BREAKING NEWS
Search

அணிகள் மாறினாலும் ஆச்சர்யமில்லை – கருணாநிதி

2014 தேர்தலில் அணிகள் மாறினாலும் ஆச்சர்யமில்லை – கருணாநிதி

சென்னை: மத்தியில் கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கருணாநிதி கூறினார்

தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஜுலை 4-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்திருக்கிறீர்கள். ஜுலை 19-ந் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு போய் விட்டால் எப்படி குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும்?

பதில்: சிறையிலே இருந்தாலும் வாக்களிக்கக்கூடிய அனுமதி அவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.

கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள்?

பதில்: எண்ணற்றவர்கள்.

கேள்வி: தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு நியாயமற்ற முறையில் கைதுகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், மத்திய அரசிடமிருந்து நீங்கள் ஏதாவது ஆட்சி கலைப்பு போன்ற உதவியை எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: முன்பெல்லாம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே இருந்தபோது, இங்கே ஏதாவது பிரச்சினை என்றால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. போராட்டம் நடத்துகிறபோது, தி.மு.க. ஆட்சியை உடனடியாக கலைத்துவிட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்பார்கள். நாங்கள் அப்படியெல்லாம் மத்திய அரசை கேட்கமாட்டோம். எங்களுக்கு தெரியும். இது மக்கள் பிரச்சினை. இந்த பிரச்சினையில் ஒரு மாநில அரசை, மத்திய அரசு கலைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வது முறையல்ல என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.

கேள்வி: இந்த போராட்டத்திற்கு தமிழக அரசின் காவல் துறை அனுமதி கிடைக்குமா? அனுமதி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: அனுமதி கிடைக்காவிட்டாலும் சிறையை நிரப்புவோம்.

கேள்வி: குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக உங்கள் அணியின் சார்பில் நீங்கள் தான் முதன் முதலில் பிரணாப் முகர்ஜியின் பெயரை முன்மொழிந்தீர்கள். அதைப்போல குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக யாரையாவது பரிந்துரை செய்திருக்கிறீர்களா?

பதில்: அந்த பிரச்சினை இப்போது எழவில்லை.

கேள்வி:- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் இலங்கை அதிபர் பேசும்போது, கச்சத்தீவில் மீன் பிடிப்பவர்களுக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

பதில்: சட்டத்தை மீறி யார் நடந்து கொண்டாலும், அந்த அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வேண்டுமென்றே, தமிழக மீனவர்கள் சட்டத்தை மீறி அங்கே மீன் பிடித்தார்கள் என்று பொய்யாக சொல்லி, அவர்களை தண்டிக்க முனைவதை நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. மத்திய அரசுக்கு அதைப்பற்றி தெரிவிப்போம். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை பற்றி தி.மு.க. சார்பில் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அரசின் சார்பாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் நிலவும் இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா?

பதில்:- வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேள்வி: பிரணாப் முகர்ஜிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது?

பதில்:- 30-ந் தேதி வருகிறார். மாலையில் அவருக்கு வரவேற்பும், விருந்தும் அளிக்கப்படவுள்ளது.

கேள்வி: மத்திய அரசில் தி.மு.க.வுக்கு இரண்டு அமைச்சர்கள் பதவி தரப்பட வேண்டியுள்ளது. தற்போது காலியாக உள்ள நிதி அமைச்சர் பதவி கிடைக்குமா?

பதில்: அதைப்பற்றி எந்த கருத்தும் பரிமாறிக்கொள்ளப்படவில்லை.

கேள்வி: தி.மு.க.வில் ஏராளமான அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். காலியாக உள்ள நிதியமைச்சர் பதவியைக் கேட்டுப்பெறுவீர்களா?

பதில்: காலியாகப்போகிற நிதியை யாராவது கேட்பார்களா?!

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.




8 thoughts on “அணிகள் மாறினாலும் ஆச்சர்யமில்லை – கருணாநிதி

  1. பாவலன்

    ///கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் நிலவும் இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா?

    பதில்:- வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.///

    கலைஞர் ஒரு மாபெரும் அரசியல் சாணக்கியன்!!

    -பாவலன்

  2. குமரன்

    ஆக, கருணாநிதி மத்திய நிதி அமைச்சர் பதவியைக் குறி வைத்து விட்டார்.

    அவர் குடும்பத்தில் யாருக்கு இந்தப் பதவி என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

    அது சரி, ……………….

    “மத்திய அரசின் நிதி காலியாகப் போகிறது” என்ற “ரகசியத் தகவலை” பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறாரே,

    அப்படியானால் வழக்கப்படி “காலியான கஜானாப்” பொறுப்பை ஏற்க அடுத்ததாக ஆட்சிக்கு வரும் அதிமுகதான் மத்திய அரசைப் பிடித்து “புரட்சித்தலைவி” “தங்கத்தாரகை” “கருணைக்கடல்” “அம்மா” அவர்கள்தான் பிரதமராவார் என்பதை சூசகமாகச் சொல்கிறாரா?

  3. Mahesh

    பாவலன் அவர்களே !

    உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி .. சுயநலம் ஒன்றே குறியாய் வாழ்ந்து , தியாகம் ஒன்றே தன் மூச்சு போன்று பேசுவதா சானக்யதனம் ??

  4. பாவலன்

    நண்பர் மகேஷ் அவர்களே:

    கலைஞரைப் பற்றி அமானுல்லா ஏற்கெனவே பராசக்தி பாணியில் விளாசித்
    தள்ளி விட்டார்! நீங்கள் சொல்வதையும் நான் ஏற்கிறேன். நான் ஒரு கலைஞர்
    ஆதரவாளர் அல்ல! 🙂 ஆனால் பார்லிமென்ட் தேர்தல் 2014-ஆம் ஆண்டு
    வரும் நிலையில் காங்கிரஸ், BJP என யாரும் தயார் இல்லாத பொழுது
    இப்பொழுதே ‘அணிகள் மாறினாலும் ஆச்சரியமில்லை’ என கூடார்த்தம் சேர்த்து அவர் பாணியில் சொன்னதற்கு என் கருத்துத் தெரிவித்தேன்! 🙂

    -பாவலன்

  5. Krishna

    //அவர் குடும்பத்தில் யாருக்கு இந்தப் பதவி என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. – குமரன்//

    நிதி பொறுப்பு சிதம்பரத்துக்கோ பிரதமரின் ஆலோசகர் ரங்கராஜனுக்கோ தான் போகும்என்று தான் செய்திகள் வருகின்றன. மம்தா பேனர்ஜி கூட்டணியில் இருந்து விலகினால் ரெயில்வே துறை கேட்க வாய்ப்பு இருக்கிறது.

  6. Ganesh Shankar

    சிறை நிரப்பும் போராட்டத்தை கருணாநிதி இப்போது ஆரம்பித்து இருக்கிறார்,எதற்காக என்று எல்லாருக்கும் தெரியும்.
    அவர் இதை முல்லை பெரியாறு பிரச்சனைக்காகவோ,மத்திய அரசு நிதி வழங்காமல் இருப்பதிலோ இல்லை காவேரி பிரச்சனயிலோ,கட்ச தீவு பிரச்சினையிலோ,நமது இந்திய மீனவர்களின் படுகொளைகளுக்கோ என்றாவது இதை செய்திருகிறாரா. அப்போது எல்லாம் ஒரே கடிதம்.
    எல்லாவற்றுக்கும் கோஷம் போடுபவர்,தங்களுடைய மந்திரி சபை அமைதிருபவர்களிடம் என்றாவது இவ்வளவு பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை என்று சொல்லி ஒரு கருத்தை உருவாக்கி இல்லை முடியவில்லை(இது முடிந்தால் தான் இவர் நிர்வாக திறன் கொண்டவர் அல்ல என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன்) என்றால் ,அதில் இருந்து வெளி வந்திருகிறார இல்லை.ஆனால் வராமல் கடிதம் எழுதிவிட்டேன் என்று முடித்து கொள்கிறார்.

    ஆனால் இப்போது இவ்வாறு சொல்வதை வைத்து,பின்னால் ஒரு வேலை கூடநியிளிருந்து வெளி வந்தால் உடனே எல்லாரும் ஆஹா,கருணாநிதி வெளியில் வந்துவிட்டார்,மாநில நலனுக்காக,மக்கள்(நாட்டு மக்கள்) நலனுக்காக என்று நினைத்து விடவேண்டாம்.
    தனக்கு,தனது குடும்பத்திற்கு எதாவது நடக்கவில்லை என்றால்,அப்போது நாட்டில் நடக்கும் சூழ்நிலையை வைத்து,அதை காரணமாக வைத்து வெளியில் வருவார் என்பதை பாருங்கள்.

  7. பாவலன்

    ///சிறை நிரப்பும் போராட்டத்தை கருணாநிதி இப்போது ஆரம்பித்து இருக்கிறார்,எதற்காக என்று எல்லாருக்கும் தெரியும்./// (கணேஷ் ஷங்கர்)

    குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ‘development’ என்பதை வலியுறுத்தி
    பேசி வருகிறார். அப்பாவித் தொண்டர்கள் இது போன்ற அரசியல் நோக்கம்
    கொண்ட போராட்டங்களை விடுத்து ஆக்க பூர்வமான பணிகளில்
    செயல்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது. (தி.மு.க. என்றில்லை,
    எல்லாக் கட்சிகள் சேர்ந்த தொண்டர்களையும் சேர்த்து எழுதுகிறேன்).

    -பாவலன்

  8. பாவலன்

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எனப் படிக்கவும்!
    நன்றி.

    -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *