் டாலர் அதாவது ரூ.9.35 கோடி பணம் நன்கொடையாக வழங்கினார். அந்த பணத்தை வைத்து நித்யானந்தன் வேத பல்கலைக்கழகம் தொடங்கவில்லை. மாறாக தனது நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டார்.

இதற்கிடையில் நித்யானந்தன்- ரஞ்சிதா சல்லாப சி.டி. வெளியான பிறகுதான் நித்தியானந்தனின் வண்டவாளம் பாபட்லால் அண்ட் கோவுக்கு தெரிந்திருக்கிறது.

நித்யானந்தனின் இன்னொரு முகத்தைப் பார்த்த பாபட்லால் கொடுத்த பணத்தை திருப்பி தந்து விடும்படி கேட்டுள்ளார். ஆனால் நித்யானந்தனோ திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பாபட்லால் கலி போர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நித்யானந்தன் குற்றவாளி…

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் வில்சன் தனது அதிரடித் தீர்ப்பில், “நித்யானந்தன் பவுண்டேஷன் அமெரிக்க நிதிச் சட்டப்படி செயல்படவில்லை. அதனால் இது ஒரு மோசடி நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஏமாற்றப்பட்ட பாபட்லால் சாவ்லாவுக்கு 1.565 மில்லியன் டாலரை திருப்பி தர வேண்டும். இந்த வழக்கின் தண்டனை விபரம் 19-ந்தேதி அறிவிக்கப்படும்”, என்றார்.

19-ந்தேதி நித்யானந்தனுக்கு என்ன தண்டனை என்பது தெரியவரும்.

அமெரிக்க சட்டங்கள் மோசடியை தீவிரமாக தண்டிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கடுமையான தண்டனைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *