BREAKING NEWS
Search

ஆந்திராவுக்குப் போனவங்க அடுத்த நாளே திரும்பிட்டாங்களோ!

பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி வங்கியில் ரூ 13 லட்சம் கொள்ளை!

திமுக ஆட்சி என்பதைக் கேட்டதுமே, தமிழகத்திலிருந்த கொள்ளையர்கள், பிக்பாக்கெட் திருடர்கள், வழிப்பறிக்கார்கள் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிப்போய்விட்டதாகக் கேள்விப்படுகிறேன்…”

-முகம் கொள்ளாத சிரிப்போடு, ஆனால் சீரியஸாகவே இதைச் சொன்னவர் ஜெயலலிதா. கடந்த ஆண்டு மே 13-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்ற அன்று நடந்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பில்.

அதன் பிறகு சட்டம் ஒழுங்கு அப்படியே சீரடைந்து குற்றங்களே இல்லாமல் போய்விட்டனவா என்றால்… ம்ஹூம், முன்னிலும் அதிகமாகவே செய்தது!

‘ஆட்சி மாறினால் என்ன… இருப்பது அதே போலீஸ்தானே’ என்று அன்றைய சந்திப்பில் ஒரு நிருபர் முணுமுணுத்தது 200 சதவீதம் உண்மையாகிப் போனது!

ஒரு பாதாம் காயைப் பொறுக்கப் போனதற்காக சிறுவனை இரக்கமின்றி சுட்டுக்கொன்றுவிட்டு கமுக்கமாக இருந்த முன்னாள் ராணுவ அதிகாரியைக் கைது செய்த ஒரு சாதனையைத் தவிர, வேறு எதையும் செய்யவில்லை.

கொள்ளைச் சம்பவங்களுக்கு குறைவில்லை. வழிப்பறி, செயின் பறிப்பு நிற்கவில்லை. திருட்டு டிவிடி முன்னிலும் அமோகமாக விற்கப்படுகிறது. பர்மா பஜாரில்தான் என்றில்லாமல், நகர் முழுக்க அத்தனை டிவிடி கடைகளிலும் நல்ல ‘பேக்’குகளில் ஒரிஜினல் போலவே கிடைக்கிறது.

முக்கியமான இன்னொரு ஒரு மாற்றம் நடந்திருக்கிறது. அது அரசு சார்ந்த போலீஸ் அத்துமீறல். முதல் உதாரணம், பரமக்குடி துப்பாக்கி சூடு. கிட்டத்தட்ட அரசே செய்த கொலை. ஒப்புக்கு ஒரு விசாரணை, நஷ்ட ஈடு. மற்றபடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய கடும் எச்சரிக்கையை விதைத்தாகிவிட்டது!

அடுத்தது தெருவுக்குத் தெரு நின்றபடி போலீசே வாகன ஓட்டிகளிடம் செய்யும் வழிப்பறி. முதல்வர் நிவாரண நிதிக்கு நிகராக குவிந்திருக்கும் போலிருக்கிறது, இந்த ‘ட்ராபிக் வழிப்பறி’யால்!

கடந்த மாதம் சென்னை பெருங்குடியில் அரசு வங்கியில் 24 லட்சம் கொள்ளையடித்துச் சென்றனர் அடையாளம் தெரியாத சிலர். அந்தக் கொள்ளைக்குக் காரணமான ஒருவரைக் கூட இன்றுவரை போலீசார் கைது செய்யவில்லை. ‘இந்தில பேசினார்களாம்… அதனால பீகார்காரங்களா இருப்பாங்களோ…’ என்ற துப்பு மட்டும்தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

துப்பு கெடக்கலே...

அந்தப் பரபரப்பு ஓய்ந்த சில தினங்களில் இன்று மடிப்பாக்கம் அருகில் உள்ள கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ 14 லட்சத்தை பட்டப் பகலில் நல்ல கூட்டம் இருக்கும்போதே கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். அதுவும் எப்படி… பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி, இந்தப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்!

ஒரு தடயமும் சிக்கவில்லை. வங்கியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படவில்லையாம். போலீஸார் துப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இந்த வங்கிக்கு நேர் எதிலே உள்ள பேருந்து நிலையத்துக்கு அப்பால்தான் மடிப்பாக்கம் போலீஸ் நிலையம் உள்ளது… ஜஸ்ட் 300 மீட்டர் தூரம்கூட இல்லை!

தனக்கு ஆகாதவர்கள் மீது புதுப்புது வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ள மட்டுமே போலீசைப் பயன்படுத்தினால்  மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில்தான் இருக்கும்.

சொந்த வேலைக்கு உயரதிகாரிகள் தனக்குக் கீழுள்ளவர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆட்சியின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் மொத்த போலீசாரையும் பயன்படுத்துகிறார்கள். கொள்ளையரிடமிருந்து மட்டுமல்ல, இவர்களிடமிருந்தும் நம்மை நாமே காப்பாத்திக்க வேண்டியிருக்கு!

-விதுரன்
3 thoughts on “ஆந்திராவுக்குப் போனவங்க அடுத்த நாளே திரும்பிட்டாங்களோ!

 1. கோடையிடி குமார்

  ஹா ஹா ஹா

  “தலீவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” அறிக்கை மாதிரியே இருக்கு…. இன்னும் 4 வருஷம் இந்த மாதிரி எதையாவது சொல்லிட்டு இருக்க வேண்டியது தான்…. வேற வழியில்லை…..

  முந்தைய ஆட்சியில் தலீவர்ர்ர்ர்ர்ர்ர்ர் குடும்பங்கள் மட்டும் ஆட்டைய போட்டது…. இப்போ அதே தலீவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பாணியில் மத்தவங்களும் ஆட்டைய போடறாய்ங்க….

 2. குமரன்

  அண்மைத் தகவல்

  ///சென்னையில் பயங்கர என்கவுன்டர் சம்பவம்: வங்கி கொள்ளையர்கள் 5 ‌பேர் சுட்டுக்கொலை !

  சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக்காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். இதை அறித்த கொள்ளயைர்கள் தப்பியோட நினைத்துள்ளதாக கூறப்படுகிது. அப்போது போலீசார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
  இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ///

  நமது மாநிலக் காவல் துறையை மனமாரப் பாராட்டவேண்டும். பலபேரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர்கள் பிடிக்கப் படாவிட்டாலும், சுட்டுக் கொல்லப்பட்டது பாராட்டப் படவேண்டிய துணிவான திடமான நடவடிக்கை.

  கவனிக்க வேண்டியவை:

  1 . கொள்ளையர்கள் “ஹிந்தியில்” பேசிய வட மாநிலத்தவர்கள்தான். பீகாரைச் சேர்ந்தவர்கள்.

  2 . கொள்ளையர்கள் வைத்திருந்தது பத்திரிகைகள் எழுதியது போலப் பொம்மைத் துப்பாக்கிகள் அல்ல.

  3 . சில துப்புக்கள் மிகவும் பயனுள்ளவை. பத்திரிகைகள், “அதுவும் முக்கியமான சமயங்களில், சமுதாயப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது” என்பது இதனால் அறியப் படுகின்றது.

 3. மிஸ்டர் பாவலன்

  விதுரன் என்ற பெயரில் எழுதுபவர் இதுவரை எழுதிய
  கட்டுரைகளில் பெரும்பான்மையானவை அ.தி.மு.க.
  கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராகவே உள்ளன, இந்தக்
  கட்டுரை உட்பட. நானும் பதில் எழுதவேண்டாம்,
  தி.மு.க. ஆதரவாளர்கள் படித்து மகிழட்டும் என
  விட்டு விட்டாலும் சில சமயங்களில் எழுதி ஆக
  வேண்டி இருக்கிறது.

  சில வாரங்களுக்கு முன்னாள் திருப்பார் ஆலுக்காஸ்
  நகைக் கடையில் ஒரு கொள்ளை நடந்தது. உடனே
  “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது”
  என இந்த வலையில் பல கட்டுரைகள் வந்து விட்டன.
  புரட்சித் தலைவி ஆட்சியில் தக்க நடவடிக்கை காவல்
  துறை எடுக்கும் என நான் அன்றே குறிப்பிட்டேன்.
  நமது நம்பிக்கை வீண் போக வில்லை.

  இன்று நான் படித்த செய்தி:
  “திருப்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக, போலீசார் 3 பேரை
  பிடித்து விசாரித்து வருகின்றனர்.. இவர்கள் மேற்குவங்கம் மற்றும்
  ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள் ஆவர். வடமாநிலங்களை சேர்ந்தவர்கள்
  இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற விசாரணையின்
  அடிப்படையில், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில்
  போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில்,
  ஜார்க்கண்ட் மாநிலத்தில், கொள்ளை தொடர்பாக 3 பேர் பிடிபட்டனர்.
  திருப்பூர் டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான குழு,
  அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. மேலும்
  இதனுடன் தொடர்புடைய மற்றவர்களை விரைவில் பிடிப்போம்
  என்று ராஜாராம் கூறினார். ”

  புரட்சித் தலைவியின் சிறப்பான ஆட்சிக்கு இது ஒரு சிறிய சான்று.

  நடிகர் எஸ். வி. சேகரைப் பற்றி சில நாட்கள் முன்பு எழுதி இருந்தேன்.
  அவர் இப்போது அ.தி.மு.க. கட்சியில் சேர இருக்கிறார். செய்தியைக்
  கேட்டு மிகவும் மகிழ்வுற்றேன். அம்மா தயாள மனதுடன் அவரை
  கட்சியில் இணைத்துக் கொண்டால் நல்லது. காங்கிரஸ் கட்சியில்
  சேர்ந்து சேகருக்கு போதிய மதிப்பில்லை. அம்மா ஆட்சியில் அவர்
  பணி செய்ய விரும்புவதால் கடிதம் எழுதி இருக்கிறார். விரைவில்
  அவருக்கு ஒரு நல்ல செய்தி அம்மா கொடுப்பார் என நம்புவோம்.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *