BREAKING NEWS
Search

தொடங்கட்டும் சமூகநீதிப் போர்! – சுபவீ

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்!

– சுபவீ

subavee1தீர்ப்பு வந்தால் தெளிவு வரும் என்பார்கள்.  ஆனால், தீர்ப்பு வந்தபின்தான் குழப்பம் கூடியுள்ளது!  அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் ஆணையையும், சட்டத்தையும் எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 16.12.2015 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி, இனிமேல் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்புள்ளதா என்று கேட்டால், தேர்ந்த வழக்கறிஞராலும் விடை சொல்ல முடியவில்லை.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அட்டவணைச் சாதியினரின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட  இளையபெருமாள் ஆணையம், 1969 ஆம் ஆண்டு,  சமூகநீதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்னும் பரிந்துரையை அளித்தது.

சாதி  இழிவை ஒழித்திட, தாழ்த்தப்பட்ட மக்களோடு 26.01.1970இல் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தந்தை பெரியார் அறிவித்திருந்தார்.

இச்சூழலில், அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தை 02.12.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார். 1971 சனவரியில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அது சட்டமாகியது. எனினும், சேஷம்மாள், எத்திராஜ் ஜீயர் உள்ளிட்ட 12 பேர் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாக, அது முடங்கிப் போயிற்று.

subavee2
எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சர் ஆன பிறகு, இது தொடர்பாக ஆராய்வதற்கு, 24.09.1979 அன்று, நீதிபதி மகாராசன் தலைமையிலான 12 பேர் குழுவை அமைத்தார். அக்குழு, 1982இல் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. சாதி அடிப்படையில் உச்சநீதி மன்றம் எத்தடையும் விதிக்கவில்லை என்றும், ஆகமப் பயிற்சி அர்ச்சகர்களுக்குக் கண்டிப்பான தேவை என்றும் அது பரிந்துரைத்தது. அதன்படியே ஆகமப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இன்று அந்தப் பள்ளிகளில் பயின்று ஆகமத் தேர்ச்சி பெற்ற 206 பேர் அர்ச்சகர் ஆவதற்குக் காத்துள்ளனர்.

இதற்கிடையில், 2002 ஆம் ஆண்டு கேரளாவில் ஒரு வழக்கு நடைபெற்றது. ஆதித்யன் என்பவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து நடந்த வழக்கு அது. நம்பூதிரிப் பார்ப்பனர் அல்லாத ஒருவரை அக்கோயிலின் அர்ச்சகராக நியமித்தது செல்லாது என்று தொடுக்கப்பட்ட அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதி அடிப்படையில் மட்டுமே ஒருவரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்பது இந்திய அராசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீதி மன்றம் கூறிவிட்டது.

கேரள நீதிமன்றத் தீர்ப்பு, மகராசன் குழு அறிக்கை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் அரசு ஆனையை 23.05.2006 அன்று, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. பிறகு அதனையே 2006 ஜூலையில் சட்டமாகவும் ஆக்கியது.அதனை  எதிர்த்து,2006 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட வழக்கில்தான், உச்சநீதி மன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பதின் மூலம், அச்சட்டம் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ஆகமப் பயிற்சி பெற்றோர் மட்டுமே என்று கூறாமல், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இங்கேதான் குழப்பம் தொடங்குகிறது. ஆகமப்படி என்றால், ஒரு குறிப்ப்பிட்ட சாதியினர் மட்டும்தானே அர்ச்சகர் ஆக முடியும்? மீண்டும் 1971 ஆம் ஆண்டு திரும்பிவிட்டதே என்று பலரும் கவலை கொள்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என்று தலைவர்கள் சிலர் அறிக்கை விட்டுள்ளனர்.

இத்தீர்ப்புக்   கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆகமங்கள் சாதி அடிப்படையில்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. ஆகமங்களைப் பற்றிப் படித்துள்ள என் போன்றோர் மட்டுமின்றி, ஆகமங்களையே படித்துள்ள சத்தியவேல் முருகனார் போன்றோரும் இவ்வாறே கூறுகின்றனர்.

ஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்களே அன்றி வேறில்லை. கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குடமுழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம்பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு,  வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு.

சிவாகமங்கள் மொத்தம் 28, வைணவ ஆகமங்கள் (சம்ஹிதைகள்) இரண்டு, சாக்த தந்திரம் ஒன்று, கௌமாரத் தந்திரம் ஒன்று என 32 ஆகமங்கள் உள்ளன என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் சிவாகமங்கள் ஒன்பதும், வைணவ ஆகமங்கள் இரண்டும்தான் உள்ளன. அவற்றுள்ளும், காமிய ஆகமம்தான் 90 சதவீதக் கோயில்களில் பின்பற்றப்படுகின்றது. அடுத்துக் காரணாகமம் பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம், தில்லைக் கோயிலில் மகுட ஆகமம் பின்பற்றப்படுகிறது. அவ்வளவுதான். வைணவக் கோயில்களில் (தென்கலை), பாஞ்சரத்னம், வைகானசம் ஆகிய இரு சம்ஹிதைகளும் வழக்கில் உள்ளன.

இவற்றில் எந்த ஒன்றும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத்  தடுக்கவில்லை.

தடுத்தாலும், ஆகமங்கள் அப்படி ஒன்றும் மீறப்படாதவை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 36000 கோயில்களில், 2000க்கும் குறைவான கோயில்களில் மட்டுமே, ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று, தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணனும், வழக்கரிஞார் ராமமூர்த்தியும், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டனர்.

டிசம்பர் 31 ஆம் தேதி இரவு எல்லா இந்துக் கோயில்களும் திறந்து வைக்கப்படுகின்றனவே, அதே எந்த ஆகமத்தின் கீழ் என்பதற்கு யாரேனும் விடை சொல்வார்களா? ஜனவரி ஒன்றாம் தேதிக்கும், இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு?

உருவ வழிபாட்டை ஏற்காத, நெருப்பை வணங்குகிற ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரி போன்றவர்கள்), கோயில் கொடிக் கம்பம் தாண்டி வரக்கூடாது என்று காரண ஆகமம் கூறுகிறதே, அது நடைமுறையில் உள்ளதா?

எனவே, இந்த நீதிமன்ற ஆணையைப் பயன்படுத்தி, அனைத்துச் சாதியினரையும் அரசு உடனடியாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். அதுவே சமூக நீதி. அய்யா பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற்கான  நேரம் இதுவே !.

அரசு நீதியை நிலைநாட்டத் தவறுமேயானால், சமூகநீதி கோரி ஒரு சமூகப் போரை அறவழியில் நாம் அனைவரும் தொடங்க வேண்டும். சட்ட வழியிலான போர் முடிந்துவிட்டது. சமூகப் போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது!

 
2 thoughts on “தொடங்கட்டும் சமூகநீதிப் போர்! – சுபவீ

  1. குமரன்

    36000 கோவில்களில் ஒரு 206 கோவில்களில் இந்தப் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க எந்தத் தடை இருந்தது? எத்தனையோ கோவில்களில் பாரம்பரிய உரிமையின் படிப் பூஜை செய்ய ஆள் இல்லாத சூழ்நிலையில், அவற்றை அருகிலுள்ள பெரிய கோவில்களின் அர்ச்சகர்கள் கூடுதல் பணியாகக் கவனித்து வருவது பலரும் அறிந்ததே. அத்தகைய கோவில்களில் இவர்களை நியமித்திருந்தால் இந்த வழக்கு நடந்து முடியும் வரை இவர்கள் காத்திருக்க அவசியமே இல்லையே? இந்த விஷயத்தில் அரசியல்தான் முதல் நோக்கம், காரியம் ஒப்புக்கு என்ற நிலைப்பாட்டை திமுக அதிமுக இரு கட்சிகளும் எடுப்பதுடன், ஒத்து ஊதும் திக, கம்யூனிஸ்ட், விசி போன்ற கட்சிகளும் அரசியலை மட்டுமே குறியாக வைத்திருப்பதால்தான் பிரசினை முடியவில்லை. முதலில் எந்தக் கோவிலானாலும் சரி என்று உள்ளே நுழைந்துவிட்டால் பின்னர் எல்லாவற்றிலும் நுழைவது எளிது என்ற நடைமுறையை எவரும் நினைப்பதில்லை என்பதுதான் வேதனை. பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா என்று கவுண்டமணி நகைச் சுவைக்காகச் சொன்னாலும் அதிலும் வாழ்வியலுக்கான தீர்வு இருப்பதை உணரமறுக்கும் அரசியல் இதுவே.

    இன்னொரு தீர்வும் இருக்கிறது. உதாரணமாக மயிலைக் கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான கிரீன்வேஸ் சாலயிலுள்ள பெரும் நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டுவிட்டதாக அறநிலையத் துறை தம்பட்டம் அடித்துக் கொண்டது நினைவிருக்கும். மீட்டு அதை வேறொருவரிடம் வாடகைக்குத் தருவதற்குப் பதிலாக, அந்த இடத்தில் இன்னும் ஒரு கபாலீஸ்வரர் திருக் கோவிலை அதே கபாலீஸ்வரர் கோவிலின் உபரி நிதியிலிருந்து கற்றளியாகவே வெகு நேர்த்தியாக எழுப்பி, அத்திருக்கோவிலில் இப்படிப் பயிற்சி பெற்றவர்களை நியமித்தால் எந்தத் தடையும் வர வாய்ப்பே இல்லை. இதைச் செய்ய திமுகவும் அதிமுகவும் முன்வரமாட்டார்கள். இப்படி எல்லாப் பெரிய கோவில் நிலத்திலும் மேலும் கோவில் கட்டிவிட்டால், அந்த நிலத்தைக் குத்தகைக்குத் தரத் தாங்கள் வாங்கும் லஞ்சம் குறையுமே?

    அதுபோக திகவும், கம்யூனிஸ்டுகளும் கோவில் பணத்தை மீண்டும் கோவிலுக்கே செலவிடும் மத வெறியை, பார்ப்பனீயத்தை அனுமதிக்க மாட்டார்களே? கோவில் பணத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையிடுவதைப் பார்ப்பனீயம் என்று இவர்கள் கூற மாட்டார்கள், ஏனெனில் இவர்களில் சிலருக்கே கூடக் குத்தகைக்கு கோவில் நிலம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

  2. Prasanna Subramanian

    Sami illainnu solra ungalukku ithai patthi enna kavalai? Rettai Vesam Podum Nayavarhal Ivarhal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *