BREAKING NEWS
Search

ரஜினிக்கு தோல்வியா… ‘யானை தும்மினாலும் அது ஏழூருக்கு சாரல்டா’!

ரஜினிக்கு தோல்வியா… ‘யானை தும்மினாலும் அது ஏழூருக்கு சாரல்டா’!

lingaa-rajini-latest-stills2-60

புதையல் அரக்கனுக்கு சொட்டு ரத்தம் கொடுத்தா போதும், பொட்டி பொட்டியா தங்கம் நமக்குதான் என்கிற பேராசை இல்லாத மனுஷன் ஒருத்தன் இருந்தா, மற்ற எல்லாருடையை ஆசையையும் கொழுக்கட்டையா உருட்டி வச்சு படைக்கலாம் அவனுக்கு. சினிமா, அரசியல், பொதுவாழ்க்கைன்னு எங்கு திரும்பினாலும், ‘எனக்கு தர்றீயா, இல்ல எடுத்துக்கட்டா…?’ங்கிற மனுஷங்கதான் அதிகம்.

இப்போதும் கூட ‘லிங்கா’ படம் ஹிட்டா, இல்லையா என்கிற வாதங்களை மட்டும் சல்லடை போட்டு கழித்துவிட்டால் முகப் புத்தகமும் சரி, ட்விட்டரும் சரி. அவையெல்லாம் காலி ரேக்குகளாகதான் காட்சியளிக்கும்.

‘பார்க்கிங் பணத்திலேயே பாதி வசூல் வந்தாச்சு. அவங்க கொடுத்ததெல்லாம் பொய் கணக்கு’ என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ‘படம் ஓடலேன்னா பணம் ரிட்டர்ன் என்கிற விஷயத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதே அவர்தானேப்பா. இதே ஊர்ல இதுக்கு முன்னாடி எத்தனையோ படம் ஓடாம போய் விநியோகஸ்தர்களின் விலா எலும்பை பதம் பார்த்துருக்கு. யாராவது திருப்பிக் கொடுத்தாங்களா?’ என்கிற குரல்களும் ஆவேசமாக ஒலிக்கிறது ரசிகர்கள் மத்தியில்.

‘ரஜினி இனி அப்பா வேடங்களில் மட்டும்தான் நடிக்கணும்’ என்று கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு சொல்கிறது முன்னணி இணையதளம் ஒன்று. ‘தலைவர்னா மாஸ். மாஸ்னா தலைவர்தான். யாருகிட்ட?’ என்று மார் தட்டுகிறது இன்னொரு இணையதளம்.

இப்படி ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் குடம் குடமா பால் ஆர்டர் பண்ணுது ஒரு கோஷ்டி. குடம் குடமா விஷமும் ஆர்டர் பண்ணுது இன்னொரு கோஷ்டி.

சவுக்கு மரமோ, போதி மரமோ? இரண்டையும் நிழலா பாக்குறவன் ஞானி. விறகா பார்க்குறவன் வியாபாரி. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் ரஜினி. இதே கலகத்தையும் இதற்கு முன் சந்தித்தவர்தான் அவர். கொஞ்சம் ரிவர்ஸ்சில் போவோமா?

‘பாபா’ படுதோல்வின்னு செய்தி வந்த பின்பு கோடம்பாக்கத்தில் சாயங்காலம் ஏழு மணிக்கு மேல் உற்சாகமாக கூடிய பார்ட்டிகளில், சப்பி உறிஞ்சப்பட்ட காலி பாட்டில்களை பொறுக்கி பழைய விலைக்கு போட்டிருந்தாலே, ஒரு பட்ஜெட் படத்தை தயாரிச்சிருக்கலாம். அந்தளவுக்கு எல்லாருமே குறி வச்ச நாற்காலி ரஜினியுடையது.

பாபா விஷயத்தில் கஷ்டம் பார்க்காம உழைச்சோம், உழைப்புக்கு பிறகும் கஷ்டம் பார்த்தோம்ங்கிற ஒரே நேர்க்கோட்டுல ஆறுதலை ஓடவிட்டுவிட்டு, வழக்கம் போல இமயமலைக்கு இடம் பெயர்ந்தார் ரஜினி. அவர் இல்லாமலே சினிமாக்கள் வந்தன. அவர் இல்லாமலே வெற்றிப்படங்களும் வந்தன. யார் யாரோ பொன்னாடைக்கு சொந்தக்காரர்கள் ஆனார்கள். செல்லாக் காசெல்லாம் ‘செக்’கில் சைன் போட்டது. அப்போதும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் ரஜினி.

வருஷங்கள் ஓடின. ஆனால் அவர் தேடிய கதை கிடைக்கணுமே? சினிமா விழாக்களுக்கு வாங்க என்றார்கள். இலக்கிய விழாக்களுக்கும் அழைத்தார்கள். எல்லாவற்றுக்கும் மெல்லிய புன்னகையை அனுப்பிவிட்டு அர்ஜுனன் வித்தைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார் ரஜினி. அந்த நேரத்தில் விக்ரம் நடித்த ‘சாமி’ படத்தை பார்த்தார் ரஜினி. அந்த கதையில் நாம் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனை ஓடாமலிருக்குமா? அந்த படத்தின் வெற்றிவிழாவில்தான் பெரிய இடைவெளிக்கு பிறகு கலந்து கொண்டார் அவர். அந்த மேடையில் ‘ஒண்ணுச்சாமி, ரெண்டுச்சாமி, மூணுச்சாமி… ஆறுச்சாமி’ என்ற வசனத்தை ரஜினி அப்படியே பேசிக்காட்ட, பிய்த்துக் கொண்டது விசில். ‘இனிமே நமக்கு சினிமா வேணுமா?’ என்று கூட சமயங்களில் நினைத்து வந்தவருக்கு, ஆறுச்சாமி வந்துதான் ஆர்வத்தை துண்டினான்.

நடுவில் கே.எஸ்.ரவிகுமார் வந்து ‘ஜக்குபாய்’ கதையை சொன்னார். மறுபடியும் ஒரு பீரங்கிக்கு குண்டுகள் நிரப்பப்பட்டது. சற்றே ஆர்வமானார் ரஜினி. ‘இறைவா…. எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று’ என்கிற பஞ்ச் வசனங்களோடு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இருந்தாலும் கற்பூர வெளிச்சத்துல காபி டம்ளரை சுட வச்ச மாதிரி, ஏனேதானோன்னு கதை இருக்கறதா மட்டும் அவருடைய உள் மனசு சொல்லிகிட்டேயிருந்திச்சு. ஒருபுறம் பட வேலைகள் கனஜோராக நடந்து கொண்டிருக்க, பெங்களூரில் ஒருமுறை தன் நண்பர்களோடு ‘ஆப்தமித்ரா’ படம் பார்த்துக் கொண்டிருந்தார். விஷ்ணுவர்த்தன் ஹீரோவாக நடித்த படம் அது.

சரக்கென்று பொறிதட்டியது அவருக்கு. இதுதான் நாம தேடிகிட்டு இருந்த படம் என்று. பி.வாசுதான் அந்த படத்தின் இயக்குனர். தமிழ்சினிமாவில் அவரது சகாப்தம் முடிந்த நேரம் அது. உடனே பி.வாசு அழைக்கப்பட்டார். ‘ஜக்குபாய் ஓரமா இருக்கட்டும். இந்த கதையை பண்ணலாம்’ என்றார் ரஜினி. மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘மணிசித்திரத்தாழ்’ என்ற படத்தின் ரீமேக்தான் இந்த ‘ஆப்தமித்ரா’.

மணிசித்திரதாழ் படத்திற்கும் ஆப்தமித்ராவுக்கும் நடுவிலேயே நிறைய வித்தியாசங்களை கொடுத்திருந்தார் பி.வாசு. அதையும் இன்னும் மெருகேற்ற வேண்டும் என்றார் ரஜினி. ஒருமுறை ஒரு படத்தில் நுழைந்து கொண்டால், அதன் ஜீவன் முழுக்க தன் மூச்சென்று நினைப்பார் ரஜினி. எந்நேரமும் அதே சிந்தனைதான் ஓடிக்கொண்டிருக்கும் அவருக்குள். அந்த வேட்டையன் பாத்திரம் ரஜினி சொன்ன விஷயம். அதையெல்லாம் விட படத்தில் வரும் அந்த லக லக லக…!

வழக்கம் போல இமயமலை சென்றிருந்தார் ரஜினி. அங்குள்ள மலைஜாதி மக்கள் சற்றே இருட்டிய பின் வரிசையாக நடந்து செல்வதை பார்த்தாராம். எதையோ முணுமுணுத்தபடியே அவர்கள் செல்வதை கவனித்த ரஜினி, ஒருவரை நிறுத்தி ‘என்ன முணுமுணுக்கிறீங்க?’ என்று கேட்க, அவர்கள் சொன்னதுதான் இந்த லகலகலக… அப்படியென்றால்? பேய் பிசாசே தூரப்போ என்று அர்த்தமாம். மிக பொருத்தமாக அதை கொண்டுவந்து சந்திரமுகியில் நுழைத்தார் ரஜினி. அதுமட்டுமா? ரின் சோப் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் அமிதாப்பச்சன். ஒரு சிறுவன் ரின் சோப் பற்றி அமிதாப்பிடம் புகழ்ந்து பேச பேச, நடுநடுவே அவர் கேட்கிற கேள்விதான், ‘நான் கேட்டேனா…?’ என்பது. வடிவேலுவுக்கு பேய் கதை சொல்லும்போது, ‘நான் கேட்டேனா’வை பொருத்தமாக அங்கு நுழைத்தார் ரஜினி.

சந்திரமுகியில் மட்டுமில்ல, அவர் நடித்த எல்லா படங்களிலும் ரஜினியின் நகாசு வேலைகள்தான் படத்தையே உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது. எந்திரன் கதையை கேட்டுவிட்டு, ‘அந்த ரோபோவுக்கு என்ன உருவம் கொடுப்பீங்க?’ என்று கேட்டதால்தான், அதையும் ரஜினியாகவே நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாம் ஷங்கருக்கு. ‘நான் ஒரு தடவ சொன்னா நுறு தடவ சொன்ன மாதிரி’ என்கிற பஞ்ச் வசனம், உதவி இயக்குனர் திருப்பதிசாமி என்பவர் சக உதவி இயக்குனரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ரஜினியின் காதில் விழுந்த விஷயம். அதைதான் தட்டி தட்டி பட்டி பார்த்து அப்படியொரு பஞ்ச்சாக வடிவமைத்தார். அதற்கான சன்மானத்தை அந்த வசனம் டப்பிங் ஸ்டூடியோவில் பதிவாகும் முன்பாகவே திருப்பதிசாமிக்கு கொடுத்து திருப்தியடைந்தவர்தான் சூப்பர் ஸ்டார்.

தோல்வி தொடாத மனிதர்களே இல்லை. ஏன் கடவுளுக்கே அந்த நிலைமை வந்திருக்கிறது.

லிங்கா தோல்விதான். விநியோகஸ்தர்களுக்கு ரிட்டர்ன் கொடுத்துருங்க என்று கூறிவிட்டார் ரஜினி. ஆனால் அதற்காக உலகம் அமைதியாகவா இருக்கிறது? ரஜினியின் அடுத்த படம் யாரோடு? இந்த கேள்வி இல்லாத தொலைக்காட்சிகள் இல்லை. மாத, வார, நாளிதழ்கள் இல்லை. இணையதளங்கள் இல்லை. ஷங்கருடன் எந்திரன் பார்ட் 2 தான் நெக்ஸ்ட் என்கிறார்கள் இவர்கள். இல்லையில்லை…. எஸ்.எஸ்.ராஜமவுலிதான் நெக்ஸ்ட் என்கிறார்கள் அடுத்த நாளே, ரஜினி சார் பி.வாசுகிட்ட கதை கேட்டுட்டாரே…? என்கிறார்கள் முன்பு சொன்னதையெல்லாம் யாரோ சொன்னதாக நினைத்துக் கொண்டு. இதுதான் ரஜினி.

அவருக்கு தோல்வி வந்திருக்கலாம். இருந்தாலும், யானை தும்மினாலும் அது ஏழுருக்கு சாரல்டா…!

-ஆர் எஸ் அந்தணன்
நன்றி: குமுதம் ரிப்போர்டர்
4 thoughts on “ரஜினிக்கு தோல்வியா… ‘யானை தும்மினாலும் அது ஏழூருக்கு சாரல்டா’!

 1. jey_uk

  nice one…

  “தோல்வி தொடாத மனிதர்களே இல்லை. ஏன் கடவுளுக்கே அந்த நிலைமை வந்திருக்கிறது.”

 2. Gokuladass

  விநோஜி, கடைசி லைன் படிக்கிற வரைக்கும் இந்த கட்டுரை நீங்கள் எழுதிய தான் என்று நினைத்தேன் கடைசியில் பார்த்தா குமுதம் ரிபோர்ட்டர் தலைவருக்கு சப்போர்ட்டா குமுதம் ரிபோர்ட்டர் !!!!!????

 3. Rajagopalan

  குமுதம் padithen… But edhula oru kurai endral, லிங்கா தோல்விதான். விநியோகஸ்தர்களுக்கு ரிட்டர்ன் கொடுத்துருங்க என்று கூறிவிட்டார் ரஜினி. – what is the meaning of this? this is not a good one…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *