BREAKING NEWS
Search

‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்?’

‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்?’ – உதயகுமார் சவால்

சென்னை: தங்கள் போராட்டங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், பதவியில் இருந்து விலகத் தயாரா என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

கூடங்குளம் அணு மின் திட்டம் செயல்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேட்டி, ‘சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்ணைப்பாளர் உதயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “இந்திய ஜனநாயக நாட்டில் கடந்த 7 மாதங்களாக லட்சக்கணக்கான மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி வருகின்றனர். ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் இதுவரை போராடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இது, உண்மையில் வெட்கக்கேடான செயல்.

போராட்டிவரும் மக்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா, ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதாகக் குற்றம்சாட்டி, இந்தப் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

பிரதமரின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம். எங்களுக்கு சர்வதேச நாடுகள் அல்லது இந்தியாவைச் சேர்ந்த எந்த என்.ஜி.ஓ.க்களும் பணம் தரவில்லை. இதை பலமுறைச் சொல்லியிருக்கிறோம்.

இதே குற்றச்சாட்டைதான் பிரதமரின் அமைச்சரவையில் உள்ள நாராயணசாமி கூறிவந்தார். அதையே இப்போது பிரதமரும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த பொறுப்பு மிக்க பிரதமர், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஏதாவது சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கலாமே!

மதிப்புமிக்க பதவியில் உள்ள மன்மோகன் சிங், இந்திய மக்களை அவமதித்துள்ளார். மக்கள் தங்களது பிரச்னைகளுக்காக களமிறங்கி போராட மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறாரா? கொள்கை ரீதியில் முடிவெடுத்து போராடுவதற்கு மக்களுக்கு சொந்த புத்தி இல்லை என்று அவர் நினைக்கிறாரா? அல்லது மக்கள் அனைவரையும் காங்கிரஸார் போலவே இருக்க வேண்டும் விரும்புகிறாரா?

பிரதமர் தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால், போராட்டக் குழுவில் உள்ளவர்கள் எவ்வித விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால், பிரதமர் தனது பதவியில் இருந்து மட்டுமல்ல; அரசியலில் இருந்தே விலக வேண்டும். அவர் செய்யத் தயாராக இருக்கிறாரா?

இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல; ‘தெரிவு’ செய்யப்பட்ட பிரதமர். எனவேதான், அவர் இந்திய மக்களை இழிவுபடுத்துகிறார்.

அந்நிய முதலீடுகளை அனுமதிக்க எங்கிருந்து வருகிறது பணம்?

இந்தப் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறோம் என்று நீங்கள் சொன்னால், சில்லறை வணிகம் போன்றவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு, நீங்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்?

நாங்கள் காங்கிரஸார் அல்ல; இந்திய மக்கள். எங்களுக்கு சுய மரியாதை உண்டு. நாட்டுப் பற்று உணடு. சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்கள் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராடுகிறோமே தவிர, பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காவும் போராடவில்லை.

எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. கண்டிப்பாக அவர்களால் நிரூபிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்தோ அல்லது இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ.க்களில் இருந்தோ எவரிடம் நாங்கள் பணம் வாங்கவில்லை,” என்றார் உதயகுமார்.

தமிழக நிபுணர் குழுவின் ஒரு சார்பான அறிக்கை

தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு குறித்து கேட்டதற்கு, “இனியன் குழு ஒரு ஜோக் என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்தியிருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையைத்தை பார்வையிட்ட அவர்கள், எங்களிடம் பேசினார்கள்.

ஆனால், எங்கள் கோரிக்கையை ஏற்று, கூடங்குளம் மக்களிடமும், எங்களது நிபுணர் குழுவிடமும் அவர்கள் பேசவில்லை. ஒருசார்புத் தன்மையுடன் தான் அவர்கள் செயல்பட்டார்கள்.

இனியன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, ‘கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது,’ என்று நற்சான்று அளித்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதில் இருந்தே அவர்களது அறிக்கையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

தமிழக அரசு நியமித்த குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் முடிவுகளில், நாங்கள் எதிர்பார்த்தபடியே ஒருசார்புத் தன்மை காணப்பட்டால், அந்த அறிக்கையின் நகல்களை கூடங்குளத்தில் எரிப்போம்,” என்றார்.




6 thoughts on “‘குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்?’

  1. Anbudan Ravi

    மின் உற்பத்தியை ஆரம்பிக்கும் வரைதான் இந்த போராட்டம் இருக்கும். ஆரம்பித்தவுடன் போராட்டம் காணாமல் போய்விடும். கூடங்குளத்திற்கு வெகு தொலைவில் இல்லை எங்கள் குடும்பம்….அப்படியே எந்த பாதிப்பு வந்தாலும் இந்த நாட்டிற்கு எங்களின் தியாகம் என்றே எடுத்துக்கொள்வோம்…மின்சாரம் இல்லாமல் விவசாயம் இல்லாமல் வேலை இல்லாமல் மக்களைப்பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது. அடுத்தவர்களையும் சற்று யோசிப்பீர்களா திரு உதயகுமார் அவர்களே.

    அன்புடன் ரவி.

  2. Sanjev

    வினோ PM ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார் :
    பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் நாராயணசாமி நேற்று கூறியதாவது: தொழுநோயை ஒழிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளைச் செய்வதாகக் கூறி, வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்ற, மூன்று அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ.,க்கள்), அந்த நிதியை, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்காக, தவறாக பயன்படுத்தியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் விசாரணையில், இந்த விவரங்கள் தெரியவந்ததை அடுத்து, அந்த அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்காக பெருமளவு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. போராட்டத்துக்காக, அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர், டிராக்டர்களில் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) விதிமுறைகளை மீறி, இந்த மூன்று அரசு சாரா அமைப்புகளும் செயல்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணையில் தெரியவந்த விவரங்களின் அடிப்படையில் தான், பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
    அணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள்

  3. குமரன்

    அண்மைச் செய்திகீழே தரப்பட்டுள்ளது.

    அரசு அதிகாரபூர்வமாக நடவடிக்கையே எடுத்து விட்டிருக்கிறது. உதய குமார் என்ன செய்யப் போகிறார்? போராட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் அமெரிக்காவுக்குப்ப் போய் அவரது அமெரிக்க எஜமானர்களுக்கு ஊழியம் செய்யவேண்டியதுதான்!

    ////அணு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் நிர்வாகத்திலுள்ள தொண்டு நிறுவனம் மற்றும் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன் கட்டுப்பாட்டிலுள்ள தொண்டு நிறுவனங்கள் மீது, மத்திய அரசு சந்தேகம் அடைந்தது. இதன் பேரில், மத்திய உள்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள், கடந்த மாதம் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தூத்துக்குடி வந்து, தூத்துக்குடி மல்டிபர்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (தூத்துக்குடி பல்நோக்கு சேவை சங்கம்), கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட ஆறு தொண்டு நிறுவனங்களில், அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின. தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தான் நிதியுதவி கிடைக்கிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மத்திய அரசு அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை, டில்லிக்கு கொண்டு சென்று ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிவில், வெளிநாட்டு நிதிக்கு சரியாக கணக்கு காட்டாத மூன்று நிறுவனங்களின், லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.///

  4. Ganesh Shankar

    Anbudan ரவி-

    நீங்கள் சொல்வது சரி தான்.உங்களை போல் சில நல்ல உள்ளங்கள் இருபதால் தான் நாடு இன்றளவும் நன்றாக இருக்கிறது.
    இன்றைக்கு இருக்கும் பேராசைப்படும் சூழலில்,நாடு நன்றாக இருக்க இதை போன்று எண்ணம் உடையவர்கள் தான் காரணம்.
    இதற்காகவே உங்களுக்கோ,இல்லை உங்கள் குடும்பத்துக்கோ அணு உலையினால் ஏற்படும் அபாயம் என்று நினைக்கும் அபாயத்தால் ஒன்றும் நிகழாது.

    நாட்டில் தலைவர்களை விட சாதாரண மக்களுக்கு தேசப் பற்று நிறைய இருக்கிறது.ஆனால்,விவரங்கள் தான் சரியாக தெரிவதில்லை.நல்லது எது,கேட்டது எது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
    மக்கள் சற்று யோசித்து புரிந்து கொள்ள வேண்டும்.

    கூடங்குளம் மக்களின் அச்சம்,தீர்க்க பட வேண்டியது உண்மை தான்.
    ஆனால்,தேவை இல்லாமல் எல்லாம் சரி ஆன பின்பும்,தான் எடுத்த நிலைப்பாடு தான் சரி என்றும்,அது தான் நடு நிலை என்ப்த்ரும் சொன்னால் எப்படி.பிரதமர் சொல்வதால் மட்டும் உண்மை என்பது இல்லை,பலரும் சொல்லி இருகிறார்கள் நமது மதிப்பிற்குரிய அப்துல் கலாம் உட்பட.

    அதன் பிறகும் அடம் பிடித்தால்,வேறு ஏதோ விடயம் இருக்கிறது.
    அது,இது போல தான் இருக்கும்.இதெல்லாம் தீர விசாரணை செய்து முளையிலேயே கில்லி எறியப்பட வேண்டும்.

  5. M Senthil

    even though i strongly support to open kudangulam min nilayam, I heartfully agree the following lines

    இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல; ‘தெரிவு’ செய்யப்பட்ட பிரதமர். எனவேதான், அவர் இந்திய மக்களை இழிவுபடுத்துகிறார்.

    இந்தப் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறோம் என்று நீங்கள் சொன்னால், சில்லறை வணிகம் போன்றவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு, நீங்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்?

    நாங்கள் காங்கிரஸார் அல்ல; இந்திய மக்கள். எங்களுக்கு சுய மரியாதை உண்டு. நாட்டுப் பற்று உணடு. சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்கள் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராடுகிறோமே தவிர, பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காவும் போராடவில்லை

  6. மிஸ்டர் பாவலன்

    ///அரசு அதிகாரபூர்வமாக நடவடிக்கையே எடுத்து
    விட்டிருக்கிறது. உதய குமார் என்ன செய்யப் போகிறார்?
    போராட்டத்தைக் கைவிட்டு, மீண்டும் அமெரிக்காவுக்குப்
    போய் அவரது அமெரிக்க எஜமானர்களுக்கு ஊழியம்
    செய்யவேண்டியதுதான்! ///

    உதயகுமார் மிகவும் ஆபத்தான பேர்வழி. விசாரணை
    செய்து, ஆதாரங்கள் கிடைத்ததும், குண்டர் தடுப்புக்
    காவல் சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எதுவும்
    எடுக்கிறதா பார்க்கலாம்.

    -=== மிஸ்டர் பாவலன் ===-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *