BREAKING NEWS
Search

இளவரசன் உடல் இன்று மீண்டும் பரிசோதனை – எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை

இளவரசன் உடல் இன்று மீண்டும் பரிசோதனை – எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகை

ilavarasan-autopsyதருமபுரி: இளவரசன் உடலை தில்லி “எய்ம்ஸ்’ மருத்துவமனை டாக்டர்கள் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாயில் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் – திவ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்த திவ்யாவின் தந்தை நாகராஜன் கடந்த ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் நாயக்கன்கொட்டாய் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கலவரம் வெடித்தது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தனது மகள் திவ்யாவை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தாய் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, “இனி இளவரசனுடன் தான் சேர்ந்து வாழ விரும்பவில்லை’ என்று திவ்யா கூறினார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 4-ஆம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் ரயில் பாதை அருகே இளவரசன் சடலமாகக் கிடந்தார். அவரது பிரேதப் பரிசோதனை மறுநாள் 5-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

ஏன் மறு பரிசோதனை?

எனினும் இந்த பிரேதப் பரிசோதனையில் திருப்தியில்லை என்றும், இளவரசன் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இளவரசனின் நண்பரான வழக்குரைஞர் ஏ.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கெனவே நடைபெற்ற பிரேதப் பரிசோதனையின் விடியோப் பதிவை ஆராய டாக்டர்கள் குழுவை அமைத்தது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்கள் இருவர், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர், சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் மற்றும் ஏற்கெனவே பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் மூன்று பேர் பிரேதப் பரிசோதனையின் விடியோப் பதிவை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாயன்று ஆய்வு செய்தனர்.

எனினும் ஏற்கெனவே நடைபெற்ற பிரேதப் பரிசோதனை தொடர்பாகவும், மறு பிரேதப் பரிசோதனை அவசியமா என்பது பற்றியும் மாறுபட்ட கருத்துகளை அந்த டாக்டர்கள் கூறியிருந்தனர்.

010

இதனைத் தொடர்ந்து காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் தங்கராஜ், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தடயவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் பி.சம்பத் குமார் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள இளவரசனின் சடலத்தை நேரில் ஆராய வேண்டும் என்றும், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, மறு பிரேதப் பரிசோதனை அவசியமா என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த புதன்கிழமை (ஜூலை 10) நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி வியாழக்கிழமை (ஜூலை 11) தருமபுரிக்கு சென்று நேரில் ஆய்வு நடத்திய அந்த இரு டாக்டர்களும் உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) அறிக்கை தாக்கல் செய்தனர். எனினும் இந்த டாக்டர்களும் ஒத்த கருத்தைக் கூறவில்லை. மறு பிரேதப் பரிசோதனை தேவையில்லை என்று டாக்டர் தங்கராஜ் கூறியுள்ள நிலையில், மறு பிரேதப் பரிசோதனை அவசியம் என்று டாக்டர் சம்பத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கைகளைப் பரிசீலித்த நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டனர்.

ஏற்கெனவே நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் ஏதேனும் தவறு நடந்திருக்குமோ என்று நாங்கள் சந்தேகிக்கவில்லை. எனினும் இந்த விவகாரத்தில் மருத்துவ நிபுணர்களின் கருத்துகள் மாறுபட்டதாக இருப்பதால், மறு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிப்பதே சரியானதாக இருக்கும். முற்றிலும் சுதந்திரமான மற்றும் நடுநிலையான டாக்டர்களைக் கொண்டே மறு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும்.

மறு பரிசோதனை முடிந்தவுடன்…

ஆகவே, பிரேதப் பரிசோதனையில் நன்கு அனுபவம் மிக்க தடயவியல் துறை டாக்டர்கள் 3 பேரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்புமாறு டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம்.

தருமபுரியில் உள்ள இளவரசனின் உடலை “எய்ம்ஸ்’ டாக்டர்கள் சனிக்கிழமை (ஜூலை 13) பிரேதப் பரிசோதனை செய்திட வேண்டும். அந்த 3 டாக்டர்களும் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்து செல்லவும், சென்னை மற்றும் தருமபுரியில் தங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகள் உள்பட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும்.

தருமபுரிக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் வரும் நேரத்தில் தேவையற்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இந்த மறு பிரேதப் பரிசோதனை தொடர்பான எல்லா செலவுகளையும் மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மறு பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் இளவரசனின் தந்தை இளங்கோவனிடம் சடலத்தை ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *