BREAKING NEWS
Search

அய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்!

cmrajini

மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ்நாட்டை தமிழந்தான் ஆளவேண்டும் என்று எங்களுக்காக உயிரை வருத்தி குரல் கொடுக்கும் தமிழ் காவலர்களுக்கு…

இப்ப உங்களுக்கு என்ன வேண்டும் ? தமிழ்நாட்டை ஒரு தமிழந்தான் ஆளவேண்டும் ? சரி இப்போது யார் ஆள்கிறார்கள் ? தமிழன்தானே ? இந்த தமிழன் தலைமையிலான ஆட்சி காலம் இன்னும் நான்கு வருடங்கள் பாக்கி இருக்கிறது …அப்புறம் எதற்கு கூப்பாடு ?

சரி அது போகட்டும் ..முதலில் எங்கள் வாழ்க்கையைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? நாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளும், எங்கள் வாழ்க்கைத் தரம் கடந்த பல வருடங்களாக அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதை பற்றியும் தெரியுமா உங்களுக்கு ? கடுமையான விலைவாசி ஏற்றம், ஆனால் கடந்த பல வருடங்களாக அதே வருமானம்… பருவ மழை பொய்த்து விவசாயம் பட்டுப் போய்விட்டது. ராக்கெட் வேகத்தில் சென்றிருக்கவேண்டிய தொழில் ஆமை வேகத்தில் பயணிக்கிறது. முறையான குடிதண்ணீர் இல்லை, சாலை வசதிகள் சரியாக இல்லை. மருத்துவமனை பக்கத்தில் போகவே பயமாக இருக்கிறது. கொள்ளை அடித்துத்தான் மருத்துவமனைக்கு செலவு செய்யவேண்டும் போன்ற நிலை இருக்கிறது. கல்வி பற்றி கேட்கவே வேண்டாம். ப்ரிகேஜுக்கு கூட லட்சங்களில் கட்டணம். மருத்துவக் கல்லூரிகளில் கோடிகளில் கட்டணம். எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறை. எவ்வளவு உழைத்தாலும் போதாத வருமானம். தினசரி வாழ்க்கையை ஓட்டுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

காமராசரை தோற்கடித்த பாவத்துக்கு இன்னும் பரிகாரம் தேடிக்கொண்டிருக்கிறான் தமிழன். கடந்த 40 வருடங்களாக தமிழன் அதிகமாக கேட்ட வார்த்தைகள்…. ஊழல், ஊழல் கமிஷன், ஊழல் குற்றத்தில் சிறை, 2ஜி ஊழல்,சுடுகாட்டு கூரை ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல், டான்சி ஊழல், அன்னிய செலாவனி ஊழல், மேக்சிஸ் ஊழல்… இப்படி முன்னால் வைக்கப்படும் பெயர்தான் மாறியதே தவிர, அந்த ஊழல் என்ற வார்த்தை இன்று வரை மாறவில்லை. தமிழன் வாழ்க்கையோடு பின்னிப் பினைந்துவிட்டது ஊழல்.

கரும்புக்கு சரியான விலையில்லை, பயிர் கடன் கட்ட முடியவில்லை. ஆனால் டாஸ்மாக் வருமானம் கொழிக்கிறது. மிக்சியும்,கிரைண்டரும், டிவியும்,லேப்டாப்பும் இலவசமாக கிடைக்கிறது ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இவைகளை விற்றாலும் போதாது.

என்ன காரணம்? எங்களின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தலைவர்கள் இல்லை. மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் தலைவர்கள் குறைந்து, தான் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கும் தலைவர்கள் பெருகிவிட்டனர். எங்கள் பணத்தை கொள்ளையடித்து பின் அதைக் காப்பாற்ற செலவு செய்து, பின் அது தொடர்பான வழக்குகளை சந்திக்கவே எல்லா நேரத்தையும், எங்கள் பணத்தையும் செலவிட்டு, பின் எங்களுக்கு குவார்டரும், பிரையாணியும் 500,1000 பிச்சை போட்டு பின் மீண்டும் கொள்ளையடித்து…

தமிழனின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் இருக்கிறது ? பேயாய் உழைக்கும் மக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு இந்தியாவின் கடைசி மாநிலமாக இருந்திருக்கும். தென் மாவட்டங்களுக்கு வேலை கொடுக்கும் மேற்கு மாவட்டங்கள், வந்தாரை வாழவைக்கும் வட மற்றும் சென்னை மாவட்டங்கள்…. இப்படி நாங்களேதானே எங்களுக்கான வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் செய்யும் என விட்டிருந்தால் இன்றைக்கு பிச்சைக்கார மாநிலமக்களாகத்தான் நாங்கள் இருந்திருப்போம்.

சென்னையில் வெள்ளம் வந்த போது எங்கள் மக்களை நாங்கள்தானே மீட்டெடுத்தோம்? எங்கள் கலாசாரம் நசுக்கப்பட்டபோது நாங்களே ஒன்று திரண்டு மீட்டெடுத்தோம். சாதி, மொழி, இன பாகுபாடு பார்த்தா ஒன்று திரண்டோம்? யாரையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எந்நேரமும், இதே வேலையாய் நாங்கள் இருக்க முடியுமா? எங்களுக்கான எல்லாவற்றையும் நாங்களே செய்துகொள்ளவேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு? நாங்கள் ஏன் வரி கட்டவேண்டும்?

IMG_7829_800x533

நாங்களும் மாறி, மாறி ஓட்டுப்போடு சலித்துவிட்டோம். ஊழல்வாதிகள் என்று தெரிந்தும் ஓட்டுப் போட்டோம். என் இன மக்கள் சாகும்போது வேடிக்கை பார்த்தவர்கள் என்று தெரிந்தும் ஓட்டுப் போட்டோம். இவர் வேண்டாம் என்றால் அவர், அவர் வேண்டாம் என்றால் இவர். இருவரும் வேண்டாம் என இன்னொருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றால் யாருக்குக் கொடுப்பது ? பொது வெளியில் அநாகரிகமாக அடிப்பவருக்கும், மொழிவெறியைத் தூண்டுபவருக்கும், சாதி வெறியை வளர்ப்பவருக்குமா ?

எங்களுக்காக ஒரு நொடி கூட கவலைப்பட யாரும் தயாரில்லை. பெரிதாக எதுவும் செய்யாவிட்டாலும் ஒரு அரணாக இருந்தவரும் இப்போது இல்லை. யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்று கூடத் தெரிவதில்லை. தமிழ், தமிழ் மொழி என்ற உணர்வு எங்களுக்கு நிறையவே உள்ளது. யாரும் பாடம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் உணவு, உடை, இருப்பிடம் கிடைத்துவிடுமா? தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம் என்றார் பாரதி. ஆனால் லட்சக்கணக்கில் ஒரு வேளை உணவில்லாமல் இருக்கிறார்கள். எத்தனை ஜெகத்தை அழிப்பது?
ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஊழல்வாதிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும், சாதி, மத, மொழி வெறியர்களிடமிருந்தும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. வெறும் அடிமைகளாகத்தான் கிடக்கிறோம்.

போதுமய்யா… இனியும் முடியாது… எங்களுக்கு எதுவுமே கண்ணுக்கு தெரியவில்லை. எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு நேர்மையான தலைமை, ஒரே ஒரு தலைமை. எங்கள் வேலையை நாங்கள் செய்தால் எங்களைப் பார்த்துக்கொள்ள அரசாங்கம் இருக்கிறது என்று நாங்கள் நம்பிக்கையாக வாழ ஒரு தலைமை. எங்கள் காசு எங்களுக்கே என்று நிம்மதியாக இரவில் தூங்க ஒரு பாதுகாப்பான தலைமை. அவ்வளவே… தமிழனா, மலையாளியா, கன்னடனா, இந்துவா, முஸ்லிமா, கிருத்துவனா, செட்டியாரா, தலித்தா, கவுண்டரா, நாடாரா, தேவரா… எதுமே எங்களுக்குத் தேவையில்லை. நல்ல நேர்மையான மனிதன், எங்கள் வாழக்கை தரம் உயரவேண்டும் என நினைக்கும் ஒரு தலைவன் மட்டுமே வேண்டும்.

தமிழன், தமிழ் என்று சொல்லி இத்தனை நாள் பொழப்பு ஓட்டியது போதும். எங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தூண்டியே எங்களுக்கு நல்லது செய்ய யாரையும் வரவிடாமல் தடுத்தது போதும். உங்கள் கோஷங்களால் உங்கள் பொழப்பு ஓடுகிறதே தவிர எங்கள் பொழப்பு டாஸ்மாக் கடை வாசலில் சந்தி சிரிக்கிறது. ஏற்கனவே இலவசத்திலும், போதையிலும் கிடக்கும் தமிழனிடம் மொழி வெறியையும் திணிக்காதீர்கள். இந்தி வேண்டாம் என்று போராடிய அத்தனை தலைவர்களின் பேரன்களும் இந்தி நன்றாக பேசுகிறார்கள். இங்கே நாங்கள் காட்பாடி தாண்டினால் திணறுகிறோம்.

எங்கள் பொருளாதாரம் பக்கவாதம் வந்தது போல் கிடக்கிறது. எங்கள் விவசாயம் செழிக்க வேண்டும், எங்கள் தொழிற்சாலைகள் முன்னேற வேண்டும், எங்களுக்கு குறைந்த செலவில் கல்வியும், சுகாதாரமும் வேண்டும், எங்கள் இளைஞர்களுக்கு நிரந்திர வேலை வேண்டும். நேற்றைக்கு உருவான மாநிலங்கள் எல்லாம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருக்கும்போது… அய்யாயிரம் வருட தமிழினம் எட்டுகால் பாய்ச்சலில் பின்னோக்கிப் போய்க்கொண்டிருப்பதை இனியும் சகித்துக் கொள்ளமுடியாது .

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்று கூப்பாடு போடுகிறீர்களே அப்படிப்பட்ட தமிழன் உருவாகவிடாமல் யார் தடுத்தது ? ஏன் எங்களுக்கு நீங்கள் தமிழன், தமிழன் என்று சொல்பவர்களிடம் நம்பிக்கை வரவில்லை ? கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா ? எங்களின் அன்றாட வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய எந்த திட்டமோ, யோசனையோ உங்களிடம் இல்லை. எங்கள் பிரச்சனைக்கான எந்த நடைமுறை தீர்வும் உங்களிடம் இல்லை. பின் எப்படி உங்களை நம்புவது ? எங்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு எந்த குரலும் கொடுக்காமல், தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் உங்களை நாங்கள் புறக்கணிக்கவே செய்வோம். ஈழ சகோதரர்கள் மேல் உங்களை விட பல மடங்கு எங்களுக்கு அக்கறை உள்ளது. ஆனால் கூப்பாடு போடும் நீங்கள் இங்கிருக்கும் ஈழ அகதிகள் வாழ்வு மேம்பட எதையாவது செய்ததுண்டா ? குறைந்த பட்சம் உங்கள் நிறுவனங்களில், வீடுகளில் அவர்களை வேலைக்கு வைத்திருக்கிறீர்களா?

சீமான் சொல்கிறார், “ரஜினிகாந்த் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறாரோ அதை நாங்கள் செய்கிறோம்,” என்று. சபாஷ்… பாராட்டுகிறேன் அவரை. வாருங்கள்… எங்கள் வாழ்க்கை மேம்பட, எங்கள் பிரச்சனைகள் தீர உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறது என்று சொல்லுங்கள்… எதிர்கருத்துக்களை ஆத்திரப்படாமல் எதிர்கொள்ளுங்கள், விவாதம் செய்யுங்கள், எதிர்கருத்துக்களை உங்கள் கருத்துக்களால் வென்றெடுங்கள். உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை வரச் செய்யுங்கள், நீங்களும் வெல்லலாம். அதை விடுத்து தமிழன்தான் ஆளவேண்டும் என ரஜினிகாந்த்தை திட்டிக் கொண்டே இருந்தால் எங்களுக்கு ரஜினிகாந்த்தான் நினைவில் வந்துகொண்டே இருக்கிறார், நீங்கள் அல்ல.

அன்றைக்கு தந்தி நேர்காணலில் என்ன சொன்னீங்க ? எனக்கு தமிழ்நாட்டை பற்றித்தான் கவலை, மற்ற நாட்டில் தமிழன் ஆண்டா என்ன ஆளலைன்னா எனக்கு என்னன்னா ? அப்ப உங்க ஈழ உணர்வெல்லாம் வெறும் வேஷம்தானா?
தமிழன்தான் தமிழ்னாட்டை ஆளவேண்டும் என்பது உங்களுடைய கருத்து. அதை எங்கள் கருத்தாக்காதீர்கள். இன்றைய நிலையில் எங்களுக்கு நல்லது செய்யவேண்டும் என உண்மையான மனதுடன் வரும் யாரையும் நாங்கள் கைதட்டி வரவேற்போம். அது ரஜினிகாந்த்தாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. அவரவரை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சொல்லவேண்டாம். ஏற்கனவே பாதாளத்தில் கிடக்கும் எங்களின் வாழ்க்கையை, மேலும் அதல பாதாளத்தில் தள்ளி மூடிவிடாதீர்கள்.

இதற்கு நடுவே பாரதிராஜா போன்றவர்களின் அலப்பரை தாங்கமுடியவில்லை. தமிழன், தமிழன் என்று பேசும் பாரதிராஜா குறைந்தபட்சம் தன் படத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தருவேன் என்ற கொள்கையை கடைபிடித்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை ? உனக்கு ஒரு சட்டம்.. ஊருக்கு ஒரு சட்டமா ? தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் ரஜினிகாந்தை கூப்பிட்டு நடிப்புக் கல்லூரி தொடங்கி விளம்பரம் தேடி சம்பாதிக்காமல், ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து, குறைந்த செலவில் தமிழ் பிள்ளைகளுக்கு கல்வி கற்றுத் தந்திருக்கலாமே ? ஏன் செய்யவில்லை ? அப்போ நீங்க சம்பாதிக்க, உங்கள் பிழைப்பு ஓட, உங்கள் சந்ததி நன்றாக இருக்க நீங்க என்ன வேணாலும் செஞ்சுக்குவீங்க, நாங்க உங்க பேச்சை கேட்டு பிச்சை எடுக்கணுமா ? தமிழ், தமிழ்னு கூவிட்டு காரும், பங்களாவுமாக நீங்க இருப்பீங்க ஆனா நாங்க சோத்துக்கு சிங்கி அடிக்கனுமா ? நல்லா இருக்குதுய்யா உங்க நியாயம் … ஒரு மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு நீங்க போயிடுவீங்க. அதைக் கேட்டுட்டு நாங்க அடிச்சுட்டு திரியணுமா ?

Untitled collage

அதென்ன அடிக்கடி என் குழந்தைக்கு நாந்தான் அப்பன் ..பக்கத்து வீட்டுக்காரன் அல்ல.. என் படுக்கைக்கு வராதே…” என்று ? எதற்காக இந்த தரம் கெட்ட விமர்சனம் ? உங்கள் நிலையை நியாயப்படுத்த எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய் பேசறீங்க ? சீமானும் சரி, பாரதிராசாவும் சரி ஏத்தனை வேற்று மொழிகாரர்களை வைத்து படம் எடுத்து சம்பாதிச்சீங்க ..அப்ப நீங்க சாப்பிடுற சோத்துலயும், உடுத்தும் உடையிலும் அவங்க பங்கும் இருக்குல்ல ? இதைவிட மோசமா பாரதிராசா பாணியில் கேட்க முடியும்… ஆனால் அவர் அளவுக்கு தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தப்ப எங்க ஓடி ஒளிந்தீர்கள் பாரதிராசா ? அவர்களை எதிர்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்னு உங்களுக்கு நல்லா தெரியுமே …. சைக்கிள் கேப்பில் மைக் கிடைத்தால் மட்டுமே வரும் வீரத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்.

நாங்கள் தெளிவாக இருக்கிறோம்… வரும் காலத்தில் எங்களுக்கு நல்லது நினைப்பவரை மட்டுமே நாங்கள் ஆட்சியில் அமர வைப்போம். மொழி, இன, சாதி வெறியால் எங்களை பிரித்து, எங்கள் வாழ்க்கையை பாழாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.

தயவு செய்து தமிழ், தமிழ்னு போலி கூச்சல் போட்டு எங்க வாழ்க்கையை கெடுக்காதிங்க. எங்கள் மொழிக்கும், எங்கள் கலாசாரத்துக்கும் ஆபத்து வந்தால் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே காட்டிவிட்டோம். இப்ப எங்களுக்கு தேவை எங்களுக்கு வேலை செய்ய நல்ல தலைவர்கள் மட்டுமே … அது ரஜினிகாந்த்தாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி…அதை தேர்தல் வரும்போது நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். நீங்க உங்க வேலையை பாருங்க….

– மனோகரன், திருப்பூர்




18 thoughts on “அய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்!

  1. Rajan

    மிகச் சரியா சொன்னீங்க … ரஜினி வந்தால் அவர் கொள்கையில் ஏதும் மாற்று கருத்து இருந்தால் அதை சொல்லுங்கள்…. அவரே கேட்டு சரி செய்வார் நீங்கள் சொல்வது உண்மையிலேயே நல்லது என்றால். அதை விட்டு விட்டு சும்மா தமிழ் தமிழ் னு கூவுற எவனும் யோக்கியன் இல்ல … அவனது எண்ணங்களும் நல்லது கிடையாது என்பது புரியாத அல்லது புரிந்தும் புரியாதது போல நடிக்கும் சிலர் கூட முட்டாள்கள் தான்… இவர்களுக்கு நல்லவரை பிடிக்காது ஏன் என்றால் இவர்கள் நல்லவர்கள் இல்லையே ….

    இப்படிப்பட்டவர்கள் கையில் சிக்கி நாம் சிதைந்தது போதும். இனியாவது விழித்து கொள்வோம்.

    ராஜன்

  2. jegan

    தலைவரின் அரசியல் பயணம் தொடங்கப்போகிறது ..சில்லறைகள் சிதறி போகிறார்கள் .தலைவரின் உடல்நிலை ஒத்துழைத்தால் நீண்ட காலம் இந்த சில்லறைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் .

  3. ஸ்ரீகாந்த்.1974

    \\அப்ப உங்க ஈழ உணர்வெல்லாம் வெறும் வேஷம்தானா?//

    சீமாறு பதில்; அது அது அப்படியில்லை தம்பி
    அது வந்து தம்பி அத தப்பா புரிஞ்சு கிட்டே தம்பி
    அது அம்மன் TRY இரும்புக்கம்பி முறுக்குக்கம்பி தம்பி
    நான் என்ன சொல்றேன்னா தம்பி
    ஐய்யோத்தம்பி அக்காதம்பி ஆளவுடுறா தம்பி!…

  4. Guhan Ranganathan

    அருமையான பதிவு..

    இந்த பாரதிராஜா இதுவரை தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார். “என் இனிய தமிழ் மக்களே” என்று சொன்னதை தவிர…
    நாளைக்கே ரஜினியின் உதவி தேவை படும் போது,,” He is a very good Human” என்று இதே பாரதிராஜா கூவும் நாட்கள் வெகு துறைவில் இல்ல..

    எல்லாருக்கும் பயங்கர பொறாமை.. ரஜினி இவ்வளு சம்பாதிக்கிறார், நம்மால் முடியவில்லையே…அதை வெளி படையாக சொல்ல முடியாமல், இது போல் வாய்ப்பு வரும் போது அவரை திட்டி தீர்த்து விடுகிறார்கள்.

    உண்மையான தமிழன், ஒருவனின் தரத்தை தான் பார்ப்பான்….

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

  5. Ranganathan

    Tharangketta vimarsanathai arambithavar puratchi thamizhar sathyaraj. See his comments in you tube. Adhai vazhi mozhigirar iyakunar imayam..

  6. R.vinoth

    Antha seeman oru kedu ketta echa nai.social mediala thalaivara pathi avanoda katchi tamil pyschokalai vachi ketta visayam parappi varugiran v v minerals vaikundarjan oru criminal manal kolai mafia avanoda binami intha echa sebastian seeman.oru medeila v v minerals vaikundarajan tamil nilavalathai suraduvathai paesu sollingal pappom dei sebastian seeman thalaivar cm agi mothala onnada pyscho terrorist katchiya rod ethanoda.Dei lingaaku ennanna vela panna athu kuparam kabali ya onnala athavu mudinga mudicha .Dei sebastian seeman athetha ipa arasiyile nadakka poguthe avar thanda 2021 cm .seeman neeyu unnoda kirukku pyscho tumblerkalum innum 40 varsham annalum kathi kathi saave vendhiyathu tha.

  7. குமரன்

    மிகவும் சரி.

    சாதி வெறியும், மதவெறியும் எந்த அளவுக்கு ஆபத்தானதோ, அதே அளவுக்கு மொழிவெறியும், இனவெறியும் ஆபத்தானவை.

    சீமானோ, பாரதிராஜாவோ பரப்புவது மொழிவெறி, இனவெறி. இத்தகைய இனவெறியைத்தான் இத்தாலியின் முசோலினி பரப்பினான். அவனது ஃபாஸிஸ்டுக் கட்சியின் கொள்கைதான் ஃபாஸிசம். அதையேதான் சீமானும் பாரதிராஜாவும் இப்போது பரப்புகிறார்கள்.

    இவர்கள் ஃபாசிஸ்டுகள் என்பதைப் பகிரங்கமாகக் கூற எவரும் இல்லாதது, இந்த ஃபாஸிசம் தமிழகத்தில் வளர வழி கொடுக்கிறது என்பதுதான் கொடுமை.

    மொழிப் பற்று என்பது வேறு, மொழிவெறி, அது சார்ந்த இனவெறி என்பது வேறு. பற்று அவசியம் இருக்கவேண்டும். வெறி நிச்சயம் கூடாது.

  8. Thendral

    தமிழகத்தில் மட்டும் தான் படிச்சா வேளை கிடக்காது , நடிச்சா நாடே கிடைகும்ம்ன்ர கேவல நிலை ,

    அப்துல்கலாமே அரசியலுக்கு வந்தா சினிமாக்காரகள்ட்ட குறைந்த வாக்குகளே வாங்குவார்…

    ஏன் தெரியுமா இங்க மக்கள் (சிஸ்டம்) சரியில்ல,

    மக்கள் மாக்கானுங்களா இருப்பதால் தான் வேற்று மொழிகாரன் லாம் நானும் பச்சை பச்சை தமிழன்ன்னு நடிச்சி அரசியல் லாபம் சொரன்ட பாக்குறான்,

    ரஜினி வரனுமா ? வேணாம்மான்ன்னு மக்கள் சொல்லட்டும் அத சீமான் ஏன் சொல்றார் னு கேள்வி ? இது ஒரு கேள்வி யா ?

    சினிமா போதையில அலையும் ஒரு பெரும் கூட்டம் அதனிடம் அந்த போதை பயன் படுத்தி யே அரசியல் ஆதாயம் தேடாதேன்னு சொல்வது தப்பா ?

    மது தான் அதிகம் விற்பனையகுது மது கடை வேணுமா வேண்டாமன்னு குடிகாரன்ட்ட கேட்டுதான் முடிவு பண்ணுவிங்களா ?

    ரஜினி வரட்டும் சிவாஜிக்கு நடந்த அதே அரசியல்பின்னடைவு இந்த ராவ் கெய்க்வாட் க்கும் நடக்கும்

  9. இரமேஷ்குப்பன்

    நல்ல பதிவு, மகிழ்ச்சி

    தலைவரின் பின்னால் நாம் நிற்போம்

    வெற்றிபெறுவோம்

    வாழ்க ரஜினியிசம் (அரசியல் தனி கோட்பாடு – மக்களுக்கு தெளிவுபடுத்தனும்)

  10. M.BABU

    மிகச் சரியா சொன்னீங்க…. சீமானும் சரி, பாரதிராசாவும் சரி தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டுக் கொண்டு எங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி தூண்டியே காரும், பங்களாவுமாக நீங்க சொகுசு வாழ்க்கை வாழ்கிறீர்கள். போதுமய்யா… இனியும் முடியாது இனியாவது விழித்து கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *