BREAKING NEWS
Search

ராஜபக்சே வருகைக்கு கண்டனம்: சேலத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு.. செருப்பால் அடித்து விரட்டக் கோரிக்கை!

ராஜபக்சே வருகைக்கு கண்டனம்: செருப்பால் அடித்து விரட்டக் கோரி சேலத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு!

 
சேலம்: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் இன்று அதிகாலை தீக்குளித்தார்.  அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்கள் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் விஜயராஜ்.

சேலம்  நெத்திமேடு அருகே உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் இந்த விஜயராஜ். இன்று அதிகாலை 5 மணி அளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஷேர் ஆட்டோ நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தமது ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்தார்.

அதன் பின்னர் “இந்தியாவுக்கு ராஜபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிய அருகே இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

இது தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடலில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக தீக்காயம் இருப்பதால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாம் தீக்குளித்தது குறித்து விஜயராஜ் கூறுகையில்,  ராஜபக்சே இந்தியா வருவதை யாரும் விரும்பவில்லை. இதனால் அவரது வருகையை தடுக்க வேண்டும், இதை வலியிறுத்தி தான் நான் தீக்குளித்தேன் என்றார்.

விஜயராஜ் தீக்குளித்தது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், ‘இலங்கை தமிழர்கள் மீது விஜயராஜ் பற்றாக இருப்பார். எப்போதும் இலங்கை பிரச்சினை பற்றித்தான் பேசி கொண்டார். இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே பேருந்து நிலையத்திற்கு வந்து விட்டார். விஜயராஜை பார்த்து நாங்கள் என்ன இன்று சீக்கிரம் வந்துவிட்டாய் என கேட்டதற்கு சிரித்தார். ஆனால் பதில் ஏதும் கூற வில்லை. சுமார் 5மணி அளவில் விஜயராஜ் என்ன நினைத்தாரோ பெட்ரோலை தன்மீது கொட்டி தீவைத்து கொண்டார். ராஜபக்சேவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்,’ என்றனர் அவர்கள்.

செருப்பால் அடிச்சு விரட்டுங்க ராஜபக்சேவை!

‘இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு இந்திய அரசு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்.

என்னுடைய உயிர் தியாகத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்ட வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது.

பலரது வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்..

வைகோ போராட்டம்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வரும் 21-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெறும் புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். அவரது இந்திய வருகைக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்துக்கே சென்று தொண்டர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. இதுகுறித்து அம்மாநில முதல்வருக்கும் தெரிவித்திருக்கிறார்.

-என்வழி செய்தி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *