BREAKING NEWS
Search

அரவான் – எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா?

அரவான் – சினிமா விமர்சனம்

டிப்பு: ஆதி, பசுபதி, தன்ஷிகா, பரத், அஞ்சலி, சிங்கம் புலி
இசை: கார்த்திக்
ஒளிப்பதிவு: சித்தார்த்
எழுத்து – இயக்கம்: வசந்தபாலன்
தயாரிப்பு : டி சிவா

மக்கள் தொடர்பு: நிகில்

பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வரும் படங்களுக்கு நேரும் விபத்தில் இந்த முறை துரதிருஷ்டவசமாக சிக்கிக் கொண்டிருப்பது வசந்தபாலனின் அரவான்!

மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய, களவையே பிரதானமாகக் கொண்ட ஒரு பகுதி தமிழ் மக்களின் வரலாறு என்ற அறிவித்தலோடு இந்தப் படம் வந்திருக்கிறது.

திருட்டு, களவு, கொள்ளை.. எந்த வார்த்தையில் சொன்னாலும் திருட்டுக்கு ஒரு மரியாதை கிடையாது. களவு இழிவே, அது எத்தனை நூற்றாண்டுகள் கடந்ததாக இருந்தாலும் பெருமைக்குரிய வரலாறாகிவிடாது. களவை விலாவாரியாகக் கொண்டாடும் அளவுக்கு, அது இழிவு என்பதை சொல்லக் கூட படைப்பாளிகள் விரும்பவில்லை என்பதை என்ன வகை மனநிலை, ரசனை, அறிவுஜீவித்தனம் என்பது!

படத்தின் கதை பல பாராக்களை விழுங்கக் கூடிய அளவு நீ…ளம்.

இது நம்மால் முடிந்த கதைச் சுருக்கம்:

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தலையாரி எனும் வில்லேஜ் போலீஸான ஆதியை நரபலி கொடுப்பதற்காக அவனது சொந்த கிராமமே தேடிக்கொண்டிருக்கிறது.

பத்து வருடம் தலைமறைவாக வாழ்ந்துவிட்டு வந்தால், மறந்து மன்னித்து விட்டுவிடுவார்கள் என்று ஆதியின் அம்மாவும் மாமனாரும் சொல்ல,  தன் பெயரை மாற்றிக் கொண்டு வேம்பூர் எனும் ஊரில் களவுத் தொழில் (?) செய்து வாழும் ஆதி, ஒன்பதாவது வருடத்தில் தனது ஊர்க்காரர்களிடம் மாட்டிக்கொண்டு, ‘அரவானா’கிப் போவதுதான் படம்.

ஏன் இந்த நரபலி என்பதையெல்லாம் பொறுமையைத் துணைக்கு வைத்துக் கொண்டு தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்!

முதல் பாதி முழுக்க, தமிழர்கள் களவுத் தொழிலை எத்தனை நுணுக்கமாக செய்தார்கள், அதில் அவர்களின் நிபுணத்துவம், மனிதாபிமானம், கொள்கை, கன்னம் வைத்தல் எனும் கலையை உலகுக்கே அறிமுகம் செய்த பெருமைதான்!

இந்த விஷயங்களை அத்தனை விஸ்தாரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கொஞ்சம் தவறினாலும் அது ஒரு ஆவணப்படம் என்று தாராளமாகச் சொல்லிவிட முடியும். அத்தனை நுணுக்கம். வரலாறு முக்கியமல்லவா!

18-ம் நூற்றாண்டு என்பதால், ஒவ்வொரு காட்சியிலும் அதற்கேற்ற பின்னணியைக் கொண்டுவருவதில் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள்.

களவை தொழிலாக இந்த மக்கள் எதற்காக ஏற்கிறார்கள், அவர்களே காவல்காரர்களாக ஏன் மாறுகிறார்கள்? பிரிட்டிஷார் வில்லேஜ் போலீஸை நியமித்ததற்கு நாவலில் விவரித்துள்ள காரணங்களை நாசூக்காக சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சினிமா என்ற பொழுதுபோக்கு வடிவத்துக்குள் அடங்க மறுக்கும் அளவுக்கு ஆவணமயமாக்கம்… பார்வையாளன் கண்களை சுழட்டியடிக்கிறது!

நடிப்பில் ஆதி உயிரைக் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே வியக்கச் செய்யும் உழைப்பு. ‘கடைசி காட்சியில் உண்மை மட்டும்தான் இருக்கு, ஆதாரமில்ல’ எனும் இடத்தில் ஆதியின் நடிப்பில் எழுத்தாளரும் எட்டிப் பார்க்கிறார்.

ஆதி ஜோடியாக வரும் தன்ஷிகா எவ்வளவுதான் முயன்றாலும், அந்த கண்டாங்கி சேலையை மீறி நவீனத்தனம் எட்டிப் பார்க்கிறது. அந்த நிலா பாடலில் யார் ஆதி, யார் தன்ஷிகா என்றே தெரியவில்லை!

பசுபதி மகா ஓவராக்டிங் (நடிப்புக்கு தீனியில்ல தீனியில்ல என்று கூறி ஒரேபடத்தில் மொத்தமாக தீனிபோட்டா இப்படித்தான்!). அவருடன் இந்த விஷயத்தில் போட்டி போடுகிறார் வில்லன் கரிகாலன். ஏதோ ஏர்வாடி தர்காவிலிருந்து தப்பித்துவந்த பாய் மாதிரி ஒரு கெட்டப்!

படம் முழுக்க ஆண்கள் மட்டும் கருகும்மென்று இருட்டாகவே திரிகிறார்கள். பண்டைய மதுரைப் பக்கத்தில் செவத்த தோல் ஆண்களும் இருந்தார்கள் என்பதை யாரும் சொல்லவில்லையோ!

அர்ச்சனா கவி, அஞ்சலி, பரத் என பலரும் உள்ளனர். பரத் – அஞ்சலி காதல் பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. பரத்தின் தோற்றம் ஈர்க்கவில்லை. அத்தர் வியாபாரியாக நுழைந்து, அத்தனை திறந்த, காவல் மிக்க அரண்மனையில் அவர் மகாராணியுடன் சல்லாபிக்கும் விதமெல்லாம், ஏதோ விக்கிரமாதித்தனுக்கு பதுமைகள் சொல்லும் தாசிகள் கதை ரேஞ்சுக்கு உள்ளது!

பாளையத்தின் அந்த கிழட்டு ராஜா அசத்தியிருக்கிறார்.

அந்த அரைஞாண் கயிற்றின் பிளாஷ்பேக்கை தாசி ஸ்வேதா மேனன் தேடும் விதமிருக்கிறதே, என்னமா ‘ஆராய்ச்சி’ பண்ணியிருக்காங்க. அன்றைய களவுச் சமூக நிலையை வைத்துப் பார்த்தால், அதில் ஒரு லாஜிக் இருப்பதும் உண்மைதான்!

படத்தில் ஒன்றவிடாத அளவு எரிச்சலுக்குள்ளாக்குகிறது சித்தார்த்தின் கேமரா. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு காடும் மலையும் நதியும் அருவியும் இருட்டு கலந்த மங்கல் நிறத்தில் இருந்திருக்கும் என்பது இவர்கள் நினைப்பு. சோழன் காலத்திலும் பாண்டியன் காலத்திலும் பாளையக்காரன் காலத்திலும் இயற்கை நிறம் ஒண்ணுதானப்பா. அதுக்கு நீங்களா ஒரு ‘பெயின்ட் அடிச்சி’ பாத்தா இப்படித்தானிருக்கும்!

இந்தப் பக்கம் வறண்ட மலைக்காடு… கூப்பிடு தூரத்தில் சலசலத்து ஓடும் நதி.. பச்சை பசுமை. ஆனால் மக்கள் தொழில் களவு. தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் அத்தனை விளக்கமாக காட்சி வைத்தவர்கள், இந்த பொருளாதார முரண்பாட்டுக்குரிய காரணத்தைச் சொல்லிருக்கலாமே. மதுரையை சரியாக ஆராய்ந்தவர்களுக்கு அது தெரிந்திருக்கும்தானே!

அதேபோல இசை. கழுத்தறுபட்டு செத்துக் கிடக்கும் பரத்தைக் காட்டுகிறது காமிரா. ஒரு திருவிழா மூடுக்கான உற்சாகத்துடன் பின்னணி இசை! பாடல்களில் நிலா நிலா கேட்கலாம்… பார்க்கலாம்!

எடுத்த காட்சிகளெல்லாம் நன்றாக இருக்கின்றன… பாத்து வெட்டுங்க என்று எடிட்டர்களின் பக்கத்திலிருந்து சொல்லிக் கொண்டே இருந்திருப்பார் போலிருக்கிறது வசந்தபாலன்! இந்த நத்தை வேகம்… சில நேரங்களில் இருக்கையோடு கட்டிப் போடுகிறது உறக்கம்!

ஒரு நவீன வரலாற்றுப் படம்… கதைக் களம் தெளிவாகக் கிடைத்திருக்கிறது. ஆனால் சுவாரஸ்ய காட்சிகளால் பார்ப்பவர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் செய்திருக்க வேண்டாமா வசந்தபாலன்… இத்தனை குறைகளை அடுக்கும் அளவுக்கா விடுவது. சரீ…, இதில் மரண தண்டனைக்கெதிரான பிரச்சாரம் எங்கே வந்தது?

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, அபார உழைப்பு… ஆனால் பாதி விழலுக்கு என்றாகிவிட்டதுதான் வருத்தம்!

-எஸ்.ஷங்கர்
என்வழி ஸ்பெஷல்
10 thoughts on “அரவான் – எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா?

 1. James

  I think, this is the first ever genuine review on Aravaan. Most of the bloggers and some writers blindly blowing high for this half baked movie. Good one Shankar sir.

 2. raj

  vino:do u keep noticing that in recent times the so called attention seeking PRO is been belittling super star. i know that he works for the other actor but trumpet which he blows now is kind’a irritating, is it grab attention to attract buyers for the movie

 3. kabilan

  நல்ல விமர்சனம் வினோ அண்ணா.நானும் பார்த்தேன்.அனால் வசந்தபாலன் நல்ல இயக்குனர் .இந்த படத்தில் விட்டதை அடுத்த படத்தில் பிடிபார்

 4. மிஸ்டர் பாவலன்

  போட்டோவைப் பாக்கறதுக்கு பயங்கரமா இருக்கே..
  இதையெல்லாம் தியேட்டர்ல குடும்பா உக்காந்து
  பாக்க முடியுமா? நமக்கு எல்லாம் சம்பூர்ண
  இராமாயணம், தசாவதாரம் மாதிரி படம் தான் சரி!

  -== மிஸ்டர் பாவலன் ===-

 5. Yuvan Rasigan

  ரஜினி அடுத்த படம் – டைரக்டர் கே.வி.ஆனந்த். இன்று ஜூனியர் விகடன் செய்தி.

  கே.வி.ஆனந்த் டைரக்டர் என்றால் ஹாரிஸ் தான் மியூசிக். வினோ & fans ரஜினி சார் + யுவன் கூட்டணி வேண்டும்.

  – யுவன் ரசிகன்

 6. Manoharan

  எல்லா தளங்களிலும் எதிர்மறையான விமர்சனங்கள்தான் வந்திருக்கிறது. தலைவலி வராமல் தடுத்ததற்கு நன்றி. ஆக, இப்போதைக்கு காதலில் சொதப்புவது எப்படிக்கு போட்டியே இல்லை. படத்தின் Graph ஏறிக்கொண்டே இருக்கிறது. அரவானுக்கு டிக்கெட் புக் செய்ய இருந்த நான் விமர்சனங்களை பார்த்தவுடன் மீண்டும் அமலா பாலை பார்க்க முடிவு செய்துவிட்டேன். Booked for KSE again.

 7. மிஸ்டர் பாவலன்

  //ரஜினி அடுத்த படம் – டைரக்டர் கே.வி.ஆனந்த்.
  இன்று ஜூனியர் விகடன் செய்தி.///

  நண்பர் வினோ அவர்களே.. நீங்கள் முன்பு கே.எஸ். ரவிகுமாரிடம்
  விசாரித்து வலையில் எழுதியது போல் அவர் அசிஸ்டன்ட் ஆனந்திடம் விசாரித்து சொல்லுங்கள். செய்தி பரபரப்பாக இருக்கிறது!! செய்தி
  உண்மை என்றால் சூப்பர் நியுஸ்!!!

  -== மிஸ்டர் பாவலன் ===-

 8. வெங்கடேஷ்

  இந்தப் படத்துக்கு எனக்குத் தெரிந்து தமிழில் வந்துள்ள ஒரே அறிவார்ந்த விமர்சனம் இதுதான். நன்றி ஷங்கர் சார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *