BREAKING NEWS
Search

அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது!

அந்தக் காலம் நன்றாக இருந்தது! – கவிஞர் மகுடேஸ்வரன்

MGR-1

ந்தக் காலம்தான்
நன்றாக இருந்தது.

பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடங்கிடைக்கும்.

மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.

சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.

எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.

மழை
நின்று நிதானமாகப் பொழியும்.

சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.

நல்ல நூல்களுக்கு
அன்னம் பதிப்பகம்தான்.

வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

எளிதில்
மணப்பெண் கிடைத்தாள்.

வெஸ்ட் இண்டீசை
வெல்லவே முடியாது.

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

நகரத்தின் எல்லாக் கடைகளிலும்
மிரட்சியின்றி நுழைய முடியும்.

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.

ராமராஜனை
விரும்பி ரசித்தோம்.

அதிகாலைகள்
பறவைக் கீச்சுகளால் நிரம்பியிருந்தன.

புதுத்துணிகளை விஷேசங்களுக்கு என்று
உடுத்தாமல் வைத்திருந்தோம்.

ஊசல் சுவர்க்கடிகாரத்திற்கு
சாவி கொடுத்தோம்.

தானாய்த் துயில்களைந்து எழுந்தோம்.
இருள்கட்டியவுடன் உறங்கச் சென்றோம்.

ஆம்
அந்தக் காலம் நன்றாக இருந்தது !

-கவிஞர் மகுடேஸ்வரன்
13 thoughts on “அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது!

 1. Rajkumar

  வினோ சார் என்ன ஆச்சு நெறைய அர்டிகால்ஸ் இபவேலாம் நம்ம சைட் அ வரதிலா???????????

 2. srikanth1974

  என்றுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.

 3. VVALAIYAPATHY

  அருமையான கவிதை படித்தவுடன் எனக்கு பழையநினைவுகள்

  தியேட்டரில் அதிகபட்ச கட்டணம் ருபாய் 2.90.
  இதுதான் பால்கனி டிக்கெட் கட்டணம் .
  பஸ் எல்லாம் சிவப்பு கலரில் இருக்கும் .
  ரத்னா கபே இட்லிக்கு கூட்டம் அலைமோதும்.
  வாகனங்கள் குறைவு சிக்னல் அதைவிட குறைவு
  கோடை காலங்களில் அத்தை,சித்தப்பா ,தாத்தா, வீட்டிற்க்கு செல்வோம் .
  வெளியூர் செல்ல பூக்கடையில் பஸ் ஏறவேண்டும் ,
  கோயம்பேடு என்பது அப்போது கிராமம் .
  வயலில் மீன் பிடிப்போம் .நுங்கு எடுக்க பனம் தோப்புக்கு ஓடுவோம் , ஆற்றில் வரும் தண்ணீரில் குளிப்போம் ,
  உப்பு, மாட்டுவண்டியில் கொண்டுவந்து விற்ப்பார்கள் .
  ஒரு பைசா ,ரெண்டு பைசா மூன்று பைசா என்று இருந்தது
  பஸ் கட்டணம் 25 முதல் 75 பைசா வரை.
  தள்ளு வண்டியில் குச்சி ஐஸ், பால் ஐஸ்,சேமியா ஐஸ் கிடைக்கும் ,
  அதன் ருசியே தனி ,
  மாட்டுவண்டியில் பெரியபாளையம் செல்வோம் .
  பள்ளிக்கு நடந்து செல்வோம்
  வாத்தியார்களிடம் செம அடிவங்குவோம்.
  வாத்தியார் அடித்தால் வீட்டில் உள்ளவர்கள் யாரும் ஏன் என் பிள்ளை அடித்தாய் ,என்று கேட்க மாட்டார்கள்.
  பள்ளி வாசலில் கொருகபுளி பழம் நிறைய விற்ப்பார்கள் .
  வீட்டில் ஒருவர்தான் சம்பாத்தியம் .ஆனால் 8 பேர் சாப்பிடுவோம் . மழைகாலங்களில் குளிருக்கு உப்புகடலை, பட்டாணி
  சாப்பிடுவோம். .
  மந்தார இலையில் காரசேவ் ,பக்கோடா ,கார பூந்தி மடித்துகொடுபார்கள் .கொசுறு (இலவசம் ).கிடைக்கும்
  பிளாஸ்டிக் கவர் கிடையவே கிடையாது .
  எல்லோரும் பை எடுத்துக்கொண்டு தான் கடைக்குசெல்வோம் .
  தெருவில் மோர் , தயிர் கூவி விற்பார்கள் .
  எல்லார் வீட்டிலும் முருங்கை மரம் இருக்கும் யார் ஒடித்தாலும் எதுவும் சொலமாட்டர்கள் ,
  ஒரு தெருவில் கார் வந்தால்
  சிறுவர்கள் எல்லாம் அதன் பின்னாடி ஓடுவார்கள்.
  கபடி விளையாடுவோம்
  கிரிக்கெட் பற்றி தெரியாது .
  நாகேஷ் ,சந்திரபாபு ,தங்கவேலு காமெடி பிடிக்கும்
  ரேடியோவில் ஒலி சித்திரம் போடுவார்கள் . .
  அரிசி மொத்தமாக வாங்கவேண்டும் என்றால் ரெட் ஹில்ஸ் போகவேண்டும் .
  கல்யானமண்டபங்கள் குறைவு .
  இப்படி நிறைய,
  .உண்மையில் அந்த காலம் மிக நன்றாக இருந்தது

 4. Sivakumaar

  உண்மையிலே நல்ல கவிதை மகுடேஸ்வரன்.

  பல பேர் மனசுல இருக்கு ஆனால் நீங்கள் கவிதையில் உங்கள் மன உணவுர்களை கூறியது நன்றாக உள்ளது.

  நன்றி.

  சிவகுமார்

 5. குமரன்

  ஆம், அந்தக்காலம்தான் நன்றாக இருந்தது.

  வெளிக்கடைச் சிறையில்
  ஈழத்துக் குட்டிமணி, ஜகன், தங்கதுரை ஆகியோரின்
  விழிகளைச் சிங்களக் காடையர்கள் நோண்டி வீசினாலும்

  இந்தியாவின் பிரதமராக இந்திரா இருந்தார் … அவர்
  வங்காள தேசத்துக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததைப் போல
  ஈழத்துக்கும் விடுதலை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது.

  புலிகளுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவு நலமாக இருந்தது
  தமிழ்நாட்டில் புலிகளுக்கு இந்திய அரசே
  பயிற்சி முகாம்கள் அமைத்துத் தந்தது.

  ஈழத்துத் தமிழர்களை முதுகில் குத்தாத அரசுகள்
  மத்தியிலும் மாநிலத்திலும் இருந்தன.

  இந்தியத் தமிழர்களுக்கு மத்திய அரசின் மேல்
  நம்பிக்கையும் மரியாதையும் இருந்தன.

  அன்றும் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள்
  தில்லியில் ஒரு பெண் பின்னால்தான் அணிவகுத்து நின்றனர்.
  ஆனால் அந்தப் பெண், இந்த இந்தியத் திருநாட்டின் பிறப்பு.
  அவருக்கு இந்த தேசத்தின் மீதும் தேசத்து மக்கள் மீதும்
  உண்மையான பற்று இருந்தது.

  இன்றுபோல இத்தாலியின் கொத்தரோச்சி இந்தியாவின் போபோர்ஸ் ஊழலில் பணம் கொள்ளை அடித்துவிட்டுத் தப்பவில்லை.

  இன்றுபோல் இத்தாலிக் கடற்படை வீரர்கள்
  மஸிமிலானோ லட்டோரும், சால்வடோர் கிலோனும்
  இந்திய எல்லைக்குள் வந்து இந்திய மீனவர்களைச் சுடும் தைரியமும்
  அதன் பின்னர் இந்திய அரசிடம் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்று இந்திய அரசிடம் உறுதிமொழி பெறும் அளவுக்கு
  இந்தியா அன்று கிள்ளுக் கீரையாக இல்லை.

  இந்தியாவின் 2 ஜி ஊழலில் தயாநிதி மாறனையும், கலாநிதி மாறனையும் காப்பாற்ற
  ஆளும் இந்தியக் காங்கிரஸ் தலைவரான சொக்கத் தங்கம், தியாகத் திருவிளக்கு, அன்னை சோனியாவிடம்
  வாத்திகனின் அதிகார வர்க்கம் பேச்சு நடத்த வில்லை.

  வரலாறு காணாத ஊழல்களைச் செய்தவர்கள் மத்திய அரசில் அன்று இல்லை.

  ஈழத் தமிழர்கள் பொது மக்கள் லட்சம் பேர் செத்தாலும் எனது பழி தீரவேண்டும் என எண்ணும் எவரும் இந்தியாவில் இல்லை.

  ஆம், அந்தக் காலம் நன்றாகத்தான் இருந்தது.

 6. T.JAWAHAR - TIRUPUR

  எல்லாருமே
  அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

  இதயம் கனக்கிறது ……….

 7. ananth

  கவின்ஞருக்கு வயதாகி விட்டது தெரிகிறது

 8. madrasraj

  மிக அருமை சார்.

  மறுபடியும் வராது அந்த காலம் மீண்டும் வரவே வராது

 9. kumaran

  இவை அனைத்தும் நானும் அனுபவித்து உள்ளேன், நன்றி.

 10. Dinesh Murugesan

  அந்த காலத்தை சுவைத்து பார்த்த பெருமையில் … … நானும். இனி வரும் சந்ததி இதை சரித்திர புத்கத்தில் தான் காண வேண்டும் . அப்படியெனில் நாம் சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டோம் என்று தானே அர்த்தம் …….

 11. renugopal

  இவை அனைத்தும் நானும் அனுபவித்து உள்ளேன்,நன்றாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *