BREAKING NEWS
Search

இனி கெஜ்ரிவாலுடன் எந்தத் தொடர்பும் இல்லை… பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது! – ஹஸாரே

இனி எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை… பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது! – ஹஸாரே


டெல்லி: இனி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இயங்கும் அணிக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை இனி ஜெக்ரிவால் பயன்படுத்தக் கூடாது. ஊழலுக்கு எதிரான தனது அமைப்பின் பெயரையும் பயன்படுத்தக் கூடாது, என அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

டீம் அன்னா எனப்பட்ட குழுவை சில மாதங்களுக்கு முன் கலைப்பதாக ஹஸாரே அறிவித்ததிலிருந்து, அந்தக் குழுவில் இருந்தவர்களுக்கும் ஹஸாரேவுக்கும் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

ஒரு சிலர் அரவிந்த் ஜெஜ்ரிவால் தலைமையில் தனியாகவே செயல்பட்டு வந்தனர். பல கூட்டங்களில் ‘எனது தலைமையிலான குழு’ என்பதை அழுத்தமாக சொல்லி வந்தார் கெஜ்ரிவால்.

இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது என்ற அரவிந்த் கெஜ்ரிவால் முடிவால், அவருக்கும் அன்னா ஹஸாரே இடையிலான கருத்துவேறுபாடு முற்றி, நிரந்தர பிரிவாக முடிந்துள்ளது.

கெஜ்ரிவாலின் அரசியல் முடிவை சாந்தி பூஷன் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆதரிக்கின்றனர். ஆனால் கிரண்பேடி மற்றும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எதிர்க்கின்றனர். இந்த இருவரையும்தான் ஹஸாரேவும் ஆதரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்துதான், கெஜ்ரிவால் குழு அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதற்கு என் ஆதரவு கிடையாது என்று ஹஸாரே அறிவித்தார். அப்போதும் தங்கள் முடிவில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தீவிரமாக உள்ளதால், இப்போது தங்கள் குழு உடைந்துவிட்டதாக ஹஸாரே அறிவித்துள்ளார்.

பெயரை – படத்தை பயன்படுத்தக் கூடாது…

இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறுகையில், “துரதிருஷ்டவசமாக இந்தக் குழு உடைந்துவிட்டது. எனக்கு அரசியல் ஆசை இல்லை. யார் ஆரம்பிக்கும் கட்சியிலும் நான் சேர மாட்டேன். அவர்கள் விருப்பப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் என் பெயரையோ படத்தையோ கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இனி பயன்படுத்தக் கூடாது. அவரவர் காலில் அவர்கள் நிற்கட்டும். என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.

நாடு விற்பனைக்கு வந்துவிட்டது – கெஜ்ரிவால்

ஹஸாரேவின் இந்த அறிவிப்புக்கு நேரடியாக கருத்து சொல்லாத கெஜ்ரிவால், “இன்று நாடு விற்பனைக்கு வந்துவிட்டது. மிகக் கடினமான, சோதனையான இந்த காலகட்டத்தில், என் நாட்டைக் காக்க சாத்தியமான அனைத்தையும் செய்வேன்,’ என்று கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் 18 மாதங்கள் இணைந்து செயல்பட்டனர் ஹஸாரே, கெஜ்ரிவால் மற்றும் பேடி உள்ளிட்டோர். இந்த காலகட்டத்தில் அவர்கள் முன்னெடுத்த  உண்ணாவிரதங்களில் கடைசி மூன்றும் மக்கள் ஆதரவை இழந்ததால் படுதோல்வியைத் தழுவின.

ஆரம்பத்தில் மக்களால் ஆதரிக்கப்பட்ட இந்த இயக்கம், பின்னர் சந்தேகங்கள், ஒளிவுமறைவுத் தன்மை, உள்சண்டை, அரசியல் உள்நோக்கம் என பல்வேறு காரணங்களால் பலவீனமடைந்தது.

கடைசி உண்ணாவிரதத்தின் முடிவில் அரசியல் கட்சி தொடங்குவது  என ஹஸாரே முடிவெடுத்தார். ஆனால் பின்னர் தன் முடிவிலிருந்து பல்டியடித்து, அரசியல் ஆசை இல்லை என்றார். ஆனால் அரசியல் முடிவில் கெஜ்ரிவால் உறுதியாக இருந்ததால் இந்தக் குழுவே இப்போது பிளவுபட்டுள்ளது.

-என்வழி செய்திகள்




One thought on “இனி கெஜ்ரிவாலுடன் எந்தத் தொடர்பும் இல்லை… பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்தக் கூடாது! – ஹஸாரே

  1. malar

    இப்படி சொல்லி சொல்லியே மக்களை பாதி அடிமைகளாக ஆக்கிவிடிர்கள்…இனியும் அவர்கள் ஏமாற மாட்டார்கள்…

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *