BREAKING NEWS
Search

முடிவெடுப்பதில் மட்டும் வேகம்… பதிலளிப்பதில் தாமதமா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

அண்ணா நூற்றாண்டு  நூலகம்:  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்படுத்தப்பட்ட வசதிகளில் எதையாவது குறைத்தால் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியதிருக்கும் என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் முடிவுகளை வேகமாக எடுக்கும் தமிழக அரசு நீதிமன்றத்துக்கு பதிலளிப்பதில் மட்டும் தாமதம் காட்டுவது ஏன் என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கோட்டூர்புரத்தில் ரூ.172 கோடி செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான நூலகத்தை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு தமிழக அமைச்சரவை தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது என்றும், அந்த முடிவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் ஆர்.பிரபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பொதுநலன் மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். மறுஉத்தரவு வரும்வரை, நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு அரசு எடுத்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதாக கடந்த நவம்பர் 4-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறு உத்தரவு வரும்வரை

அதன் பிறகு, நூலகத்தை மாற்றுவதை எதிர்த்து பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.டி.மனோன்மணி, மூத்த வக்கீல் ஆர்.காந்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் இளையபாரதி உட்பட பலர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். நூலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக 2.11.11 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ‘மறு உத்தரவு அளிக்கப்படும்வரை நூலகத்தை மாற்றக் கூடாது என்று ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூலகத்தை மாற்றும் நோக்கத்தில் வேறு இடத்தில் கட்டுமானங்களை செய்வதற்கும் இந்தத் தடை பொருந்தும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். எந்த ஒரு இடையூறும் இல்லாமல் முன்பு போலவே அண்ணா நூற்றாண்டு நூலகம் அங்கேயே தொடர்ந்து செயல்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

ஒரே நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும்…

மேலும், அண்ணா நூலகம் தொடர்பாக வேறு கோர்ட்டுகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதியின் கோர்ட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசுப் பிளீடர் வெங்கடேஷ் ஆஜரானார்கள். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன், வக்கீல் ச.செந்தில்நாதன் உட்பட பலர் ஆஜரானார்கள்.

பதிலளிக்க ஏன் தாமதம்?

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் கேட்டுக் கொண்டார். அதற்கு தலைமை நீதிபதி, ‘இது சரியல்ல. முடிவு எடுப்பதில் மட்டும் அரசு இத்தனை வேகம் காட்டுகிறது. ஆனால் பதில்மனு தாக்கல் செய்வதில் மட்டும் ஏன் அரசு காலதாமதம் செய்கிறது?’ என்றார்.

பதில்மனு தயாராக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் புதிய புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதால்தான் காலதாமதம் ஏற்படுகிறது என்று அரசுப் பிளீடர் தெரிவித்தார்.

மூத்த வக்கீல் பி.வில்சன் தனது வாதத்தில், ‘நூலகத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சந்தா செலுத்தி பத்திரிகைகளை வாங்குவதையும் அரசு குறைத்துக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

கடுமையான உத்தரவு

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தமிழக அரசுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை உத்தரவாக அளித்தனர்.

அதில், “அரசு சார்பில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கான காரணம் அரசுக்கு மட்டும்தான் தெரியும். இன்னும் 3 வாரங்கள் கால அவகாசம் வேண்டுமென்று அட்வகேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்படுகிறது.

அதே நேரம் நூலகத்தில் இருக்கும் வசதிகளையோ, செயல்பாடுகளையோ அரசு திரும்பப் பெற்றால், அதை கோர்ட்டு கடுமையாக கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்,” என்றனர்.

-என்வழி செய்திகள்




One thought on “முடிவெடுப்பதில் மட்டும் வேகம்… பதிலளிப்பதில் தாமதமா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

  1. தினகர்

    “அதே நேரம் நூலகத்தில் இருக்கும் வசதிகளையோ, செயல்பாடுகளையோ அரசு திரும்பப் பெற்றால், அதை கோர்ட்டு கடுமையாக கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்,”

    நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *