BREAKING NEWS
Search

சூப்பர் ஸ்டார் ரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் தண்ணீரையும் தாருங்கள்.. – கர்நாடக எம்.பிக்கள் முன்பு அமீர் பேச்சு

ரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் தண்ணீரையும் தாருங்கள்..  – கர்நாடக எம்.பிக்கள் முன்பு அமீர் பேச்சு முழுமையாக

சென்னை: ரஜினி, அர்ஜுன் போன்றவர்களை அனுப்பியதுபோல, இன்னும் நிறைய கலைஞர்களைத் தாருங்கள்… கூட கொஞ்சம் காவிரித் தண்ணீரையும் தமிழகத்துக்கு அனுப்பி வையுங்கள், சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம், என்று கர்நாடக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மத்தியில் இயக்குநர் அமீர் கூறினார்.

ஸ்ரீகாந்த் – ஜனனி நடிக்க, அஸ்லாம் இயக்கத்தில் உருவாகியுள்ள பாகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யாம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால்,  விழாவிற்கு கர்நாடக எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் வந்திருந்தார்கள்.

ரஜினிகாந்த், அர்ஜூன் உட்பட பலர் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழில் வெற்றிவாகை சூடியதை நினைவூட்டி அவர்கள் பேசினார்கள்.

“தமிழ்நாட்டு மீது எங்களுக்கு அன்பு அதிகம். அந்த அன்புதான் எங்களை இங்கே வரவழைத்தது. அந்த அன்புதான் அனைவரையும் அரவணைத்து வாழ வைத்திருக்கிறது,” என்று பேசினர்.

இயக்குநர் அமீர் பேசியது விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேச்சு:

‘பாகன்’ படம் சைக்கிளோடு தொடர்புடையது. எனது சைக்கிள் அனுபவம் புதுமையானது. காதலி போல கடைசி வரை அது எனக்கு கிடைக்கவே இல்லை. வசதியான குடும்பத்தில பிறந்தாலும் 3 வயதிலேயே தந்தையை இழந்தேன். அம்மா படிக்காதவள். அவளுக்கு எனக்கு என்ன தேவை என்று தெரியவில்லை. வீட்டுக்கு பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருந்ததால் சைக்கிள் வாங்கித் தரவில்லை. மேல் படிப்பு படிக்கும்போதும் சைக்கிள் வாங்கித் தரவில்லை. என் அண்ணன்களுக்குகூட அம்மா சைக்கிள் வாங்கித் தரவில்லை. எங்காவது விழுந்து விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.

பக்கத்து வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தது. அதனால் அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்து கொடுப்பேன். காரணம் அவர்கள் சைக்கிள் தருவார்கள். அழகான சைக்கிள் என்பது வெறும் கனவாகவே இருந்தது. கல்லூரி 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததால் பஸ்சில் சென்றேன். அப்போதும் சைக்கிள் வாங்கவில்லை. பிற்காலத்தில் இயக்குனராகி சம்பாதித்த பிறகு முதலில் வாங்கியது கார்தான். கடைசிவரை சைக்கிள் எனக்கு கைகூடாமலே போய்விட்டது.

எனது உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் இயக்குனர் அஸ்லம். அவரும், சமுத்திரகனியும் எனக்கு பூசாரியாக இருந்தாக சொன்னார்கள். பூசாரியாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை. கடவுள் ஒருவர்தான். அப்படிப் பார்த்தால் பாலாவிடம் நான் 15 ஆண்டுகள் பூசாரியாக இருந்தேன். திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு எப்படி வேண்டுமானோலும் வரும். திண்டுக்கல் தியேட்டரில்தான் என் தயாரிப்பாளர் என்னை இயக்குனராக அறிவித்தார்.

அப்போது அறிமுகமானவவர்தான் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அவரைப் பற்றி சசிகுமார் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார். சுப்பிரமணிபுரத்துக்கு ஜேம்ஸ் வசந்தனை புக் பண்ணியபோது நான் சசியிடம் யோசித்து செய் என்றேன். பின்னர் ஒரு நாள் பாடலை போட்டுக் காட்டியபோது சரியாக வருமா என்று கேட்டேன். பின்னர் அதை படத்தில் பார்த்து வியந்தேன்.

இயக்குனர் அஸ்லம் என்னிடம் பணியாற்றினார். இந்த கதையை அவர் பல வருடம் வைத்திருந்தார். என்னிடம் சொல்லாமல் ஒரு சாதாரண கம்பெனிக்கு அந்த கதையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த தயாரிப்பாளின் மகன் நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார். இப்படி அவசரப்பட்டு விட்டானே இனி அவன் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வணங்கிய கடவுள் அவனை கைவிடவில்லை. படத்தை அந்த தயாரிப்பாளர் கைவிட்டார். நான் ஸ்ரீகாந்த் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது படம் அழகாக உருவாகியிருக்கிறது.

சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். அந்த கலாச்சாரம் இப்போது வளர்ந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்கிறார்கள். சிலர் நாம் எழுந்து விட்டால் நம் இடத்தில் இன்னொருவர் உட்கார்ந்து விடுவாரோ என்ற நினைக்கிறார்கள். அது தவறு. சினிமா ஒன்றும் முக்கு சந்தல்ல. அது பெரிய பீச். நாம் இங்கிருந்து சென்றால், வெறொருவர் இன்னொரு திசையிலிருந்து நம்மை விட வேகமாக வந்து கொண்டிருப்பார். எல்லோரையும் அள்ளி அணைத்துக் கொள்ளும் இடம் சினிமா.

வேறு மாநிலம், வேறு மொழி கலைஞர்களைகூட அன்பாக அள்ளி அணைத்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை கன்னடத்தை சேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் பார்க்காமல் இங்கு அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம்.

இங்கே பேசிய கர்நாடக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள். நாங்கள் உங்களுக்கு ரஜினியையும், அர்ஜுனையும் தந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இன்னும் நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தாருங்கள் அள்ளி அணைத்துக் கொள்கிறோம். அதோடு கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு நாங்கள் செலுத்தும் அன்பை உங்களுக்கு நாங்கள் தரும் ஆதரவை உங்கள் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை வரும்போது சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.,” என்றார்.

அமீர் பேச்சை வரவேற்ற கர்நாடக பிரதிநிதிகள், நிச்சயம் பேசுவதாகக் கூறினர்.

விழாவில், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சுசீந்திரன், கரு பழனியப்பன், பிரபு சாலமன், ஏ எல் விஜய், நடிகர் ஜெயம் ரவி, நமீதா, சுஜா வருணீ, கவிஞர் நா முத்துக்குமார், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, வேந்தர் மூவீஸ் ரகு உள்பட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

-என்வழி செய்திகள்
7 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி, அர்ஜூனை தந்தது போல் கொஞ்சம் தண்ணீரையும் தாருங்கள்.. – கர்நாடக எம்.பிக்கள் முன்பு அமீர் பேச்சு

 1. Ravi

  தமிழன் வந்தாரை வாழ வைப்பான் என்பதற்கு இந்த வலைத்தளமே எடுத்துக்காட்டு. நம்மவர்களே வாழும் உதாரணம். வாழ்க நம் தலைவர்.
  தமிழனை யார் வாழ வைப்பது?

 2. தினகர்

  வந்திருந்த விருந்தாளிகளிடம் எடுத்துச் சொன்ன அமீருக்கு பாராட்டுக்கள். அரசு உறவுகள் தனிமனித நல்லுறவுகளிலேயே ஆரம்பமாகிறது. திரைத்துறை நட்புகளும் மாநில உறவுகளுக்கு வித்திட்டால் நல்லது தானே!

 3. தினகர்

  ”தமிழன் வந்தாரை வாழ வைப்பான் என்பதற்கு இந்த வலைத்தளமே எடுத்துக்காட்டு. ”

  என்ன சொல்ல வர்றீங்க. வினோ, பக்கத்து மாநிலம் அல்லது வேறு நாட்டுக்காரர் என்று சொல்றீங்களா?

  ரஜினியைப் பற்றி குறிப்பிட்டீர்கள் என்றால் அவரது பிறப்பை அறியாதவர் நீங்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரஜினி பிறந்த நாச்சிக்குப்பம் அன்றும் இன்றும் தமிழகத்தில் தான் இருக்கிறது..

 4. குமரன்

  அமீர் வெகு அழகாக, நேரம் பார்த்து நேர்த்தியாக நமது கருத்தைக் கூறியிருக்கிறார். பாராட்டப்படவேண்டிய விஷயம். சிறந்த திறமை!

  நிற்க,

  தமிழ் தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தாய்.
  தமிழ் நமக்கு மட்டும் தாய் மொழி அல்ல, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளுக்கெல்லாம் தாய்.
  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தில் அவர் கூறுகிறார்:

  பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
  எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
  கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
  உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
  ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
  சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே

  எனவே கன்னடரும், தெலுங்கரும், மலையாளியும், துளுமக்களும் தமிழர்கலும் ஒருதாய் மக்களே என்ற உணர்வோடு அனைவரும் இருந்தால் எந்தப் பிரசினையும் இல்லை. கிடைக்கும் நீரை அனைவரும் தேவைக்கேற்பவும், வாழ்வாதார, வரலாற்று அடிப்படையிலும் பயன் படுத்துதல்தான் முறையும் ஆகும்.

  நம் தற்போதைய தமிழ்நாட்டில் காவிரியின் கிளை நதிகளாகிய சிறுவாணி, பவானி, நொய்யல், அமராவதி ஆகியவற்றை மாசுபடாமலும், தொழில்துறைப் பயன்பாடுகளுக்கும் எடுக்காமலும், மணலைக் கட்டட வேலைகளுக்கு அபரிமிதமாக எடுக்காமலும் இருக்கிறோமா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொண்டால் நல்ல சிந்தனை பிறக்கும்.

  வள்ளுவர் வந்துதான் சொல்ல வேண்டும் ….

  “உய்வுண்டா நொய்யல் ஆற்றைக் கொன்றவருக்கு ? “

 5. enkaruthu

  அமிரின் பேச்சு சூப்பர்.இப்படிதான் பேசி நம்மை எதிரி போல் நினைப்பவரை சிந்திக்க வைக்க வேண்டும் .இதுதான் தலைவரின் வழியும்.நான் அடித்து சொல்கிறேன் கட்டாயம் அமிரின் இந்த பேச்சுக்கு தலைவரின் பாராட்டு கட்டாயம் கிடைக்கும்.

 6. Ravi

  திரு. ரஜினி அல்லது அர்ஜூனையே கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வாங்க நம் தமிழ் மக்களின் தூதுவராக அனுப்பலாமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *