BREAKING NEWS
Search

“மிஸ்டர், நீங்க ரொம்ப ஓவரா பேசறீங்க…” – ரஜினியுடன் ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்!

“மிஸ்டர், நீங்க ரொம்ப ஓவரா பேசறீங்க…” –   ரஜினியுடன் ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்!

devaraj-with Thalaivar (2)

சென்னை கிண்டியிலுள்ள கேம்பாகோலா வளாகத்தில் ‘பாபா’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு. ரஜினி சார் நடித்த காட்சியை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா படமாக்கிக் கொண்டிருந்தார். பதினைந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர். நானும் அங்கு இருந்தேன்.

படப்பிடிப்பு முடிந்ததும் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்த ரஜினி சார், சுரேஷ் கிருஷ்ணா பேசி முடித்த பிறகு தன் பேச்சை தொடங்கினார்.

‘இன்னைக்கி கடைசி நாள். படம் முடியுது. அதுதான் உங்க கிட்ட சொல்லலாம்னு வரச் சொன்னேன்’ என்றார். அவர் பேசியது படத்தைப் பற்றி என்பதால், அதை மட்டும் நாங்கள் குறித்துக்கொண்டோம்.

பிறகு நான் ஆர்வத்துடன், ‘சார்… அடுத்த படம் என்ன?’ என்று கேட்டேன்.

எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும் படத்தைத் தவிர மற்ற விஷயங்களை ரஜினி சார் பேச மாட்டார் என்று எங்களுக்கு நன்கு தெரியும். என்றாலும், எக்ஸ்குளூசிவ் ஆக ஒரு செய்தி கிடைக்குமே என்றுதான் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டேன்.

என்னைப் பார்த்த ரஜினி சார், ‘இது ‘பாபா’ படத்தோட பிரஸ் மீட். வேற விஷயம் பேச வேணாமே…’ என்றார். ஆனால், அவசரக் குடுக்கையான நான் அவர் பேச்சை மீறி, ‘இல்லைங்க சார்… அடுத்த படம் நடிப்பீங்களா? இல்லன்னா, அரசியலில் குதிப்பீங்களா?’ என்று கேட்டேன்.

devaraj-with Thalaivar

சட்டென்று ரஜினி சாரின் முகம் மாறியதை மற்ற பத்திரிகையாளர்கள் கவனித்து, நமக்கு எதற்கு வம்பு என்று அமைதியாகி விட்டனர். ஆனால், நான் மட்டும் இதே கேள்வியை வெவ்வேறு தொனியில் பலமுறை கேட்டு, அவரது பதிலைத் தெரிந்துகொள்ளும் ஆவலில் காத்திருந்தேன்.

அது காலை பதினோரு மணி என்பதால், என் குரல் கணீரென்று ஒலித்தது. இதனால், நான் ஏதோ பதற்றமாகவோ அல்லது சற்று கடினமாகவோ பேசுவது போல் மற்றவர்களுக்கு தோன்றியிருக்கக் கூடும்.

அதுபற்றி கவலைப்படாத நான், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அதாவது, படத்தில் ரஜினி சார் என்னென்ன ‘பஞ்ச்’ டயலாக் பேசுவார் என்று கேட்டேன். சிரிப்பு மட்டும்தான் பதிலாக கிடைத்தது.

இதை கவனித்த ரஜினி சார், ‘மிஸ்டர்… நான் அப்போதிருந்தே பார்க்கறேன். நீங்க கொஞ்சம் ஓவரா பேசறீங்க. ஸாரி… தப்பா நினைச்சுக்காதீங்க. இது ‘பாபா’ பிரஸ் மீட். ஸோ, இந்த படத்தை பற்றி மட்டும் கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்’ என்றார்.

அவரால் நான் திட்டப்படுகிறேன் என்பதைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள், ‘தேவா… ஓவரா பேசறதை நிறுத்து’ என்றார்கள். பிறகு அமைதியானேன். என்றாலும், படத்தில் ரஜினி சார் பேசும் ‘பஞ்ச்’ டயலாக்கை தெரிந்துகொள்ளாமல் கேம்பாகோலா வளாகத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அருகிலிருந்த மானிட்டரை நோக்கிச் சென்றேன்.

அதற்குள் ரஜினி சாரும் அங்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் போய் நின்ற நான், மானிட்டரில் ஒளிபரப்பான காட்சியைப் பார்த்து, அவர் பேசும் ஓரிரு ‘பஞ்ச்’ டயலாக்குகளை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டேன்.

‘கதம் கதம்’, ‘பாபா… எந்த பக்கமும் சாயாத பாபா’ போன்ற ‘பஞ்ச்’ டயலாக்குகளை நான் பேசிக் காட்டியதை ரசித்து சிரித்த சுரேஷ் கிருஷ்ணா, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

ரஜினி சாருடன் நான் நின்றிருந்த காட்சியை எங்களுக்கே தெரியாமல் அந்தப் படத்தின் போட்டோகிராபர் ‘கிளிக்’ செய்திருந்தார். அவர் பிரிண்ட் போட்டுக் கொடுத்த பிறகுதான் இந்த போட்டோ எடுத்த விஷயமே எனக்கு தெரிந்தது. அதனால்தான் இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும், உண்மையில் நடந்ததை ஒரு இஞ்ச் கூட மிகைப்படுத்தாமலும், குறைக்காமலும் எழுத முடிகிறது.

பிரஸ் மீட் முடிந்த பிறகுதான் பத்திரிகையாளர்களுக்கு ஞாபகம் வந்தது. ‘அடடா, ரஜினி சாருடன் ஒரு போட்டோவாவது எடுத்திருக்கலாமே’ என்று.

devaraj-with Thalaivar0

இந்த விஷயத்தை ஒரு நண்பர் என் காதில் போட, உடனே நான் ரஜினி சார் இருந்த இடத்தை நோக்கி விரைந்து, ‘சார்… நாங்க எல்லாரும் உங்க கூட ஒரு போட்டோ எடுத்துக்க ஆசைப்படறோம்’ என்று சொன்னேன்.

உடனே, ‘ஓ.கே. தாராளமா எடுத்துக்கலாம் மிஸ்டர்’ என்று சிரித்த அவர், சற்றுமுன் என்னிடம் கடுமையாகப் பேசியதை மீண்டும் ஞாபகப்படுத்தி, ‘மிஸ்டர்… நான் அப்படி சொல்லிட்டேனேன்னு வருத்தப்படாதீங்க. நாம் எப்பவுமே வந்த விஷயத்தை பற்றி மட்டும்தான் பேசணும். அப்பதான் பேச்சு திசை மாறாது. நீங்க கொஞ்சம் ஓவரா பேசறதை நிறுத்திக்குங்க. இதை நான் உங்க பிரதர் கோணத்துல இருந்து சொல்றதா நினைச்சுக்குங்க,’ என்றார்.

பிறகு தோளில் அன்புடன் கைபோட்டு அணைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அந்த அன்பு முகம்தான், சூப்பர் ஸ்டார் ரஜினி சார்.

நான் வேலூரில் இருந்த காலக்கட்டத்தில், அதாவது, 1990க்கு முன், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில், நவசரத் திலகம் ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் செயலாளராக இருந்தேன். சில நற்பணிகள் செய்ததும் உண்டு. 90க்குப் பிறகு சென்னைக்கு வந்து விட்டேன்.

devaraj-with Thalaivar (3)

அன்று ‘பாபா’ படப்பிடிப்பில் ரஜினி சார் சொன்ன அறிவுரையை இன்றளவும் மற்ற நடிகர், நடிகைகளிடம் பேசும்போது கடைப்பிடித்து வருகிறேன். ஆமாம், இப்போதெல்லாம் நான் ஓவராகப் பேசுவதில்லை. மாறாக, கலகலப்பாகப் பேசுகிறேன்!

சிலருக்கு அது பிடிக்கும். பலருக்கு என்னையும் சரி, என் பேச்சையும் சரி, அறவே பிடிக்காது. அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. இதுபோன்ற ஒரு பதிவை நான் எழுதுவதற்கு அவர்களே ஒரு தூண்டுகோலாகவும் இருந்திருக்கலாம் இல்லையா?

குறிப்பு: தேவராஜ் எழுதியுள்ள இந்த பதிவுக்கு நானும் ஒரு சாட்சி. தலைவர் முதலில் கடுமை காட்டினாலும், அடுத்த சில நிமிடங்களில் அனைவருடனும் அத்தனை சகஜமாக சிரித்துப் பேசி படம் எடுத்துக் கொண்டார்!

நன்றி: ‘யோகி’ தேவராஜ்
-என்வழி
4 thoughts on ““மிஸ்டர், நீங்க ரொம்ப ஓவரா பேசறீங்க…” – ரஜினியுடன் ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்!

 1. மிஸ்டர் பாவலன்

  வினோ அவர்களே.. ப்ரெஸ் மீட் போது
  “உலக நாயகன்” கமல் எப்போவாவது
  கோபப் பட்டதுண்டா? கமல் காட்டும்
  அமைதி, அடக்கம் ஒரு அதிசய ராகம்!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 2. குமரன்

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, தேவா,

  ரஜினியின் நல்ல குணத்துக்கு இன்னும் ஒரு எடுத்துக் காட்டு.

 3. deen_uk

  தலைவர் சைட்ல அடிக்கடி இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல.இது தெரிஞ்சு தான் பேசுதா இல்ல தெரியாம பேசுதானே தெரியல..சீரியஸ் படங்களில் அப்பபோ வந்து,கோப படுற மாதிரி காமெடி பண்ணுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *