BREAKING NEWS
Search

ஐ-போன் 5 – ஒரு சிறப்பு பார்வை

ஐ-போன் 5 – ஒரு சிறப்பு பார்வை

-செ.சக்திவேல்

ப்பிள் என்றாலே ’காஸ்ட்லி’ என்பது ஒருபுறமிருக்க அது உருவாக்கும் பரபரப்பு எப்போதுமே டெக்னாலஜி உலகில் ஸ்பெஷல் தான்.

அமெரிக்காவில் 10 மணி வரை உறங்கிக் கொண்டிருப்பவர் கூட இன்று மட்டும் காலை 8 மணிக்கே உறக்கத்தை மூட்டை கட்டி வைத்திருப்பார்கள்.

காரணம், இன்று தான் உலகமே மிகமிக ஆவலுடன் எதிர்பார்த்த ஐ-போனின் அடுத்த வெர்ஷனான ஐ-போன் – 5 என்ற புதிய மாடலை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐ-போனை அறிமுகப்படுத்திய போது மொபைல் பாவனையாளர்களிடையே எந்தளவுக்கு பரபரப்பு இருந்ததோ அதே பரபரப்பு அதன் அடுத்தடுத்த அத்தனை மொபைல் அறிமுகத்திலும் இருந்தது. இது ஆப்பிள் நிறுவனத்தின் மீதும், அதன் தயாரிப்புகளின் தரத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையைத் தான் காட்டுகிறது.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இன்று அறிவித்திருக்கும் ஐ-போன் – 5 மாடல் மொபைலும் தரத்துக்கும், பல புதிய மல்டிமீடியா வசதிகளுக்கும் பேர் போன ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த ’ஐ-போன் 5’ மாடலில் ஆப்பிளின் புதிய மேம்படுத்தப்பட்ட A-6 அதிவேக டூயல்கோர் ப்ராஸஸர் மற்றும் ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட ஒ.எஸ் 6 என்ற புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த ப்ராஸஸர் மற்றும் மென்பொருள் 6 இன்னும் நமக்கு பல புதிய வசதிகளை இந்த மொபைலில் வேகமாக கையாள உதவி செய்யும்.

சரி இனி ஐ-போன் – 5 மாடலின் சிறப்பம்சங்களை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

முக்கிய அம்சங்கள் :

# அகலமான 4” இன்ச் ~326 பிபிஐ பிக்ஸல் டென்சிடி ஹை-ரெசுலுயூசன் கொண்ட கவர்ச்சியான ரெட்டினா திரை

# 100 எம்.பி.பி.எஸ் வரை வேகமாக இணைய இணைப்பைத் தரும் எல்.டி.ஈ  4ஜி நெட்வொர்க் சப்போர்ட்

# மற்ற மொபைல்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள A2DP உடன் அதிவேக ப்ளூடூத் 4 வெர்ஷன் கொண்டது.

#  40 மணி நேரம் நான் – ஸ்டாப்பாக இசையை ரசிக்க 10 நாட்கள் வரை தாக்குப் பிடிக்கும் உயர்ரக திறன் கொண்ட பேட்டரி

# ஃபுல் ஹெச்டி ( FULL HD ) குவாலிட்டியில் ரெக்கார்டிங் செய்யக்கூடிய 8 மெகாபிக்ஸல் கேமரா

# வெறும் 112 கிராம் எடை கொண்ட ஒரே கையால் தொட்டு பயன்படுத்தக்கூடிய 7.6 மெல்லிய அமைப்பு

வடிவமைப்பு :

இந்த மாடலின் திரை 4” இன்ச் என்ற அளவில் இருந்தாலும் எடை என்னவோ வெறும் 112 கிராம் தான். இதற்கு முன்பு வெளியான ஐ-போன் மாடல்களை விட பார்ப்பதற்கு மிகவும் மெல்லியதாக மிக அழகாக தோற்றமளிக்கும் வகையில் 7.6 மில்லிமீட்டர் அளவுக்கு வடிவமைக்கப் பட்டுள்ளது. அதாவது முந்தைய ஐ-போன் 4s ஐ விட 20 சதவீதம் குறைந்த எடையுடனும் 18 சதவீதம் மெல்லியதாகவும் இருக்கிறது. இதனால் இந்த போனை நாம் ஒரு கையில் வைத்தே மிக எளிதாக பயன்படுத்த முடியும்.

மொபைலின் மேல்பகுதியில் ஆன் – ஆப் பட்டனும், இடதுபக்கத்தில் வால்யூம் அதிகரிக்கும் மற்றும் குறைக்கும் பட்டன் மற்றும் ஸைலண்ட் மோடு பட்டன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீனுக்கு கீழே வழக்கமான ஹோம் பட்டன் மற்றும் அடிப்பகுதியில் ஸ்பீக்கர், மைக்ரோபோன், யு.எஸ்.பி கனெக்டர் மற்றும் ஸ்டாண்டர்டு 3.5 எம்.எம். மியூசிக் கனெக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாடல்களில் 3.5 எம்.எம் மியூசிக் கனெக்டரை மேல் பகுதியில் வைத்திருந்த ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக இந்த மாடலில் கீழ்பகுதியில் அந்த வசதியை மாற்றி வைத்துள்ளது.

மேலும் இந்த மொபைலின் பின்பக்கத்தின் வடிவமைப்புக்காக ஆப்பிள் நோட்புக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்த மிக உயந்த அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் மொபைல் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

4” இன்ச் அகலத்திரை :

மொபைல் உலகில் ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஃபுல் மல்டிடச் தொடுதிரை மொபைலை அறிமுகப்படுத்திய போது மற்ற நிறுவனங்களுக்கு அது சிம்ம சொப்பனமாக விளங்கியது. அதன் விளைவாக அந்த நிறுவனங்களும் அதே வசதிகள் கொண்ட மொபைல் போன்களை தனது வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது யாரைப் பார்த்தாலும் டச்-ஸ்கிரீன் மொபைலைத்தான் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் ஐ-போனில் இருக்கும் அந்த இயல்பான ஃடச் ஃபீல் இன்று ஆண்ட்ராய்டு மொபைல் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம் உட்பட வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்பிலும் முழுமையாக இல்லை என்பது தான் உண்மை. இப்போது டச்-ஸ்கிரீன் மொபைலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதன் திரை அகலமாகத் தேவைப்படுகிறது. அதனால் ஆண்ட்ராய்டு மொபைல்களை தயாரித்து வழங்கும் சாம்சங், சோனி, எல்.ஜி.எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் 4” இன்ச், 4.6” இன்ச், 5” இன்ச் என பெரிய அகலத்திரையுடன் மொபைல் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.

அதனால் ஆப்பிள் நிறுவனமும் இந்த ஐ-போன் – 5 மாடலின் திரையை 4” இன்ச் என்ற சைஸில் வடிவமைத்துள்ளது. எல்லோருக்கும் ஒரு வழி என்றால் ஆப்பிள் மட்டும் தனக்கென்று ஒரு தனி வழியை உருவாக்கிக் கொள்ளும். ஆமாம், மொபைல் திரையைப் பொறுத்தவரை சாம்சங், எச்.டி.சி உட்பட மற்ற நிறுவனங்கள் எல்லாம் ஏ.எம்.ஒ.எல்.இ.டி ( AMOLED ) என்ற டிஸ்ப்ளேவை பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக சாம்சங் நிறுவனம் இந்த வகை டிஸ்ப்ளேவைத் தான் தனது உயர்ரக ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தி வருகிறது.

ஆனால் மற்றவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தக் கூடாது என்பதில் முடிந்தவரை பிடிவாதமாக இருந்து வரும் ஆப்பிள் நிறுவனம் அது தனது இன்ஜினியர்களை கொண்டு புதிதாக கண்டுபிடித்த ரெட்டினா டிஸ்ப்ளே (RETINA DISPLAY) டெக்னாலஜியைத் தான் அதன் தயாரிப்புகளில் பயன்படுத்தி வருகிறது. இந்த டெக்னாலஜி கொண்ட ரெட்டினா டிஸ்ப்ளே இந்த ‘ஐ-போன் 5’ மாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளதால் இந்த டிஸ்ப்ளேவில் 1136-by-640 என்ற ஹை-ரெசுயூலுசனில் படங்களும், ஃபுல் ஹெச்டி வீடியோக்களும் பார்ப்பதற்கு மிக தெளிவாகவும், அட்டகாசமாகவும் இருக்கும்.

# கேமரா மற்றும் வீடியோ :

கேமராவைப் பொருத்தவரை முன்பக்க வீடியோ காலிங் வசதியைக் கொடுக்கும் கேமரா மட்டும் 1.2 மெகா பிக்ஸலாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. பின்பக்க கேமராவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய 4 எ.ஸ் மாடலில் கொடுக்கப்பட்ட அதே 8 மெகாபிக்ஸல் கேமரா தான் இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் பனோரமா மோடில் எடுக்கப்படும் புகைப்படங்கள் 28 மெகாபிக்ஸல் வரையிலான குவாலிட்டியை தருமாம். மேலும் இதில் இருக்கும் படங்களை எடிட் செய்யும் மென்பொருள் மூலம் ரெட் ஐ நீக்கும் வசதி, க்ராப் செய்யும் வசதி, படங்களை ரொட்டேட் செய்யும் வசதி என ஒரு ப்ரொஃபெஷனல் கேமராவில் இருக்கக்கூடிய பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான 1080p என்ற அளவில் ஃபுல் ஹெச்டி வீடியோ ரெக்கார்டிங் ( FULL HD VIDEO RECORDING ) வசதியும் இதில் உண்டு.

இதில் இருக்கும் ’ஐ-மூவி’ என்ற மென்பொருள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை நாம் விரும்பிய அளவில் ட்ரீம் செய்து கொள்ளலாம். வீடியோக்களை எடிட் செய்து ட்ரெய்லராக அல்லது ஒரு திரைப்படமாக மாற்றிக் கொள்ளலாம். மேலும் வீடியோக்களை அதே உயர்ரக தரத்துடன் 20 சதவீதம் குறைந்த பைல் சைஸுடன் மற்றவர்களுடன் எஸ்.எம்.எஸ் அல்லது இ-மெயில் மூலம் நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

# மேப் :

மேப்பை பொருத்தவரை இந்த மொபைலில் இன்பில்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கும் மேப் கூடுதலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் அருகாமையிலுள்ள இடங்களைப் பற்றிய துல்லியமான விபரங்கள் மற்றும் நீங்கள் இருக்கும் இடத்தின் ட்ராபிக் நிலவரங்கள் ஆகியவற்றை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சிரி (Siri):

ஆப்பிள் அறிமுகப்படுத்திய இந்த ‘சிரி’ என்ற மென்பொருள் இந்த மாடலில் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனிடம் நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு சரியான பதில் கிடைக்கும். இந்த மென்பொருளை பயன்படுத்தும் வசதி இன்னும் இந்தியாவில் வரவில்லை.

போன்கால் வசதி :

போன்கால் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. மொபைலில் இன்பில்ட்டாக அமைக்கப்பட்டிருக்கும் மைக்ரோபோன் மூலம் நமது அருகில் இரைச்சல் இல்லாமல் மிகத்தெளிவான உரையாடலை நாம் நமது நண்பர்களுடன் மேற்கொள்ள முடியும்.

ஃபேஸ் டைம் :

இதில் இருக்கு ‘ஃபேஸ் டைம்’ என்ற முன்பக்க விடீயோ காலிங் கேமரா வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை இதன் முன்பக்க கேமராவைப் பயன்படுத்தி வை-பை இண்டெர்நெட் இணைப்பு மூலமாக மட்டும் தான் முகம் பார்த்து பேசும் வசதி இருந்தது. ஆனால் இந்த மொபைலில் 3ஜி செல்லுலர் நெட்வொர்க் மூலமாகவும் நாம் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி பேசமுடியும்.

அதற்கு ஒ.எஸ் 6 மென்பொருள் சப்போர்ட் செய்கிறது. அதனால் இந்த ஒ.எஸ் அப்டேட்டை பெரும் ஆப்பிளின் முன்பக்க கேமரா கொண்ட 4 மற்றும் 4S  என முந்தைய இரண்டு மாடல்களிலும் இந்த வசதியை பெறலாம்.

இ-மெயில் :

ஐ-போனின் சிறப்பே அதன் இ-மெயில் வசதிதான். இதன் மூலம் இ-மெயிலில் வந்திருக்கும் புகைப்படங்களை வேகமாக தரவிறக்கம் செய்வது டாகுமெண்ட்ஸ்களை எளிதாக படிப்பது, எடிட் செய்வது மற்றும் கூடுதலான பைல்களை இணைத்து அனுப்பவது ஆகியவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சஃபாரி ப்ரவுஸர் :

ஆப்பிளின் சஃபாரி ப்ரவுஸரில் இணைய இணைப்பை கையாள்வதே தனிச்சிறப்பு தான். அதன் வடிவமைப்பும் வேகமும் இப்போதும் இணைய பாவனையாளர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த சஃபாரியும் வேகமாக இணைய இணைப்பு, பக்கங்களை வேகமாக காட்டுதல், மற்றும் இணையப் பக்கங்களில் தொந்தரவு கொடுக்கும் விளம்பரங்கள் இல்லாமல் கட்டுரைகளை படித்தல், முக்கியமான இணைய பக்கங்களை சேமித்து வைத்து இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் அதை படிக்கும் வசதி என அசத்தலாக உள்ளது சஃபாரி ப்ரவுஸர்.

இவைகளுடன் எஸ்.எம்.எஸ் வசதி, ரிமைண்டர்ஸ், மியூசிக், வீடியோ, போட்டோ, ஆப் ஸ்டோர், ஐ-ட்யூன்ஸ், கேம் செண்டர், காலண்டர், போன் காணாமல் போனால் கண்டுபிடிக்கும் find my iphone, ப்ளூடூத் 4 வெர்ஷன், க்ளோனஸ் ஜி.பி.எஸ், டிஜிட்டல் காம்பஸ், த்ரீ ஆக்ஸிஸ் கைரோ , ஆக்ஸிலோ மீட்டர், ப்ராக்ஸிமிட்டி, ஆம்பியண்ட் லைட் சென்ஸார்கள் என வழக்கமான மல்டிமீடியா வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ’ஐபோன்-5’.

இதில் இருக்கும் ‘ஐ-க்ளவுட்’ ஆன்லைன் சேமிப்பு வசதி மூலம் நமது முக்கியமான வீடியோ, புகைப்படங்கள், டாகுமெண்ட்டுகள் ஆகியவற்றை சேமிக்க முடியும்.

பேட்டரி திறன் :

இதில் இருக்கும் உயர்ரக் லித்தியம் பேட்டரி மூலம் 3ஜி நெட்வொர்க் மோடில் 8 மணி நேரம் தொடர்ச்சியாக பேச முடியும். 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் மொடில் தொடர்ச்சியாக 8 மணி நேரமும் வை-பை மோடில் அதிகபட்சம் 10 மணி நேரமும் இணைய இணைப்பில் இருக்க முடியும்.

10 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோக்களையும் 40 மணி நேர தொடர்ச்சியான இசையையும் கண்டும் கேட்டும் ரசிக்க முடியும். மேலும் நாம் மொபைலை பயன்படுத்தாத நேரத்தில் இதன் பேட்டரி திறன் 225 மணி நேரம் அதாவது சுமார் 10 நாட்கள் வரை தாக்குபிடிக்குமாம்.

இந்த ‘ஐபோன் -5’ மாடல் மொபைலுடல் இணைத்து கொடுக்கப்படும் இயர்போன்( HANDSFREE ) நம் காதுகளுக்கு தொந்தரவைத் தராத வகையில் சிறப்பான முறையில் உரையாடலை மேற்கொள்ளவும், இசையை கேட்டு ரசிக்கவும் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகக்கூடிய அளவில்  பல வசதிகள் உள்ள இந்த ஐ-போன் 5 மாடல் முழுமையாக கருப்பு மற்றும் முழுமையான வெள்ளை ஆகிய இரண்டு வண்ணங்களில் 16 ஜிபி, 32 ஜிபி, 64ஜிபி ஆகிய மூன்று மெமரி திறன் அளவுகளுடன் கிடைக்கிறது.

விலை முறையே இந்திய பண மதிப்பில் 16 GB – 11,035.30/- ரூபாய், 32GB – 16,580.68/- ரூபாய்,  64GB – 22,129.64/- ரூபாய் ($) என்ற விலையில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையிலான விலைகள் இவை.

நாளை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இந்த மாடலுக்கான ப்ரீ-ஆர்டர் ஆரம்பமாகிறது. யூ.எஸ், யூ.கே, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்ஹாங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வரும் 21 ஆம் தேதி முதல் சந்தையில் விற்பனை செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.  மேலும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் கூடுதலாக 20 நாடுகளில் ஐ-போன் 5 மாடலை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்.

இந்தியாவில் எப்போ?

இந்தியாவைப் பொருத்தவரை இந்த ‘ஐ-போன் 5’ மாடல் நவம்பர் மாதம் முதல் காலாண்டில் வெளிவரலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி வரும் பட்சத்தில் இந்தியாவில் இந்த மாடலின் விலை முறையே 16ஜிபி –  42,786.13/- ரூபாய், 132ஜிபி – 49,086.59/- ரூபாய், 64ஜிபி –  55,851.42/- ரூபாய் என்ற விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெயில்பீஸ் : இந்த ஐபோன் 5 மாடலில் நாம் வழக்கமாக பயன்படுத்தும் சிம்கார்டோ, அல்லது இதற்கு முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ சிம்கார்டோ பயன்படுத்த முடியாது. மாறாகா நனோ சிம்கார்டு  ( NANO SIMCARD ) என்று சொல்லப்படும் புதுவகையான சிம்கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சிம்கார்டு முந்தைய சிம்கார்டுகளின் அளவை விட சிறியதாக இருக்கும்.

– என்வழி ஸ்பெஷல்

ஐ-போன்.. எக்ஸ்க்ளூசிவ் கேலரி
6 thoughts on “ஐ-போன் 5 – ஒரு சிறப்பு பார்வை

 1. தேவராஜன்

  இந்தியாவில் 64ஜிபி – 55,851.42/- ரூபாய்??
  தாங்காது சாமி தாங்காது!

 2. Manoharan

  Vino they have taken off the you tube. What is the alternate they r providing for you tube…? second is …Is apple’s map is as effective as google’s ? Third…I heard that for the first time in Apple’s history they are selling iPhone 5 in US in stores also other than thru service providers. Is it True ? If so v can import it for cheaper price .

 3. Ayub

  நல்ல விளக்கமான கட்டுரை. அப்படியே இந்த போனோட நிறை குறைகளையும் சொன்னீங்கன்னா வாங்கலாமா வேணாமான்னு முடிவு பண்ணிடுவேன்.

 4. சக்திவேல்

  //இந்தியாவில் 64ஜிபி – 55,851.42/- ரூபாய்??
  தாங்காது சாமி தாங்காது!//

  இல்லை நண்பரே.., நான் குறிப்பிட்டிருப்பது சிங்கப்பூரில் ஐ-போன் 5 – இன் விலை தான். சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் விற்பனை விலையில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்பதால் அந்த விலை இந்தியாவிலும் இருக்கலாம் என்று விலை விபரங்களை குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த விலையே இறுதியான விலை அல்ல. விற்பனைக்கு வரும்போது விலை மாறுபடலாம். எனினும் அமெரிக்காவில் விற்பனை செய்யும் விலை கண்டிப்பாக இந்தியாவில் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *