BREAKING NEWS
Search

சோனியா பிரதமாக விரும்பியிருந்தால் நானே அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பேன் – அப்துல் கலாம்

 சோனியா பிரதமாக விரும்பியிருந்தால் நானே அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பேன் – அப்துல் கலாம்

டெல்லி: 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமராக விருப்பம் தெரிவித்திருந்தால் நானே அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருப்பேன், என்று குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாமின் ‘டர்னிங் பாயிண்ட்ஸ்’ என்ற புதிய நூலில், முரண்பட்ட முடிவுகள் என்ற வகையில், தான் எடுத்த சில முடிவுகளைப் பட்டியலிட்டு அது எந்தக் கட்டத்தில் எடுக்கப்பட்டது; அதன் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் எழுதியுள்ளார்.

அந்தப் புத்தகத்தில்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்:

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி வெற்றி பெற்று, அதன் கூட்டணித் தலைவராகவும் நாடாளுமன்றத் தலைவராகவும் சோனியாவை ஒருமனதாகத் தேர்வு செய்தன. அதன் பின்னர் சோனியாவே பிரதமர் ஆவார் என்று நாட்டிலும் உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவின.

ஆனால், வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் பதவி ஏற்பதை பலரும் விரும்பவில்லை. அரசியல் ரீதியாக பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தனர். வெளிநாட்டுக்காரர் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவராக பதவி ஏற்க சட்டத்தில் இடமில்லை என்று கூறி சில சட்ட நுணுக்கங்களையும் சிலர் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில், பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னைச் சந்தித்தனர். பல அமைப்புகளின் தலைவர்கள் என்னைச் சந்தித்து சோனியாவுக்கு இத்தாலி பூர்வீகம் என்பதால், அவரை பிரதமர் ஆக்க ஒப்புக் கொள்ளாதீர்கள் என்று வற்புறுத்தினர்.

ஆனால், நான் சட்ட ரீதியாக நுணுக்கங்களை ஆராய்ந்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் பெற்று, ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். அதன்படி, சோனியாவை பிரதமர் பதவிக்கு வரவேற்று கடிதம் தயாரிக்கப்பட்டது.

அந்த கடிதத்தை அனுப்பவும் நான் தயாராக இருந்தேன். ஆனால், திடீரென சோனியா, மன்மோகன் சிங்குடன் என்னை வந்து சந்தித்தார். மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்குமாறு என்னிடம் கோரினார். இது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

பின்னர் அவருக்காக அந்தக் கடிதம் மாற்றப்பட்டு, மன்மோகன் சிங்கை பிரதமர் பதவிக்கு ஏற்று அவருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. சோனியாவின் முடிவால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது.

சோனியாவை பிரதமர் ஆக்கக் கூடாது என்று எனக்கு நேரிலும் இ-மெயில் மூலமும் அதிகம்பேர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கை சட்டத்துக்கு உட்பட்டதல்ல, நியாயமும் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆகவே சோனியாவை பிரதமர் பதவியில் அமர்த்த நான் தயாராகவே இருந்தேன்.

‘பிரதமராக தங்கள் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக’க் கூறி என்னிடம் சோனியா கோரிக்கை வைத்திருப்பாரேயானால், அவரை பிரதமராக வரவேற்க நான் தயாராகவே இருந்தேன். அவருக்கு பிரதமராக பதவிப் பிரமாணமும் செய்து வைத்திருப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகம் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் அதற்குள் பெரும் வாக்குவாதங்களை காங்கிரஸ் – பாஜக இடையே ஏற்படுத்தியுள்ளது.

சோனியா பிரதமராவதைத் தடுக்க வேண்டும் என பெரிய ஒப்பாரியே வைத்தது, தேர்தலில் படுதோல்வியடைந்திருந்த பாஜக. அக்கட்சியின் முக்கிய தலைவரான சுஷ்மா ஸ்வராஜ், தன் தலையை மொட்டையடித்துக் கொண்டு, கட்டாந்தரையில் படுக்கப்போவதாக அழிச்சாட்டியம் செய்தார்.

காங்கிரஸுக்குள் இருந்த சங்மாவையும் சோனியாவுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர் பாஜகவினர் (அந்த நன்றிக் கடனுக்குதான் இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் பரிசு!)

அப்துல் கலாம் பெயரை பாஜகவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பாஜக பொய் பிரச்சாரம் செய்தாலும், நாட்டில் ஒரு சிலரின் எதிர்ப்புக்குக் கூட மரியாதை கொடுத்து உண்மையிலேயே தியாகம் செய்தவர் சோனியா காந்திதான். பாஜக வேடம் அம்பலப்பட்டுவிட்டது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

-என்வழி செய்திகள்
19 thoughts on “சோனியா பிரதமாக விரும்பியிருந்தால் நானே அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பேன் – அப்துல் கலாம்

 1. enkaruthu

  சார் அனேகமாக இனி அப்துல் கலாமுக்கு அந்த காந்திக்கு பிறகு என்ற கருத்துகணிப்பு இன்றும் தொடர்கிறது என்றால் இனி ஒட்டு விழாது.

 2. தினகர்

  “சோனியாவை பிரதமர் ஆக்கக் கூடாது என்று எனக்கு நேரிலும் இ-மெயில் மூலமும் அதிகம்பேர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் இந்தக் கோரிக்கை சட்டத்துக்கு உட்பட்டதல்ல, நியாயமும் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆகவே சோனியாவை பிரதமர் பதவியில் அமர்த்த நான் தயாராகவே இருந்தேன்.”

  இப்போதாவது ‘ சோனியா’ தான் பிரதமர் பதவியை ஏற்பதை தவிர்த்து இருக்கிறார் என்று வெளி உலகத்திற்கு தெளிவாகியதே..

  என்ன்மோ, கலாம் தான் தடுத்து நிறுத்தி விட்டது போல புலம்பித் திரிந்த சிலரின் கூக்குரல்கள் இனியாவது அடங்குமா?

  சட்டபூர்வமாக சோனியா பிரதமர் ஆவதற்கு எந்த தடையும், இன்றைக்கும் கிடையாது, சோனியா நினைத்தால் உடனே ராஜினாமா செய்ய மன்மோகன் தயாராக இருக்கிறார், இன்று மாலையே சோனியா பிரதமர் ஆகிவிட முடியும். இந்திய அரசியல் சட்டம் அதை தடுக்க முடியாது. இந்திய குடிமகன் பிரதம்ர் ஆகலாம் என்று தான் சட்டமேயன்றி, இந்தியாவில் பிறந்த இந்திய குடிமகன் என்று சட்டத்தில் இல்லை.

  ஆக, 100 கோடி மக்களில் யாருமே பிரதமர் ஆக தகுதி உள்ளவர் இல்லையா என்று உலக நாடுகளின் இழிவான கேலிப்பார்வைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவும், காங்கிரசுக்கு வாக்களித்த, வாக்களிக்காத என்று அனைத்து இந்தியர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து தான் இன்று வரை சோனியா அந்த பதவியில் அமர வில்லை.

  பிரதமர் வேட்பாளர் ‘சோனியா’ என்று விளம்பரப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும், தான் பிரதமர் ஆகாமல் அதை மன்மோகனுக்கு விட்டுக்கொடுத்து உண்மையிலேயே தியாகம் செய்தவர். அதை குறிப்பிட்டு தான், அந்த சூழலை ஒப்பிட்டு சோனியாவை ‘தியாகத்திருவிளக்கு’ என்று கலைஞர் அழைத்தார். அது குமரன் போன்றவர்களுக்கு இன்று கேலிக்குரியதாகிவிட்டது 🙂

 3. enkaruthu

  அப்துல் கலாம் சார் hats off to you சார்.நான் சோனியாவை பிரதமராக தடுத்ததால் என்னை சோனியா ஜனாதிபதியாக்க விரும்பவில்லை என்று சொல்லாது உண்மையை உங்களின் புத்தகம் மூலமாக சொன்னீர்களே.நன்றி சார்.ஆனாலும் சோனியா அவர்களை பொறுத்தவரை இந்த ஈழ தமிழர்கள் விஷயத்தில் அவர் ஒரு துரோகிதான்.

 4. குமரன்

  ///அதை குறிப்பிட்டு தான், அந்த சூழலை ஒப்பிட்டு சோனியாவை ‘தியாகத்திருவிளக்கு’ என்று கலைஞர் அழைத்தார். அது குமரன் போன்றவர்களுக்கு இன்று கேலிக்குரியதாகிவிட்டது///

  கலைஞர் தியாகத் திருவிளக்கு என “அன்னை” “சொக்கத் தங்கம்” சோனியாவை அழைத்தது கேலிக்குரியதாக ஆனதன் காரணம் …

  அவர் அப்படி அழைத்ததால் அல்ல,
  அவர் அப்படி அழைப்பதை நிறுத்தியதால்!
  எப்போதிலிருந்து?
  2G ஊழலில் கனிமொழியின் கைது நிச்சயம் ஆனதில் இருந்து!!!

  அதாவது … சோனியா “சொக்கத்தங்கம்”, “தியாகத் திருவிளக்கு”, “அன்னை” ….
  எல்லாம் கனிமொழி கைதுக்கு முன்!
  இது எதுவும் கிடையாது … கனிமொழி கைதுக்குப் பின் !!!
  க.கை.மு என்றும் க.கை.பி. என்றும் கலைஞர் “அகராதியில்” “இரண்டு மனம்” உண்டு !!!!!

 5. குமரன்

  கருணாநிதி சமீபத்தில் ராஜ பக்சே நம்பவைத்துக் கழுத்தறுத்ததாகக் கூறினார். உண்மையில் அதைச் செய்தது சோனியாதான். கருணாநிதியும் கூட அதைத்தான் மறைபொருளாக ராஜபக்சே பெயரை பயன்படுத்திக் கூறினார்.

  உண்மையில் ராஜபக்சே கருணாநிதியை நம்பவைக்க அவரும் ஐவரும் என்ன ஓடி விளையாடியவர்களா?

  கருணாநிதியை நம்பவைத்து துரோகம் செய்வதானால் அது அவரது கூட்டணிக் கட்சியின் தலைவராகத்தானே இருக்க வேண்டும்?

  கருணாநிதியே மறைமுகமாக துரோகி என்று குறிப்பிட்டது சோனியாவையே என்பது எனது கணிப்பு.

 6. பாவலன்

  டாக்டர் கலாம் இதை அப்போதே தெளிவுபடுத்தி இருந்தால்
  முறையானதாக, சிறப்பானதாக இருந்திருக்கும்.

  -பாவலன்

 7. Krishna

  //டாக்டர் கலாம் இதை அப்போதே தெளிவுபடுத்தி இருந்தால்
  முறையானதாக, சிறப்பானதாக இருந்திருக்கும். – பாவலன்//

  அப்துல் கலாம் இதை அப்போதே தெளிவுபடுத்தி விட்டார். குடியரசு தலைவராக இருக்கும் ஒருவர் நேரடியாக பேசுவது என்பது violation of protocol. அவர்கள் குடியரசு தலைவர் மாளிகை சார்பாக ஒரு representative மூலம் அறிக்கை விட வேண்டும். அந்த சமயத்தில் இது பற்றி வதந்திகள் உலா வந்தன. May 19, 2004 அன்று இதை மறுக்கும் வகையில்குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. அது இதோ:

  “It has been reported in a section of the press that the President Dr. A.P.J. Abdul Kalam had discussed the citizenship issue with Smt. Sonia Gandhi when she met him yesterday at Rashtrapati Bhavan. This is contrary to facts. It did not figure in the discussions at all.”

  இதிலிருந்து அன்றே அப்துல் கலாம் அவர்கள் இதை தெளிவு படுத்தி விட்டார். அதை இப்போது மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.

 8. enkaruthu

  //அவர் அப்படி அழைப்பதை நிறுத்தியதால்!
  எப்போதிலிருந்து?
  2G ஊழலில் கனிமொழியின் கைது நிச்சயம் ஆனதில் இருந்து!!!//

  என்ன குமரன் உங்கள் அறிவிக்கு நீங்கள் போட்ட இந்த கமெண்ட் பொருத்தமாக படவிலை எனக்கு. கலைஞர் மேல் உள்ள வெறுப்பில் உண்மையான கேள்விக்கு இப்படி ஒரு வெறுப்பான பதிலா. எதை எங்கே கொண்டு இணைக்குபோழுதே உங்களின் குணம் எங்களுக்கு தெரிந்துவிட்டது.

 9. enkaruthu

  நண்பர்களே இந்த பதிவிற்கு முன் கலாம் கலாம் எண்டு போட்டவர்கள் எல்லாம் ஜகா வாங்குவதை, நீங்கள் இந்த பதிவிற்கு வரும் கமெண்ட் மூலம் கண்டு இருப்பீர்கள்.இதைதான் நான் வெளிபடையாக சொல்கிறேன் .

 10. தினகர்

  சோனியா “சொக்கத்தங்கம்”, “தியாகத் திருவிளக்கு”, “அன்னை” ….
  எல்லாம் கனிமொழி கைதுக்கு முன்! இது எதுவும் கிடையாது … ”

  ”தியாகத் திருவிளக்கு” என்று சொன்னது சோனியா பிரதமர் பதவி ஏற்காமல் மன்மோகன் சிங் பிரதமர் ஆன நேரத்தில் தான்.அதாவது 2004 ஆம் ஆண்டு. அவரது அந்த தியாகத்தை குறிப்பிட்டுத்தான்.

  அப்போது கனிமொழி எங்கிருந்தார் என்று யாருக்குமே தெரியாது என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?

  என் நினைவு தவறு என்றால் வினோ தெளிவுபடுத்தலாம்

 11. Raj

  As per indian constitution any foreign born Indian citizen can become pm if that foreign country also has similar law, meaning if Italian law allows Indian born Italian citizen to become their pm. I don’t agree with this article mentioning Sonia is allowed to become pm, she never can in future as well

 12. குமரன்

  தினகர்

  நீங்கள், நான், கலைஞர் ஆகிய மூவருக்கும் (சீத்தலைச் சாத்தனாருக்கும் கோப்பெரும் சோழனுக்கும் இருந்தது போல) ஏதோ ஒரு அலைவரிசைத் தொடர்பு உள்ளது போலும்!

  நேற்று தாம்பரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் தமது கட்சித் தொண்டர்கள் எல்லாம் “தியாகத் திருவிளக்குகள்” என்பதை நிரூபிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

  தியாகத் திருவிளக்கு என்றால் என்ன என்பதற்கு அவர் வைத்துள்ள அளவுகோல்:
  1 . சிறை செல்ல வேண்டும்.
  2 . ஆறு மாதம் ஆனாலும் ஜாமீன் கேட்காமல் சிறையிலேயே இருக்க வேண்டும்.

  அதாவது இப்போதைக்கு சமீப கால வரலாற்றின் படி கட்சியில் இரண்டு “தியாகத் திருவிளக்குகள்” மட்டுமே உள்ளன. அவையாவன:
  1 . கனிமொழி
  2 . ஆ. ராசா.

  சோனியாவை கருணாநிதி தியாகத் திருவிளக்கு பட்டியலில் நீக்கக் காரணம் அவர் சிறை செல்ல வில்லை, சென்றாலும் ஆறு மாதம் சிறையில் இருந்தால்தான் அவர் தகுதி பெறுவார்!)

  இப்போது சொல்லுங்கள்: கருணாநிதி திட்டமிட்டே அந்தத் “தியாகத் திருவிளக்கு” என்ற பதத்தை கேலிக்குரியதாக ஆக்குகிறாரா இல்லையா?

  காரணம், தான் முன்பெல்லாம் மூச்சுக்கு மூன்று முறை முழங்கி வந்த சோனியா தியாகத் திருவிளக்கு என்பது சோனியாவுக்கு நிலைத்து விடக் கூடாது, அதை எந்த காங்கிரஸ் காரனும் திருப்பித் திருப்பிச் சொல்லியோ போஸ்டர் அடித்தோ நிலை பெறச் செய்யக் கூடாது, அப்படி ஆகி விட்டால், அந்தப் பட்டத்தைத் தாம்தான் சோனியாவுக்குக் கொடுத்தது என்பது வரலாற்றில் பதிந்து விட்டால் சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் எதிராக அரசியல் செய்யும் பொது அது “தர்ம சங்கடத்தை” (இதற்கும் அவரிடம் விளக்கம் உண்டு) விளைவிக்கும், அதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதுதான்.

  இந்த மாதிரி விஷயங்களில் கருணாநிதிக்குத் தொலை நோக்குப் பார்வை வெகு துல்லியமானது.

 13. Krishna

  //As per indian constitution any foreign born Indian citizen can become pm if that foreign country also has similar law, meaning if Italian law allows Indian born Italian citizen to become their pm. I don’t agree with this article mentioning Sonia is allowed to become pm, she never can in future as வெள்//

  இந்த ஷரத்து Reciprocity Act என்ற பெயரில் Indian Citizenship Act Schedule 5(D) பிரிவில் இருந்தது. ஆனால் வாஜ்பாய் அரசு ஜனவரி 2004-ல் இந்த பிரிவை நீக்கம் செய்து விட்டது. ஆகவே, இது நிச்சயமாக ஒரு தடையாக இருக்க முடியாது.

  ஆனால் இந்திய அரசியல் அமைப்பு (Indian Constitution) என்ன சொல்லுகிறதென்றால் இந்தியராக பிறந்து இந்தியாவிலேயே வாழும் ஒருவர் எந்த சந்தர்ப்பத்திலும் (தேச துரோக குற்றம் செய்தாலும் கூட) குடியுரிமையை இழக்க மாட்டார். ஆனால் வேறு நாட்டிலிருந்து வந்து இந்திய குடியுரிமையை பெரும் ஒருவருக்கு இந்திய குடியுரிமை என்பது நிரந்தரமாக கொடுக்கப்பட்டதல்ல. அதற்கு நிறைய நிபந்தனைகள் இருக்கிறது. இந்த நிபந்தனைகள் இந்திய குடியுரிமை சட்டத்தில் (Indian Citizenship Act) தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த விதிமுறைகளில் ஒன்றை மீறினாலும் குடியுரிமை ரத்து செய்யப்படும். சோனியா காந்தி அது போன்று நிச்சயம் நடந்து கொள்ள மாட்டார் என்றாலும், பிரதமராக இருக்கும் ஒருவருக்கு குடியுரிமை என்பதே ஒரு நிபந்தனை (Conditional Citizenship) என்ற சூழ்நிலை இருப்பது விரும்பத்தக்கது அல்ல என்று நினைக்கிறேன்.

 14. தினகர்

  சோனியா காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரம் செய்து, அதற்கு ஆதரவு அளித்து கோடானு கோடி இந்தியர்கள் வாக்களித்த பிறகு, இது போல் சட்டத்தின் மூலைகளை தேடிககொண்டிருப்பது தவறான ஜனநாயகம். அவர் எப்போது ராஜீவ் காந்தியின் தொகுதியில் எம்.பி ஆனாரோ, அப்போதே பிரதமருக்கான தகுதியும் முழுமையாக பெற்று விட்டார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்திருந்தால் அடுத்த நாளே பிரதமர் ஆகியிருக்க முடியும். அதை குறித்து பேசுவதோ, அலசுவதோ இந்திய குடியுரிமை சட்டத்தை விமர்சிப்பதற்கு சமம.

  குதர்க்கம் பேசுபவர்கள், முடிந்தால் அவரையும், அவர் தலைவராக இருக்கும் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முண்ணனியை தேர்தலில் தோற்கடிக்கலாமே.

 15. மிஸ்டர் பாவலன்

  //நீங்கள், நான், கலைஞர் ஆகிய மூவருக்கும் (சீத்தலைச் சாத்தனாருக்கும் கோப்பெரும் சோழனுக்கும் இருந்தது போல) ஏதோ ஒரு அலைவரிசைத் தொடர்பு உள்ளது போலும்!// (குமரன்)

  என்ன சொல்ல வரீங்க ? ஒன்னும் புரியல.

  -மிஸ்டர் பாவலன்

 16. Krishna

  //அதை குறித்து பேசுவதோ, அலசுவதோ இந்திய குடியுரிமை சட்டத்தை விமர்சிப்பதற்கு சமம.//

  இந்திய குடியுரிமை சட்டத்தையும், அதில் இருக்கும் உட்பிரிவுகளை எடுத்து உரைப்பது அதை விமரிசிப்பது ஆகாது. இது போன்ற கட்டுரைகள் ஆங்கில மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவற்றில் ஒன்று தான் நான் குறிப்பிட்டது. இது தவிர, நான் சிலரைப்போல் அரசியல் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லிவிட்டு கோர்ட்டில் வெறும் காகிதத்தை தான் கொளுத்தினேன் என்று சொல்லி ஜகா வாங்கினேனா என்ன?

 17. மிஸ்டர் பாவலன்

  ///இது தவிர, நான் சிலரைப்போல் அரசியல் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லிவிட்டு கோர்ட்டில் வெறும் காகிதத்தை தான் கொளுத்தினேன் என்று சொல்லி ஜகா வாங்கினேனா என்ன?/// (கிருஷ்ணா)

  மறைமுகமாக நீங்கள் கலைஞரைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறீர்கள்.

  இதே போல் “ரயில் வராத தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்து
  போராட்டம் நடத்தினார்” எனவும் கலைஞர் மீது ஒரு விமர்சனம் சிலர்
  எழுதி நான் படித்திருக்கிறேன்.

  இந்த இரண்டு சம்பவங்களும் உண்மையில் நடந்ததா, எந்த சூழ்நிலையில்
  நடந்தது என அறிந்தவர்கள் எழுதினால் நல்லது. நன்றி.

  -மிஸ்டர் பாவலன்

 18. Krishna

  //இந்த இரண்டு சம்பவங்களும் உண்மையில் நடந்ததா, எந்த சூழ்நிலையில்
  நடந்தது என அறிந்தவர்கள் எழுதினால் நல்லது. நன்றி.//

  தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது, எனவே அதைப்பற்றி முழு விவரங்கள் தெரியவில்லை. ஓரளவுக்கு விவரம் தெரியும். ஒரு ரயில்வே ஸ்டேஷனில் மெயின் லைன் மற்றும் லூப் லைன் என்று இரு பாதைகள் இருக்கும். எந்த ரயிலும் சாதாரணமாக லூப் லைனில் போகாது. மெயின் லைனில் தான் போகும். ஆனால் எதிரில் வேறு ஒரு ரயில் வருவதற்கு இருக்கிறது என்றால் முதல் ரயில் லூப் லைனில் மெதுவாக வந்து நிற்கும். கலைஞர் லூப் லைனில் தலை வைத்து படுத்ததாக ஏடுகளில் படித்திருக்கிறேன்.

  அரசியல் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி கைதாகி, கோர்ட்டில் “அரசியல் சட்டம்” என்று காகிதத்தில் எழுதி அதை தான் கொளுத்தினேன் என்று சொன்னது 1980-களில் நடைபெற்ற சம்பவம். எந்த சந்தர்ப்பத்தில் அவர் இதை செய்தார் என்று நினைவில்லை. ஆனால் இது போன்று செய்தார் என்று ஏடுகளில் வாசகர்கள் கடிதங்களில் பல முறை படித்திருக்கிறேன்.

 19. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய நண்பர் கிருஷ்ணா அவர்களே:

  கலைஞரைப் பற்றி இரு வரலாற்று சம்பவங்களைப் பகிர்ந்து
  கொண்டதற்கு நன்றி.

  எதிர்நீச்சல் போட்டு எழுதும் உங்கள் துணிவும், ஞாபக சக்தியும்,
  துணிச்சலும், அன்னப் பறவை நீரை பிரித்தது பாலை எடுப்பது போல்
  ஏளனப் பேச்சுக்களை ஒதுக்கி குமரன், கணேஷ் ஷங்கர் போன்றவர்களின்
  கருத்திற்கு பதில் தரும் பாங்கு பாராட்டுதலுக்கு உரியது. நீங்கள்
  இதுவரை யாரையும் அவதூறாக எழுதியதில்லை என்பதையும் நான்
  இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இது ஒரு ஆரோக்கியமான போக்கு.

  எனக்கு வேலைப் பளு மிகவும் கூடியுள்ளது. இனி எல்லாக் கட்டுரைகளுக்கும்
  என்னால் பதில் கொடுக்க இயலாது. மிகவும் விரும்பிப் படிக்கும்
  “பொன்னியின் செல்வன்” தொடருக்கு மட்டும் பதில் கொடுக்கலாம் என
  நினைக்கிறேன். நீங்கள் Twitter-ல் ஒரு a/c வைத்துக் கொண்டால்
  டாக்டர் சுவாமி, குமரன் போன்ற அறிஞர்களிடம் கேள்வி கேட்டு
  உடன் பதில் பெறலாம். எனது Twitter ID : @MrPavalan , டாக்டர் சுவாமியின்
  ID: @Swamy39 , நண்பர் குமரனின் ID: @AnjanKumaran , டாக்டர் வினோவின் ID:
  @envazhi .

  “யாதும் ஊரே யாவரும் கேளிர்!
  தீதும் நன்றும் பிறர் தர வாரா !”

  -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *