BREAKING NEWS
Search

வாங்க ‘பாட்ஷா ரஜினி பாய்’… உங்க இடம் எப்பவும் உங்களுக்குத்தான், மறு வெளியீட்டின் போதும்! #WelcomeBhaashaBai

22 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாட்ஷா…. இதுக்குப் பேர்தான் கொண்டாட்டம்!

C5B8-PeUkAA-aiX

பாட்ஷா… #Baasha தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினியின் இந்தப் படத்துக்கு தனி சிம்மாசனம் உண்டு. வேறு எந்த நடிகரும் கனவு கூட காண முடியாத மிகப் பெரிய வெற்றிப் படம். ரஜினி ரசிகர்கள் என்றல்ல…. வெகு ஜனங்கள் அத்தனைப் பேரும் ஒரே குரலில் கொண்டாடிய படம்… வேறு நடிகர்களின் ரசிகர்களும் ‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி்’ (ரஜினியின் சொந்த வசனம் இது) என்று மிதப்போடு சொல்லிக் கொள்ளக் காரணமான படம்.

1995-ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியானது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ரஜினி படம் வெளியாகும்போதும், அவரது பழைய சாதனைகள் அவராலேயே உடைக்கப்படும். ஆனால் பாட்ஷா, ரஜினியின் அத்தனை ஆண்டு சாதனைகளையும் உடைத்து நொறுக்கி புது சரித்திரம் படைத்தது. தமிழ் சினிமாவின் நூறாண்டு வரலாற்றில் பாட்ஷாவுக்கு முன், பாட்ஷாவுக்கு பின் என்றுதான் வசூல் சாதனைகளைச் சொல்ல முடியும் என்கிற அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நின்றது பாட்ஷா.

அதிக அரங்குகளில் வெளியானது, அதிக அரங்குகளில் நூறு நாட் கண்டது, அதிக அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது, முதல் முதலாக நூறு கோடியை நெருங்கியது, முதல் முதலாக டப்பிங் படமாகவே ஆந்திராவில் வெள்ளி விழா கொண்டாடியது, இந்தித் திரையுலகை பிரமிக்க வைத்தது (இத்தனைக்கும் ஒரு இந்திப் படத்தின் தழுவல் கதைதான்)…. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். \

மாஸ், க்ளாஸ், கல்ட் என எத்தனை உசத்தியான வார்த்தைகள் உண்டோ அத்தனையையும் பாட்ஷாவுக்குப் பயன்படுத்தின ஆங்கிலப் பத்திரிகைகளும் ஊடகங்களும். இத்தனைக்கும் வழக்கமான மசாலாத்தனங்கள் இந்தப் படத்திலும் இல்லாமலில்லை. ஆனால் அவை ஒரு ரசிகனை கொண்டாட்ட மன நிலையில் இருக்கும் அளவுடன் இருந்ததுதான் அந்தப் படத்தை சிகரம் தொட வைத்தது.

படத்தை இந்த அளவுக்கு சிலாகிக்க செய்தவர் ரஜினி ரஜினி ரஜினிதான். அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு, மின்னல் வெட்டிய மாதிரியான வேகம், அந்த நடை, நடனம், காந்தக் கண்கள், மிரள வைத்த சண்டைக் காட்சிகள்… வேறு எந்த நடிகராலும் நினைத்துப் பார்க்க முடியாத தனித்துவ நடிப்பு அது. அவருக்கு சரியாக ஈடு கொடுத்திருப்பார் வில்லன் ரகுவரன். ஜனகராஜ் உள்ளிட்ட ரஜினியின் நண்பர்கள், விஜயகுமார், தேவன் உள்ளிட்ட ரகுவரனின் அடியாட்கள்… நாயகி நக்மா என அனைவருமே நூல் பிடித்த மாதிரி பர்ஃபெக்ஷன் காட்டியிருப்பார்கள்.

அப்புறம்… மாஸ் என்ற வார்த்தைக்கே புது அர்த்தம் சொன்ன… ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு… ‘ காட்சி. யப்பா.. என்ன ஒரு காட்சி அது. அந்தக் காட்சியில் அத்தனை பேரையும் ஜஸ்ட் லைக் தட் மறக்கடித்திருப்பார் ரஜினி. உதடுகளில் ஒரு கோபப் புன்னகை, பார்வையில் அந்த டான்தனத்துடன், தன் ஆட்டோ ட்ரைவர் யூனிஃபார்வை இப்படியும் அப்படியும் ஒரு தட்டுத் தட்டியபடி, ‘தன் மும்பை வாழ்க்கையை’ சில விநாடிகளில் அவர் தொட்டுக் காட்ட, பதறியடித்து அந்த கல்லூரி முதல்வர் பம்மும் காட்சியும்… ‘அண்ணன்ன்ன்டாாா…’ என்று அலறும் காட்சி… சிம்ப்ளி அல்டிமேட்.

baasha-2

இத்தனைப் பெருமைகளுக்கும் சொந்தமான அந்த பாட்ஷா, 22 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தம் புதிதாக உலகெல்லாம், ஒரு புதிய படத்துக்கு நிகரான கோலாகலக் கொண்டாட்டங்களோடு இன்று வெளியாகியுள்ளது.

அத்தனை வகையிலும் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன்பு சத்யம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாகத் திரையிட்டார்கள். கூட்டமான கூட்டம். காட்சிக்குக் காட்சி அதிர்ந்தது அரங்கம். புதிய ஒளித்தரம், ஒலித் துல்லியம், புது பின்னணி இசை என அசத்தியது படம்.

சத்யா மூவீஸின் 50வது ஆண்டு விழா ஸ்பெஷலாக புதுப்பிக்கப்பட்ட பாட்ஷா வெளியாகியுள்ளது. தங்கள் தலைவரின் புதிய படத்தை எத்தனை கொண்டாட்டங்களுடன் ரசிப்பார்களோ, அதற்கு நிகரான கோலாகலத்துடன் பாட்ஷாவைக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். படம் வெளியாகும் அத்தனை அரங்குகளும் களைகட்டி உள்ளன. சமூக வலைத் தளங்களில் பாட்ஷா புதிய ட்ரெண்டாகியுள்ளது.

வாங்க பாட்ஷா பாய்.. சினிமாவில் உங்க இடம் எப்பவும் உங்களுக்கு மட்டும்தான்… புதுப்படம் வெளியாகும் போது மட்டுமல்ல, உங்க பழைய படம் மறுபடியும் வெளியாகும்போதும்!

-எஸ்எஸ்
One thought on “வாங்க ‘பாட்ஷா ரஜினி பாய்’… உங்க இடம் எப்பவும் உங்களுக்குத்தான், மறு வெளியீட்டின் போதும்! #WelcomeBhaashaBai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *