BREAKING NEWS
Search

இந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா!

டெல்லி: இந்தித் திணிப்பை தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநிலங்களே கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தலைவர் ரஜினிகாந்த் இன்று கூறிய அடுத்த சில மணி நேரங்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதற்கு உடனடியாக பதிலளித்துள்ளார்.

“இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.

நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழிக் கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்,” என்று இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

வட மாநிலங்களில் சில பகுதியில் அமித் ஷாவின் கருத்துக்கு ஆதரவு எழுந்தாலும், அதே வட மாநிலங்கள் பெரும்பாலானவை கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. எப்போதும் இந்தித் திணிப்பை எதிர்த்துவரும் தமிழகம் வழக்கம்போல இந்த முறையும் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கியது. தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தித் திணிப்பு தவறு என்றும், இதனை தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநிலங்களே கூட ஏற்காது என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி மீடியாவில் வைரலானது. குறிப்பாக ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. இதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மற்ற மொழி பேசும் மாநிலங்களில் இந்தியைத் திணிக்க வேண்டும் என நினைக்கவில்லை. நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்தே வந்திருக்கிறேன். தாய்மொழிக்குப் பிறகு இரண்டாவது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றால், அது இந்தி மொழியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம்,” என்று அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

திமுக போன்ற கட்சிகள் போராட்டம் அறிவித்த போதும், கமல் ஹாஸன் போன்ற பிரபலங்கள் அமித் ஷா பெயரைக் குறிப்பிட்டே கடும் கண்டனம் தெரிவித்த போதும் கண்டு கொள்ளாமலிருந்த அமித் ஷா, இன்று தலைவர் ரஜினியின் கருத்தை அறிந்த அடுத்த சில நிமிடங்களில், தனது பேச்சுக்கு விளக்கமளித்து, இந்தித் திணிப்பு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

– என்வழி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *