BREAKING NEWS
Search

2ஜி இழப்பு 1.76 லட்சம் கோடி என எழுதச் சொன்னதே பாஜகதான்! – அம்பலப்படுத்தும் ஆர் பி சிங்

2ஜி இழப்பு 1.76 லட்சம் கோடி என  கட்டாயப்படுத்தி எழுதி வாங்கினார் முரளி மனோகர் ஜோஷி! – ஆர் பி சிங்

புதுடெல்லி:  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையில், யூகத்தின் அடிப்படையில் ரூ 37 ஆயிரம் கோடி இழப்பு என நான் எழுதியதை, ரூ 1.76 லட்சம் கோடியாக மாற்றி எழுதுமாறு கட்டாயப்படுத்தி எழுதி வாங்கினார் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி என  முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரி ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.

2ஜி விவகாரத்தில் இது மிகப் பெரிய திருப்பு முனையாகவும், சர்ச்சையாகவும் பார்க்கப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு  ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை வைத்துதான் பாஜக இரண்டு ஆண்டுகள் அரசியல் செய்து வந்தது.

பத்திரிகை – மீடியாக்களின் பிழைப்பும் ஓடியது. இந்த அறிக்கை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை  துறை அதிகாரி ஆர்.பி.சிங் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

இப்போது அந்த அறிக்கை தொடர்பாக, முரளி மனோகர் ஜோஷி மீது  ஆர்.பி.சிங் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அதில், “2ஜி விஷயத்தில் இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி என்பது ஒரு யூகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இவ்வளவு நஷ்டம் ஏற்படாமலும் கூட இருந்திருக்கலாம். ஒரு அனுமானம்தான். அதனால்தான் பின்னர் அந்த பகுதி நீக்கப்பட்டது.

பின்னர் நான் கொடுத்த இறுதி அறிக்கையில், குறைவாக தொகைக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்களிடம் இருந்து  கூடுதலாக ரூ.37 ஆயிரம் கோடி வரை வசூலிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். இது சாத்தியமானதும் கூட.

ஆனால், இறுதி அறிக்கை வெளியானபோது,முதலில் யூகமாக கணக்கிடப்பட்ட  ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று திருத்திவிட்டனர்.

அதில் கையெழுத்திடும்படி,  நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக  இருந்த முரளி மனோகர் ஜோஷி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தரவிட்டார்.

இதனால் நானும் கையெழுத்திட்டேன். எனக்கு மேல் உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். எனது அறிக்கையை தலைமை தணிக்கை அதிகாரி திருத்திவிட்டார். அவர்கள்  சொல்வதை நான் செய்துதானே ஆகவேண்டும்.. இப்போது ஓய்வு பெற்றுள்ளதால், என் மனசாட்சிப்படி உண்மையைக் கூறிவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.

பாஜகவின் மோசடி அவர்களையே திருப்பித் தாக்குகிறது! – சோனியா

ஆர்.பி.சிங்கின் இந்த கருத்து பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி,”2ஜியில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். இப்போது ஆர்பி சிங் கூறியதிலிருந்து, இந்த விவகாரத்தில்  பா.ஜ.க. செய்த மோசடி அவர்களையே திருப்பித் தாக்கியுள்ளது,” என்றார்.

ஜோஷி மறுப்பு

ஆனால்,தன் மீதான புகாரை மறுத்துள்ள முரளி மனோகர் ஜோஷி,”சி.ஏ.ஜி. மற்றும்  பி.ஏ.சி., மீது அவதூறு பரப்ப முயற்சி நடக்கிறது. இதற்கு அரசு மற்றும் சமூக   விரோதிகள் உதவி செய்கின்றன. அரசின் சதித்திட்ட வலையில் சிங்  விழுந்திருக்கலாம். நாடாளுமன்ற பொது கணக்கு குழுவில் சாட்சியம் அளிக்கும்போது  இதனைக் கூறாமல், ஓய்வு பெற்ற பின்னர் சிங் இவ்வாறு கூறுவது ஏன்?” என்று கேட்டுள்ளார்.
7 thoughts on “2ஜி இழப்பு 1.76 லட்சம் கோடி என எழுதச் சொன்னதே பாஜகதான்! – அம்பலப்படுத்தும் ஆர் பி சிங்

  1. kakkoo Manickam

    காங்கிரஸ் காரர்களுக்கு கொஞ்சமேனும் வெட்கம் வேண்டும். CAG அறிக்கைகளை புறம் தள்ளியே சுரீம் கோர்ட் மீண்டும் ஒரு ஏலத்தை நடத்த உத்தரவிட்டது.இதன் முடிவுகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. எதிபார்த்தது போல குறைவாகவே போனது. ஆனால் காகிராஸ் கட்சி இதனை சாதகமாக பயன்படுத்துகிறது. அவ்வளவுதான்.இதனை நாள் வரை இந்த முன்னாள் CAG அதிகாரி ஆர்.பி. சிங்க் எங்கே போயிருந்தார்? காங்கிரஸ் இவரை வளைத்து போட்டு நாடகம் ஆடுகிறது. ஏலத்தொகை குறைவு என்று தெரிந்ததும் காங்கிரஸ்காரர்கள் இதனை கொண்டாடி மகிழ்வதில் இருந்தே உண்மை தெரியவில்லை? இழப்பு எத்தனை கோடி அதிகமாக அல்லது குறைவாக இருந்தால் என்ன? அந்த இழப்புக்கு யார் பொறுப்பு? இதற்க்கு பதில் சொல்ல சோனியாவுக்கு வாயில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *