BREAKING NEWS
Search

பாலு மகேந்திரா… காலத்தால் நினைவு கூறப்படும் ஒரு பெருங்கலைஞன்!

பாலு மகேந்திரா… காலத்தால் நினைவு கூறப்படும் ஒரு பெருங்கலைஞன்!

BgXTNOmCYAEoa-w.jpg large

“…… நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும்… ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு.

எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எங்கள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல!”பாலு மகேந்திரா

-இயற்கையை வெல்ல எவருமில்லை. ஆனால் இந்த வரிகளைப் படிக்கும்போது மனசு கதறுகிறது. இந்த இயற்கை நியதிகளை தாங்கத்தான் முடியுமா!!

balu-sir-1
மிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி பாலு மகேந்திரா மரணித்து விட்டாரா? – நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது திரையுலகமும், அதற்கு வெளியிலிருந்து அவரை நேசிக்கும் உள்ளங்களும்.

பாலு மகேந்திரா என்ன மரணத்துக்கு அப்பாற்பட்டவரா… அல்லது அத்தனை அற்ப ஆயுளிலா மரணம் அவரை நெருங்கியது? என்று சிலர் கேட்கலாம்.

இரண்டுமே இல்லைதான். அவர் உடல் நிலை, வயது காரணமாக அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை சில ஆண்டுகளாகவே பலரும் உணர்ந்திருந்தார்கள்.

‘பிறக்கின்ற போதே இறக்கின்ற சேதி
இருக்கின்றதென்பது மெய்தானே..
பேதை மனிதனே உடம்பு என்பது
கனவுகள் வாங்கும் பைதானே!’

-என்ற வாழ்க்கைத் தத்துவத்தைப் பதிவு செய்த கலைஞன்தானே!

ஆனால் பாலு மகேந்திரா போன்றவர்களை அத்தனை சீக்கிரம் மரணம் தீண்டாத.. தீண்டக்கூடாத மனிதர்கள் பட்டியலில் வைத்துவிட்டது அவரை, அவர் படைப்புகளை நேசித்த ரசிக மனசு!

தமிழ் சினிமாவில் ரசனை மிகுந்த ஒரு இலக்கியவாதியாக திகழ்ந்தவர் அவர். சினிமாவைப் புரட்டி எடுக்கும் இலக்கிய விமர்சகக் கூட்டம் கூட, பாலு மகேந்திரா என்றால் பாசத்தோடு அரவணைத்துக் கொள்ளும். காரணம், நிஜத்துக்கும் சினிமாவுக்கும் பெரிய திரை போட்டுக் கொண்டதில்லை அவர்.

தன் சினிமாவை உன்னதமாகப் படைக்கும் தன்னை ஒரு உத்தமன் என அவர் கூறிக் கொண்டதே இல்லை. சக மனிதனின் அழுக்கும் பொறைமையும் காதலும் காமமும் வன்மமும் தனக்கும் உண்டு. அது தன் படைப்பிலும் உண்டு என்பதை நேர்காணல்கள், மேடைகள், எழுத்துகள் என எதிலும் மறைக்கக்கூட முயன்றதில்லை அந்த மாபெரும் படைப்பாளி!

பாலு மகேந்திரா படைத்த பெண் பாத்திரங்கள் மகத்தானவை. பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே அவரது படைப்புகள் அமைந்திருக்கும். கோகிலாவாகட்டும் அழியாத கோலங்களாகட்டும்.. அவரே அவமானமாகக் கருதிய நீங்கள் கேட்டவையாகட்டும். அனைத்திலும் பெண்ணே ஆதாரம்!

சினிமாவை பாலு மகேந்திரா அளவுக்கு நேசித்த இன்னொரு படைப்பாளியை இந்தத் தலைமுறை இனி பார்க்க முடியுமா தெரியவில்லை. சினிமாவை அவர் வெறும் வியாபாரமாகக் கருதவில்லை. செலுலாய்ட் வடிவிலான வரலாறாகத்தான் பார்த்தார். அதற்காகத்தான் தன் இறுதி மூச்சு வரை, திரைப்பட ஆவணக் காப்பகம் வேண்டும் என்பதை தான் கால் வைத்த அத்தனை மேடைகளிலும் சொல்லி வந்தார் அந்த மனிதர்.

பாலு மகேந்திராவின் அத்தனைப் படங்களிலும் ஆதார ஸ்ருதியாகத் திகழ்வது அன்பும்.. அந்த அன்புக்கு நேர்கிற பங்கமும்தான்! ‘மறுபடியும்’ போன்ற ஒரு படைப்பை இப்போது பார்த்தாலும் கோடம்பாக்க படைப்பாளி ஒருவனின் நூறு சதவீத வாழ்க்கையைப் பார்க்கலாம். அத்தனை நேர்த்தியாக இன்னொருவரால் இதைப் பதிவு செய்வது சாத்தியமா என்பதும் சந்தேகம்தான்.

இலங்கையில் மட்டக்களப்பில் பிறந்த தமிழர் பாலு மகேந்திரா. ஆனால் இலங்கைப் பிரச்சினை பற்றி எதையும் அவர் தன் படைப்புகளில் பதிவு செய்யவில்லையே என்ற ஒரு கேள்வியை பல மேடைகளில் அவர் முன் வைத்திருக்கிறார்கள். அதற்கு பாலு மகேந்திரா சொன்ன பதில்…

‘பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கும் உண்டு. ஆனால் அதிகபட்ச நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய விடயமிது. வியாபாரத்தைத் தாண்டியது. படைப்பாளிகள் தயார்தான். ஆனால் அப்படி ஒரு படத்தை தாங்கும் தயாரிப்பாளர் எங்கே?’ என்றார். அந்தக் கேள்விக்கு மட்டும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை!

ஒரு இயக்குநராக 35 ஆண்டுகள் பணியாற்றிய பாலு மகேந்திரா, 22 படங்களைத்தான் இயக்கினார். அது ஒரு கனாகாலத்துக்குப் பிறகு அவரது அடுத்த படைப்பை வெளியிட அவருக்கு எட்டு ஆண்டுகள் ஆகியது. காரணம், யாரையும் தேடிப் போய் எனக்கு படம் கொடுங்கள் என கேட்கத் தயங்கிய அவரது சுயமரியாதை.

நிபுணத்துவம் பெற்றவர்கள் பெரும்பாலும் அந்த பாண்டித்யத்தை தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்த நினைப்பதோ விரும்புவதோ அரிதினும் அரிது, குறிப்பாக திரைத் துறையில்!
p88ori1
ஆனால் திரைக்கதையாக்கம், சினிமா ஆக்கத்தின் சூட்சுமத்தை தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் உறுதியாக இருந்தார் பாலு மகேந்திரா. அதற்காக அவர் ஆரம்பித்ததுதான் சினிமா பட்டறை.

மிகக் குறைந்த – ஒரு டஜன்  – மாணவர்கள் தனக்குப் போதும் என்பதில் தெளிவாக இருந்த அவர், அவர்களிடம் ஒரு நாணயமான தொகையை மட்டும் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு சினிமா சொல்லிக் கொடுத்தார்.

சொல்லிக் கொடுத்து சினிமா கற்பதா.. அது இயல்பானதில்லையே.. என்ற கேள்வியை ஒருமுறை முன்வைத்தபோது, ‘உண்மைதான்… சொல்லிக் கொடுத்து சினிமா வருவதில்லை. ஆர்வம், படைப்புத் திறன் என்ற சின்ன பொறி இருக்க வேண்டும். அது இருக்கும் பத்துப் பேரைத்தான் நான் தேர்வு செய்கிறேன். இது கைப்பிடித்து எழுத வைக்கும் கலையல்ல. நான் ஒரு சின்ன கோடுதான் கிழிக்க முடியும். அவர்களின் படைப்புத் திறன் அந்த கோட்டை அழகிய ஓவியமாக பூர்த்தி செய்யும்,’ என்றார்.

இந்தத் தெளிவு இருந்ததால்தான், அவரிடம் பயின்றவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் பிதாமகனாகத் திகழ்ந்தார்!

இன்னும் மூன்று படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது பாலு மகேந்திராவுக்கு. ஆனால் இயற்கையின் நியதி வேறாக இருந்தது. அதனால்தான் 40 ஆண்களாக அவர் கழட்ட விரும்பாத தொப்பியை, தலைமுறைகளுக்காகக் கழட்ட வைத்தது.

தமிழையும் இந்தத் தாத்தாவையும் மறந்துராதப்பா… என்று குரல் ஈனஸ்வரத்தில் ஒலிக்க, தன் இறுதி மூச்சை நிறுத்துவார் படத்தில் பாலு சார். அதையே நிஜத்திலும் நடத்தி வைத்திருக்கிறது, எந்த கணிப்புகளுக்கும் அடங்காத இயற்கை!

மறக்க மாட்டோம் பாலு சார்.. இயற்கையோடு கலந்த உங்கள் மூச்சை நாங்களும் சுவாசிக்கிறோம்… தமிழையும் தமிழுக்கு உன்னதம் சேர்த்த உங்களையும் இனி வரும் தலைமுறைகளும் மறக்காது!

-ஷங்கர்
2 thoughts on “பாலு மகேந்திரா… காலத்தால் நினைவு கூறப்படும் ஒரு பெருங்கலைஞன்!

 1. srikanth1974

  கலைப் பசியுடன் கலைப் படம் எடுக்க வருவோருக்கு
  இவரது படைப்பு போட்டது சோறு

  அவர்கள் இத்துறையில் நிலைத்திருக்க
  இவரது படைப்பு கட்டிக்கொடுத்தது வீடு

  உனது கேமரா விழியால் சிறைப்பிடித்து
  எமது பார்வைக்கு நீ காட்டிய முதல் படைப்பு
  முள்ளும் மலரும்

  இந்தக் கேமரா கவிஞனிடம் நாம் திரையில்
  பார்த்தது பூத்தது யாவும் வண்ண வண்ண பூக்கள்

  இந்த கலைஞனின் புகழை எந்த மூடு பனியாலும்
  மறைத்துவிட முடியாது

  மரணம் உன்னைத் தழுவினாலும் மறுபடியும்
  நீ வானில் தோன்றுவாய் மூன்றாம் பிறையாய்

  இந்தத் தலைமுறைகள் மட்டுமல்லாது
  இனிவரும் புதியத் தலைமுறைக்கும்
  பாடமாய் திகழும் உமது படைப்புகள்
  ஒவ்வொன்றும் என்றும் அழியாத கோலங்கள்

  அமரர்;பாலுமகேந்திரா அவர்களின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனைப்
  பிராத்திக்கும் ஓர் சினிமா ரசிகன்
  ப.ஸ்ரீகாந்த்.

 2. srikanth1974

  இங்கு மேலே திரு .பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய திரைப்படங்களின்
  பெயர்களை வைத்து நான் எழுதியவற்றில் பசி,மற்றும் சோறு ஆகியத் திரைப்படங்கள் திரு.பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய படங்களல்ல என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.

  பசி இயககுநர்;துரை
  சோறு இயககுநர் ;ராமநாராயணன்.

  தவறுக்கு வருந்துகிறேன்.
  ப.ஸ்ரீகாந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *